வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்


தமிழ்ப்பதிவுகளுக்கு அடுத்த கட்டம் என்ன ஏது என்றெல்லாம் ஸ்பஷ்டமாக விளக்குமாறு கொக்கிப் பிடி போடாவிட்டால், ஐந்தாவது ஆண்டில் இருக்கும் தமிழ் தட்டச்சும் நல்லுலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

ஏன்?

  • ஏற்கனவே பதிவுகள் என்ற அளவில் உள்ளே வந்து, புண்ணூட்டங்களில் – சிறு பத்திரிகையை மிஞ்சும் அளவிலும், உள்ளடக்கத்தில் – நாப்கினைக் கூட நிரப்பாத அளவிலும் மறுமொழி வாங்கி; ஒதுங்கிய ‘பெரியவர்கள்’ மீண்டு, தங்களுக்கென வலையகம் அமைத்திருப்பது. (பாரா | எஸ் ரா)
  • தினமலர் எல்லாம் பதிவை எடுத்து உதாரணம் காட்டி அச்சு ஊடகத்துக்குக் கொண்டு சென்றாலும், செக்சுக்கு நிகராக அலைந்து விழும் கூட்டத்தை, பதிவுலகத்துக்கு இட்டுக் கொண்டு வந்த விகடனின் கைங்கர்யத்தாலும் அதற்கு நிகராகத் தொடரும் ஜெயமோகனின் க்வாலிடியாலும்!
  • பதிவுகளில் எழுதியதே புத்தகமாக வருவது தவிர, பிரத்யேகமாக எழுதிக் கொடுக்க வல்லுநர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. குப்புசாமி செல்லமுத்து போன்றோரை சொல்லலாம்.

மாற்று மெச்சூர் ஆகிவிட்டது, தமிழ்மணம் தடுக்காமல் தரவுதளமாகிவிட்டது என்று அடுக்கிக் கொண்டே போக ஆசை.

நிதர்சனமாக நண்பர்களைக் கூப்பிட்டு சில காரியங்களை கடந்த வாரத்தில் சோதித்துப் பார்த்தேன்.

  1. தமிழ் வோர்ட்பிரெஸில் பதிவைத் தொடக்குவது (என்னுடைய உதவி இல்லாமல்; கணினி நிரலாளர்/பயனர்கள்)
  2. ஜெயமோகன்.இன், தமிழ் கணிமை போன்ற இடங்களுக்கு செல்ல வைத்து, தொடர்ந்து செல்வாயா/செல்கிறார்களா என்று கவனிப்பது
  3. குமுதம்.காம், தட்ஸ்தமிழ் ஆகியவற்றுடன் எம்.எஸ்.என், ஏஓஎல், யாஹூவை ஒப்பிடுதல்
  4. தமிழ்மணம், தேன்கூடு புரட்ட வைத்தல்

ஆசிரியர் பாடம் எடுப்பது போன்ற கசப்புடனே பெரும்பாலோர் அணுகினார்கள். வோர்ட்பிரெஸ் தமிழாக்கம் புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஆங்கில இடைமுகம் கண்டபின் பரவசமானார்கள்.

‘எம்.எஸ்.என், யாஹூ எல்லாம் அதே செய்திகளைத்தானே… தமிழ்ப்படுத்தியிருக்கிறது? நாங்க சன் நியூஸே பார்த்துக்கிறோம்’ என்றார்கள்.

குமுதம் வீடியோ நேர்காணல் போல் எங்கு கிடைக்கும் என்று தேடிப் பார்த்தார்கள். சின்னப்பையன் போன்ற விஷயங்களை மேலும் தரும் இடங்களை வினவினார்கள். ‘பிரமிட் சாய்மீரா மாதிரி குமுதமும் விகடனும் கூட வலைப்பதிவு கொடுக்கிறதா? அதற்கு வழிகாட்டேன்…’ என்று பிரியப்பட்டார்கள்.

மொத்தத்தில் ‘தானாகக் கனியாத பழத்தை தடி கொண்டு பழுக்க வைக்கலாகாது’ என்பதற்கேற்ப ஸ்பூன் ஃபீடிங்கை நிறுத்திவிட்டு இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.

2 responses to “வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம்

  1. பதிவு உட்பட எதன் மீதும் யாரும் சொல்லிக் கொடுத்து ஆர்வம் வராதுங்க. அவங்களா கண்டுக்கட்டும்னு விட்டுற வேண்டியது தான். தேடல் உள்ளவங்க கண்டுப்பாங்க.

    எஸ்.ரா எழுதுவது வலைப்பதிவு அல்ல. அது வலைத்தளம் தான். யாராவது அவருக்குத் தெரிந்தவர்கள் எடுத்துச் சொல்லி வேர்ட்பிரெஸ் கொண்டு பதியச் சொன்னால் ஓடை மூலம் படிக்க வசதியாக இருக்கும்.

    ஜெயமோகன், பாரா மறுமொழி வாய்ப்பு கொடுத்தா நல்லா இருக்கும்.

    வெங்கட் சாமினாதன் வலைப்பதியுறார். ஆனா, ஓடை தர மாட்டேங்கிறார்.

    எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை வலையில் பதிவது மகிழ்ச்சி. ஆனால், பதிவு இயங்கியல், வலைப்பதிவு நுட்பம் இவற்றையும் அறிந்து கொள்ள மெனக்கெட்டுப் பின்பற்றினால் இன்னும் அருமையாக இருக்கும்.

  2. பிங்குபாக்: Top Tamil Bloggers in 2008 « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.