Chitti Anjali – Narasayya


சிட்டி என்னும் சிரிப்பாளி – நரசய்யா

ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த இவரை ஈர்த்த ஆங்கில எழுத்தாளர்கள் பி.ஜி. வுட்ஹௌவுசும் ஜி.கே. செஸ்டர்னும்தான். ஆங்கிலத்தில் ஹாஸ்யம் கலந்த கட்டுரைகளை 1930ல் பச்சையப்பன் கல்லூரி நாட்க்ளிலேயே எழுதியிருக்கிறார்.

தன்னை ‘சர்க்கஸில் வரும் கோமாளி‘ என்று வருணித்துக் கொள்ளும் சிட்டி, அப்படித்தான் வாழ்க்கையிலும் இருந்தார்.

சாலிவாஹனன் (வி.ரா. ராஜகோபாலன்) இவ்வாறு கலாமோஹினியில் குறிப்பிட்டிருந்தார்.

“இவர் ஒரு பொல்லாத பேர்வழி என்று இவரது தோற்றத்திலிருந்தே தெரிகிறதல்லவா? பார்வைக்கு பரம சாது போலிருந்தாலும் பரிகாசம் என்று வந்துவிட்டால், போதும். படாதபாடு படுத்திவிடுகிறார். ஆங்கில இலக்கியத்தில் செஸ்டர்டன் என்பவர் கையாண்டதைப் போன்று கண்ணியமான பரிகாசத்தை இவர் தமிழில் கையாள்வது நிச்சயமாக ஆறுதலளிக்கக் கூடிய ஒரு விஷயம்தான்” (கலாமோஹினி :: 1943)

ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் லீ காக் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நகைச்சுவை எவரையும் புண்படுத்தக் கூடாது’ என்று கூறுவார். அவரைப் போலவே சரித்திர எழுத்தாளரும் நகைச்சுவை எழுத்தாளருமான சிட்டி இதை முற்றிலும் கடைபிடித்தவர்.

அவர் வாழ்க்கை சிரமம் இல்லாமல் இருக்கவிலை; ஆனால் எந்த சிரமம் வந்தாலும் அதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அதேபோல மற்றவர்களுக்கு ஏதாவது கஷ்டம் இருந்தபோதெல்லாம் அவர்கள் இவரிடம் வந்துப் பேசினாலே அவை தீர்ந்து விடுமெனவும் நம்பினார்கள்.

சமீபத்தில் அவர் ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனியில் இருந்தபோது கூட, இந்த வயதிலும், அவரது நகைச்சுவை சற்றும் குறையாத நிலையில் அவரைப் பார்த்த சிறந்த மருத்துவர்கள் அவரது “பாசிடிவ் அவுட்லுக்” என்பதைப் பற்றி என்னிடம் கூறினார்கள். அதில் ஒருவர், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர், “இந்தப் பெரிய மனிதருக்கு சிகிச்சை வெற்றியடைந்ததற்குக் காரணம் அவரது சிறந்த மனோதிடம்தான்” என்றார். இந்த மனோதிடம் நகைச்சுவையாளர் அனைவருக்கும் உண்டென்பதுதான் உண்மை!

(டிசம்பர் 2004)


| |

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.