Tag Archives: VeSaa

மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதனின் ‘மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்’ அச்சுக் கோக்கப்பட்ட சமயம். தலைப்புக் கீழ் ஒரு பெரிய அடிக்கோடு வேண்டும் என்று சுந்தரத்திடம் சொல்லியிருந்தேன். ‘ஜாப் ஒர்க்’ செய்கிற – திருமண அழைப்பிதழ், ரசீதுகள், துண்டுப் பிரசுரங்கள் முதலியன; மிக நீண்டது என்றால் ‘புக் ஒர்க்’ மாதிரி வருவது, திருமண வாழ்த்துப் பா முதலியன செய்கிற – இந்தத் தொழிலாளர்களுக்கு ‘ஸ்டிக்’கில் வரி, வரி, அடுத்த வரி என்று அடுக்கிக் கொண்டே போவது சலிப்பூட்டும் வேலை; அதோடு எரிச்சலூட்டுவதும் கூட. சில தடவை அடிக்கோடு இன்னும் கொஞ்சம் பெரிதாக என்றதால், சுந்தரம் அந்தத் தலைப்புக்கு பார்டர் கட்டி விட்டார்; இருக்கட்டும்; ஆனால் ‘மேட்டரை’ இன்னும் கீழே இறக்கணும் அப்போது சரி என்றார். அச்சாகி வந்தபோது தோழர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிந்தது. அது, அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சாத்தியம் எனக்குப் படவேயில்லை. ஈமக்கிரியை அட்டைக்குத்தானே அப்படி, அதுவும் இன்னமும் சிறிய அலவில் என்று சுந்தரத்திற்கும் கூட தோன்றவில்லை. இதை அவரிடம் நான் சொன்னதாக ஞாபகமில்லை. அடுத்த இதழில் அது பற்றிய சிறு விளக்கம் தரலாம் என்ற எண்ணத்தையும் நாங்கள் விட்டுவிட்டோம்.
சில நினைவுகள்சி. மணி

மலேரியா சுரம் நிறைந்த பிரதேசத்தில் வாழும்போது, எவ்வளவோ அதிக முக்கியமான தேவைகள் முன் நின்றாலும் அவற்றையெல்லாம் பின்னொதுக்கு, முதன் முதலாக, நாம் வாங்குவது கொசு வலை. பின்னர், நீர்த்தேக்கங்களில் கொசுக்களைக் கொல்ல மருந்து வகைகள். சாப்பாட்டுத் தேவைகள் கூட அவ்வளவு முக்கியமல்ல. சூழ்நிலையைய் பொருத்து நேரும் தலைகீழ் முக்கியத்துவங்கள் இவை. இன்றைய தமிழ் இலக்கியச் சூழ்நிலையில், இக்கல்லறைக் குரலையும் பொருட்படுத்த வேண்டுவதாகிறது. அது, அநாவசிய நிர்பந்தம்.

மார்க்ஸின் நித்தாந்தம் பிறந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு, சகல துறைகளிலும் பொருள்நோக்கு (Materialism) நிறைந்த ஒரு காலம். விஞ்ஞானத்திலும், தத்துவ சிந்தனைகளிலும், பொருள் நோக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. பிரபஞ்சம் முழுவதையுமே ஒரு யந்திர ரீதியான அமைப்பாக பார்த்த, இதன் விளைவாக ஒரு குட்டிப் பிரபஞ்சத்தைப் பரிசோதனை சாலைகளில், working model ஆக அமைத்துக் காட்டிவிட முடியும் என்றும், மனித வாழ்க்கையும், பிரபஞ்ச இயக்கமும் ஒரு வரையறுப்பில் அடங்கிய, எனவே, அவற்றின் எதிர்காலமும் முன் அறியப்படக்கூடிய ஒரு நிர்ணய இயக்கமே என்ற கருத்துகள் மேலோங்கியிருந்த காலம். இத்தகைய யந்திர ரீதியான சூழ்நிலையில் மார்க்ஸ், உலகத்தின் ஒரு நாட்டில், ஒரு சமுதாயத்தில், ஒரு காலக்கட்டத்தில், அதன் புறவாழ்வின் ஒரு அம்சத்தில், நிகழ்ந்த மனிதத் தன்மையற்ற அநீதிப் போக்குகளைக் கண்டு, அவற்றின் இயல்பை, நேர்ந்த காரணங்களை ஆராய்ந்தார். அவருடைய ஆராய்வு, சில முடிவுகளைத் தந்தது. அம்முடிவுகள், அவ்வளவு ஒன்றும் புரட்சிகரமானவை, வெறுமையிலிருந்து பிறந்து திடுக்கிட வைப்பன அல்ல. உண்மையில் மார்க்ஸ் வரைய சிந்தனை வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி, அன்றைய மனிதநிலை, மார்க்சை எதிர்பார்க்க வைத்தன என்று சொல்லவேண்டும். மார்க்ஸுக்கும் முன்பு, பொருள் முதல் நோக்குகள் இருந்தன. தத்துவார்த்த ரீதியில், பொருளாதாரத்துறையில் கூட மார்க்ஸுக்கு முன் ராபர்ட் ஓவன், ரிக்கார்டோ முதலானோர், மார்க்ஸின் தோற்றத்திற்கு வழிவகுத்திருந்தனர். ஹெகல், மார்க்ஸுக்கு முன்னோடி. ஆனால், மார்க்ஸின் சிந்தனையில் இத்தகைய பரந்த, எல்லாத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பூரண சித்தாந்தத் தோற்றத்திற்கு விஞ்ஞான வளர்ச்சியும், சமூக மாறுதல்களும் வழிவகுத்தன. அக்கால இயல்பிலேயே, யந்திரப் பிரபஞ்சப் பார்வையில் மார்க்ஸ் ஒரு நாட்டில் அதனுள்ளும் குறுகி ஒரு சமுதாயத்தில், அதனுள்ளும் குறுகி அதன் ஒரு காலக் கட்ட நிகழ்வில், அதனுள்ளும் குறுகி அதன் புறவாழ்வின் ஓர் அம்சத்தில் தான் கண்ட தத்துவப் பின்னணியைப், பிரபஞ்ச அகண்டத்திற்கு விரித்து எல்லாச் சமுதாயங்களையும், எல்லாக் காலங்களையும், எல்லாத் துறைகளையும், தன் விதிமுறைகளில் உள்ளடக்கியதான ஒரு சித்தாந்த அமைப்பாக (System)க் கண்டார். மார்க்ஸின் சித்தாந்த்தின் பின் தூண்டுதலாக இருந்த அவருடைய மனிதாபிமானத்தையோ, அவருடைய மஹோன்னத மேதைமையையோ இது குறை கூறுவதாகாது. இவரை சரித்திர நிர்ப்பந்தங்கள். இத்தகைய சித்தாந்த அமைப்புகள் (System Building) பல நூற்றாண்டுகளாக, 19-ஆம் நூற்றாண்டு வரை தத்துவ தரிசிகளின் சிந்தனைகள் கட்டுப்பட்ட ஒரு பழக்கம். ஆமாம், அதைப் பழக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், 20-ஆம் நூற்றாண்டில் இப்பழக்கம் கைவிடப்பட்டுள்ளது. காரணம், விஞ்ஞானத் துறைகளிலும், சிந்தனைத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும், பிரபஞ்சம் தன்னுள் கொண்ட சிக்கல்களின் ஞானமும் , இவை ஒரு புறம் இருக்கட்டும்.

மார்க்ஸின் முடிவுகள், மனித சிந்தனை வளத்திற்கு அளித்த பங்கு, உண்மையிலேயே அதிகம். அவரது காலம் வரை, இல்லாத அல்லது குறைபட்ட ஒரு பார்வை. மனித சிந்தனை இதுவரை தன்னை அவ்வளவாக ஈடுபடுத்திக் கொள்ளாத ஒரு பார்வையை அளித்தது. அப்பார்வை, எத்தனையோ பார்வைகளுடன் உடன்கொள்ள வேண்டிய ஓர் அவசியமான என்பதல்லாது, அதுவேதான் பார்வை, ஒரே பார்வை, மற்றவை இதன் சமன் தூக்கில் உட்கொள்ளப்பட வேண்டியவை, அல்லது வேண்டாது ஒதுக்கப்பட வேண்டியவை என்ற நிலை மார்க்ஸின் காலத்தில், அவர் வாழ்ந்த சூழ்நிலையில், அவர் காலம் வரை, கிடைத்த விஞ்ஞான, அறிவுத்துறை வளர்ச்சியில் நிர்ப்பந்தமாகிப் பெற்ற ஒன்று. மார்க்ஸ், இத்தகைய சிந்தனை அமைப்பு நிர்ணயத்திலிருந்து, தன்னைக் காத்துக் கொண்டிருக்க முடியாது. தவிர்த்திருக்க முடியாது.

எனவே, மார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான். அது அழியவே சித்தாந்த ஜீவிய நியாமும் உடம் மறைந்துவிட்டது. பொருளாதாரத் துறையிலும் சமூகவியல் துறையிலும் இம்மாற்றம் நிக்ழ்ந்து மாக்ஸின் சித்தாந்தம் மறைந்தபின், அப்பார்வையில் விஸ்தரிக்கப்பட்ட மனவியல், பௌதீகம், தத்துவம், இலக்கியம், கலைச் சித்தாந்தம், ஜீவ அணுஇயல், சரித்திரம் ஆகிய இவற்றில் அச்சித்தாந்தப் பார்வைகளும் அழிந்துவிட்டன.

ஆனால், அவற்றின் உயிர் இழப்பிற்குப் பின்னும், இச்சிந்த்தாந்தங்களினால் சவ உருவம் (mummies) பாதுகாக்கப்பட்டு நடமாட வைக்கப்படுகின்றன, காலம் கடந்து, ஜீவிய நியாயமற்று. காரணம், இச்சித்தாந்த அமைப்பு (Philosophic system), ஒரு ‘மூடுண்ட’ (closed system), வளர்ச்சி மறுக்கப்பட்ட ஓர் அமைப்பு. இதன் சிருஷ்டி இயல்பிலேயே இச்சித்தாந்தத்தின் பிறப்பிற்குப் பின், ஏற்பட்டுள்ள எந்த வளர்ச்சியும், மாறுதல்களும், அறிவுத் துறைகளிலும், சிந்தனைப் பாதைகளிலும், விஞ்ஞானப் பிரிவுகளிலும் சரி, எவையுமே, அவற்றின் முன் இவ்வமைப்பு, உரசி, அவற்றின் எதிர்ப்பில் இதன் நியாயத்தை, உண்மையைச் சரிபார்க்கவொட்டாதவாறு, ஒரு மூடுண்ட அமைப்பாக, சிருஷ்டிக்கப்பட்டு, எத்தகைய எதிர்ச்சிந்தனையும், விஞ்ஞானத் தெரிவுகளும், இவ்வமைப்பின் கட்டடத்தில் மார்க்ஸ் தன் காலச் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தில், தான் நின்று பார்த்த கோணத்திலிருந்தே, பார்வையிலிருந்தே, காலத்தால் வளர்ச்சியால் பிற்பட்ட எந்த வளர்ச்சியின் எதிர்நோக்கும் நின்று பார்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தன் உடன் அடக்கியது. இந்நிலையை, மார்க்ஸைத் தவிர வேறு எந்த மார்க்ஸிஸ வாதியாலும் எதிர்க்க, மறுக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஓர் உதார்ணம்: வான சாஸ்திரத்தில் ஒரு புதிய கண்டுபிடிப்பு. பல்ஸார் (Pulsar) எனப்படும் ரிஷபக் கூட்டத்தில் (Taurus Constellation) காணப்படும் நட்சத்திர கோளங்கள். இக்கோளங்களிலிருந்து கிளம்பும் ரேடியோ அலைகள், ஒரு வருடத்திற்கு முன்னதாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு பழைய பௌதிக சாஸ்திரத்தையே சிருஷ்டிக்க வேண்டியிருக்குமா என்பதே. உண்மையில் எந்த விஞ்ஞானமும், அறிவுத்துறையும் ஒரு மூடுண்ட அமைப்பாக இருக்க முடியாது. ஆனால் மார்க்ஸின் சித்தாந்த அமைப்பு அது பிறந்த நாளிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள எத்தகைய துறை வளர்ச்சிகளையும், மாறுதல்களையும், எதிர் கொண்டதுமில்லை; அவற்றைக் கண்கொண்டு பார்த்ததுமில்லை. அவை ஏதும் இச்சித்தாந்தத்தைப் பொருத்தவரை நிகழாதவை. ஒரே வரியில் 1848-க்குப் பிறகு உலகம் சிலையாகி நின்று விட்டது, மார்க்ஸியவாதிகளின் நோக்கில். இவர்கள் இங்கிலாந்தில் உள்ள Flat Earth Society-க்காரர்கள் போன்றவர்கள். நம் ஜோதிட நிபுணர்கள், ராவணனின் புஷ்பக விமானத்தைத் தாண்டி எதையும் நோக்க மறுக்கும் மடிசஞ்சிகள் போன்றவர்கள். டார்வின் சித்தாந்தம் பிறந்த காலத்தில், பைபிளின் Genesis-ஐ விடாப்பிடியாக அரவணைத்துக் கொண்டு விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளைக் கண்கொண்டும் பாராது, குருட்டுத்தனமாக எதிர்த்தா டார்வின் காலத்திய கத்தோலிக்க சர்ச்சுக்காரர்களைப் போன்றவர்கள் இவர்கள்.

இச்சித்தாந்தத்தில் மூடுண்ட இயல்பிற்கும் ஒரு யதேச்சதிகாரத்தின் நிழலில், அதன் கருவியாக வளர்ந்த துரதிருஷ்டமும், இக்காலங்கடந்த சவ வாழ்விற்குப் பெரும் காரணமாகும். மற்ற துறைகள் போல, கலையும் இலக்கியமும் அவற்றின் தன் இயக்கம், சுய வளர்ச்சி மறுக்கப்பட்டு சித்தாந்தத்தின் பிரசார அம்சமாகக் கருதப்பட்டதாலும் சோஷலிஸ யதார்த்தம் பிறந்தது. சோஷலிஸ யதார்த்தவாதம் மார்க்ஸின் படைப்பும் அல்ல; இலக்கிய நோக்கும் அல்ல. ஒரு யதேச்சதிகாரம், தன்னைப் பலப்படுத்திக்கொள்ள, தன் வாழ்வை ஸ்திரமாக்கிக் கொள்ள சிருஷ்டித்துக் கொண்ட பிரசாரக் கருவி. மேலும், சோஷலிஸ யதார்த்தத்தின் கட்டுண்ட, இழிநிலைக்குக் காரணம், எந்த யதேச்சதிகாரத்தின் பிரசரா கருவியாயிற்றோ அதன் மூலகர்த்தா, கலை, இலக்கிய விகாரங்களில் ஒரு நிரட்சர குக்ஷியாக (Philistine) இருந்ததும் காரணம்.

ஆகவே, இப்பார்வை, மார்க்ஸியத்தின் பிறழ்ச்சி, இலக்கியத்துக்கும், கலைக்கும் சம்பந்தமில்லாத ஒரு அரசியல் பார்வை, அதிலும் ஒரு தனி மனித அதிகாரம், அரசியலாகிவிட்ட நிலையில் பிறந்த அரசியல் பார்வை.

எளிமை நாடும் மனம், ஒரு பத்திரிகை மனம், நோய்க்கூறான பண்பில், பொது ஜன நோக்கம் கொண்ட மனம் (demagogic mind) இதற்கும் சிந்தனை, இலக்கியம் போன்றவற்றிற்கும் உறவு ஏதும் இல்லை. இதைத் தெளிவாகச் சொல்வது என்றால் நான் C.E.M. Joad-ஐத்தான் மேற்கோள் காட்ட வேண்டும்.

“There is no necessary reason – atleast I know of none – why the universe should be readily comprehensible by a twentieth – century mind. or why persons of average capacity should be enabled easily to grasp the thoughts of the profoundest intelligences that life has yet succeeded in evolving.” (Guide to Philosophy – p.11)

—-
நடை, இதழ்கள் 3,4,5,6
பூரணு இதழ் 8, 1974 (இலங்கை)

———–

வலம் – பத்திரிகை

valam_vinayaga_murugan’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:

வலம்

 1. சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).
 2. பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).
 3. முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;
 4. வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.
 5. வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).
 6. வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்
 7. வலப்பாரிசம்: 1. Army; சேனை. (W.) 2. Strength, power; வலி.
 8. வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து
 9. வலவன்: Capable man; சமர்த்தன்.
 10. வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).

இவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா?

By Allah (Arabic: Wallah, وَٱللّٰه) is an Arabic expression meaning “[I promise] by God” used to make a promise or express great credibility on an expression. It is considered a sin among Muslims to use this phrase and follow it up with a lie.

எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

பொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:

valam_1_tamil_magazine_right_rounds

 

இதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:

 1. கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
  • இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.
 2. நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
  • போன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.
 3. வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சிசொல்வனம் ரவிஷங்கர்
  • சிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு  இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்
 4. மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
  • சமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து,  ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.
 5. இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? லக்ஷ்மணப் பெருமாள்
  • இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன
 6. அருகி வரும் யானைகள்பி.ஆர்.ஹரன்
 7. மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
  • ஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை!’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.
 8. பழைய பாடல் (சிறுகதை) – சுகா
  • ஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.
 9. ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
 10. காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
 11. சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
 12. சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
 13. கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.

valam-october-2016_first_issue_tamil_vesaa_venkat_saminathan_images_opening_special

saroja_valam_mag

 

விமர்சனம் + அபிப்பிராயம் ≠ நம்பிக்கையின்மை

சொல்வனம் – வெ.சா. நினைவாக இதழ்

வெளியிட்டிருக்கிறது. அதை முன் வைத்து…

“என் அனுபவம் என்பது நான் எதை பொருட்படுத்த ஒப்புக்கொள்கிறேன் என்பதைப் பொறுத்தது. நான் கவனிக்கும் பொருட்கள் மட்டுமே என் சிந்தையை வடிவமைக்கிறன.”
மனவியல் கொள்கை: வில்லியம் ஜேம்ஸ்

எடுத்த விஷயங்களில் உண்மையான கருத்துகளைச் சொல்வதால் அவநம்பிக்கையையும் சலிப்பையும் இடையறாத கடுமையுடன் வெளிப்படுத்தாமல் இருக்க குழந்தைகளுக்கும் குடுகுடுகிழவர்களுக்கும் மட்டுமே முடிகிறது. நடுவில் இருக்கும் நம் எல்லோரும் இரு புறமுமாக வடமிழுக்கும் போட்டியில் அறிவார்ந்த சிந்தனையையும் நப்பாசையையும் மோதவிட்டு பலப்பரிட்சை செய்கிறோம்.

நப்பாசை இல்லமல் செய்யப்படும் அறிவார்ந்த சிந்தனை என்பது வெறுமையை நோக்கி இட்டுச் செல்லும். அறிவார்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழாத நப்பாசை, முட்டாள்தனமான மூடநம்பிக்கை ஆகிவிடும்.

எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது விரக்தியில் கொண்டு போய் விடுகிறது. சூம்படைதல் என்றால் என்ன? நிர்க்கதியே கதி என்று எண்ணங்கொள்ளுவதும், அந்த கதியை மாற்ற முடியாது என்பது சப்பைக்கட்டு வாதங்களை முன்வைத்து தற்காத்துக் கொள்வதும் சூம்படைந்தவரின் குணம். வெற்று நம்பிக்கையில் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என்று நம்புவது எவ்வளவுக்கு எவ்வளவு அறிவிலித்தனமோ, அத்தனைக்கு அத்தனை சூம்படைந்தலும் பயனற்ற எதிர்வினையாக இருக்கிறது.

‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்துவிட்டால், நாளைய விளைவுகளை நம் செய்கைகள் கொண்டு மாற்றலாம் என்னும் நம்பிக்கை அற்றுப் போகும். ஒரு குழுவாக, ஓரினமாக, தனி மனிதராக முன்னேற, அறிவார்ந்த சிந்தனையும் நப்பாசையையும் பூட்டிய இந்த இரட்டை மாட்டுச்சவாரி அவசியம்.

இதையெல்லாம் வெங்கட் சாமிநாதன் உணர்ந்து இருந்ததால்தான் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை தமிழ்ச்சூழலில் முன்வைத்தார். செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அளவாக ஊற்ற வேண்டும். அப்போது மட்டுமே அந்தச் செடி தழைத்தோங்கி வளரும். அதிகம் ஊற்றினால் அழுகிவிடும். கொஞ்சமாய் ஊற்றிக் கொண்டிருந்தால், உள்ளே காய்ந்துவிடும். இதைத்தான் வெ.சா. செய்தார்.

தற்காலத்திற்கேற்ப இன்னொரு உவமையையும் பார்க்கலாம். வலைப்பக்கங்களுக்கு மேல்நிலை தரவுகளாக அந்தந்தப் பக்கங்களில் தலைப்பில் சில பகுப்புக்களையும் குறிச்சொற்களையும் தரவேண்டும். சரியான அளவில் தரவேண்டும். அளவுக்கதிமாக கொடுத்தால், கூகுள் / பிங் /யாஹூ போன்ற தேடுபொறிகள் குழம்பிப் போய் நிராகரித்துவிடும். மிகவும் குறைவாகக் கொடுத்தால், தேடுபவர்களுக்குப் பொருத்தமான விஷயமாக தேடல் முடிவுகளில், அந்த வலைப்பக்கம் வந்து சேராது.

எதற்காக இந்த இன்னொரு உவமை?

இன்று ஃபேஸ்புக்கின் தேர்ந்தெடுப்புகளுக்குக் கட்டுப்பட்டு தலைவணங்கி நாம் வாழ்கிறோம். ஃபேஸ்புக் நிரலி நமக்கு என்ன பிடிக்கும், நம்முடைய நண்பர்களின் செய்திகளில் எதைக் காட்டலாம்; செய்தித்தாள்களில் இருந்த எந்தச் செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வழங்குகிறது. ஃபேஸ்புக் போன்ற ஊடகங்களுக்கு சில குறிக்கோள் இருக்கிறது: மீண்டும் மீண்டும் வரவழைக்குமாறு தூண்டிலிட்டு, தன் பக்கங்களை மயங்கியிருக்க வைத்து, கட்டிப் போடுவது. அப்போது அவர்கள் எந்தவிதமான ரசனை உங்களுக்குப் பிடிக்குமோ அதனையேத் தீனி போட்டு, உரம் கொடுத்து வளர்த்தெடுப்பார்கள். நீங்கள் அறிவாளிதான்; ஆனால், நீங்கள் உபயோகிக்கும் பயன்பாட்டுச்செயலிகளும் நிரலிகளும் ஆழமில்லாத அறிவுக்கூர்மையற்ற மந்தை உலகிற்குள் உங்களை உழல வைக்கும்.

விமர்சகரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? அவரின் பணிகள் என்ன – ஈ.பி. வொயிட் சொல்லக் கேட்போம்: “எழுத்தாளருக்கு எது முக்கியமாகப் படுகிறதோ எதைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். எது அவரின் இதயத்தைத் துடிக்க வைக்கிறதோ, எது அவரின் சிந்தனையை மொய்ம்புறச் செய்கிறதோ, எது அவருடைய தட்டச்சு விசையை பொறி பறக்கச் செய்கிறதோ, அதைக் குறித்தெல்லாம் அக்கறை கொள்ளவேண்டும். எனக்கு அரசியல் குறித்து கருத்துச் சொல்லும் கடமை கிடையாது. சமூகத்தைக் குறித்து அச்சாவதில் எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனோதானேவென்று மேம்போக்காக பட்டும் படாமல் இருப்பது எழுத்தாளருக்கு அழகல்ல; சுத்தமாக இருக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும்; உயிர்பெற்றெழுமாறு வார்த்தைகள் அமையவேண்டும்; முழுமையாகவும் துல்லியமாகவும் எழுதவேண்டும். தன் சஹிருதயரை உயர்த்த வேண்டும்; கீழே இறக்கக் கூடாது. எழுத்தாளர் என்பவர் வெறுமனே வாழ்க்கையை பிரதிபலிக்கவும் பொருள் கொள்ளவும் எழுதுபவர் அல்லர்; உயிரை உணர்த்தவும் வாழ்க்கையை வடிவமைக்கவும் போராடுபவர்.

தன் சமூகத்தை, தன்னுடைய உலகத்தை எழுத்தின் மூலமாகப் புரிந்து கொள்ள வைப்பது முதல் கடமை. அதே சமயம் உத்வேகம் தரவேண்டும்; வழிகாட்டியாகவும் ஒளிபாய்ச்சவேண்டும்; சவால்களுக்கு அறைகூவல் விடுத்து பிசகு சொல்லி ஆஷேபணைகளை எழுப்பதுவும் ஆகும்.

எழுத்தாளரின் பாத்திரம் என்பது பாதுகாவலர் போல், காப்பாளர் போல்… எனலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் அந்தப் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய மாற்றவில்லை. எழுதும் பணியைச் செய்யும் செயலாளராக என்னைக் கருதும் நான், நம்மை வசியப்படுத்தும் எதையும் பாதுகாக்கும் பணிக்கு நியமிக்கப்ப்பட்டிருக்கிறேன். அதிசயிக்கப்படும் அந்த வஸ்து எத்தனை சின்னஞ்சிறியதாக இருந்தாலும், காணாமல் போகாமல் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். சொக்கவைக்கும் எதுவும் தொலையாமல் காவல் காக்கிறேன் என்று இதையெல்லாம் எளிதில் தெரிவிக்கமுடியாது.”

வெ.சா.வின் கருத்துலகை சுந்தர ராமசாமி நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறார்:

1. நமது இலக்கியம், கலைகள், தத்துவம், சிந்தனை ஆகியவற்றின் நேற்றைய, இன்றைய நிலைகளை ஆராய்ந்து அவற்றின் வெறுமையை அம்பலப்படுத்தும் கருத்துகள்.

2. இலக்கியம் பற்றியும் பிற கலைகள் பற்றியும் தன் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகள்.

3. கலைஞனின் இயக்கத்திற்குச் சூழல் ஆற்றும் பங்கு.

4. கலை உலகை ஊடுருவி உண்மைக்கு எதிராக இயங்கும் சக்திகளைப் பற்றிய விமர்சனம்.

கலைப் பார்வைக்கும் தொழில்திறனுக்குமுள்ள வேற்றுமையை வற்புறுத்தி, தொழில்திறனை அதற்குரிய ஸ்தானத்தில் பின்னகர்த்தி கலை உணர்வுகள் செழுமைப்படும் சூழ்நிலையை உருவாக்குவதே வெ.சா.வின் ஆதார முயற்சி.

இதை முன்வைத்து வெங்கட் சாமிநாதனைக் குறித்த விமர்சனங்களை நான்கு மேற்கோள்களில் வகுக்கலாம்:

1. உள்வட்டம் x வெளிவட்டம்: ஹண்டர் எஸ் தாம்ஸன்: “புறநிலையில் இயங்குவது என்பது போன்ற பம்மாத்து எதுவும் இல்லை. புறவயமான கருத்தியல் என்ற சொற்றொடரின் அடிப்படையில் ஆடம்பரமான முரண்பாடு இருக்கிறது.”

2. ஆளுமை / நான் என்னும் அகங்காரம்: ஜே டி சாலிங்கர் குறித்து டேவிட் ஷீல்ட்ஸ்: “தன்னுடைய படைப்பின் மூலமாக சாலிங்கர் என்னும் நாயக கதாபாத்திரமாக வாசகர் வரித்துக் கொண்டதை அவர் அதீதமாக கொழுந்துவிட்டெறியச் செய்தார். தன்னுடைய புனைவில் கண்டித்ததை, நிஜ வாழ்க்கையில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.”

3. எண்ணிக்கை / எண்ணங்களை எழுத்தாக்கும் திறமை: வன்னேவார் புஷ்: ”இது நம்முடைய கூட்டு நினைவகம். துல்லியமாகவும் இருக்க வேண்டும்; உத்தரவாதமும் ஏற்க வேண்டும். கலாச்சார மீத்தங்கலின் சாறெடுத்துத் தர வேண்டும்”

4. தீதும் நன்றும் பிறர்தர வாரா: மரியா பொப்போவா: ”மற்றவர்களைக் குறித்து என்னவெல்லாம் கட்டுக்கதைகளை நீங்களை கற்பனை செய்கிறீர்களோ, அவையனைத்தும் மற்றவர்களை விட உங்களின் கற்பிதங்கள் குறித்து அதிகம் உணர்த்தும்.”

வெ.சா. இணையத்தில் எழுதியதை வெங்கட்ரமணன் தொகுத்து இருக்கிறார். இந்தத் தொகுப்பில் மட்டும் 858 பதிவுகள் இருக்கிறது. அது தவிர இன்னுமொரு 858ஆவது அவருடைய அறுபதாண்டு காலப் பதிவுகளில் அச்சில், கையெழுத்தில் இருக்கும்.

அவர் எழுத வந்த ஐம்பதுகளும் அறுபதுகளும் எழுத்தாளர்களுக்கு பொற்காலம். திபெத்தில் இருந்து தலாய் லாமா ஓடி வருகிறார். சீனாவுடன் சண்டை; கல்கத்தாவில் எல்லோரும் சீன மொழி கற்கத் துவங்கும் அளவு பயம் மேலோங்கி இருந்த காலகட்டம். பாகிஸ்தானுடன் விதவிதமான போர்கள் எல்லாம் நடந்தது. லால் பகதூர் சாஸ்திரி வந்தார்; மறைந்தார். பதினைந்து வருடமாகத் தயாரிப்பில் இருந்த ‘முகல் ஏ அசம்’ வெளியாகிறது. இந்தியாவில் வெறும் பதினெட்டு சதவிகித மக்களுக்கே படிப்பறிவு இருந்த காலகட்டத்தில் வெ.சா. இலக்கிய உலகில் தன் விமர்சனங்களுடன் உள்நுழைகிறார்.

vesa_solvanam_Vesaa_Venakt

ஜெயமோகன் எழுதிய “வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல்” -இல் இருந்து:

இலக்கியமும் கலையும் அடைந்துள்ள நுண்மையையும் ஆழத்தையும் புறக்கணித்து விட்டு பெருவாரியான மக்களுக்கு என ஓர் இலக்கியத்தையோ கலையையோ உருவாக்கிவிடவே முடியாது என்று அவர் (வெ.சா.) வாதிடுகிறார். ராஜ்கபூரின் சினிமா ருஷ்யாவில் பரவலாக ரசிக்கப்படுவதைப் பற்றிப் பேசும் சாமிநாதன்:

”நம்மூர் முற்போக்குகள் (இது ஒரு விசித்திர ஜாதி) போதிக்கிற சித்தாந்தங்களைக் கொண்டு பார்த்தால் கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைத் தன்பால் ஈர்த்துள்ள ராஜ்கபூர்தான் ‘மக்கள் கலைஞர்’ ஆகவும் அக்கோடிகள் தாம் ‘பாட்டாளி மக்கள்’ எனவும் ட்ஸைக்கோவஸ்க்கியையும், ஐஸன்ஸ்டைனையும் புடோவ்கினையும், ஸாஸ்டகோவிச்சையும் ரசிக்கும், ஒரு சில ஆயிரம் ரஷ்யர்கள் ‘மக்களிடமிருந்து’ அன்னியப்பட்டு போன பூர்சுவா மேல்தட்டு வர்க்க உயர்குழுக்கள் எனவும் எனவே மக்கள் விரோதிகள்’ ஆகவும ஆகிவிடுவார்கள்” (இரண்டு தலைமுறைகளுக்கிடையில்கொல்லிப்பாவை” ) என்று கூறுகிறார்.

கலையின் இயல்பு மேலும் மேலும் நுட்பத்தையும் ஆழத்தையும் தேடுவதே. அது தன்னிச்சையானது. கலைஞனின் அக இயக்கத்தால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுவது. அதைக் கட்சிப்பிரச்சாரத்திற்கான கருவியாகப் பார்க்கும்போது அந்தத் தன்னிச்சையான இயக்கம் முற்றாகவே அழிக்கப்படுகிறது. அதன் பிறகு அமைப்பு உருவாக்கி அளிக்கும் கோஷங்களை எதிரொலிப்பதாக அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அந்தக் கலையும் இலக்கியமும் மனித இதயங்களைத் தீண்டி எழுப்பும் சக்தியை இழந்துவிடுகின்றன. எவரையுமே அவற்றால் ஈர்க்க முடிவதில்லை. ஆகவே அவை பரப்பியக் கலையின் கேளிக்கை உத்திகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாங்களும் ஒருவகை பரப்புகலையாக பரப்பிலக்கியமாக மாறிவிடுகின்றன. முதல்வகைப் பரப்பிலக்கியம் வெறும் கேளிக்கை; இது பிரச்சாரம் கலந்த கேளிக்கை.

இந்த விவாதத்தின் விளைவாகவே சாமிநாதன் உள்வட்ட வெளிவட்டக் கோட்பாட்டுக்குச் செல்கிறார். … உண்மையில் சாமிநாதன் உள்வட்டத்தில் நிகழும் எந்த ஒரு கலையிலக்கிய உச்சமும் காலப்போக்கில் வெளிவட்டத்திற்கும் சென்று சேரும் என்றே சொல்கிறார். உள்வட்டத்து இலக்கியம்தான் வெளிவட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக உருமாற்றம் கொள்கிறது. ஆகவே ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழும் இலக்கிய, கலைவளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஒன்றல்ல. ஒரு சிறிய மக்கள் கூட்டத்திற்கு மட்டும் உரியதுமல்ல. அது அனைவருக்கும் உரியதுதான். அது மக்கள் விரோதமானதல்ல, அது மக்களுக்காகவே நிகழ்கிறது. இவ்வளவுதான் வேறுபாடு.

வெங்கட் சாமிநாதனின் வீச்சைப் பார்க்கும்போது கார்ல் சாகன் காஸ்மோஸ் தொடரில் சொன்னது நினைவுக்கு வருகிறது: “மனிதர்களால் மாயாஜாலம் செய்யமுடியும் என்பதற்கு புத்தகங்களில் ஆதாரம் இருக்கிறது. தட்டையான பொருள்; மரங்களால் தயார் ஆனது; ஆங்காங்கே கருப்புக் கிறுக்கல்கள் கொண்டது. ஒரேயொரு தரிசனம் போதும். இன்னொருவரின் மூளைக்குள் சென்றுவிடுவீர்கள். அவர் நேற்று இறந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால், இன்றும் அவர் உங்களுடன் உரையாடுகிறார். நேரடியாகவும்… அமைதியாகவும்…”

சொல்வனம் – வெ.சா. இதழ்

ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்

ஜெயமோகனை சந்தித்த கதை தொடர்கிறது.

நான்: இப்போ எழுதறதில் எதையாவது படிச்சு ரெஃபர் பண்ணுகிற மாதிரி உங்களுக்கு யாராவது இருக்காங்களா? உங்களைக் கவர்ந்தவர்கள்?

“நெறைய பேரு இருக்காங்க. அப்பப்ப சொல்லிடுவேன். உங்களுக்கு அறிமுகமானவர்களில் சேதுபதி அருணாச்சலத்தையும் அரவிந்தன் நீலகண்டனையும் தற்காலத்தின் மிகச் சிறந்த வளரும் எழுத்தாளர்களாக நான் கருதுகிறேன். அந்த வயதில் நான் வாசித்ததை விட, இவர்களின் அகலமும், ஆழமும் நீளமும் அதிகம்.

சொல்லப் போனால், அ.நீ. குறிப்பிடத்தக்க படைப்பாளியாக, தமிழிலக்கிய கர்த்தாவாக வரவேண்டியவர்; வந்திருக்கக் கூடியவர். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருடைய முனைப்பெல்லாம், தன்னார்வத் தொண்டில் இருப்பதும் நல்லதே.

சுய உதவிக் குழு, மகளிர் நலன், விவேகானந்தா கேந்திரா என்று அயராது உழைக்கிறார்.

எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் இவர்கள் இருவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

நேசகுமாரை…”

ட்ரெயின் வரும் சத்தத்தில் ஜெயமோகன் உரையாடல் முற்றுப் பெற்று வெங்கட் சாமிநாதனுக்கு தாவிவிட்டது.

“வெங்கட் சாமிநாதனின் நகையுணர்வு மெலிதானது; பிரசித்தி பெற்றது. யாத்ராவில் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் போடுகிறார்.

‘இந்தப் புத்தகத்தில் 13 வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 • ஆசிரியர் பெயர்
 • பக்கங்கள்
 • பதிப்பகம்
 • விலை
 • அச்சிட்டவர்
 • புத்தகத் தலைப்பு

இப்படி போகிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ’35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’

இன்றைய அளவிலும் கறாரான கருத்துக்கு சொந்தக்காரர்.

வெ.சா. விமர்சனத்தை தனியாகவும், சொந்த வாழ்க்கையில பிரதிபலன் பார்க்காம உதவறதையும் தனித்தனியா வத்திருந்தார். அவர் நேர்மையாக, கடுமையாக விமர்சித்த பலருக்கு தனிப்பட பலப் பல விஷயங்கள் செய்திருக்கார்.

அதை வெளியில் யாருக்கும் சொன்னதுமில்லை. உதவி பெத்துண்டவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்!

நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்.”

நான்: அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே! சுஜாதாவைப் சந்திச்சவங்க சொன்னதில் இருந்து எனக்கு பயம் வந்துடுச்சு.