Tag Archives: Compare

லாஸ் வேகாஸ் குறிப்புகள்

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம், கேளிக்கை, விடுதி) அமைக்கப்படுகிறது.

இந்த தடவை பெங்களூரை பார்த்தபோது மலைப்பு ஏற்பட்டது. வெளிச்சுற்றுச்சாலை, வொயிட்ஃபீல்ட் நகர மையம், விமான நிலையம் என பல மாற்றங்கள். ஆனால், வேகாசில் ஐந்தாண்டு முன்பு வந்ததற்கும், தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதே புகழ் பெற்ற கேசினோக்கள். இப்பொழுது இன்னும் பெரிய பார்க்கிங் கட்டிடங்கள். அலிபாபா போன்ற பெயர் மாற்றங்கள்.

வேகாசுக்கும் திருப்பதி திருமலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டும் இடமுமே கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துக்காது என்பது தவிர…

திருமலை திருப்பதி

லாஸ் வேகாஸ்

1. அங்கே எல்லாவிடத்திலும் பெருமாளும் தாயாரும் போட்டோவிலாவது காட்சி கொடுப்பர். இங்கே ஸ்லாட் மெஷின்கள்.
2. உறங்கா நகரம். 24 மணி நேரம்; ஏழு நாள்; 365 நாள்; கிறிஸ்துமசுக்குக் கூட விடுமுறை இல்லை.
3. அசல் மொட்டை. ஒட்ட சுரண்டும் மொட்டை.
4. ஏகாந்த சேவை ரொம்பவே பிரபலமானது. சயனிக்கும் நேரத்திற்கான revue காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
5. நித்ய அன்னதானம். வித விதமான 150 உணவுவகைகளைக் கொண்ட பஃபேக்கள் பிரசித்தம்.
6. உண்டியலில் சில்லறை கொட்டும் சத்தமும், காணிக்கை காசுகளை எண்ணும் ஒலியும் பிரகாரங்களில் ரீங்கரிக்கும். எங்கு திரும்பினாலும் ஸ்லாட் மெஷின்களின் ஓசை.
7. குபேரனுக்குக் கொடுத்த கடனை இன்னும் வெங்கடாசலபதி அடைக்காததாக கேள்வி. கடனில்தான் அமெரிக்காவே ஓடுகிறது; லாஸ் வேகாஸ் எம்மாத்திரம்?
8. பல மணி நேரம் காத்திருந்தால்தான் இலவச தரிசனம் கிடைக்கும். பல மணி நேரம் சூது விளையாடினால்தான் இலவச மது கிடைக்கும்.
9. கடவுளிடம் சொன்னது வெளியில் வராது. வாட் ஹாப்பன்ஸ் இன் வேகஸ், ஸ்டேஸ் ஹியர்.

சஹாரா மூடப்பட்டுவிட்டது. கொஞ்ச காலம் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். முயல் குட்டி போடுவது போல் சர்க்யூ டீ சொலே, நிகழ்ச்சிகளை பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேசினோவிற்கும் ஒரு சர்க்யு டி சொலில் நிகழ்வு. “ஓ”வின் தண்ணீர் அரங்கை, பலர் பல விதமாக பிரதிபலித்து, தங்கள் தியேட்டரிலும் அரங்கேற்றுகிறார்கள். ஆனால், ஆங்கில விமர்சனத்தைப் படித்துவிட்டு, காப்பியடிக்கும் சாரு நிவேதிதாவாக அவை எல்லாம் நிறையவே பிசிறு தட்டுகின்றன.

குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாலோ… ஊருக்குப் புதிதாய் லட்சக்கணக்கானோர் சாலைகளை நிறைத்திருப்பதாலோ… தினமும் ஆறேழு விபத்துகளாவது கண்ணில் படுகிறது. இருபது கார்களாவது பலத்த சேதத்தில் காணப்படுகிறது. இந்த ஊருக்கா, இன்பச் சுற்றுலா வந்தோம் என்று மரண பயம் கிலியூட்டுகிறது.

மக்கள் வாழ்வை கண்டு போபோ-வாக பச்சாதபம் ஏற்படாமல் இல்லை. கிறிஸிதுமஸ் அன்று காபி கலந்து கொடுக்கும் ஸ்டார்பக்ஸ் ஊழியரிடம் பூர்ஷ்வா பொஹீமியனாக வருத்தம் ஏற்படுகிறது. ‘நீ 99% சதவீதம்தானே? ஆக்குபை வால் ஸ்ட்ரீட்டில் கலந்து கொண்டாயா? இன்று விடுமுறை தினமல்லவா? பண்டிகை கொண்டாட்டத்தில் நீ ஈடுபடவில்லையா? ஸ்க்ரூஜ் போன்ற முதலாளியா? அவரை சார்லஸ் டிக்கன்ஸ் படிக்க சொல்லவா?’ என்று தத்துவ விசாரத்தில் ஈடுபட மனம் விரைந்தாலும், காபிக்கு, கொழுப்பு நீக்கிய பால் கலக்க சொல்கிறேன்.

நாற்பத்தைந்தாயிரம் டாலருக்கு ஓவியம். எண்பதாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு சர்க்கஸ் கோமாளி சிற்பம். பெரும் சூதாடிகளுக்கு மட்டும் திறக்கும் கேசினோ கதவு. எங்கிருந்து நோட்டு அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கிருஷ்ணரையோ சகுனியையோ மட்டும் மாமாவாய்க் கொண்டிருந்தால், நிச்சயம் எனக்காக ஆடும் படி அழைத்துச் சென்றிருப்பேன்.

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

 1. ஏ ஆர் ரெஹ்மான்
 2. சுருதி ஹாஸன்
 3. பிரிட்டிஷ் நந்தி
 4. பர்க்கா தத்
 5. கரன் ஜோஹர்
 6. ஷாரூக் கான்
 7. சசி தரூர்
 8. சேகர் கபூர்
 9. சுசித்ரா
 10. சச்சின் டெண்டுல்கர்

ஜெயமோகன்: சில குறிப்புகள்

இணைய அறிமுகம், சிறுகுறிப்பு, தகவல் கட்டுரை: Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction « Tamil Archives

வார்த்தைகளின் விளிம்பில்: எழுத்து – ஜெயமோகன் – தொடர்

இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:

 1. சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
 2. அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
 3. இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
 4. கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
 5. சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
 6. எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
 7. அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
 8. நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
 9. பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
 10. சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.

இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.

 1. சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
 2. சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
 3. சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
 4. அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
 5. பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
 6. தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
 7. Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
 8. நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
 9. தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
 10. ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.