Tag Archives: கோடை

அறுவடை இல்லாத விளைச்சல் திருவிழா

செம்புற்றுப் பழம் விளைவித்துக் கொண்டிருந்த காலத்தில், அதை அறுவடை செய்வதை கொண்டாட்டமாக செய்திருக்கிறார்கள். அறுவடை முடிந்தவுடன் பொங்கல் திருநாள் போல், கோடை காலம் ஆரம்பித்தவுடன் ஸ்டராபெரி திருநாள் வருகிறது.

கலிஃபோர்னியாவில் இருந்தும் ஃப்ளோரிடாவில் இருந்தும் இறக்குமதி ஆகிற காலகட்டத்தில் உள்ளூரில் சாஸ்திரத்திற்காக காக்காவிற்கு பிண்டம் வைப்பது போல் ஸ்டிராபெர்ரி திருநாளும் சந்தையாக மாறி இருக்கிறது. பொம்மைகளுக்கு ஆடை தைப்பவர்களும், ஊசிமணி/பாசிமணி விற்பவர்களும், இரும்புக்கொல்லர்களும் தங்கள் தொழிலை கலையாக காண்பிக்கும் விழா.

முன்னொரு காலத்தில் கேமிரா கிடையாது. புகைப்படம் எடுக்க முடியாது. ஓவியம் வரைந்து, தங்களை பிரதிபலிப்பது புகழ் பெற்ற பண வருவாய் மிக்க உத்தியோகமாக இருந்தது. இன்றோ ஓவியம் என்பது கலை வெளிப்பாடு. இயந்திரங்களை வைத்து நகைகளும், பாத்திரங்களும் தயாரிக்கும் காலத்தில் கொல்லர்களும் தச்சர்களும், தங்கள் புராதன பணியகத்தை கலைக்கூடமாக மாற்றி செய்முறை விளக்கம் அளித்து பொழுதுபோக்கு சாதனமாக மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை.

நான் கணினி நிரலியாளன். இன்னும் கொஞ்ச காலத்தில் வேர் அல்காரிதங்கள் கொண்டு மென்கலன்கள் தானே தயாரித்துக் கொள்ளும் நிலை வரும்போது, இப்படித்தான் if தீர்மானம் எழுத வேண்டும் என்று பூங்காவில் கடை விரித்து டெமோ தர வேண்டுமோ!?

Westford_Arts_Crafts_Strawberry_Festival_Commons_Summer_Seasons_Harvest

பருவகாலங்கள்: ஈஸ்டர் ஞாயிறு

பனிக்காலம் முடிந்து குளிர் விலகுவதை ஒவ்வொரு இனக்குழுவும் அந்தக் காலத்தில் கொண்டாடி வந்தது.

ஒருவர் புனித வெள்ளி முடிந்து ஈஸ்டர் என்கிறார். இன்னொருவர் வண்ணப் பொடி தூவி ஹோலி என்கிறார். இஸ்ரேலியர்கள் passover என கொண்டாடுகிறார்கள். மார்கழியில் பெரிய குளிர் இல்லாவிட்டாலும் மாசி மகம் அன்று ‘தீர்த்தமாடும் நாள்‘. எத்தனை நாள்தான் குளிக்காமல் அட்டு மாதிரி தோய்க்காத பழைய கோட்டு சூட்டுகளையேப் போட்டுத் திரிவது!

பூப்பூக்கும் காலம். அதுவரை வாடி வதங்கிய புல்லும் மரங்களும் துளிர்க்கும் காலம். முட்டையில் இருந்துதான் கோழி வந்தது என நம்புவதைப் போல் முட்டைகளுக்குள் மிட்டாயை ஒளித்து, அவற்றைத் தோட்டத்தில் புதைத்து, குழந்தைகளைத் தோண்டச் சொல்லி தூர் வாரும் காலம். அந்தக் கால pagan கொண்டாட்ட முட்டையில் இருந்துதான் இந்தக் கால இயேசு உயிர்த்தெழுந்திருக்கிறார்.

தமிழ்ப் புத்தாண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. முஸ்லீம்களுக்கும் யுகாதி ஆண்டுத் துவக்கத்திற்கும் தொப்புள்கொடு உறவு. இஸ்லாமில் ஷியா பிரிவினரும் நௌரூஸ் (Nowruz) என மார்ச் 21ஆம் தேதியை புது வருடப் பிறப்பாகக் குறிக்கிறார்கள். சங்க காலத்திலும் இளவேனிற் காலம் பாடல் பெற்றிருக்கிறது.

”வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன” (குறந்தொகை : 147 : 1)
“கான விருப்பை வேனல் வெண்பூ”(குறந்தொகை : 329 : 1)

அனைவருக்கும் வசந்த காலம் பிறக்க புனித ஞாயிறு வாழ்த்துகள்.