Category Archives: Woes

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா

இது கொஞ்சம் பிடித்த கதை. அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளும் கதை. ‘செல்லிடத்து சினங்காக்கான்’ மாதிரி அனுபவங்களில் மோதி அசல் நிலையை எடுத்து வைக்கும் கதை. இணையத்தில் தேடியதில் ஏற்கனவே எழுதியது ஆம்ட்டது…:

கொங்கணரைப் பற்றி நினைக்கும்போது, ஒரு கொக்கின் நினைப்பும் எப்போதும் சேர்ந்தே வரும். கொங்கணர் யாகம் வளர்த்து அதற்குரிய பலன்களால் தன்னை பல அரிய செயல்களுக்கு கர்த்தாவாக வைத்துக் கொண்டிருந்த நாளில் நடந்த சம்பவம் இது.

அவர் பார்த்தாலே பச்சை மரமும் பற்றி எரியும். அப்படி ஒரு சக்தியுடன் ஒருநாள் தெருவில் நடந்தபடி இருந்தவர் மேல், வானில் பறந்து கொண்டிருந்த கொக்கானது எச்சமிட்டுவிட்டது. அவ்வளவுதான்…

அதை கொங்கணர் கோபத்துடன் பார்க்க, அது எரிந்து சாம்பலானது. கொங்கணரிடமும் ஒரு பெருமிதம். ‘நான் மாபெரும் தவசி.. என் மேலா எச்சமிட்டாய்?’ என்பது போல ஒரு கர்வப் பார்வை வேறு….

துர்வாசரின் கோபம் மிகப்பிரசித்தம். அதனால் அவர் பட்டபாடும் கொஞ்ச நஞ்சமல்ல.. விசுவாமித்திரரின் தாழ்வுமனப்பான்மையும் அதன் எதிரொலியான கோபமும்தான் அவரை திரிசங்கு சொர்க்கம் அமைக்கவே தூண்டியது.

கொக்கை எரித்த கோபத்தோடு அடுத்து அவர் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு. கொங்கணர் யாசகம் கேட்டு, சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது.

புரியாத கொங்கணர், ‘உனக்குத்தான் என்ன ஒரு அலட்சியம்…’ என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை. மாறாக அவள் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து ‘கொக்கென்று நினைத்தாயோ… கொங்கணவா?’ என்று திருப்பிக் கேட்கிறார்.

  1. வாசுகியால் எப்படித் தன்னையறிய முடிந்தது? இது முதல்கேள்வி.
  2. எப்படி தன் தவப்பயன் அவளை மட்டும் எரிக்கவில்லை? இது அடுத்த கேள்வி.

ஹோமம் வளர்ப்பது, யாகம் புரிவது, தவம் செய்வது அனைத்தையும் விட மேலான ஒரு செயல், தானென்ற அகந்தை துளியும் இன்றி சேவை செய்வது, தனக்கென வாழாமல் இருப்பது என்பதே அது!


விஷயத்துக்கு வரேன்.

இராப்பிச்சை உண்ட களைப்போடு டிவியில் சினிமா பார்க்கலாம் என்று தேடல் துவங்கியது. பே-பெர் வ்யூ-வில் ‘பான்ஸ் லேபிரிந்த்’ ஓடியது. அப்படியே ஆகட்டும் என்று தேர்தெடுக்கப்பட்டது.

படத்தின் கதையையும் ஆஸ்கார் பரிந்துரையும் அறிந்த மனைவி ஜகா வாங்குகிறார். தனியே பார்க்க முடிவெடுக்கிறேன். ஆனந்தமாக சோபாவில் சயனம். போர்வைக்குள் புகுந்த கோலம்.

‘இந்த சொகுசு வாழ்க்கை அடுக்குமா? ஏதாவது சிக் ஃப்ளிக் போட்டா குறைஞ்சா போயிடும்’ பார்வையுடன் குட் நைட் பரிமாறல் முடிகிறது.

படம் சூடு பிடிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடம். இடி, மழை, மின்னல். படம் பணால்.

வாசலில் வைத்திருக்கும் செய்மதித்தட்டு (satellite dish) ‘திசை மாறிப் போச்சு; சமிக்ஞை கிடைக்காம போச்சு!’ என்று நரிக்கதையாக வாழ்வே மாயமானது.

நல்ல படத்தை போஷாக்கான போஸில் நடுநிசி நிம்மதியோடு விமர்சக நிப்போடு காணுறும் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட துக்கத்தோடு தூக்கம்.

காலை எழுந்தவுடன், அஷ்டகோணலாக செய்மதித்தட்டை கொட்டியதில் மீண்டும் கன்னல்களுக்கு உயிர் வருகிறது. ‘பயனர் சேவை மைய’த்தை தொடர்பு கொண்டு அர்த்த ராத்திரி படம் பார்க்க முடியாத சோகத்தை எடுத்து வைக்கிறேன். ‘அச்சச்சோ’ என்று பரிதாபமாக கேட்கிறாள். ஆனால், முடிவில் படம் பார்க்க கொடுத்த பைசா தேறாது என்று நிறுவனத்தின் மேல் பாசக்காரியாகிறாள்.

‘பார்க்காத படத்துக்கு பணமா?’

‘மழை பெய்த்தற்கு நாங்கள் பொறுப்பா’

‘பணம் வாபஸ் வேண்டாம். மீண்டும் படத்தைக் காட்டு. போதும்!’

‘அப்ப, திரும்ப நாலு டாலர் கொடுக்க ரெடியா?’

‘ஏற்கனவே கொடுத்த பணத்திற்கே படம் காட்டலை. புதுசா எதுக்கு தண்டல்?’

போராட்டத்தின் முடிவில் மாணிக் பாட்சா மாதிரி மிரட்டினாலும், வருண பகவானின் சக்தியே வென்றது.

பிசாத்து நாலு டாலர் என்று கோபத்துடன் வந்தாலும், பணிவன்புடன் பவ்யமாக, கஸ்டமர் சர்வீசுக்கு புகர் புலம்பலோடு மின்மடல் அனுப்பி வைத்தேன். ஐந்தே நிமிடத்தில் பதில் வந்தது. ‘நாலு டாலர் தள்ளுபடி செய்கிறோம்’ என்றார்கள்.

தொலைபேசியில் பொறுமையாக துளிக் கோபம் கூட எட்டிப் பார்க்காமல், என்னுடன் வாதம் செய்து நிறுவனத்தின் நிலையை விளக்கிய பயனர் மன்றத்தவள் எங்கிருந்தாலும் எளிதில் ‘பேர் சொல்லும் பிள்ளை’யாகப் பரிமளிப்பாள்.

இறைவா

பஞ்சபூதங்களிடமிருந்து என்னைக் காப்பாற்று!

படங்களை நான் பார்த்துக் கொள்வேன்!!

பக்கிபாய்