Category Archives: Sharapova

It is tough to write about French players

கடந்த சில நாள்களாக ஃப்ரென்ச் ஓப்பன் மாலைகளை ஆக்கிரமிக்கிறது. சாதாரணமாக என்.பி.ஏ கூடைப்பந்தின் அடியொட்டி செல்லும் பருவம்.

  • ஆனால், சான் ஆண்டானியோ ஸ்பர்சும் டெட்ராய்ட்டும் நிச்சயம் இறுதிச்சுற்றுக்கு வந்துவிடும் என்பது ஒரு புறம் தோன்றுவதாலோ…
  • அல்லது க்ரிக்கெட் குறித்து லைலா சூர்யாவிடம் சொல்வது போல் ‘எல்லாம் மேட்ச் ஃபிக்சிங்’ என்னும் ஞானம் பிறந்ததாலோ…
  • நாலு க்வார்ட்டருக்கு மூச்சு முட்ட ஆடினாலும், கடைசி விநாடியில் ‘ஹே ராம்’ சொல்லி சொர்க்கத்திற்கு நுழைவுச்சீட்டு போடுவது போல், அந்த இரண்டு வாய்தாக்களில் வெல்வதாலோ…

டென்னிசுக்கு மாறச்சொல்லி விட்டது. விம்பிள்டன் போல் பந்து போட்டவுடன் பாயிண்ட் விழாமல், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் எதிரும் புதிருமான ஆட்டம் தனிச்சுவை. முடிவு தெரியாத ஹைலைட்ஸ் என்பதால் அலுக்காத மேட்ச்கள்.

மெக்கென்ரோவுக்குப் போட்டியாக சாஃபின் மட்டையை சுழற்றி வலையின் மேல் அடித்து நொறுக்குவதும் காட்டுகிறார்கள்.

அதெல்லாம் விடுங்கள். Loit என்னும் பெயரை எப்படி உச்சரிப்பீர்கள்? அந்த அம்மணிதான் மரியா ஷரபோவாவுடன் ஆடினார்.

ஜெயிப்பது என்பது அதிமுக்கியமான தருணங்களில் சிரத்தையாக ஆடுவது. எப்போதும் நன்றாக கடமையாற்றுவதினால் யாதொரு பயனுமில்லை. எமிலீ லுவா (அப்படித்தான் Loit-ஐ விளிக்கணும்) ஒழுங்காக பந்து போட்டார். திறம்பட திருப்பி அடித்தார். இரண்டு மூன்று தடவை கொஞ்சமே கொஞ்சம் அசிரத்தையில் சறுக்கினார்.

அந்த இரண்டு புள்ளிகளில் ஷரபோவா ஆட்டத்தைக் கைப்பற்றினார். எப்படி ஆடுகிறோம் என்பதை விட எப்போது பரிமளிக்கிறோம் என்பதுதான் மேட்டர்.

லுவா போன்ற உச்சரிப்புகளை அறிய ஃப்ரென்சுக்காரர்கள் சொல்லித் தருகிறார்கள்.

சென்ற வருடம் ஷரபொவா நாமாவளி செய்ய இயலவில்லை. அதற்கும் முந்தைய வருட பதிவு.

ஷரபோவாடன்

டென்னிஸ் விளையாட சில துப்புகள்

1. ‘ஆ’, ‘ஊ’, ‘ஏ’, ‘ஈ’, ‘ஓ’ என்று கத்த சண்டைக் காட்சி இயக்குநர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

2. ஒரு புள்ளிக்கும் அடுத்த புள்ளிக்குமான இடைவெளியில் ராக்கெட்டில் உள்ள சதுரங்களை எண்ணுவதற்காக சகுந்தலா தேவியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

3. ஓரமாய் உட்கார்ந்திருக்கும் நடுவர்களை அனல் கக்கி முறையிட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை அணுக வேண்டும்.

4. தலையில் துண்டு போட்டு வெயிலைத் தணிக்க, தோற்றுப் போன அரசியல்வாதிகளிடம் முக்காடிடுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

5. சின்ன சின்ன விளம்பரங்களை சட்டையில் தைத்துக் கொள்ள ஆறு புள்ளி எழுத்துருவில் மறுப்புகூறை முன்வைக்கும் மென்பொருளாளர்களிடமிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. நான்கு பந்துகளை ஒரே சமயத்தில் வைத்துக் கொள்ள, நாலு தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒரே சமயத்தில் மேய்க்கும் சோனியாவிடம் அறிய வேண்டும்.

7. போன முறை ஜெயித்த பந்தையே மீண்டும் கண்டுபிடித்துப் பெற, இரும்புக் கோடரியை நதியிடமிருந்து திரும்பப் பெற்றவனிடம் கேட்க வேண்டும்.

8. நெட்டில் பட்டு திருடிய பாயிண்டுக்கு ‘சாரி’ கேட்க, ஜார்ஜ் புஷ்ஷிடம் அறிய வேண்டும்.

9. ஒரு செட் தோற்றாலும், மீண்டு வந்து வெல்வதற்கு தமிழ்ப்பட ஹீரோயிஸக் கதைகளைக் கண்ணுற வேண்டும்.

10. காலில் கோடி டாலருக்கு காலணி அணிந்தாலும், பந்தில் மட்டுமே குறியாக இருப்பதை, பங்குவிலை எவ்வளவு ஏறினாலும் அசராமல் அடுத்த தொழில்நுட்பத்தை நோக்கும் கூகிளிடம் நோக்க வேண்டும்.

போன வருட ஷரபோவா பதிவு.