Category Archives: Posts

வலைப்பதிவில் எத்தனை வகைகள் உண்டு?

‘நான் வலைப்பதிகிறேன்’ என்றவுடன் எழும் கேள்வி: ‘என்னவெல்லாம் பதிவீர்கள்?’

அதற்கு விடையளிக்கும் முயற்சி.

Monologue – அனுபவம் சார்ந்த ஆழ்ந்த சுய சிந்தனை: புனைவு போல் ஒழுக்கமான நடை வேண்டும். அடைப்புக்குறிக்குள் சொந்த கிறுக்கல் எல்லாம் எட்டிப் பார்க்காது. சுவாரசியம் குன்றாமல் பறக்கும். தன்மையில் வந்திருக்கும். நிஜம் போல் காட்சியளிக்கும். திடீர் திருப்பம் தரும் முடிவு இல்லாவிட்டாலும் பளிச்சென்று இறுதிப்பாகம் இருக்கும்.

இவற்றைக் காண்பது வாரிசாக இல்லாத அரசியல்வாதியாக இருந்தும் வெற்றியடைவதைப் போல கொஞ்சம் அரிய வகை.

இந்த நடையை பெரும்பாலும் செல்வராஜ் பதிவுகளிலும் ஜெயமோகன் எழுத்துகளிலும் கண்டிருக்கிறேன்.

Portrait – நிகழ்வுகளை கண் முன்னே நிற்க வைத்தல்: தேர்ந்த விவரிப்பு மூலம் புள்ளிவிவரம் கூட உருவம் பெறும். நம்பகத்தன்மை கோரிடும். சித்திரமாக விவரங்கள் பொதிந்திருந்தாலும் எளிதில் அணுகமுடியும் பாவம் கொண்டிருக்கும். உணர்ச்சிகளை விட சம்பவங்கள் கொண்டு ஈர்க்கும்.

எளிது போல் தோன்றினாலும் சன் நியூஸின் நேர்த்தியும் பொறுமையும் வேண்டும். பரபரப்புக்கு ஆசைப்படாத மனம் வாய்க்கும் நேரங்களில் முயற்சிப்பது உசிதம்.

பத்ரியை மனதில் வைத்து எழுதிய மாதிரி பட்டாலும் செல்வன், நாராயண் ஆகியோரை எடுத்துக்காட்டலாம்.

Phenomenology – நடந்ததை தத்துவார்த்தமாக தன்வயமாக்குதல்: சாட்சிபூதமாக இருக்கும். செய்திகளை, ஆக்கங்களை சொந்தக் கருத்துடன் முன்வைக்கும். உளவியல் சார்ந்த உலகளாவிய பார்வை கொடுக்கும். பழகிப்போகும் வரை அணுகுவதற்கு கரடுமுரடாகத் தடுக்கும்.

விகடன், குமுதம், விட்டலாச்சார்யாவை விட்டுவிட்டு காலச்சுவடு, புதிய *** என்று வாசித்தால் எழுத்துப்பயிற்சி கிடைக்கும். அகரமுதலி வைத்துக் கொண்டு எளிய வார்த்தைக்கு சப்ஸ்டியூட்டாக சங்கச்சொல் போடுவது சாலச் சிறந்தது.

டிஜே, அய்யனார், சுகுணா திவாகர் என்று நிறைய இலக்கியவாதிகளை சொல்லலாம்.

Synergy – உரையாடல், ஊக்கத்திரி: தனித்தனி கூண்டுகளாக இருக்கும் காய்களை அவியலாக்கும் ஜாம்பவான் சமர்த்தர். அனுமன்களை அடையாளம் காண வைக்கும் தூண்டில் வீசும் பதிவுகள் கிடைக்கும். தேங்கிக் கிடக்கும் இடத்தை சுறுசுறுப்பாக்கும் திட்டம் தீட்டும். தனி மரங்கள் நெடிந்துயர விரும்பும் தோப்பில் பல மரம் கண்ட தச்சராய் வெட்டி வீழ்த்தாமல், பறவையாய் பரஸ்பரம் அறிமுகம் கொடுக்கும்.

வேதாளங்கள் நிறைந்த உலகு என்பதால் மனந்தளராத விக்கிரமாதித்த மனப்பான்மை வேண்டும். பெண்களாய் இருந்தால் இயல்பாகவே அமைந்த மானகை/மேலாண்மை குணாதிசயங்கள் கைகொடுக்கும். வேற்றுமைகளை அடுக்குவதை விட ஒற்றுமைகளைக் கண்டறிந்து ‘அட’ போடத் தெரிந்திருக்க வேண்டும்.

சர்வேசன், செல்லாவை சொல்லலாம்.

Mongering – வாங்க, விற்க: சொந்த விருப்பங்கள் சார்ந்து இயங்கும். சில சமயம் சிலரால் வெறுப்பை உமிழ்வதுடன் கோர்த்துவிடப்பட்டாலும், அதிகம் மாறுபடாத வாதங்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். வாசகரை அச்சுறுத்தும். விதைக்க விரும்புவதை எப்பாடுபட்டேனும் விற்றே தீரும். பொருத்தமான ஒப்புமைகளுடன் சம்பந்தமில்லாத உருவகங்களும் நுழைந்திருக்கும்.

இவற்றை இலக்கியப்ப்பதிவுகளுடன் குழப்பிக்கொள்ள கூடாது. நியாய உணர்ச்சி இல்லாத லாஜிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்காக எக்காரணம் கொண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசனை உண்டு என்பதை மறக்கவேண்டும்.

எல்லாப் பதிவுகளும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கேற்ப அனைவரிலும் ஓரிரு இடுகையாவது இப்படி இருக்கும்.

Proposal – வேண்டுகோள், விண்ணப்பம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு: திட்டமிடல் தென்படும். அனுபவத்தில் கிடைத்த தொலைநோக்கு பார்வை இருக்கும். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அறுதியிட்டு செய்யக்கூடிய ஆலோசனை நிறைந்திருக்கும்.

இதற்கு உதாரணமாக தருமி, ரவிசங்கர் போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

Replies – பதில், பிறர் பதிவு சார்ந்து எழுச்சி பெற்ற கருத்து தொகுப்பு: புரிகிற மாதிரி நச்சென்று நாலு வார்த்தை மட்டுமே இருந்தாலும், அதிரடியாக இருக்கும். அதுவரை ‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது சேணம் கட்டிய குதிரைகள் தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும். மறுமொழிகள் தருவதற்கு கூச்சப்படார்.

‘வஸ்தாது தோஸ்துங்க புழங்குதே… ரப்சர் ஆயிடுமே’ என்றெல்லாம் அஞ்சாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். எனினும், எப்பொழுதும் எதிர்த்தே பேசிக் கொன்டிருந்தால் வவ்வால் பதிவர் என்று நாமகரணமிடப்படும் அபாயம் இருப்பதால், தெளிவாக அறிந்த விஷயங்களில், கன்ஸிஸ்டன்ட் கொள்கையில் உறுதியாக இருக்கத் தெரியவேண்டும்.

பின்னூட்டங்கள் பதிவாக சிலர் வைத்துக் கொண்டிருந்தாலும் உடனடியாக தோன்றுபவர்கள் கல்வெட்டு பலூன் மாமா, இகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த்.

Log – பதிவு: அனைத்துப் பதிவர்களுக்கும் பதிவுகள்தான் என்றாலும், டைரி என்பதற்கு அணுக்கமாக இருக்கும். அயர்ச்சியுறும் அளவு விவரம் காணப்படும். கருத்துத்திணிப்பு, அறச்சீற்றம் எல்லாம் நிகழாமல் அன்றாட வாழ்வை விவரிக்கும். சுவை, லயிப்பு போன்றவற்றை விட நம்பகத்தன்மை, சொந்த விஷயம், நிஜம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.

ஸ்ரீராமதாஸ், மா சிவகுமார் என்று எண்ணி ஒரு கைக்குள் அடங்கும் அரிய சிலர் உண்டு.

இன்னும் இருக்கும். எங்கிருந்தாவது இந்த மாதிரி சுருட்டுவதற்கு, பட்டியல் அகப்பட்டவுடன் தொடரலாம்.

Shelfari Spam

tamil Cards Greeting Spam Shelfari Recover Health

அசல்: தி நியு யார்க்கர்

முதலில் ஷெல்பாரி எரிதங்களுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். மன்னிப்பு கோருகிறேன்.

‘ஏதோ… புத்தகக் கடை! பதிந்து வைத்துக் கொண்டால், நாலு புத்தகம் படித்த மாதிரி சீன் காட்ட உபயோகப்படும்’ என்னும் ஆர்வத்தில் நானும் செல்பாரியில் இணைத்துக் கொண்டேன். இந்த லிங்க்ட் – இன், ஃபேஸ்புக் மாதிரி மின்னஞ்சல் புத்தகத்துக்குள் நுழைய அனுமதியும் கொடுத்து வைத்தேன்.

அவர்கள் எல்லாம், யாருக்கு அனுப்பவேண்டும் என்று கேட்பார்கள். ஒரு வாட்டிக்கு, ரெண்டு வாட்டி யோசிக்க வைப்பார்கள்.

ஷெல்பாரி அப்படி எல்லாம் முன் வைத்த காலை பின் வைக்க வாய்ப்பு எதுவும் கோராமல், தொடர்ச்சியாக அனுதினமும் அனைத்து மின்னஞ்சலுக்கும் ‘சேர்ந்தாச்சா? சேராட்டி நாளைக்கும் படுத்துவேன்!’ என்று கழுத்தில் கத்தி நீட்டுகிறது.

பல வருடமாக மறந்து போனவர்கள் ‘சௌக்கியமா?’ என்று தொலைபேச வைத்திருக்கிறது. பதினெட்டு மாதம் முன்பாக, அரை பாட்டில் மது உள்ளே மிதக்கும் தருணத்தில் அறிமுகமான சிலரிடம் இருந்து ‘உன்னை எனக்கு எப்படித் தெரியும்?’ என்று நலம் விசாரிப்புகளை முடுக்கி விடுகிறது. சுருக்கமாக, பலரை வாட்டி எடுக்கிறது.

தீர்வாக, என்னுடைய ஷெல்பாரி கணக்கை நீக்கி பிராயசித்தம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த பர்த்டே அலார்ம், லைப்ரரி திங் எல்லாம் இல்லாத ‘சார்… போஸ்ட்’ காலத்துக்கு செல்ல வேண்டும். பத்து பிரதியெடுத்து அனுப்பி இருப்பார்கள்.

கொசுறு:

Vacation Beggar Alms Compensation

Tamilveli.com – Some UI Thoughts

தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:

1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1

2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1

3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1

4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1

பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.

5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)

6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)

7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1

8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)

9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?

(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)

10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.

  • தேன்கூடு என்றால் ‘பல மரம் கண்ட தச்சன்‘ போல் அகரமுதலி, சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற personalization + customization;
  • தமிழ்மணம் என்றால் ‘சூடான இடுகைகள்’, பூங்கா தேர்ந்தெடுப்புகள்;
  • என்பது போல் தற்போதைக்கு தமிழ்வெளிக்கு அடையாளங்கள், USP இல்லாதது மீண்டும் மீண்டும் வரத் தூண்டாமல், எப்பொழுதோ மட்டுமே வரவைக்கிறது.

ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.