Category Archives: PaaRa

Kosu (Novel) – Paa Raghavan

கொசுவைக் குறித்த முன்னுரையோடு இந்த நாவல் குறித்த விமர்சனத்தைத் தொடங்கலாம்.

கதைப்படி, தொண்டன் என்பவன் கொசு.

அரசியல் என்னும் ‘நிர்வாண சாமியார்களின் குமுகாயத்தில்’ கொசுவுக்கு சிப்பந்தியாக பணி. சுதந்திரமாக ஆடை களைந்தவர்கள் அனுபவித்து மகிழ்வதை கொசு ஆசையுடன் பார்க்கும். காட்டன் மறைத்த தேகத்தை அணுகுவது எளிது. இடுக்கு போர்ஷன்களில், அவாவுடன் நெருங்கி மறைவாக உறிஞ்சி விட்டு கொசுவாகப் பறந்து விடலாம். மில்லிமீட்டர் மேலாடை கூட மறைக்காத இராசவட்டத்தின் அண்டப் பெருவெளியில், எங்கு தொடங்குவது, எப்படி தொடருவது என்று அடி முடி அறியவொண்ணா கட்சிக்கடலில் தொண்டர்கள் குழம்பும்.

கொசுக்கள் எயிட்ஸை பரப்பாது என்றாலும், சிக்கன் குனியாவில் முடங்க வைக்கும். டெங்குக் காய்ச்சலில் சாவடிக்கும் திறமும் கொண்டது. வாரிசு அரசியலை மீறி புதிய முதல்வர்களை கொடுக்க முடியாவிட்டாலும், கவுன்சிலரின் காலை வாரி விடும் திறன் படைத்தது. சில சமயம் எம்.எல்.ஏ.க்கள் கவிழ்வதால் ஆட்சி மாற்றங்களைக் கூட தந்து விடும் சக்தியும் படைத்தது.

ஓ +வ், ஏ1பி -வ் என்றெல்லாம் சாதி, சமயம் பார்க்காது, கிடைக்கக்கூடியதை வைத்து பிழைப்பு நடத்தும். தொண்டனுக்கு டெமொக்ரட்ஸ், ரிபப்ளிகன் என்னும் பற்றெல்லாம் கிடையாது. ஏதொவொன்றை சிக்கென்று பற்றிக் கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொள்ளும்.

ஒரே அடியில் கொசுவை அடிப்பது விக்ரமனின் ஒரே  பாடலில் லட்சாதிபதியாகும் சுகானுபவம் நிறைந்த மனச்சாந்தியை அளிக்கவல்லது. உங்கள் அலுவல் கோபம், இல்லத்தரசி சமையலில் உள்ள நொள்ளை, மழலைகளின் தெனாவட்டு அலட்சியம் என்று அத்தனையும் நொடி நேரத்தில் கொசு நசுக்கப்படும்போது மோட்சம் பெறும். முறையே, மேலிடத்து அருள்பாலித்தல், உள்கட்சிப் பூசல், தொண்டர் படை சேர்ப்பு, என்று அத்தனையும் நொடி நேரத்தில் தொண்டன் என்னும் கொசுவேட்டையில் சித்திக்கும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சின்னமாக மாகாணத்தின் பறவை, மாகாணத்திற்கான கொடி, எல்லாம் உண்டு. அவ்வாறு சென்னைக்கு என்றாவது என்ன பிராணி தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிப்பார்களேயானால், ‘கொசு’ என்பதுதான் மதராஸின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.

கடைசியாக, கொசு பாட்டுக்கு தானுண்டு, தன் பறத்தல் உண்டு என்று வீட்டில் பறக்கும் செல்லப் பிராணியான போல் இருந்தால், சிறுநீர் முதல் சிற்றுண்டி வரை சமபந்தி போஜனமாக சிசுருஷைகள் நடக்கும். கொசு போல் தன் வேலையை மனிதரிடம் காண்பித்தால்தான், அடிபட்டு கொல்லப்படுகிறார்கள்.

யானையின் காதில் புகுந்த கொசு என்று பெரியவர்களைப் பாடாய்படுத்திய கொசுவின் கதைகளை ‘சிவாஜி’ சினிமாக்கள் சொல்லும். பா. ராகவனின் கொசு, அசல் அனுபவங்களின் ரீங்காரமாக, நிஜத்தை, யதார்த்தத்தை டைலர் முத்துராமன் கொண்டு தைக்கிறது.

(தொடரலாம்)