Category Archives: OIG

Oasis’ 91: 333 031

Advertisements

அலைவரிசை பயணங்கள்

கிட்டத்தட்ட ஓராண்டு முன்பு கில்லிக்காக எழுதியது.

நான் ஒரு பழைய கார் வைத்திருந்தேன்.

அமெரிக்கா வந்த புதிது. வங்கிக் கணக்கில் மாதத்துக்கு இரண்டு முறை சம்பளம் போடுவார்கள். பதினைந்தாம் தேதியும் ஒன்றாம் தேதியும் விடிந்தவுடன் கொண்டாட்டம். பத்தாம் தேதியிலிருந்தும் இருபத்தைந்தாம் தேதியிலிருந்தும் திண்டாட்டம். அந்த மாதிரி நிலையில்தான் நியு யார்க் மாநிலத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மலையுச்சியில் கன்சல்டண்ட்டாக புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

இயற்கை கொஞ்சும் இடமாக இருந்ததாலும், இருட்டில் வளைவுகள் எதுவும் விளங்காததாலும், பாடிகாட்டாக பாடல் அலறும். என்னிடம் இருந்த கைக்காசுக்கு, காஸெட் பாடும் கார் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு கலர் – ஆக்ஸிலேட்டர் அமுத்தினால் ஓட வேண்டும். ப்ரேக் போட்டால் பிடிக்க வேண்டும். எனக்கு பிடித்திருப்பது முக்கியமல்ல.

நண்பர்களைப் பார்க்க ஐநூறு மைல் ஹைவே ஓட்டினாலும் பண்பலையில் பாடல் ஒலிக்கும். பின்னிரவில் வேலை முடித்து பசி கிறக்கத்தில் கீழிறங்கினாலும் அமெரிக்க கீதம் கூவும்.

கோபமாக இருந்தால் ஹெவி மெட்டல். கோயிலுக்குப் போனால் மேஸ்ட்ரோ. காலையில் பாப். மாலையில் ஜாஸ் என்று வழக்கப் படுத்திக் கொண்டேன் எல்லா எஃப்.எம்.களையும்.

பாத்ரூமில் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் புருஷன் பாடினதில் ஆரம்பித்து ஆப்பிரிக்காவில் இருந்து நாடோடியாகப் பஞ்சம் பிழைக்க வந்த க்ரூப் வரை கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் கேட்கக் கிடைத்தது. நிக்கோல் ரிச்சி ஜட்டி போடுவதில்லை என்று மட்டும் அறிந்திருந்த அறியாப் பிள்ளைக்கு, அவரின் அப்பன் அமோகமாக கலக்குவார் என்று அகர முதல் எழுத்தெல்லாம் அறியக் கிடைத்தது. ‘அகிலா அகிலா’ என்று தேவா போட்டது ‘பஃப்லோ சோல்ஜர்’ என்பார்கள். அந்த மாதிரி ஸ்ரீதேவி பாட்டு இங்கே இருக்கு என்று அளக்க, அளப்பரிய வாய்ப்புக் கிடைத்தது.

அப்பொழுது ஒரு நத்தார் தினம் வந்தது. அன்றைய விடுமுறையை கும்மாளமிட தேசி மக்கள் வந்து க்ரீன் கார்ட் பெறுவது, கம்பெனி மாறுவது, காண்ட்ராக்டை உடைப்பது, லைசென்ஸ் வாங்குவது, நைட்க்ளப் செல்வது, சனியிரவு பெண் பிடிப்பது என்று வாழ்க்கைத் தேடல்களை பேசிக் களைத்தவுடன், என்னுடைய பாடல் தொகுப்பை ஒலிக்க விட்டேன்.

நோ டவுட், சன்ஷைன், கார்டிகன்ஸ், செலீன் டியான், பார்பீ என்று கவர்ச்சியான மெட்டு இருக்கும். சில சமயம் பாடல் கூட புரியும்.

பாடல்கள் எப்படி என்னைக் கவர்ந்தது?

திரும்பத் திரும்பப் பல முறை கேட்டாலும், அலுக்காத ட்யூன். அதுதான் என்னை உள்ளே இழுக்கிறது. பன்னிரெண்டு டாலர் காசு கொடுத்து சிடி வாங்க வைப்பது. அதற்குப் பிறகு கொஞ்சம் கவர்ச்சியான வார்த்தைக் கோர்ப்பு. வரிகளில் வைரம் மின்னுவது எல்லாம் முக்கால்வாசி நேரம் விளங்குவதில்லை.

கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இணையப் பழக்கமும் ஏற்பட்டிருக்கிறது.

வேலையில் போரடித்தால் தமிழ்மணம். இரண்டு மணி நேர கம்பைல் ஆரம்பித்தால் ப்ளாக்லைன்ஸ். ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் என்றால் தேன்கூடு. இரவு நேர சப்போர்ட் மாரடித்தல் என்றால் கிஞ்சா.

பாஞ்சாலிக்குக் கண்ணன் சேலை கொடுத்த மாதிரி வண்ணவண்ணமாய் முடியவே முடியாத வலைப்பதிவுகள். துச்சாதனனாய் துகிலுரிக்கப் பார்த்தேன். வேர்த்து, விறுவிறுத்து, துரியோதனன் ஐகாரஸ் கட்டளைக்குட்பட்டு, அடிமுடி அறியவொண்ணா முழுமைக்கு முயற்சித்தேன்.

ஸ்பானிஷ் பாடல்கள் என்றொரு உலகம். கஜல் இன்னொரு கடல். வளைகுடா சங்கீதம் சொக்கியிழுத்துக் கட்டிப்போட்டு விடும் அண்டம். அமெரிக்கா சங்கீதத்தின் பல பாடல்களை கேட்டு, அவ்வளவுதான் என்று மருகி சொக்கித் திளைத்து, அதில் இவை சிறந்தது என்று அன்று நினைத்திருந்தேன். அதே போல், அனைத்துப் பதிவுகளையும் படித்து அவற்றில் இவை சிறந்தது என்று கில்லியில் இட்டுக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே எனக்கு நிறைவையும் மனமகிழ்வையும் தந்தாலும் முழுமையானது அல்ல.

எட்டிய மட்டும் நீந்தி, கிடைத்த காட்சிகளைப் படம்பிடித்து, தண்ணீர்க் கோலங்கள் இம்புட்டுதான் என்பது போலவே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடத்தின் கவர்ந்த பதிவுகளுக்கொரு பதிவு.

சமீபத்தில் பெண்டாமீடியா எடுத்த பாண்டவாஸ் அனிமேசன் படம் பார்த்தேன். மிக மோசமான படம். துள்ளித் துள்ளி நீ ஓடம்மா என்று திரைக்கதை பாய்ந்தோடியது. குழந்தைகளைக் கவரும் ஸ்பெசல் எஃபக்ட்ஸ் பெரிதாக, காட்சிக்கு காட்சி வராமல், அவர்களின் கவனத்தை நோகடித்தது. துரி, தேவ் என்று செல்லமாக அழைத்தார்கள்.

ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் இரண்டு வருடமாய் டிவியில் வந்த சோப்ரா பாரதத்தை, இரண்டு மணியில் மஹாபாரதமாக்கி இருந்தார்கள். அதற்காகவே பாராட்டலாம். அதற்கு மட்டுமே பாராட்டலாம்.

அந்தப் படம் மாதிரி கடந்த வருடத்தின் அலைவரிசைப் பயணங்கள்:

ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி மாதம். சுரேஷ் கண்ணன் இலக்கியவாதி (பிச்சைப்பாத்திரம்: பாலாவும் என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பகுதியும்). பத்ரியோ பதிப்பாளி (பத்ரியின் வலைப்பதிவுகள் – நான் வாங்கிய புத்தகங்கள்).

நாராயண் மருதநாயகம் பற்றி கமலுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதங்களும் இலக்கியம்தானே என்கிறார் செல்வராஜ் (என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் » Blog Archive » பழைய கடிதம் ஒன்று). ‘அழகி’ படத்தின் மூலம் வாழ்க்கை இலக்கணத்தைப் பார்க்கிறார் தமிழ்தேனீ (வண்ணக்குழப்பம்: மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை).

சுந்தரமூர்த்தி Looking for Comedy in the Muslim World என்று அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தூரப் பார்வை பார்த்தார். நிலவு நண்பன் நீங்கள் இன்னும் பார்க்காத ‘யதார்த்தம்’ திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுகிறார். அதிகம் அறியாத படங்களைப் பகிரும் சன்னாசி Palindromesஐ திருப்பிப் போடுகிறார். இயக்குநர் அருண் வைத்யநாதன் திரைப்படமே எடுத்து வெளியிடுகிறார் (Agara thoorigai » Blog Archive » ‘தனியொரு மனிதனுக்கு’ குறும்படம்)

நபகோவின் லோலிடாவை செல்வன் வாசக அனுபவமாக்குகிறார். ஈழ நூல்களை இணையத்தில் காண நூலகம் துவங்குகிறது. (“ம்…” – விட்டு விடுதலையாகிநிற்போம்…!). அருந்ததி ராயின் கட்டுரைத் தொகுப்பை ஜெயந்தி சங்கர் விமர்சிக்கிறார். (வல்லமை தாராயோ: the algebra of infinite justice (நூல் அறிமுகம்))

டிவியில் தங்கவேட்டையை பின்னூட்ட வேட்டையாளர் இலவச கொத்தனார் கவனிக்கிறார் (இலவசம்: தகதகதகதக தங்கவேட்டை). ரங்கா அண்டங்காக்கைகளையும் பனிக்கரடிகளையும் பார்க்கிறார். (இதர எண்ணங்கள்: கறுப்பும் – வெளுப்பும்)

இண்டிப்ளாகீஸ் தேர்தல் குறித்து தருமி அலசினார் (தருமி » 123. Election Analysis…). லண்டன் பயணங்களில் நம்மையும் டிக்கெட் செலவு வைக்காமல் கூட்டிப் போகிறார் இரா முருகன் (vembanattu-k-kaayal: எடின்பரோ குறிப்புகள் – 5).

இன்னும் குட்டி ரேவதி எஸ்.ராமகிருஷ்ணன், வைகோ அணி மாறல், திருமா பாமக விடுதல், துபாயின் ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் ராஷித் பின் மக்தூம் மரணம், ரங் தே பஸந்தி, கோல்டன் க்ளோப் என்று செய்திக் குறிப்புகள் திரும்பிய சுட்டியெல்லாம் படிக்கக் கிடைத்தாலும் நேர்மையான சொந்தக் கதையை எளிமையாக எழுதியிருக்கும் அருள்குமார் பதிவு நெஞ்சில் நிற்கிறது (நான் பேச நினைப்பதெல்லாம்: “தீம்தரிகிட” – வாக்குப்பதிவு)

நான்தான் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேனே! நான் அகலக்கால் வர்க்கம். ‘ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ என்று சுருக்காமல், நூறாயிரம் விதமாக விவரிப்பதை ரசிப்பவன். ரசிப்பவர்களில் திளைப்பவன். எத்தனை சம்பளம் வந்தாலும் அதிகம் இரண்டணா செலவு வைக்கும் பாலையாவின் கோபத்திற்கு ஆளாகுபவன்.

மற்ற மாதங்களுக்கும் மிச்ச சுட்டிகளுக்கும் ப்ரேமலதாவின் (Kombai) பரிந்துரைக்கேற்ப ஓல்ட் இஸ் கோல்ட் (கில்லி – Gilli » OIG)-இல் சந்திக்கிறேன்.

இனிய சுட்டிகளும் அமைதியானப் பூக்களும் நிறைந்த வலைப்பூ ஆண்டாக 2007 அமைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Blogger repeats itself.