Category Archives: Masthana

Masthana… Masthana – Sun TV’s Dancing With the Stars

அமெரிக்காவில் கொஞ்ச காலமாக நிஜத்தை நாடகமாக்கி தொலைக்காட்சியில் ரியாலிட்டியைப் பார்க்கும் ஆர்வம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சாகசங்கள் புரிவதை Fear Factor, Survivor என்றார்கள். பெண்களும் பார்க்கவேண்டும் என்று சுயம்வரத்தை Bachelor, Fantasy Island ஆக்கினார்கள். Who wants to be a Millionaire, Are you smarter than a Fifth Grader என்று தொடர்ச்சியாக வினா விடை நேரங்களும் வந்தது.masthana masthana sun TV

பரிணாம வளர்ச்சியில் வந்த இன்னொரு நிகழ்ச்சி Dancing With the Stars. பெனலப் க்ரூசும் டாம் ப்ரேடியும் வருவார்கள் போல என்று தடுக்கி விழுந்ததில், ஐம்பதிலும் ஆசை வந்தவர்கள் ஆடல் கலை பழகினார்கள்.

கிட்டத்தட்ட அதே போல், விஜய் டிவியில் ‘ஜோடி #1’ துவங்க, சன் டிவியும் தொன்றுதொட்டு காப்பியடிக்கும் மரபில், சீரியல்களில் வளைய வருபவர்களை வைத்து ‘மஸ்தானா… மஸ்தானா‘ தொடங்கியிருக்கிறார்கள்.

தெரிந்த முகமாக இருவர். ‘செல்வி’ தேவிப்ரியா & ‘நினைவுகள்’ அம்மு.

நிகழ்ச்சி தேவலாம் என்பது ஒரு வரி விமர்சனம்.

என்றாலும்…

சன் டிவி தன் பார்வையாளர்கள் யார் என்பதைத் தெளிவாக புரிந்து, அவர்களை மட்டுமே எதிர்நோக்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ‘அரசி’, கோலங்கள் பார்ப்பவர்களை நிலை நிறுத்த மட்டுமே பாடுபடுகிறது. நடன நிகழ்ச்சி என்றவுடன் கல்லூரியில் ஜாஸ், ஜைவ், டாங்கோ, வால்ஸ் பயில ஆரம்பித்தது பலருக்கும் நினைவுக்கு வந்து போகும்.

அதன் தொடர்ச்சியாக, ‘ஊ…ல.லா…’வின் நீட்சியாக மாணவர்களை, இளைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கலாம். இந்த மாதிரி மூச்சு வாங்கும் பாட்டன்களையும் குண்டு கத்தரிக்காய் வில்லிகளையும் கலந்து, மும்தாஜ் ஆட்டங்களைத் தொட்டு, சன் டிவி சீரியலில் வரும் ஜோடிகளின் வார இறுதியைப் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, புதுமைக்கு கால்கோள் இட்டிருக்கலாம்.

‘மஸ்தானா… மஸ்தானா’ ஆடல் அமைப்பில் வித்தியாசம் எதுவும் இல்லை. புகழ் பெற்ற பாடல்கள். தொப்புள் காட்டிய நாயகிகளுக்கு பதிலாக, விரசம் இல்லாத ஆடைகள். அதற்கு பரிதோஷமாக அபிநயங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் உரசல்கள்.

ஊ…ல…லா‘விற்கும் மஸ்தானாவிற்கும் ஆக்கபூர்வமான வேறுபாடு என்று பார்த்தால் நடுவர்கள்.

மீனாவாகட்டும்; தருண் மாஸ்டராகட்டும். பளிச்சென்று பட்டதை, மனம் புண்படாமல், நகைச்சுவை உணர்வோடு போட்டு உடைக்கிறார்கள்.

சிவமணி போல் ‘ஆல் தி பெஸ்ட்’ தவிர உங்களுக்கு சொல்வளமே கிடையாதா என்று பெருமூச்ச விடாமல், குறைகளை உள்ளங்கோணாத வண்ணமும், பிறர் பின்பற்ற வேண்டிய நிறைகளைப் பாராட்டியும் மிக சிறப்பாக செய்கிறார்கள்.

இதுகாறும் பிணக்குகளை பிலாக்கணம் செய்ய வைத்து ஐந்து நாள்களை ஓட்டியவர்கள், நெடுந்தொடர் ஜோடிகளை பின்னிப் பிணைய வைத்து ஞாயிற்றுக்கிழமையை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.