இந்தப் பாடலைகய் டவன்பொர்ட் எவ்வாறு புனைந்திருக்கிறார்? எட்டுக்கால் பூச்சி சிலந்தி வலை பின்னுவது போல் எனலாம். பூச்சியின் திரவ நூல், எவ்வாறு திட நூலாக மாறுகிறதோ, அது போல் இந்தக் கவிதையும் மீளவொண்ணாத மாற்றத்தை நம்மிடம் உருவாக்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் விளையும் கோரைப்புல் கொண்டு செய்யப்படும் பத்தமடைப் பாய் போல் நெய்திருக்கிறார் எனலாம். பச்சை பசேலென விற்கப்படும் கொள்கையை அறுத்து, ஈரப்பதமில்லாத சூழலில் உலர்த்துகிறார். கவிதையின் கருத்தை பட்டென்று தறியில் போட்டால் கருத்துவிடும். எனவே, நனைய வைத்து காயப் போடுகிறார். இப்படி உலர்ந்த புல்லை ஓடும் தண்ணீர் என்னும் பத்து அசைகள் கொண்ட பாவின் அடிகளில் அமிழச் செய்கிறார். அப்போது அது மும்மடங்கு பருத்து மனதில் தைக்கிறது. அதன் பின் நுண்புரி நூல் கொண்டு கோரையின் புறவுறையை உரித்து தன் கவிதையைப் புனைகிறார்.
எவ்வாறு புனைகிறார்? யாப்பு என்றால் யாக்கையைக் கட்டுதல். அதாவது நம் உடம்பானது ரத்தம், தோல், எலும்பு, நரம்பு போன்றவற்றால் கட்டப்பட்டிருப்பதைப் போல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பவற்றால் தமிழ்ப் பாட்டு, கட்டப்பட்டுள்ளது என்பதனால் இதற்கு யாப்பு என்று பெயர். அவ்வாறு இயற்றப்படும் பாக்களில் நமக்கு உறுப்புக்கள் இருப்பது போல, அவற்றுக்கும் உள் உறுப்புக்கள் அமைத்து செய்வதனால், செய்யுள் என்கிறார்கள். இது சோவியத் சித்தரவதையில் துண்டு துண்டாகப் பிரிப்பதை நினைவுறுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல.
ஒரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலிப்பது அசை.
அசைகள் பல சேர்ந்து அமைவது, சீர் எனப்படும்.
சீர்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்த அமைவது தளை எனப்படும்.
இரண்டு அல்லது பல சீர்கள் சேர்ந்து அமைவது அடி எனப்படும்.
அடிகள் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து அடுக்கிப் பாடுவது பா எனப்படும்.
உங்களுக்கு குறள், வெண்பா தெரிந்திருக்கும். நம்பி மொழியாக்கம் செய்த இந்தக் கவிதை பத்து அசைகள் கொண்ட பா. குறில் நெடில் ஈரசைச் சீர் கொண்டு எழுதப்பட்ட ஐஞ்சீரடி எனலாம்.
புலவர் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த இந்தப் பாடல் அடிமறி மண்டில ஆசிரியப்பாவா அல்லது கொச்சகக் கலிப்பாவா அல்லது பஃறொடை வெண்பாவா என்பதை உங்களின் வீட்டுப்பாடமாக வைத்துக் கொள்ளவும். அதை நான் சொல்லப் போக புலவர் புகழேந்தியை ஒட்டக்கூத்தர் ஜெயிலுக்குள் தள்ளியவாறு என்னையும் நேரசை, நிரையசை கம்பி எண்ண அனுப்பி விடுவீர்கள்.
புலவர் புகழேந்தியை ஏன் இழுக்க வேண்டும்? அபிதான சிந்தாமணியில் புகழேந்திப் புலவரின் வரலாறு வருகிறது. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில மன்னன் ‘சந்திரன் சுவர்க்கி’ புகழேந்திப் புலவரை ஆதரிக்கிறான். பின்னர்ப் பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவராகப் பதவி ஏற்றுள்ளார். பாண்டிய இளவரசி சோழ மன்னனின் மனைவியானபோது புகழேந்திப்புலவர் சீதனமாகச் சோழ நாட்டுக்கு அனுப்பப்படுகிறார். அங்கே சோழநாட்டு அவைப் புலவரான ஒட்டக்கூத்தரின் காழ்ப்புணர்ச்சியால் (பொறாமையால்) வெறுக்கப்பட்டுச் சிறை வைக்கப்படுகின்றார்.
அதே போல் நம்பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த கவிதை நாயகரான ஓசிப் மண்டெல்ஸ்டம் (Osip Mandelstam) என்பவரும் சிறையில் வதங்கியிருக்கிறார். ஓசிப் மண்டெல்ஸ்டமின் மனைவியை ஒத்த நபர் இந்த ஆக்கத்தில் வருகிறார். பழங்காலப் பெருமிதத்தைக் குறித்துப் பாடுகிறார்; அந்தக் கால நினைவேக்கத்தை காய்ச்சுகிறார்; அவளின் பெயர் நடெஸ்டா மண்டெல்ஸ்டம் (Nadezhda Mandelstam).
இந்த ஆக்கத்தை மூலத்தின் அளவிலும் நேர்த்தியிலும் எந்த சேதமும் இல்லாமல் தமிழுக்குக் கொணர்கிறார் நம்பி. ”அந்த கிழ கரப்பான் பூச்சி” என்னும்போது அப்படியே ஸ்டாலின் நிழலாடுகிறார்.
நடெஸ்டாவின் கணவன் ஓசிப் — “இரும்பு மனிதர்” ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் குலாக் வதைமுகாமினால் கொல்லப்பட்டவர். சோசலிச சோவியத் ரஷ்ய தலைவராக விளங்கிய ஸ்டாலின் பல லட்சம் பேரைக் கொன்றவர் என்பது குருஷ்சாவ் போன்ற ருஷியத் தலைவர்களே ஒத்துக் கொண்ட ஒன்று. உக்ரைன் உள்ளிட்ட ரஷியாவின் நட்பு நாடுகளிலேயே செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தியவர். சோல்ட்ஸ்னீட்ஸின் எழுதிய குலாக் தீபகற்பம் பல கோடி மக்களின் சித்திரவதையைக் காட்டும். முப்பதாண்டுகள் கொடுங்கோலனாக ஆட்சியில் இருந்த ஒருவன், நீண்ட கொடிய யுத்தத்தையும் சந்தித்து வெற்றிபெற்ற சர்வாதிகாரி — மனிதநேயனல்லாத ஒரு கொடூரன் என்பதற்கு புனைவுகள் தேவையில்லை. அதற்கு சரித்திர ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.
இந்தக் கவிதை கணவனை இழந்த நடெஸ்டா மண்டெல்ஸ்டம் பார்வையில் புனையப்பட்டிருக்கிறது. கவிஞரை நாடு கடத்தி, சிறையில் தள்ளி, கொல்லப்பட்டதை எண்ணிப் பார்த்து, தற்கால சோவியத் இராணுவ வீரனிடம் நினைவுகூறும்விதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தொட்டுக்கொள்ள மேகரா நாட்டின் தியோக்னி (Theognis of Megara)யும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ராபர்ட் வால்ஸர் (Robert Walser)ம் துணைக்கு அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். வதை முகாமில் வாடுவது ஒரு பொருட்டேயல்ல. அவர்களின் தியாகம் அலட்சியப்படுத்தப்படுவதும் அவர்களின் குரல் சரித்திரத்தில் ஒலிக்காமல் பார்த்துக்கொள்ளப்படுவதும் எவ்வளவு பெரிய குமுறலை எழுப்பும்?
இந்த மாதிரி பத்து அசைகள் கொண்ட பா பாடல்களாக தன் படைப்பை உருவாக்குவது குறித்து கய் டவன்பொர்ட்டிடம் கேட்டபோது:
விகாரப்படுத்துகருவிகள் என்றோ இடர்ப்பாடுகள் என்றோ அதை நான் சொல்ல மாட்டேன். என்னுடைய ஒவ்வொரு படைப்பின் நடையும் சட்டதிட்டங்களுக்குள் இருக்கின்றன. ஒரு நாவலை எடுத்தால் அத்தியாயங்களாகப் பிரிக்கிறோம். அத்தியாயங்களில் உரையாடல்களை போதிய இடைவெளிகளில் நுழைக்கிறோம். அதில் ஒன்றில் என்னுடைய பத்திகளை சமநீளமாக்கி புனைந்திருக்கிறேன். செய்யுள் பத்தி என்பது இடம். அதன் மேல் என் கட்டமைப்பு நிகழ்கிறது. என்னுடைய ஒவ்வொரு ஆக்கத்திலும் கட்டமைப்பு வேறு வேறாக அமைக்கிறேன். அதில் ஒரு லயம் கிடைக்கிறது. அது காப்பியத்தின் தாளத்தை நிகழ்த்துகிறது. பிரபந்தத்தின் சீர் அமைப்பை இயைபாக்குகிறது.
பத்தமடைப் பாய் பார்த்தால் ஓட்டைகள் இருக்கும். பட்டு மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். பாயில் இருக்கும் அந்த இடைவெளிகள்தான் இந்தக் கவிதையை உயர்த்துகின்றன. முறுக்கின் நடுவே ஓட்டையே இல்லாமல் இப்போது மெஷின்கள் பிரதியெடுக்கின்றன. அதைப் போல் இல்லாமல், மணப்பாறை முறுக்கு போல் நட்ட நடுவே ஒரு பெரிய சுழியத்தை வைத்து இந்தக் கவிதையை அதன் மூலச்சுவை கெடாமல் மொழிபெயர்த்திருக்கிறார் நம்பி கிருஷ்ணன்.
தன்னுடைய அணுகுமுறைக்கு “காரண நியாயம்” என ஜுடேயா பெர்ல் பெயரிட்டு இருக்கிறார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ‘ஏன்’ என்பதையும் ‘எப்படி’ என்பதையும் ஊகிக்கும் திறனை – மனிதர் மட்டுமே அறிவாரா?
காரண ஆய்வின் அடிப்படையில் “செயற்கை நுண்ணறிவு” உடனே பூத்துக் குலுங்காது. அதற்கு இன்னும் பல படிக்கட்டுகளும் தடைகற்களும் உள்ளன. ஆனால், “காரண நியாய”த்தை கணினிக்கு கற்பிப்பதன் மூலம், சற்றே புரட்சி பூக்க செய்யலாம்.
தற்போதைய “எந்திர தற்கற்றல்” முறைகள் எல்லாமே ஒட்டுறவு (Correlation) மற்றும் கருத்துத்தொடர்பு (association) கொண்டே நடக்கிறது. சிந்தனை முறையில் இது எளிமையான பால பாடம். ஆனால், இது மழலைக் காலத்திலேயே தேங்கி நிற்கிறது.
கோழி கூவியவுடன் பொழுது விடிவதை கணினி பார்த்துக் கொண்டே இருக்கிறது. கோழி கூவாவிட்டால் சூரியன் உதிக்க மாட்டார் என முடிவு செய்கிறது. இது ஒட்டுறவு.
அலாஸ்காவில் இருக்கிறோமா? எந்த பருவகாலத்தில் இருக்கிறோம்? தற்போது என்ன நேரம்? என்பதை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்காமலே புரிந்து கொள்வது “எந்திர தற்கற்றல்”.
மனிதருக்குப் புரிகிற விஷயத்தை எந்திரங்களால் விளக்க இயலும். ஆனால், அனுமாணிக்க முடியாத விஷயங்களையும், காரண நியாயங்களோடு, சுவாரசியமான தர்க்கத்தோடு விளக்க தற்கால கணினியால் இயலவில்லை. அதுதான் உண்மையான “எந்திர தற்கற்றல்”.
உள்ளே கோபம் புகைந்து கொண்டிருந்தாலும், முகத்தில் புன்சிரிப்போடு மனிதரால் அளவளாவ இயலும். எள்ளலுக்கும் நகைச்சுவைக்கும் உள்ள வித்தியாசத்தை, எக்காலமும் அறிந்துகொள்ள கணினியால் இயலாமல் போகலாம். சொல்லப் போனால் அதற்கான அவசியமும் கிடையாது. ஆனால், ஒருவரை நம்பி முதலீடு செய்யலாமா என புரிந்து கொள்ள கணினியால் முடியலாம். அந்த முடிவிற்கு வந்த காரணத்தையும் விளக்கலாம். இது “காரண நியாயம்”.
கணினிக்கு சதுரங்க ஆட்டத்தைப் புரிந்து கொள்வது எளிது. ஆனந்த், காஸ்பரோவ் போன்ற #1 ஆட்டக்காரர்களை வீழ்த்துவது கூட முடியும். ஆனால், சாலையில் மனிதர் எப்படி நடந்து கொள்வார், எவ்வாறு வண்டி ஓட்டுவார் என புரிந்து கொள்ள இயலுமா? கணினியால் நம்மை விட லாவகமாக, வேகமாக வண்டியோட்ட முடியும். ஆனால், நம்மைப் போல், நம்முடன் வண்டியோட்ட இயலுமா?
“செயற்கை நுண்ணறி”வினால் இதையெல்லாம் தானாகவே கற்றுக் கொள்ள வைக்க “ஆதார காரணம்” உதவுகிறது. மனிதரை எது தூண்டி எவ்வாறு இயங்க வைக்கிறது? நம்முடைய பயமாக இருக்கலாம்; இறப்பின் அச்சமாக இருக்கலாம்; விளையாட்டாக இருக்கலாம்; சவாலாக இருக்கலாம்; கிண்டலாகக் கூட இருக்கலாம். அந்த நியாயங்களை எல்லாம் கணினிக்கு புரிய வைக்க வேண்டுமா?
கணினியால் முகத்தைப் பார்த்தவுடன் ஆளை கணிக்க இயலாமல் போகலாம். ஆனால், மனிதரைப் போல் காரணம் இல்லாமல் ஒரு விஷயத்தை நம்பாமல் இருக்கும். கணினியால் நோயாளியைப் பார்த்தவுடன் வியாதியை கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். ஆனால், மனித மருத்துவரைப் போல் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் முடிவிற்கான நியாயத்தை நிறுவ முடியும்.
வாலியின் உதவியைக் கோரி இருந்தால் ராவணனை மிக மிக எளிதாக ராமன் வென்றிருப்பான். எனினும் சுக்ரீவனின் உதவியை ஏன் ராமன் நாடினான்? இவ்வாறு யோசிப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு பதில், இன்னொரு பாதையை எப்படி நாடிச் செல்கிறோம், என்று யோசிப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. இப்படி முடிவெடுப்பதற்கு மாற்றாக, அந்த மற்றொரு முடிவை எடுத்தால் என்ன ஆகும் என்று பின் விளைவுகளை புரிந்து கொள்வது எதிர்மெய் (அ) மறு உண்மை. பதின்ம் வயதில் பார்த்த அந்தத் தோழமையிடம் உங்கள் காதலைச் சொல்லி மணம் முடித்திருந்தால் உங்கள் வாழ்க்கை இன்று எப்படி இருக்கும் என்று எண்ணி பார்ப்பது எதிர்மெய் (அ) மறு உண்மை. 9 முதல் 5 வரை உழைக்காமல், சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்து, உங்களின் லட்சியப் பாதையில் தொடர்ந்தால் நாளைய மகிழ்ச்சி எவ்வாறு நிறைவாக இருக்கும் என்று கணக்கிடுவது எதிர்மெய் (அ) மறு உண்மை. மூலக்காரணங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக இதை எவ்வாறு நியாயப்படுத்துவது என்பதை ஜுடெயா பெர்ல் புத்தகத்தில் பத்து அத்தியாயங்களில் விளக்குகிறார்.
குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் புரிய வைத்து விடலாம். ஆனால், கணினிகள் அவ்வாறு எளிதில் நம் சூட்சுமங்களைப் புரிந்து கொள்ளாது. எந்த விஷயத்தையும் குழந்தைக்குக் கூட புரிகிற மாதிரி விளக்க வேண்டியது திறன்மிக்க, பண்பட்ட மனிதர்களின் மாண்பு. நெருப்பென்றால் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அதைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கலாம். தொலைக்காட்சித் திரையில் தீ தகதகவென்று எர்ந்தால் தொட்டுப் பார்த்தாலும் ஒன்றும் ஆகாது என்பதையும் புரிய வைக்கலாம். இந்த வித்தியாசத்தை, கணினிக்கு தானாகவே விளங்கிக் கொள்ளுமாறு எப்படி புரிய வைப்பது? எந்தக் காரணத்தால் கையைச் சுட்டுக் கொள்வது மனிதருக்குத் தீங்கு விளைவிக்கும் செயலாக உள்ளது என்பதை பல வகையிலும் ஆராய்ந்து, இறுதி முடிவிற்கான அடிப்படை நியாயத்தை விளக்கச் சொல்லலாம்?
அறிந்தததைக் கொண்டு அறியாததைப் பற்றிக் கருத்துக் கொள்வதை கீழே இருக்கும் படம் மூலம் விளக்கலாம்:
இந்தப் பொறி கொண்டு ஊகிப்பதற்கு மூன்று விஷயங்களை உள்ளே தள்ள வேண்டும்.
1. ஊகம், கற்பிதம்
2. கேள்வி
3. தகவல், தரவு
அவற்றைக் கொண்டு இந்தப் பொறி மூன்று விஷயங்களை வெளியே துப்பும்:
1. கொடுத்த உள்ளீடுகளைக் கொண்டு விடையை ஊகிக்க இயலுமா? இயலாதா?
2. கேட்ட கேள்விக்கான விடையை மதிப்பிட இயலும் என்றால், எந்தக் கேள்விக்கான விடையை எவ்வாறு கணிப்பது?
3. உத்தேசமாக எவ்வளவு துல்லியமாக விடையை அறுதியிட்டுச் சொல்ல இயலும்?
ஒரு எளிய உதாரணம் கொண்டு இதைப் பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களின் சராசரி உயரம் எவ்வளவு என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
அ) தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆ) ஒவ்வொருவரின் உயரத்தையும் அளவெடுக்க வேண்டும்.
இ) மொத்த உயரத்தை, மொத்த பேர்களைக் கொண்டு வகுத்தால், சராசரியை கணக்கெடுக்கலாம்.
இதெல்லாம் நடக்கிற காரியமா? நிஜத்தில் என்ன செய்வோம்:
அ) மாவட்டத்திற்கு – தலா பத்து பேரை பிடிப்போம்.
ஆ) இவர்கள் எல்லோரின் உயரத்தையும் அளப்போம்.
இ) இந்த சராசரிக்கும், மொத்த தமிழ்ப் பெண்களின் உயர சராசரிக்கும் பெரும்பாலும் வித்தியாசம் இருக்காது என்று சொல்வோம்.
இந்த உதாரணத்தில்
1. ஊகம், கற்பிதம் = தமிழ்நாட்டில் தமிழ்ப் பெண்கள் மட்டுமே வசிப்பார்கள்.
2. கேள்வி = மகளிருக்கான நுழைவாயில் வைக்கும் போது, அவர்கள் தலை இடிக்காமல் உள்ளே வர எவ்வளவு உயரம் வைக்க வேண்டும்?
3. தகவல், தரவு = மாவட்டவாரியாக பத்து பெண்களின் உயரம்.
புத்தகத்தின் பத்து அத்தியாயங்களைப் பற்றியும் பார்த்து விடலாம்:
1. முதல் அத்தியாயம் எளிமையாக வாசிக்க முடிகிறது. எந்த விஷயத்தையும் மூன்றாகப் பிரிக்கிறது:
– கவனிப்பு
– தடை தலையீடுகள்
– எதிர்மெய் (அ) மறு உண்மை
இந்த மூன்றையும் “தூண்டு காரணம்” என்னும் ஏணியில் ஏற்றிப் பார்க்கிறது. அதன் பின் கீழ்க்கண்டவாறு காரணப்படம் போட்டு அதை விளக்கச் சொல்கிறது. வெறும் தகவல்களைக் கொண்டு கணினியின் தரவு அறிவியலர் வரும் முடிவுக்கு பதில் இவ்வாறான தருக்கமுறைக் கூற்றுகளும், கட்டுமானச் சமன்பாடுகளும் எவ்வாறு நம்பகமான முடிவை அறுதியிட்டுச் சொல்கின்றன என்பதை அறிமுகம் செய்கிறது.
2. இரண்டாம் அத்தியாயத்தில் புள்ளியியல் துறையின் குறைபாடுகளை ஜுடேயா பெர்ல் விளக்குகிறார். தன்னுடைய கண்ணை தானே குத்திக் கொள்வது போல் காரணத்தை ஆதாரபூர்வமாக விளக்குகிறேன் என்று கிளம்பிய புள்ளிவிபரவியலாளர்கள், பார்வையற்றவர்களாகிறார்கள். கணிதம் பயன்படும் எல்லா துறைகளிலும் தங்கள் புள்ளிவிபர அணுகுமுறையால் சேதம் உண்டாக்குகிறார்கள். 1920களில் இவர்களுக்கு மாற்றாக செவால் ரைட் தோன்றுகிறார். முதல்முறையாக காரணப்படம் கொண்டு தரவுகளை மட்டும் கண்மூடித்தனமாக நம்புவதை மாற்றுகிறார்.
3. மூன்றாம் அத்தியாயத்தில் தனக்கு ஏன் தூண்டு காரணம் மீது நம்பிக்கை பிறந்தது என்பதை டானா மெக்கின்சி உதவியுடன் ஜுடேயா பெர்ல் விளக்குகிறார். செயற்கை நுண்ணறிவிலும் பேயீசிய தொடர் முனைகளிலும் ஆர்வம் கொண்டிருக்கும் எவரும், எவ்வாறு தூண்டு காரணத்திற்கு வந்தடைய வேண்டும் என்பதைப் பகிர்கிறார்கள். ”ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் நாட்டின் நன்மைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்” என்னும் வாசகத்தை வாக்காளர் எவ்வாறு ஐயத்தோடு பார்ப்பாரோ, அதே ஐயத்தை கணினிக்கும் சொல்லிக் கொடுப்பதுதான் செயற்கை நுண்ணறிவிற்கான சூட்சுமம் என்று துவக்கத்தில் நம்புகிறார் பெர்ல். அதை பலமாக முன்னிறுத்தி பிரசங்கித்து, ஆராய்ச்சிகளை முன்னெடுக்கிறார். ஆனால், 1980களில் இந்த நம்பிக்கை தவிடுபொடியாகிறது. அந்தப் பயணத்தை இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பழைய கொள்கைகளைக் கைவிட்டு விடுகிறார். பேயிஸிய கோட்பாடுகளுக்கான அறிமுகமாகவும் இந்த அத்தியாயம் விளங்குகிறது.
4. புள்ளியியலுக்கும் “காரணத் தெரிவு” பாதைக்கும் உள்ள தொடர்பை நான்காம அத்தியாயம் விளக்குகிறது. சமவாய்ப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனை – புள்ளிவிபரத்தில் முக்கியமானது. ஒரே வீட்டில் இருக்கும் பத்து பேரை வைத்து ஒரு மாவட்டத்தின் சராசரி உயரத்தை கணக்கிட முடியாது. சம்பந்தமில்லாத விஷயங்களை புள்ளிவிபரக் கணக்கில் இருந்து நீக்க வேண்டும். உங்களுக்கு உடல் கொழுப்பு உண்டா என்பதற்கும் செல்பேசியே கதியாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கலாம். ஆனால், அதை விட உங்களின் பெற்றோருக்கு இதய நோய் இருந்ததா என்பதும், உங்களின் உணவு உட்கொள்ளும் முறை எவ்வாறு என்பதும், உடற்பயிற்சியின் பங்கும் பெரிது. அதை எவ்வாறு காட்சிபூர்வமாக விவரிப்பது, ஒவ்வொரு காரணப்பாதைக்கும் எவ்வாறு நம்பிக்கை எண்ணை கண்டுபிடிப்பது என்பதை விளக்குகிறார்கள்.
5. புகை பிடிப்பதால் நுரையீரலில் புற்றுநோய் வருமா? ஒரு காலத்தில் இந்தக் கேள்விக்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியாமல் புள்ளியியலாளர்கள் திண்டாடினார்கள். “சமவாய்ப்புள்ள கட்டுப்படுத்தப்பட்ட சோதனை”யை பயன்படுத்தினார்கள்; அதன் புள்ளிவிபரங்கள் குழப்பியது. கோடிக்கணக்கானோர் புகை பிடித்தலால் இறந்து போனார்கள். அதை முளையிலேயே கிள்ள “தூண்டு காரணம்” உதவியிருக்கும். சமீப காலம் வரை அறிவியலாளர்களால், மூலக்காரணத்திற்கான விடைகளைத் தேடி கண்டுபிடிப்பதற்கான தேற்றங்கள் இல்லை.
6. சென்ற அத்தியாயத்தின் அறச்சீற்றத்திற்குப் பிறகு, இந்த அத்தியாயம் சற்றே இளைப்பாறலாக அமைகிறது. ஒன்றுக்கொன்று முரண்படும் கருத்துகள் போலத் தோன்றினாலும் முரண்படாத உண்மைகளை இந்த அத்தியாயம் அறிமுகம் செய்கிறது. மாண்டி ஹில் முரண்பாடு, சிம்ஸனின் முரண்பாடு, பெர்க்சன் முரண்பாடு என பல முரண்தோற்ற மெய்களை உதாரணம் கொண்டு விளக்குகிறார்கள். விருந்தில் நண்பர்களுடன் பேசும்போது இந்த முரண்போலிகளை வினாக்களாக முன்வைக்கலாம். அப்போது இரு பக்கமாக பிரிந்து கொண்டு வாதிட்டு பார்க்கலாம். அதையும் மீறி இதை தூண்டு காரண நோக்கில் ஆராய அழைக்கிறார்கள்.
7. “தூண்டு காரணம்” என்னும் ஏணியின் படிநிலைகளை இந்த அத்தியாயம் ஆழமாக அலசுகிறது. இடையூறு என்னும் தடைகற்களை எவ்வாறு கணக்கில் கொள்வது என்பதை புள்ளிவிவரத்தின் அடிப்படையில் விளக்குகிறார்கள். ஒரு கேள்விக்கு எளிமையான பதிலை நம்பகபூர்வமாகத் தர வேண்டும். ஒன்று “ஆமாம்”; அல்லது “இல்லை”. அதற்கு அஸ்திவாரமாக
– பின் வாயில் ஒழுங்குசெய்தல்
– முன் வாயில் ஒழுங்குசெய்தல்
– கருவிசார் மாறிகள்
போன்ற கணிதக் கோட்பாடுகளை எப்படி பயன்படுதலாம் என்பதை அறியலாம்.
8. வரலாறுதோறும் எதிர்மெய் (அ) மறு உண்மை எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்பதை இந்த அத்தியாயத்தில் பார்க்கிறார்கள். 1748ல் டேவிட் ஹ்யூம் கொண்டு துவங்கி, 2001ல் மறைந்த டேவிட் லூயிஸ் வரை எவ்வாறு தூண்டு காரணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விளக்கினார்கள் என்பதை அலசுகிறார்கள். வெறுமனே வாதாடாமல், சமன்பாடுகள் மூலம் எப்படி முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் உதாரணங்கள் கொண்டு கணக்கு போடுகிறார்கள். விபத்தில் காயம் பட்டதற்கு குற்றஞ்சாட்டப்பட்டவரின் பங்கு என்ன என்பது காப்பீடுகளில் உதவும். உலக வெம்மைக்கு மனிதர்களின் பங்கு எவ்வளவு என்பதையும் இவர்கள் முறையில் கணக்கிட்டு பார்க்கலாம்.
9. ஒவ்வொரு விஷயத்திலும் இடைத்தரகர் இருக்கிறார்கள். மருந்து உட்கொண்டால் ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தம் குறைந்தால் ஆயுள் அதிகரிக்கும். மருந்து உட்கொண்டால் ஆயுள் அதிகரிக்கும் என்று சொல்லலாமா? அப்படியானால், சர்க்கரை வியாதிக்கும், தூக்கம் வருவதற்கும் மாத்திரை உட்கொண்டால், எப்படி கணக்கிடுவோம்? ஒவ்வொரு மருந்தும், ஆயுளை அதிகரிக்கிறதா? இதை அல்ஜீப்ரா கொண்டு விளக்குகிறார்கள். பத்து மாத்திரைகளை ஒரே மாத்திரையாக மாற்றினால் உட்கொள்பவருக்கும் மகிழ்ச்சி; பின் விளைவுகளும் குறைச்சல்; மருத்துவமனை செலவுகள் குறைவதால் காப்புறுதி நிறுவனங்களுக்கும் லாபம். இந்த மாதிரி அனைத்து வாழ்வியல் நிகழ்ச்சிகளையும் மூலக்காரண அலசல் செய்து, ஒவ்வொன்றுக்கும் மத்தியஸ்தர் எண் கொடுத்து, இறுதி விளைவை நிர்ணயிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
10. இது வரை புள்ளியியல்; கணிதம்; தேற்றம்; சூத்திரங்கள்; கோட்பாடுகள் – சம கால சமூகச் சிக்கல்களை எவ்வாறு கணக்கிட்டு வருங்காலத்தைத் திட்டமிடுவது என சொன்னார்கள். இந்த அத்தியாயத்தில் அதை எல்லாம் எவ்வாறு கணினிக்கு சொல்லித் தருவது எனப் பார்க்கிறார்கள். “செயற்கை நுண்ணறிவு” கொண்டு மனிதரைப் போல் கணினியையும் எப்படி புத்திசாலி ஆக்கலாம்?
– மனிதருக்கு கொள்கைப் பிடிப்பு இருக்கும். கணினிக்கும் அதை எவ்வாறு புகட்டலாம்?
– நாலைந்து விதமாக சோதனை செய்துவிட்டு நாம் முடிவுக்கு வருகிறோம். அந்தச் சோதனைகளை எவ்வாறு வடிவமைக்கிறோம் என்பதை கணினிக்கு எப்படி புரிய வைக்கலாம்?
– நமக்கு வருத்தங்களும் சோகங்களும் இருக்கும். ஒரு தடவை தவறு செய்தால், அதேத் தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்போம். அந்த மாதிரி அனுபவ அறிவை எவ்வாறு கணி புத்தியில் ஏற்றுவது?
– பொறுப்பு இல்லாமல் பதவி இல்லை. அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்றத் தவறினால் மரியாதை இழக்கிறோம். தலைமையின் கையில் சாவி கொடுப்பது போல் கணினியின் பொறுப்பில் நம்பகமாக ஒப்படைக்கலாமா? அதற்கு சிரத்தையையும் அக்கறையையும் எவ்வாறு உணர வைக்கலாம்?
உங்கள் தரவுகளை விட நீங்கள் புத்திசாலிகள். தரவுகளுக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியாது. இப்படி செய்வதற்கு பதில், அப்படி செய்தால் என்ன நடந்திருக்கும் – என்று வெற்றுத் தகவல்களால் ஊகிக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும் “மனசு சொல்கிறது” என்று அணுகவும் கூடாது. அறிவியல் பூர்வமாக, புத்தி கொண்ட பார்வையுடன் முடிவுகளை எப்படி எடுப்பது? நாம் எடுக்கும் முடிவுகளை எவ்வாறு விளக்கி, மற்றவர்களையும் நம் அணியில் கை கோர்க்க வைப்பது?
அதற்கு இந்த நூல் உதவும்.
மேலும்:
கட்டுரை தலைப்பிற்கான பொருள்: கடிய பாதையில் எவரிடத்தில் சென்றாலும் பெற இயலாத அறிவினை அடைவது (கம்ப ராமாயணம்)
It takes the average person almost 3 minutes to find the dog hiding among the polar bears in this brainteaser. How… twitter.com/i/web/status/1…2 days ago
RT @janeruffino: Did you ever see anything as cool as this? Follow it all the way! Not only is it the most soothing near-infinite scroll yo… 3 days ago
RT @bridgetkromhout: "Thank you," says the now-happy toddler's mother. "Can we take you home with us?" She leaves unspoken her question of… 3 days ago
RT @chadloder: ⚡A collection of helpful tips on how to reduce the use of biased and oppressive language in everyday speech. Updated weekly.… 3 days ago
RT @flyingpoint: This is obnoxious beyond words, especially coming from the guy responsible for me needing to carry around a can of compres… 3 days ago
RT @FreyaHolmer: the best argument for using pi instead of tau is "people use it"
just like 12h time
just like MM/DD/YYYY
just like QWERTY… 3 days ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde