Monthly Archives: ஜனவரி 2015

ஆண்களுக்கு பேன் வருவதில்லை

நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன்.

நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன். முந்தாநாள் இரவு பத்து மணி இருக்கும். கிம் கர்டாஷியனும் மோனிகா பெலூச்சியும் போட்டி போட்டுக் கொண்டு கணித்திரையை ஆக்கிரமித்திருந்தார்கள். அப்போதுதான் ராம் அழைத்தான். “வாடா… பௌலிங் போகலாம்!”

இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பௌலிங் மையம். மூன்று மாதத்தில் வெள்ளைப் பனி காலம் போய் வெஞ்சிவப்பு கோடை வந்து மூன்று மாதம் கழித்து வண்ணமயமான இலையுதிர் காலம் வருவது போல் மூன்று வினாடிக்கொரு முறை சடசடவென்று விளக்குகள் மாறி மாறி பாய்ந்து கொண்டிருந்தது. விளக்குகள் அங்கேயேதான் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஆனால், அணைந்து அணைந்து எரிந்ததில் ஒளிவிளக்குகள் பாய்ந்து பாய்ந்து ஓடியது போல் கண்ணிற்கு தெரிந்தது. புத்திக்கு எல்லோரும் கொண்டாடுவதாகத் தெரிந்தது.

அரை டிரவுசர் கல்லூரி மாணவிகள் அதிகம் புழக்கத்தில் இருந்த தலமாக பாஸ்டன் அறியப்பட்டது. பௌலிங் மையத்திலோ கல்லூரி மாணவிகளை விட கல்லூரி மாணவர்கள் அதிகமாகக் காணக் கிடைத்தார்கள். பெண்களுக்கு விளையாட்டுகளில் இஷ்டமில்லை. வினைகளில் மட்டுமே இஷ்டமா என்பதைக் காணக் கிடைத்தவர்களிடம் கேட்டறியவில்லை. யூ டியூபில் படம் பார்க்கும்போது அதன் மேலே வந்து விழும் விளம்பரங்கள் போல் யுவன்களை தவிர்த்த பின் யுவதிகள் கிடைத்தார்கள். பந்தயம் கட்டி விளையாட்டு ஆடலாம். ஆடினோம். எனக்கு, இந்த மாதிரி இடங்களில் எதிர்பாலாரை சந்திப்பதிலும் பெண்களோடு பேசுவதிலும் பிரச்சினை இருப்பதில்லை. நாம் சிறுபேச்சு எதுவும் உளற வேண்டாம். பந்தைத் தட்டி விட்டால் போதும். அது போகும் பாதையைப் பொறுத்து கெக்கலிப்போ கைத்தட்டலோ கிடைக்கும். அப்படியே தொடரலாம்.

நான் பெண்களை சந்திப்பதற்காக பௌலிங் செல்லவில்லை. தத்துவம் பேச பௌலிங் மையம் சிறந்த இடம். ஒருவர் குறி வைத்துக் கொண்டிருப்பார். மெதுவாக ஓட ஆரம்பிப்பார். சடாரென்று நிற்பார். மீண்டும் மையத்தை ஒன்றேகால் கண்ணால் கைக்கு கொணர்ந்து பந்தை மெதுவாக விடுவிப்பார். எதிர்பார்ப்போடு பெருமூச்சால் பந்தின் பாதையை மாற்ற எத்தனித்துக் கொண்டிருப்பார். அந்த சமயத்தில், “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பந்தத்தை விட பந்தைத்தான் குறிக்க வேண்டும்!” என சொல்லிவிடலாம். பழமொழி ஆராய்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது.

அப்பொழுதுதான் முதல் போணி. பெங்களூரில் இருந்தவரை தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தேன். அவர்களைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்க முடிந்தது. எனக்கு நல்ல காரணங்கள் வேண்டும். புற்றுநோய் அபாரமான காரணம். இன்று கீமோதெரபி. இன்னொரு நாள் ஆபரேஷன். நாளைக்கு மாற்று சிகிச்சை. அப்புறம் மாந்திரீகம். இப்படியே கான்சரைப் பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். சவரம் செய்யாத முகத்தோடு அலுவலுக்கு சென்று வரவும் புற்றுநோயாளிகளின் உறவினர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பாஸ்டன் வந்தபோது கூகுள் வந்து விட்டிருந்தது. கூகிளுக்கு முன்பே வெப்.எம்.டி. வேறு ஆக்கிரமித்திருந்தார். இந்தியர்களுக்கு நோய் என்றால் ஆலோசனை வழங்க மட்டுமே தெரியும்.

“இதற்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் அற்புதமான மருந்து இருக்கிறதாம். தருவித்து கொடுத்துப் பார். நிச்சயம் குணமாயிடும்!”
“இப்பொழுது புற்று நோயை காந்த சக்தி மூலம் குணப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் தொலைபேசியில் தொடர்பு கொள்:…”
“யாராவது செய்வினை வைத்திருப்பார்கள். சோட்டாணிக்கரை போனால் எடுத்துரலாம்.”

பாஸ்டன்வாசிகள் விபரம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். “எந்த மருத்துவமனை? மாஸ் ஜெனரல் நன்றாக இருக்கும்.” என்பதோடு நில்லாமல் படு நுட்பமாக கேள்விகள் போட்டார்கள். புதியவர்களின் சிறுகதை வேண்டும் என்று ஜெயமோகன் கேட்டவுடன் ”எத்தனை வார்த்தைகளில் எழுதணும்? புதியவர் என்றால் வயது வரம்பு உண்டா? எவ்வளவு வார்த்தை இதுவரை எழுதியிருந்தால் அனுமதி? சன்மானம் கிடைக்குமா?” என்று உள்மாந்தரங்கள் கேட்பது போல் துளைத்தார்கள். கேன்சர் குணமாகிவிட்டது.

ஆனால், அதிகாலையும் ஆகி இருந்தது. ஏன் அலுவலுக்கு வரவில்லை என்பதற்கு நல்ல காரணம் வேண்டும். அப்போதுதான் காதலிக்கு கர்ப்பம் ஆகி இருப்பதாக தெரிவித்தேன். அவர்களும் உனக்கு எப்போது திருமணம் என்று கேட்கவில்லை. அமெரிக்கர்கள் நாசூக்கானவர்கள். நீச்சலுடையின் மீது நீர் போல் பட்டும் படாமலும் இருப்பார்கள். மருத்துவரை பார்ப்பதற்காக அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக சொன்னேன்.

எழுத்தாளர் சாடூ வந்தபோது அந்தப் குழந்தை பிறந்துவிட்டது.

சாடூ எழுதிய காலத்தில் புனைப்பெயர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. 1950களில் கண்ணன் என்பவர் தன் அடையாளத்தை மறைக்க ”சாது” என்று பெயரிட்டுக் கொண்டார். பெயருக்கேற்ற மாதிரியே சாதுவாக செயல்பட்டார். கைலி கட்டிக் கொண்டவரெல்லாம் ஆம்பிளை என நம்புவது போல் புனைப்பெயரினால் நிஜ அடையாளங்களை தொலைக்க முடியும் என எழுத்தாளர் “சாது” திடமாக நம்பினார். அவரைக் கிண்டல் செய்வதாக நினைத்து புகழின் உச்சியில் இருந்த ஆறுமுகம், “சாடு” என்று நாமகரணமிட்டுக் கொண்டார். அந்தப் பெயரில் மற்றவர்களை சாடி நிறைய எழுதியதால், “சாடு” பரவலாகப் பேசப்பட்டார். டவிசர் தெரிய கைலி கட்டுவது போல் தூக்கி கட்டினால் மட்டும் ரவுடியாக முடியாது என்பதை “சாடு” நிரூபிப்பதாக நம்பிய கார்த்திகேயன் “சாடூ” ஆகிக் கொண்டார்.

இவர்களைப் பற்றி நகுலன் கூட கவிதை எழுதியிருக்கிறார்:
சாத்தமுதில் பசி
தெரிந்தது
சாதுர்மாஸ்யத்தில் பாண்டித்யம்
கிடைத்தது
சாதுவில் தூ

ஆனால், என்ன சாது/டு/டூ என்று கேட்டதற்கு சாதுர்யமாக பதில் சொல்ல மறுத்து விட்டார். குவார்ட்டர் வாங்கித் தந்த பிறகு என்னிடம் மட்டும் சொன்னார். “அது பதிப்பாளர் பிழை. நான் அசலாக எழுதியது என்னன்னா…
சாண்டால் பவுடர்
தெரிந்தது
சாம்பிராணியில் பாக்கியம்
நினைத்தது
சாதியில் தா

இதை சாது/டு/டூ மாற்றி அச்சிட்டு விட்டு, என்னைப் பற்றி நகுலன் பாட்ட்டெழுதியிருக்கார்னு ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சுட்டு திரியறான்.”

சாடூ அமெரிக்கா வந்தபோது இது குறித்து கேட்டேன். “எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப ஆல்ஜீப்ரா தெரியலேன்னா அது பிரச்சினையில்ல… எட்டாவது வகுப்பு நடத்துறவருக்கே அல்ஜீப்ரா தெரியலேன்னாலும் அது பிரச்சினையில்லே! ஏன்னா… அவரு சரித்திரமோ பூகோளமோ சொல்லிக் கொடுத்துரலாம். அது மாதிரிதான் நாம நகுலனோட கவிதைய அணுகணும். நீங்க எல்லாரும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதிரி. உங்களுக்கு அவரோட கவிதை தெரியாது. அச்சகத்தார் எல்லாரும் ஆசிரியர் மாதிரி. எழுத்தாளர் சொல்லுறத பிரதி மறு உருவாக்கம் செய்வாங்க! உண்மையான மாணவன் மனப்பாடத்தைத்தான் நம்பினான். அது மாதிரி ஆதர்சமான வாசகன் என்னோட படைப்பை தலைகீழா ஒப்பிப்பான். உங்கள்ள யாரு அந்த மாதிரி தீவிர இலக்கியவாதி?”

எனக்கு எதுவுமே எழவில்லை. ஃபேஸ்புக் முழுக்க பெரியார் கொள்கை பரப்பியவரை பிரதோஷத்தில் பார்த்தால் கண்டும் காணாமல் போவது போல் அடுத்த சப்பாத்தியை எடுப்பதில் வாயை மும்முரமாக்கினேன். ஆனால், அந்த ஷணம் எனக்கு முகம் பிரகாசமானது. நிறைய கார் நெரிசலாக நின்று உருமிக் கொண்டிருக்கும் வேளையில் உங்களின் காருக்கு மட்டும் குறுக்கு சந்து கிடைத்து பூந்து புறப்பட வழி கிடைத்தால் மனம் குதூகலிக்குமே… அந்த மாதிரி.

இவர் செய்வதைத்தான் நான் அனுதினமும் அலுவலில் செய்கிறேன்.

“பிரோகிராம் ஏன் வேலை செய்யலை?”
“நீங்க என்ன செஞ்சீங்க?”

“திடீர்னு தளம் திறக்கவே மாட்டேங்குது?”
“பிரவுசர மாத்திப் பாருங்க”

“நான் கேட்டது இதில்லையே…”
“ஆனா, நீங்க சொன்னது இதானே!”

எனக்கு சால்ஜாப்பு சொல்லத் தெரியும். சாது/டு/டூ-வை விட விலாவாரியாக கதை விடத் தெரியும். இரண்டு நிமிடமே பொறுமை உள்ள மேனஜருக்கு ஏற்ற குட்டிக் கதையும் சொல்கிறேன். இரண்டாண்டுகளாக காசு கொடுத்து விட்டு ’ஆச்சா’ என்று பவ்யமாக வினவும் வாடிக்கையாளருக்கும் முடிச்சுகள் நிறைந்த உச்சகட்டம் பல போட்டு தொடரும் கொண்ட நாவல் கொடுக்கிறேன். கோடை விருந்துகளிலும் நத்தார் உபசரிப்புகளிலும் சுவாரசியமாக சம்பவங்களைக் கோர்த்து ஒரு மணி நேர குறுநாவலாக்குகிறேன். ஆனால், எது என்னை எழுத்தாளனாக விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது?

எழுதிய கதை இதுதான்: தலைப்பு – ஈஷுதல்

ரேடியோவில் காலையில் இருந்து அதே செய்தியைத்தான் அலசிக் கொண்டிருந்தார்கள். விண்வெளியில் ஸ்புட்னிக் பறந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவை ருஷியா முந்திக் கொண்டு விட்டது. பூமியைத் தொடாமல் பார்க்கும் வான்கோள் ஏவியிருக்கிறார்கள். வான்வெளியில் முதல் விண்கலமாக ஏவப்படிருந்த ஸ்புட்னிக் பற்றிக் கேட்டு கேட்டு ஜெனிஃபருக்கு அலுத்து விட்டது.

பக்கத்தில் இருந்தும் தொடக்கூடாத நீக்ரோக்கள் நிறைந்த நாடு அமெரிக்கா. அது பறக்கும் போட்டியில் தோற்கடிக்கப் பட்டுவிட்டதாக அப்பா பொருமினார். தொழில்நுட்பத்தில் பின் தங்கி விட்டதாக வருந்தினார். இனி கூடிய சீக்கிரமே நியு யார்க்கில் செங்கொடி பறக்கும் என்றார். நன்றாக உழைப்பவருக்கும் வெறுமனே சோம்பித் திரிபவருக்கும் வித்தியாசம் இல்லாத நாடாகி விடுமோ என்று கவலையில் மூழ்கி இருந்தார்.

ஜெனிஃபர் தலையில் பேன் ஊறிக் கொண்டிருந்தது. அக்காவிடமிருந்து வந்திருக்கலாம். அக்கா பயன்படுத்தும் சீப்பில் இருந்து தாவி இருக்கலாம். ஒருவருக்கொருவர் பின்னிக் கொள்வதில் தொற்றிக் கொண்டிருக்கலாம். பேன்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் என்பது ஜெனிஃபர் அப்பாவின் வாதம். ஒட்டுண்ணிகளாக பிறரை அண்டிப் பிழைக்கிறார்கள் என்பார்.

ஆனால், நல்ல வேளையாக நாள் முழுக்க இந்த ஸ்புட்னிக் மகாத்மியத்தையும் பேன் பிரலாபத்தையும் ஜெனிஃபர் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். இன்றுதான் ஜெனிஃபருக்கு முதல் நாள். பதினாறு வயதானபின் வேலைக்குப் போகலாம் என்று அப்பா வாக்குறுதி கொடுத்திருந்தார். இன்று அது நிறைவேறுகிறது. வேலைக்கு செல்லும் முதல் நாள். சுதந்திரமாக உணரும் முதல் நாள். தன்னுடைய உழைப்பை மதிக்கும் இடத்திற்கு செல்லும் நாள். பணிக்கு பாராட்டு மட்டும் இல்லாமல் பணமும் கிடைக்கத் துவங்கும் நாள்.

ஜெனிஃபரால் சைக்கிளிலேயே அங்கு சென்றுவிட முடியும். இருபது நிமிடம் ஆகும். காய்கறிகளை அடுக்குவது, தரம் பிரிப்பது, விலை ஒட்டுவது என்று சின்னச் சின்ன வேலையில் ஜெனிஃபர் துவங்கினாள். எடை போடுவது, கல்லாவை பார்த்துக் கொள்வது என்று ஒவ்வொரு மாதமும் பொறுப்பும் ஊதியமும் ஊக்கப்பட்டுக் கொண்டே வந்தது பெருமிதமடையச் செய்தது.

அப்போதுதான் முதலாளியின் காரை தன் வீட்டின் வாசலில் பார்த்தாள். தன்னோடு கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பியவர், தனக்கு முன்னே வந்து சேர்ந்திருந்தார்.

“உங்க மகள் இனிமே என்னுடைய மளிகைக் கடையில் வேலை பார்க்க முடியாது. இது உள்ளூர்க்காரங்க வந்து போற இடம். இங்கே தன்மானம்தான் எல்லாம். உங்க மகள் அங்கே இருப்பதை பார்த்தால் நான் சேரக் கூடாதவங்களோட ஈஷிக்கறதா எல்லோரும் நினைப்பாங்க. உங்க பெரிய மக கருப்பனோட கல்யாணம் கட்டிக்கிட்டிருக்காள். அவளோட செய்கைக்கு நான் ஆதரவு கொடுக்கிறதா இவங்க எல்லோரும் நினைச்சா என்னோட வியாபாரம் கெட்டுடும். இவ வேலை செய்யறதால நம்ம இனத்த பகைச்சுப்பேன். தப்பா நெனச்சுக்காதீங்க…”

எழுத்தாளர் சாடூவிற்கு கதை ரசிக்கவில்லை. “இதில் சம்பவம் மட்டுமே சொல்லப் பட்டிருக்கு. அது கூட தவளை நடையில் தாவியோடுது. இதில் அனுபவம் இல்லை. உங்களுடைய முதல் வேலையை கொஞ்சம் போல் கொணர்ந்திருக்கிறீங்க. ஆனால், நீங்க பலசரக்கு கடையிலோ, அமெரிக்க கசாப்புக் கடையிலோ ஊழியம் செஞ்சதில்ல. அதனால, அந்த விவரிப்புகள் எல்லாம் நேர்மையில்லாம அமைஞ்சிருக்கு. மேலும், இது நடந்ததை நடந்தது போலவே சொல்லிச் செல்கிறது. கொஞ்சம் போல் அந்த அக்கா கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கணும். சமூக மாற்றமும் அறிவியல் வளர்ச்சியும் எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதை விவரிக்கணும். அந்தக் கால ஐம்பதுகளின் காலகட்டத்தை கண்முன்னே நிறுத்தணும்…”

வருடாவருடம் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள். ஒவ்வொரு சம்பள உயர்வுக்கான உள்ளாய்வின் போது மேலாளர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் போல் சுட்டுவிரல் ஏவுகணை போதனைகள். அங்கே ஒண்ணாம் தேதி தோறும் சம்பளம். என்னுடைய “ஈஷுதல்” கதையை விமர்சிக்கும் எழுத்தாளர் சாடூ என்ன தந்து கிழிக்கப் போகிறார்?

பொங்கி விட்டேன். “ஸ்புட்னிக் என்பதற்கு பதிலாக சந்திராயன் வைத்துக் கொள்ளுங்கள். ஜெனிஃபரின் அக்கா பெயரை சோனியா எனலாம். ராஜீவை மணந்த போது சோனியாவின் சகோதரிகளின் நிலை என்னவாக இருந்திருக்கும். இது அரசியல் சமூக அறிவியல் மாந்திரீகப் புனைவு! இலக்கிய விமர்சகனாக பச்சாதாபம் இல்லாதவர்கள் தேவைப்படுகிறார்கள். இலக்கியவாதியாக பச்சை தாகம் தேவை. படிப்பவனோட கற்பனையைப் பொறுத்துதான் வறட்சி வெளிப்படும். நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். அதனால்தான் எழுத வந்திருக்கேன். எழுத்தைப் போலவே இயக்கத்திலும் துடிப்பானவன். சொல்லப் போனால் ‘பல்லாயிரம் பொய் சொல்ல பத்திரமான வழிகள்’ என்னும் வலையகம் வேறு நடத்துகிறேன்.”

உங்களுக்காக அதில் இருந்து ஒரு தகவல்: தலையில் பேன் வந்திருப்பதால் எல்லாத் துணிமணிகளையும் எரித்துவிட்டேன். அதனால், ஆடையின்றி இருப்பதால் இன்று நான் அலுவலுக்கு வர இயலாது.

குட நைட்.

Advertisements

Snowden – NSA Secrets

ஸ்னோடென் அறியாத ரகசியம்
– பாலாஜி

ஹவாய் தீவுகளின் எரிமலைகளுக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) இருக்கும் இடத்திலிருந்து நாற்பதே நிமிடத்தில் வைகிகி கடற்கரைக்கு சென்றுவிடலாம். பூமிக்கு அடியே பதுங்குகுழி மட்டுமே முன்பு ஒயாஹு தீவில் வைத்திருந்தார்கள். வளர்ந்து வரும் ஆசிய புலிகளையும் வளர்ந்து விட்ட சீனப்புலியையும் வேவு பார்ப்பதற்கு அத்தனை சிறிய நிலவறை போதாது என்பதால் 358 மில்லியன் டாலர் செலவில் சென்ற ஆண்டுதான் விஸ்தரித்து திறக்கப்பட்டது. அமெரிக்கா உளவு பார்ப்பதைப் போட்டுக் கொடுத்த எட்டப்பன் எட்வர்டு ஸ்னோடென் இங்கேதான் வேலை பார்த்தார்.

எட்வர்டு ஸ்னோடென் நேரடியாக என்.எஸ்.ஏ.விற்கு வேலை பார்த்தவர் இல்லை. அந்த நிறுவனத்தில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தர். பூஸ் அலன் ஹாமில்டன் (Booz Allen Hamilton) மூலமாக என்.எஸ்.ஏ. அலுவலகத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். என்.எஸ்.ஏ. ஊழியர்கள் போல் இல்லாமல் முப்பது வயதாகியும் முக்கிய வேலைகளில் இடம் கிடைக்காததால் மனம் வெந்து வெளியேறியவர். கணினியில் நிரலி எழுதுபவர் எவருமே தங்களுடைய சுயவிவரங்களை ஊட்டமாகவே சொல்லித் திரிவோம். நாலு நாள் ப்ராஜெக்ட் என்றால் நாற்பது மாதம். எட்டு வரி பி.எச்.பி. வினைச்சரம் என்றால் எட்டாயிரம் அடி சி++ ஆக்கம் என்போம். அது போல் ஸ்னேடென் தகவல்கள் இன்னும் மாயமானாகவே உறைந்திருக்கிறது.

புதிய ஊழியர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் நிறுவனத்தின் கழிப்பறை எங்கே இருக்கும், எங்கே காபி கிடைக்கும், எப்பொழுது மதிய உணவிற்கு செல்லலாம் போன்ற தகவல்களை பவர்பாயிண்ட் கோப்பாக போட்டு சொல்லித் தருவார்கள். அந்த மாதிரி என்.எஸ்.ஏ. இயக்கும் ப்ரிஸம் (PRISM) குறித்து அறிமுகம் செய்யும் கோப்பை ஸ்னோடென் வெளியிட்டிருக்கிறார். அது தவிர நேம் டிராப்பிங் போல் ஒரு சில அதிரடி விஷயங்களையும் இணைய நிறுவனங்களையும் கார்டியன் நாளிதழ் மூலமாக சொல்லியிருக்கிறார். இதனால் வீரப்பனை பேட்டி எடுத்த நக்கீரன் கோபால் போல் பேரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்ட ஆட்டக்காரர் போல் புகழும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்.

இந்த ப்ரிஸம் என்றால் என்ன?

இணையத்தில் கிடைக்கும் அத்தனை தகவலையும் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்வதற்கு பெயர் ப்ரிஸம். ஃபேஸ்புக்கில் போடும் நிலைத்தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டாலும், ஃபேஸ்புக்கே நீங்கிவிட்டாலும் கூட ப்ரிசம் தனக்கென்று ஒரு பிரதி வைத்திருக்கும். மைரோசாஃப்ட் ஹாட்மெயில் எல்லாம் அழித்துவிட்டாலும் கூட ப்ரிஸம் தங்களுக்கென்று ஒரு ஜெராக்ஸ் போட்டு பாதுகாத்திருக்கும். வைய விரிவு வலையில் ஒவ்வொருவரும் பரிமாறும் ஒவ்வொரு தளத்தில் இருந்தும் விஷயங்களை அமெரிக்கா எடுத்து பதுக்கி வைத்திருப்பதற்கு பெயர் ப்ரிஸம்.

இதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?

ஒற்றரை அனுப்பி வைத்துவிட்டு, அதற்குப் பிறகு அந்த ஒற்றனையே வேவு பார்க்க இன்னொரு ஒற்றனை அனுப்பி, அவனையும் நம்பாமல் இராஜாவே பின் தொடர்ந்து சென்று உளவு பார்ப்பது அக்பர் காலத்து முறை. தொலைபேசியை ஒட்டுக் கேட்பது இந்திரா காந்தி காலத்து ஒற்றர் முறை. இன்றோ போராளிகளும் ஸ்கைப் மூலம் அரட்டை அடிக்கிறார்கள். தீவிரவாதிகளும் மின்னஞ்சல் மூலம் திட்டங்களைப் பரிமாறுகிறார்கள். இவர்களின் நண்பர்கள் யார், எப்படி இவர்களின் உண்மையான அடையாளத்தைக் காணலாம் போன்றவற்றுக்கு ட்விட்டர், கூகிள் கை கொடுக்கிறார்கள். எத்தனை முகமூடிகள் போட்டாலும், பெயரில்லாதவர்களாக அனாமதேயங்களாக உலவினாலும், எங்காவது இணையத்தை தொட்டிருப்பார். அதில் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அறியவும் குண்டுவெடிப்புகளைத் தடுக்கவும் கணினியே கற்று கொள்வதற்கு ப்ரிசம் தகவல்களைத் தந்து உதவுகிறது. (தொடர்புள்ள பதிவு: இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை – http://solvanam.com/?p=28216)

ஏன் என்னுடைய தகவல்களையும் எட்டி பார்க்கிறார்கள்?

ஒவ்வொருவராகப் போய், ‘நீங்கள் தீவிரவாதியா? உங்களுக்கு பயங்கரவாதியோடு தொடர்பு இருந்ததுண்டா?’ என்று அன்னியோன்யமாக வம்பு பேச முடியாது. எனவே, எல்லோருடைய விஷயங்களையும் எடு. அவற்றில் எது புகையுதோ அதை மட்டும் விலாவாரியாக ஆராய்வாய். தேவையில்லாததை குப்பையில் போட வேண்டாம். என்றாவது, எதற்காகவாவது, எப்படியாவது உபயோகப்படலாம். இப்பொழுது வன்பொறி வட்டுக்கள் மிக சல்லிசாகக் கிடைக்கிறது. அதுவும் இல்லாவிட்டால், மேகத்தில் சேமித்து வைத்துக் கொள். வேண்டுமென்னும்போது சஞ்சீவி மலையாக இறக்கிக் கொள்ளலாம்.

அப்படியானால் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் எல்லோருமே கூட்டுக் களவாணிகளா?

இந்த உளவு வேலை எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்த சட்டசபையும் சரி… உள்விஷயமறிந்த வல்லுநர்களும் சரி… வலைவணிக நிறுவனங்களுக்கு இந்த உளவில் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள். கம்பியில் போகும் தகவலை அமெரிக்கா உருவிக் கொள்கிறது. கூகிள் போன்ற பெருநிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ‘முடியாது’ என்று விட்டார்கள். கூகிளுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. அவர்களிடம் அறிவு சொத்தைப் பகிர்வதில் பிரச்சினையில்லை. ஆனால், அது ‘அனானிமஸ்’ போன்ற கொந்தர்களாலும் ஆப்பிள் போன்ற போட்டி நிறுவனங்களாலும் திருடு போகும் என்பது மைக்ரோசாஃப்ட்களின் அத்தியாவசியமான கவலை. மேலும், சீராக ஒழுங்குமுறை செய்யப்பட்ட தரவுகளை ஒவ்வொரு வலைஞருக்கும் எல்லா நிறுவனங்களிடமிருந்தும் வாங்கிக் கொண்டால் இந்த அண்ட சராசரமும் சில்லு வைத்தாலும் தாங்காது. எனவே, தங்களுக்கு மிக மிக முக்கியமான நபராகப் படுபவர்களின் தரவுகளை மட்டுமே கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.

குழம்புதே! சற்று முன் எல்லாத் தகவலையும் சுருட்டுவதாக சொன்னீரே?

இளையராஜாவின் பாட்டில் மானே, மயிலே இருப்பது போல் தியாகராஜரின் பாடலில் குருகுக வருவது போல், பயங்கரவாதிகளின் உரையாடலில் முத்திரை அம்சம் இருக்கும். அதை கவனிக்கிறார்கள். ”வானம் நீலமா இருக்கு இல்ல…” என்பது போன்ற சங்கேத மொழிகளினால் இதை கூட நிவர்த்தி செய்து விடுவார்கள் புத்திசாலி காரியஸ்தர்கள். ஆனால், அதே புத்திசாலி காரியஸ்தர்கள், எத்தனை பேருடன் அதே பிரயோகத்தை உடனுக்குடன் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதை ஆராய்கிறார்கள். சாதாரணமாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் உரையாடிக் கொண்டிருக்கிறார்களா என்னும் சரித்திரத்தை ஆராய்கிறார்கள். என்ன சொன்னோம் என்பதை விட, எப்பொழுது சொன்னோம் என்பதையும், எப்படி சொன்னோம் என்பதையும், எவ்வளவு பேரிடம் சொன்னோம், எங்கிருந்து சொல்கிறோம் என்பதையும் சேமிக்கிறார்கள். நேற்று வரை தகவலை சும்மா அனுப்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று தகவலுக்கு கடவு முத்திரை இட்டு மறைச்சொல்லிட்டு அனுப்பித்தால் விழித்துக்கொள்கிறார்கள்.

அப்படியானால் இனி யாதொரு பயமும் கிடையாதா? தீவிரவாதத் தாக்குதல் என்னும் பேச்சுக்கே இடமில்லையா?

அப்படி அறுதியிட்டு நம்பிக்கை கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே அறியலாம். அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேவு பார்க்க இன்னும் ஏக கெடுபிடி இருக்கிறது. நீதிமன்றத்தை அணுக வேண்டும். அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லி வைக்க வேண்டும். நீதிபதியின் ஒப்புதல் வேண்டும். அதற்குப் பிறகு அவுட்லுக், யாஹூ போன்ற நிறுவனங்களிடம் இருந்து இரகசியத் தரவுகளை வாங்க வேண்டும். வந்த தரவுக்குறிப்புகளை அலச வேண்டும். இவை எல்லாம் செய்த பின் உள்ளூர் காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு புரியவைத்து, பின்னணியை விளக்கி, காரியத்தை தடுத்தாட்கொள்ள வேண்டும்.

தகவலை எல்லாம் தானே எடுத்துக் கொண்டபின், எதற்கு ஜிமெயில் துணை வேண்டும்?

உங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.

ஸ்னோடென் சொல்லித்தான் இதெல்லாம் நமக்குத் தெரியுமா?

நியூ யார்க் நகரின் மையப்பகுதி. நல்ல கோடை காலம். 1920ஆம் ஆண்டு. ஜூலை முதலாம் தேதி. முப்பதுகளை இப்பொழுதுதான் தொட்டிருந்தாலும் வழுக்கையாகும் ஹெர்பெர்ட் யார்ட்லீ மான்ஹட்டனுக்கு குடிபுகுகிறார். பழுவேட்டையரின் சதியாலோசனை நடந்தது போன்ற நான்கு மாடி பங்களா வீடு. ‘கறுப்பு மண்டபம்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஒவ்வொரு தந்தியையும் படிக்க வேண்டும். சட்டபூர்வமாக முடியாது. தந்தியை அனுப்பிய வெஸ்டர்ன் யூனியன் திட்டத்திற்கு தலையாட்டுகிறது. ஜனாதிபது உட்ரோ வில்சனும் ஆசி நல்குகிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் இது மறைமுகமாக, ஆனால் அதிகாரபூர்வமாக தொடர்ந்திருக்கிறது. ஆள் மாறுகிறார்கள். நிறுவனங்கள் தகவல் தருகின்றன.

ஆனாலும், ஸ்னோடென் தானே இதை வெளிக் கொணர்ந்திருக்கிறார்?

ஏழாண்டுகளுக்கு முன்பே மார்க் க்ளீன் இதையெல்லாம் சொல்லிவிட்டார். ஏடி அண்ட் டி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சாதாரணமாக வேலை பார்த்தவர் வீட்டில் திடீரென்று உளவுத்துறை வந்தது. முக்கியமான வேலைக்குப் பொருத்தமானவர்தானா என்று சோதித்த பின் சேர்த்துக் கொண்டது. இருந்தாலும், மார்க் பொறுக்க மாட்டாமல், அவர் செய்த உளவு வேலைகளின் இரகசியங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டுவிட்டார். ஒரு கம்பி நிறுவனத்திற்கு… அதே கம்பியின் ஜோடி அரசாங்கத்திற்கு. ஏடி அண்ட் டி எதையெல்லாம் கம்பி வழி கொண்டு செல்கிறதோ அதெல்லாம் அரசிற்கும் ஒரு காப்பி. இதற்கான தொழில்நுட்பத்தை செய்தவரே பேட்டி கொடுத்து, ஒளிக்க வேண்டியதை வெளிச்சத்திற்கு எடுத்து வந்துவிட்டார்.

அப்படியானால், ஸ்னோடென் என்னதான் செய்தார்?

மார்க் முன்மொழிந்ததை வழிமொழிந்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் வெளிப்படையான செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். ஊரெங்கும் மூடுமந்திரப் பேச்சுக்களை உரையாடலில் தோற்றுவித்திருக்கிறார். உயிருக்கு உத்தரவாதமில்லாத துரோக செய்கையை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார். இன்னும் அவரிடம் எந்த பிணையத்தில் எந்தளவு கசிவு இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் இருக்கிறதோ என்ன அச்சத்தை விதைத்திருக்கிறார். Tailored Access Operations (TAO) எனப்படும் வலையமைப்பின் முகவரிகளை வெளியிட்டால் இரான், சீனா, சிரியா போன்ற நாடுகள் விழித்துக் கொண்டு தங்கள் இணையத்தின் ஓட்டைகளை அடைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமெரிக்காவின் உளவாளிதான் ஸ்னொடெனோ என்று ரஷியாவையே சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கும் திறமை வைத்திருக்கிறார்.

ஸ்னோடெனுக்கு நன்றி!!! ஏன்?

’இனிமேல் யாருமே என்னைப் படிக்க மாட்டேங்கிறாங்க’ என்று வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் மர்மமாக கிறுக்குவதைக் கூட நிச்சயம் அமெரிக்காவும் சீனாவும் திருட்டுவாசல் வழியாக வாசித்துக் கொண்டேதான் இருக்கிறது.

வாழ்க ஸ்னோடென்!

Obamacare

1945ஆம் வருடம். முதன் முதலாக கணினிகளுக்கும் பூச்சிகளுக்குமான தொடர்பு அப்பொழுதுதான் ஆரம்பித்தது. இப்பொழுது ஒபாமா நலத் திட்டத்திற்கான வலையகப் வழுக்கள் போல் இல்லாமல் அசல் பூச்சி. ஹார்வார்ட் மார்க் IIக்குள் விட்டில் பூச்சி விழுந்துவிட்டது. அடித்துத் தூக்கிப் போட்டார்கள். அந்தக் கணினியில் வெறும் கூட்டலும் கழித்தலும் மட்டும் நடந்தது.

இன்றைய கணினிகளும் அதனுள் இயங்கும் மென்பொருள்களும் காரையே ஓட்டுகின்றன. இரண்டு இலட்சம் டொயோட்டா பிரையஸ் கார்களை 2005ஆம் வருடம் திரும்ப அழைத்தார்கள். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி திடீரென்று சாலை நடுவில் நின்றுவிடும். அபாய விளக்கு தடாலடியாக அலறும். ஏனென்று ஆராய்ந்து பார்த்ததில் சொவ்வறை மூலக்கூறில் ஏதோ பிழை எனக் கண்டுபிடித்தார்கள்.

அது நடந்து பத்தாண்டு ஆகி விட்டதே… இன்றாவது கார்களில் மென்பொருள் பிரச்சினை தீர்க்கப்பட்டு பிடித்த பீடைகள் விட்டிருக்கும் என்று நினைப்போம். ஆனால், 2014 ஜீப் கிராண்ட் செரோக்கீ கூட இதே அபாய விளக்கு மென்பொருள் பிரச்சினையால் பிரேக் பிடிக்காமல் ஓடுகிறது என ஒரு லட்சம் கார்களை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி கார் நிறுவனங்களுக்கு எல்லாம் கழுத்தில் கத்தி என ஒன்றும் கிடையாது. இத்தனாம் தேதிக்குள் வேலையை முடித்து மொத்தமாக மென்பொருளை முழுமையாகத் தந்துவிடவேண்டும் என நிர்ப்பந்தம் கிடையாது. இந்த மாதம் முடிக்காவிட்டால், அடுத்த மாதம். அடுத்த மாதமும் இயலாவிட்டால், அடுத்த வருடம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகலாம். கெடு விதிக்காமல், அட்டவணை போட்டு, தேதிவாரியாக மென்பொருள் வெளியிடாமல் இருப்பது ரொம்ப வசதியான விஷயம்.

என்னைப் போன்ற சோம்பேறிகளும் கணினித்துறையில் பொட்டி தட்டுவது இந்த மாதிரி கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால்தான். கெடு வைப்பதால்தான் மென்பொருள் கெடுகிறது எனலாம். எனவே, தவணை முறையில் வாய்தா வாங்கி மென்பொருள் வெளியிடுவது பரவலான வழக்கம்.

ஆனால், ஒபாமா நலத்திட்ட வெளியீட்டில் இலக்கு தெள்ளத்தெளிவாக இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். டிசம்பர் பதினந்து முதல் இன்னும் பல வசதிகள் வேண்டும். மார்ச்சில் மொத்தமும் முடித்திருக்க வேண்டும். கால தேச வர்த்தமானப்படி சொவ்வறை செயலாளர்கள் சௌகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையில்லா கெடு வைக்கப்பட்ட திட்டம். கழுத்திற்கு மேல் கத்தி தொங்கும் கம்பி மேல் நடக்கும் திட்டம்.

கொஞ்சமாய் சறுக்கியிருக்கிறது. ஆனால், மிடையத்தால் ஊதிப் பெருக்கியிருக்கிறது.

இந்த மாதிரி சறுக்கல்களால் மட்டும், ஆண்டொன்றுக்கு அறுபது பில்லியன் டாலர்களை அமெரிக்கா இழப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்வதற்கு ஒரு வினாடிக்கு பதிலாக ஒன்றரைக்கால் வினாடி எடுத்துக் கொண்டால் ஒரு மில்லியன் கோவிந்தா ஆகியிருக்கும். அந்த மாதிரிப் பிழைகளும் இதில் அடக்கம்.

ஒழுங்காக சோதனை செய்தாலே இந்த சேதத்தைப் பாதியாகக் குறைத்து விடலாம் என்கிறார்கள். ஒரே சமயத்தில் பலரும் சொவ்வறையை உபயோகிப்பது, பலவிதமானவர்கள் பல்வேறு கோணங்களில் சொவ்வறையை அணுகுவது, கணினி மென்பொருளாளர்களே சொவ்வறையை சோதிப்பது… இந்த மாதிரி விதவிதமான ஆழம் பார்த்தல்களில் பலதையும் ஒபாமா நலத்திட்ட வலையகம் செயல்படுத்தவில்லை.

செயல்படுத்தாதற்கு முக்கிய காரணம்… ரவி நடராஜனைக் கேட்டால் “எல்லாம் நேரம்தான்!” (http://solvanam.com/?p=29369) என்பார்.

கணினியில் முக்கோணம் ரொம்பப் புகழ்பெற்றது. நேரமா? பொருளா? தரமா? (சரஸ்வதி சபதத்தின் “கல்வியா செல்வமா வீரமா” மெட்டில் சிவாஜி போல் பாடிக் கொள்ளவும்.)

தரமான மென்பொருள் வேண்டும். குறைந்த பொருட்செலவில் தயாராக வேண்டும். சீக்கிரமே உபயோகத்திற்கு வரவேண்டும். மூன்றும் உங்களால் பெற முடியாது.

தரமும் நேரமும் முக்கியம் என்றால் பெரும் பணம் வேண்டும். அமெரிக்க அரசாங்கமோ அஞ்சுக்கும் பத்துக்கும் பொக்கீடு பற்றாக்குறையால் திவாலாகும் அபாயத்துடன் இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களால் கோடி கோடியாக அள்ளிவீச முடியாது.

எனவே, குறைந்த டாலரைக் கொண்டு, அதைவிடக் குறைந்த நேரத்தில் மென்பொருளைத் தயார் சொல்லக் கேட்கிறார்கள். தரம் அடிவாங்குகிறது.

அப்படி என்னதான் ஒபாமா சேமநலத்திட்ட தளத்தின் தரப் பிரச்சினைகள்?

ஆப்பிள்.காம் சென்று ஐபாட் வாங்குகிறீர்கள் என்றால், மொத்தக் கட்டுப்பாடும் ஆப்பிள்.காம் தளத்திடமே கைவசம் இருக்கிறது. அமேசான்.காம் சென்று மேய்கிறீர்கள், மொத்த அமேசான்.காம் வலையகமும் ஒரு நிறுவனத்தின் குடையின் கீழ் இயங்குகிறது. ஆனால், ஒபாமா நலத்திட்டம் அப்படிப்பட்டதல்ல. பல்வேறு சேமநலத் திட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள். ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் விதவிதமான மென்பொருள் கொண்டு இயங்கும். அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்கிறார்கள்.

உங்களின் சமூக நல அட்டை எண் கொடுத்தால் அந்தத் துறையுடன் கைகொடுத்து சரி பார்க்க வேண்டும். ஒழுங்காக வரி கட்டுகிறீர்களா என்று நிதித்துறையோடு பின்னணியில் பேச வேண்டும். இதனுடன் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களுக்கு ஏற்ற உள்ளூர் சட்டதிட்டங்களின்படியும் சில நெளிவு சுளிவுகளை வைக்கிறார்கள். இவ்வளவு இணைவுகளை ஒரே இடத்தில் தொகுத்து வைப்பதால் தளம் மெதுவாக இயங்குகிறது.

இரண்டாவதாக இத்தனை பேர் வந்து சேருவார்கள் என்று அரசாங்கமே எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஆயிரம் பேர் வேடிக்கை பார்க்க வருவார்கள். நூறு பேர் இணைவார்கள் என கணித்திருந்தது. ஆனால், கோடிக்கணக்கில் வருகையாளர்கள். இலட்சக்கணக்கில் பதிகிறவர்கள் என்று திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

ஏன்?

பல தனியார் நிறுவனங்கள் தங்களின் சேமநலத் திட்டத்தைக் கைவிடுகின்றன. ஒபாமா நலத்திட்டத்தை நோக்கி கை காட்டத் துவங்கியுள்ளன. இதை அரசு எதிர்பார்க்கவில்லை. இந்த நிறுவனங்கள் தங்களின் பழைய காப்பீட்டையேத் தொடரும் என எண்ணியிருந்தார்கள். ஆனால், அதை விட அரசுத்திட்டம் மலிவாக இருப்பதால், அடுத்த வருடம் முதல் ஒபாமா காப்பீடு என மாற்றிக் கொண்டதால் எதிர்பாராத தள்ளுமுள்ளு கூட்டம் எகிறியது.

கடைசியாக ஒபாமா நலத்திட்டத்தின் தேவைகள் மாறிக் கொண்டேயிருந்தன. அமெரிக்க காங்கிரஸ் தன்னிச்சையாக சில ஷரத்துகளை மாற்றின. மாகாணங்கள் புதிய விதிகளை நுழைத்தன. ஒபாமா அரசும் அவர்களின் அபிலாஷைப்படி புதிது புதிதாக வழிமுறைகளை நுழைத்தன. கணினி மென்பொருள் எழுதுபவனாக இருக்கும் எனக்கு பிடிக்கவே பிடிக்காத வார்த்தை; “நீ எழுதினது நேற்று சரி. ஆனால், இன்றைக்கு எங்களின் தேவை இப்படி இருக்கிறது”, என முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது. ‘ஒரு தடவை ஸ்திரமாகச் சொல்லு… அதற்கப்புறம் பேச்சை மாற்றாதே’ என்போம்.

இதெல்லாம் ஒபாமா நலத்திட்ட வலையகத்திற்கே உரிய பிரத்தியேகமான பிரச்சினைகளா என்றால், ”சர்வ நிச்சயமாக இல்லை” என்பதுதான் பதில்.

மாற்றங்களுக்குத் தக்கபடி மென்பொருளை வடிவமைக்க வேண்டும் என்பது பாலபாடம். சொல்லப்போனால், வாடிக்கையாளரிடம் மென்பொருளைக் கொடுத்தபின் மட்டுமே முழு தேவைப் பட்டியலும் நமக்குப் புரியும். அதை மனதில் வைத்தே ஒவ்வொரு அடுக்குகளையும் எளிதில் விலக்கி புதியதை சொருகும்படி அமைக்கிறோம்.

வலையகத்தை முழுக்க முழுக்க நிறுவனத்திற்குள் பூட்டி வைக்காமல், அமேசான் மேகத்திலும் மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் தளங்களிலும் உலவவிடுவதன் மூலம் அதிரடியாக வாடிக்கையாளர் பெருகுவதை சமாளிக்கிறோம்.

ஒபாமா நலத்திட்ட வடிவமைப்பாளர்கள் இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள்?

புதிய மென்பொருள் நிரலாளர்களை சேர்த்திருக்கிறார்கள். வேறு வடிவமைப்பாளர்களையும் கணினிக் கட்டுமான வல்லுநர்களையும் திட்டத்தில் போடுகிறார்கள். கணித்துறையில் புகழ்பெற்ற மொழி:

“ஒன்பதரைப் பெண்களைக் கொண்டு வந்தால் ஒரு மாதத்தில் குழந்தையைப் பெற்றுவிட முடியாது. ஒரு பெண் ஒன்பரை மாதம் சுமந்தால் மட்டுமே குழந்தை பிரசவிக்கும்.”

ஜனவரி மாதம் சிஸேரியனா, சுகப்பிரசவமா எனத் தெரிந்துவிடும்.

 

 

 

 
http://www.cse.lehigh.edu/~gtan/bug/softwarebug.html

http://www.wired.com/software/coolapps/news/2005/11/69355?currentPage=all

Tesla

எந்தக் காரிலும் இல்லாத ஒன்று…

உங்களின் மாருதி கார் விபத்திற்குள்ளாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போனால் போகிறது என்று மாருதியின் சல்லிசான விலைக்காகவாவது அதே காரை மறுபடி வாங்குவீர்கள். அதே மாருதி ஒரு மிகச் சிறிய சாலை உரசலுக்குப் பின் எரிந்து போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே காரை மறுபடி வாங்குவீர்களா?

ஹுண்டாய்க்கோ ஹோண்டாவிற்கோ மாறிவிடுவது மனித குணம்.

ஆனால், எண்பதாயிரம் டாலர் (கிட்டத்தட்ட ஐம்பத்தி ஒன்று இலட்சம் ரூபாய்) பெறுமானமுள்ள கார் எரிந்து போனாலும், அதையே மறுபடி வாங்குவேன் என்கிறார் மேரிலாந்து டாக்டர். இது ‘டெஸ்லா’ நிறுவனத்தின் மின்சாரக் கார். உலகின் விலையுயர்ந்த கார் ஓடினாலும் செய்தி… எரிந்தாலும் செய்தி என்பதாக இந்த விபத்து நிகழ்ச்சி யூட்யூபில் விழியமாகப் பகிரப்பட்டு பரவலாக பேசப்பட்டு பார்க்கப்பட்டது. (http://www.youtube.com/watch?v=q0kjI08n4fg) இந்த மாதத்தில் மட்டும் மூன்று கார்கள் எரிந்துபோனது. எல்லாமே எங்கோ இடிபட்டு, மரத்தில் மோதி, சுவற்றில் சிராய்த்து ஏற்பட்டதால் உண்டான பூர்ணாஹுதிகள்.

விமானங்கள் அடிபட்டு மக்கள் இறந்தால் முக்கிய செய்தி. இந்த மாதிரி சின்னச் சின்ன சில்லறைக் காயங்கள் எல்லாம் எப்படி முக்கியத்துவம் ஆகிறது?

“ஆதாரமற்ற பொருளாதாரம்” (http://solvanam.com/?series=economy_finance_debt_gdp_budget_loans_interest) என்பார் விக்கி. இந்த செய்திகளால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகிதம் சரிந்திருக்கிறது. சந்தைமுதலில் (market capitalization) நான்கு பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த வருட ஆரம்பத்தில் டெஸ்லாவின் மொத்த சந்தைமுதலே நான்கு பில்லியனாகத்தான் இருந்தது.

நான்கு பில்லியனில் வருடத்தைத் துவக்கிய நிறுவனம் எப்படி ஆறு மடங்காக (600% !!!) வளர்ச்சி கண்டு 24 பில்லியனைத் தொட்டது?

மாயம் ஒன்றுமில்லை. அதன் முதலாளி இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் எலொன் மஸ்க். இவர் பேபால் (PayPal) ஆரம்பித்தவர். அதை ஒன்றரை பில்லியன் டாலருக்கு விற்றவர். விற்ற கையோடு மண்ணிலிருந்து வான்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லும் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) துவங்கினார். கூடவே டெஸ்லாவும் தொடங்கினார். வேகமாக காரை ஓட்டுபவர்களும் இளமையான காரை வேண்டுபவர்களும் விரும்பும் ரோட்ஸ்டர் (Roadster) காரை உருவாக்கினார். அதன் அடுத்த தலைமுறையாக மாடல் எஸ் (Model S) உருவாகி இருக்கிறது.

மற்ற புதுக்கார்களுக்கும் இந்த டெஸ்லா காருக்கும் என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு வருடமும் புது ரக கார்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்கிறார்கள். ஆனால், அவை எல்லாமே சென்ற வருடத்தின் பழுதுகளை நீக்கி கொஞ்சம் புது கணினி உள்ளே போட்ட கார்கள். அடியில் இருந்து முடி வரை புத்தம்புதிதாக கார் கண்டுபிடித்து கல்ப காலம் ஆகி விட்டது. டெஸ்லா இவற்றில் இருந்து மாறுபடுகிறது. 93% புத்துருக்கோடு உருவானது.

புதுசு கண்ணா புதுசு இருக்கட்டும்… ஐம்பது இலட்சம் செலவழிக்க வெகுமதியானதுதானா?

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினி இருநூறு டாலருக்கு கிடைக்கிறது. ஆனால், ஆப்பிள் மெகிண்டாஷை எந்த மடையராவது இரண்டாயிரத்து ஐநூறு டாலர் செலவழித்து வாங்குவாரா!? அந்த மாதிரிதான் டெஸ்லா கார்.

காரின் முகப்பில் இருக்கும் மூடியைத் திறந்து பார்த்திருக்கிறீர்களா? உள்ளே மகிழுந்தின் இரண்டாயிரத்தி முன்னூற்றி எழுபத்தி நான்கு உதிரி பாகங்கள் இருக்கும். அவை எல்லாம் எங்கெங்கோ இணைக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் பொறி இயக்கும். புகை வரும். ஆங்காங்கே சுடும். எப்படி இதை ஓட்டுகிறோம் என்று கலக்கம் தோன்றி குதிரை காலம் மீது ஏக்கம் கலந்த பாசம் உதிக்கும். டெஸ்லாவின் முன்பக்கத்தை திறந்தால் உங்கள் பெட்டி படுக்கைகளை வைத்துக் கொள்ளலாம். நாய்க்குட்டியையோ கள்ளக்கடத்தலையோ ஒளிக்கலாம். நிஜமாகவே விஸ்தீரமான மேல்விதானம். பின்புறத்திலும் பொதி சுமக்கும் கீழ்விதானம்.

இவை எல்லாவற்றையும் விட வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டாம். வண்டியைக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்திவிட்டால் போதுமானது. அதுவே போய் சொருகிக் கொண்டு மின்சாரத்தை வேண்டிய மட்டுமே இழுத்துக் கொண்டு தன்னுடைய மின்கலங்களை ரொப்பிக் கொண்டுவிடும். ஒரு தடவை நிரம்பிய மின்கலம் கொண்டு முன்னூறு மைல் (ஐநூறு கிலோமீட்டர்) செல்லலாம். அதன் பிறகு மாற்று மின்கலம் போட ஒன்றரை நிமிடங்களே எடுக்கும். அல்லது ஓய்விடத்தில் மறுபடியும் மின்கலத்திற்கு மின்சாரம் காட்டலாம்.

மின்விசையில் செல்லும் கார் ஒன்றும் அமெரிக்காவிற்கு புதிது இல்லை. இதற்கு முன்பே நிஸ்ஸான், செவ்ரொலே போன்ற பல நிறுவனங்கள் மின்னூட்டத்தில் உயிர் பெற்று ஓடும் கார்களை உற்பத்தி செய்கின்றன. மற்ற நிறுவனங்கள் எல்லாம் ஒரு பெரிய மின்கலனை வைத்துக் கொண்டு அதில் சக்தி பெற்று ஓடுகின்றன. ஆனால், டெஸ்லா கார், ஏழாயிரம் லித்தியம் மின்கலஅடுக்குகளைக் (lithium-ion batteries) கொண்டு காரை நகர்த்துகிறது.

புதிய மின்கலன் கண்டுபிடிப்பது சிரமம் ஆனது. அதிலும் கார் போன்ற பெரிய யானையை நகர்த்துவதற்கான சக்தி கிடைக்க செய்வது அதனினும் சிரமம் ஆனது. அவ்வளவு பெரிய மின்கலனிற்கு சிறிய காரில் இடம் கண்டுபிடித்து அடக்குவது அதனினும் சிரமமோ சிரமம். இங்குதான் பெரிய நிறுவனங்களான ஃபோர்டும் டொயோட்டாவும் சறுக்குகிறது.

மின்கலன் கண்டுபிடிக்க டெஸ்லா ரொம்ப சிரமப்படவில்லை. ஏற்கனவே பரவலாக இருந்த லித்தியம் அயனியை கையில் எடுக்கிறது. “நான் ஒரு தடவ சொன்னா…” மாதிரி ஏழாயிரம் லித்தியம் மின்கலங்களை ஒரே இடத்தில் எந்திரமயமாக இணைக்கிறது. காசு அதிகம் இல்லாத லித்தியம். எளிதில் புழங்கும் லித்தியம். ஏற்கனவே புகழ்பெற்ற லித்தியம். எல்லோருடைய மடிக்கணினியிலும் இருக்கும் லித்தியம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. அருகருகே லித்தியம் மின்கலங்களை அடுக்கும்போது தீப்பிடிக்கும் ஆபத்து வருகிறது.

இதனால்தான் இந்த மாதத்தின் மூன்று விபத்துகளும் பங்குச்சந்தையை அச்சமுற வைத்திருக்கிறது. எப்படி இந்த நெருப்புகள் உருவாகின என்று அமெரிக்க அரசும் விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் இவற்றை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்கிறது. அதனால், விலாவாரியான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், காரின் அடிப்பாகத்தில் ஏழாயிரம் லித்தியம் அடுக்குகள் இருக்கின்றன. அதில் கீறல் விழுகிறது. பேட்டரியின்மீது சாலையின் கீழே இருந்த குப்பை உலோகத் துண்டு ஓட்டை போட, அதன்மூலம் ஜ்வாலை ஏற்படுகிறது.

இதை டெஸ்லா சோதிக்கவில்லையா?

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அடியிலும் கடுமையான பாதுகாப்பு பரீட்சார்த்தங்கள் செய்கிறார்கள். இந்த விபத்துகளில் கூட எந்தவிதமான உயிர் இழப்பும் ஏற்படவில்லை. பேட்டரியில் ஓட்டை விழுந்த உடனேயே கம்ப்யூட்டர் திரையில் அபாய விளக்கு எரிந்திருக்கிறது. ஓட்டுநரை ஓரங்கட்ட சொல்லி இருக்கிறது. அவரும் காரை ஒதுக்குப் புறமாக நிறுத்தி, அதனுள்ளே இருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு தள்ளி நின்றபின்பே புகைய ஆரம்பித்து இருக்கிறது.

என் வீட்டு வாசலில் சும்மா நிறுத்தியிருந்த ஃபோர்ட் கார் சில ஆண்டுகள் முன்பு தானே தீப்பற்றி எரிந்து போனது. ஃபோர்ட் கார் நிறுவனத்தை அழைத்தபோது, ரொம்ப சகஜமாக, “ஆமாம்… அந்த வருடத்து மாடலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. உங்கள் இன்ஷூரன்ஸிடம் பேசிக் கொள்ளுங்கள்” என கத்தரித்து விட்டார்கள். ஆனால், டெஸ்லாவில் எரிந்து போன காருக்கு பதில் புதிய காரையும் கொடுத்துவிடுகிறார்கள்.

இந்த மாதிரி இராஜ உபசாரம் டெஸ்லா வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது. நமது கைபேசிக்கும் ஸ்லேட்டு கணினிக்கும் புதிது புதிதாக நிரலிகளை தரவிறக்குவது போல் டெஸ்லா காருக்கும் நாளொரு அப்ளிகேஷனும் பொழுதொரு நிரல்துண்டும் (widgets) போடலாம்.

மற்ற கார்களைப் போல் டெஸ்லாவில் எந்தவிதமான திருகல்களும் ரேடியோ பொத்தான்களும் குளிரூட்டுவதற்கான விசைகளும் கிடையாது. உங்கள் கணித்திரை போல் பதினேழு இன்ச்சில் பெரிய வெள்ளித்திரை. அதோடு ஐபோன் சிரி போல் பேசலாம். “தேவா இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்களைப் போடு” எனலாம். ”எழுபத்திரண்டு டிகிரி வை” என கட்டளை இடலாம். “போலீஸ் மாமா ரேடாரில் வேவு பார்க்கிறார்” என்பதை அறிந்து பம்மலாம். சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்கலாம். அப்படி தவிர்க்க இயலாமல் மாட்டிக் கொண்டால் தி ஹிந்து பேப்பரை வாசிக்கலாம். தானியங்கியாக வாசிக்க சொல்லி கேட்கலாம்.

இந்த வருடம் மட்டும் இருபதாயிரம் டெஸ்லா கார்கள் விற்கும். ஒரு ஒப்புமைக்கு மாஸ்டா (Mazda) நிறுவனம், ஒன்றேகால் மில்லியன் கார்களை ஆண்டுதோறும் விற்கிறது. ஆனால், பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தை மாஸ்டா-வை விட அதிகமாக மதிப்பிடுகிறார்கள்.

ஏன்?

டெஸ்லா என்பது கார் நிறுவனம் மட்டுமல்ல. இந்தியன் ஆயில், எக்ஸான் மோபில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மாதிரி அது எரிசக்தி நிறுவனமும் கூட. இவர்களின் மின்கலன் வடிவமைப்பை தங்கள் கார்களில் பயன்படுத்திக் கொள்ள பலரும் போட்டி போடுகிறார்கள். பென்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அனைத்து மகிழுந்து நிறுவனங்களும் டெஸ்லாவின் மின்கலன் நுட்பத்தை உபயோகிப்பார்கள்.

மற்ற மின்கல வடிவமைப்பாளர்கள் எல்லோருமே மண்ணைக் கவ்விவிட்டார்கள். ஏப்ரலில் ஃபிஸ்கர் (Fisker) நிறுவனம் மஞ்சக் கடுதாசி தந்தது. டெஸ்லாவைப் போலே நஷ்டத்திற்கு காரை விற்ற நிறுவனம். ஆனால், டெஸ்லாவைப் போல் சரியான சமயத்தில் இலாபம் காட்டாமல், திவாலாகிப் போனது.

டெஸ்லா நிறுவனத்தைப் போலவே பெட்டர் ப்ளேஸ் (Better Place)ம் மின்கலன் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. நெடுந்தூரம் செல்லும்போது ஓரிரு மணித்தியாலங்கள் காத்திருந்து மின்கலங்களை உயிரூட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவே, மின்னூட்டம் இல்லாத மின்கலத்தை அகற்றி விட்டு, மின்னேற்றப்பட்ட மின்கலத்தை அந்த இடத்தில் போட்டு, ஓட்டுநரை அனுப்பி வைப்போம். அதன் பின் வேறொருவருக்கு உங்கள் மின்கலத்தை பொருத்துவது. மின்கலம் எதுவாக இருந்தால் என்ன… நமக்குத் தேவை மின்னேற்றம் நிறைந்த பயணம். இதையேதான் டெஸ்லா இப்பொழுது அறிமுகம் செய்கிறது.

அவர்களிடம் எல்லாம் இல்லாத எது டெஸ்லாவிடம் இருக்கிறது?

முதலில் செய்து முடிக்கும் திறனை முடுக்கி விடும் எலொன் மஸ்க். அடுத்ததாக அவர் கொடுக்கும் விட்டமின் சி – பணம். கடைசியாக கார் பந்தாவாக தோற்றமளிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்க பிரபலங்களான ஜே லீனோ முதல் வில் ஸ்மித் வரை வாங்கித் தள்ளும் மோக வேகம்.

எல்லோரும் டெஸ்லா வைத்திருக்கிறார்களே… நமக்கென்று தனித்துவம் வேண்டும் என ஏங்கும் ஆசாமியா நீங்கள்? உங்களுக்கு 1963ஆம் வருடத்தின் ஃபெராரி ஜி.டி.ஓ.வை பரிந்துரைக்கிறேன். விலை அதிகமில்லை. வெறும் 52 மில்லியன் மட்டுமே! (http://www.bloomberg.com/news/2013-10-02/ferrari-gto-becomes-most-expensive-car-at-52-million.html)

Google vs Oracle – Java x Darvik

உங்களிடம் சிகை அலங்காரம் செய்யும் பணியை திட்டமிடச் சொல்கிறார்கள். எப்படி அடியெடுத்து வைப்பீர்கள்? குறைவான தலைமுடி கொண்டோருக்கு சீப்பு மட்டும் போதுமானது என்பீர்கள்; நீண்ட முடி விரும்புவோருக்கு சவுரி பொருத்துதலை பரிந்துரைப்பீர்கள்; ஆங்காங்கே அலங்காரமாக நிற்க வைக்க க்ளிப்புகள் கொடுப்பீர்கள்; சிடுக்கெடுக்க இன்னொரு விதமான சீப்பு; கோர்வையாக வார இன்னொரு சீப்பு என பலவிதமாகத் திட்டமீடுவீர்கள்.

கூகுளும் (Google) இப்படித்தான் திட்டம் தீட்டியது. ஆனால், சீப்பைக் கண்டுபிடித்ததே நானாக்கும், டோப்பா மயிரை உருவாக்கியதே நாங்களாக்கும் என நீதிமன்றத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மல்லுக்கட்டியது.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக கீழ் நீதிமன்றத்தில் கூகுளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்திருந்தது. இரு வாரம் முன்பு மேல் முறையீட்டில் ஆரக்கிளுக்கு சார்பாக தீர்ப்புக் கிடைத்துள்ளது.

கார்ல் சாகன் சொன்ன மேற்கோளை முன்வைத்து இந்தப் பிரச்சினையை ஆராயத் துவங்கலாம்: “If you wish to make an apple pie from scratch, you must first invent the universe.” (ஆப்பிள் அல்வாவை ஆதியில் இருந்து செய்ய வேண்டுமானால், முதலில் நீங்கள் அகிலத்தைக் கண்டுபிடிப்பதில்தான் ஆரம்பிக்க வேண்டும்.)

ஜாவா என்னும் நுட்பம் இருபதாண்டு காலமாக இருக்கிறது. ஜாவா என்பது கணிமொழி. என்ன மாதிரி கட்டளைகள் சொன்னால், கணினி எப்படி இயங்கும் என்று சங்கேதமாக கணினியோடு உரையாடும் மொழி. அதே ஜாவா கொண்டு, தொலைக்காட்சியை இயக்கலாம். அதற்கு தனியாகக் கட்டளைகள் உண்டு. இந்த மாதிரி உபரி கட்டளைகளும் ஜாவா மொழியில் உள்ளடங்கியே இருக்கின்றன. துவக்கத்தில் அ,ஆ,இ,ஈ எனப் பயில ஆரம்பிக்கலாம். நாளடைவில் விருத்தம் பாடுமாறு வளர்ச்சி அடைந்துவிட்டால், செல்பேசியோடு பேசும் ஜாவா, இரகசியமாக சங்கேதமொழியில் பேசும் ஜாவா எனப் புலவராகலாம். வெண்பா இயற்றும் வல்லுநராகிவிட்டால், திரைப்படம் எடுக்கும் அனிமேஷன் மாயாஜால ஜாவா கொண்டு வித்தகராகிவிடலாம்.

கடந்த இருபதாண்டு காலத்தில் கணித்துறை எங்கெல்லாம் கால் பதித்ததோ, அங்கெல்லாம் ஜாவா மொழியும் சென்றிருக்கிறது. ஃப்ரிட்ஜ்ஜில் துவங்கி இசைக்கருவிகளின் நுட்பம் தொட்டு விண்கலன் வரை எங்கும் வியாபித்திருக்கிரது ஜாவா மொழி. அவை எல்லாவற்றையும் திறமூலமாக்கி, எல்லோருக்கும் பயன்படுமாறு இலவசமாக விநியோகிக்கப்படும் மொழியாக ஜாவா இருக்கிறது.

அதெல்லாம் 2006-07 காலகட்டம். பன்னெடுங்காலமாக திறவூற்றுப் பயனாளர்களுக்கும், இலவசமாக மென்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கும் ஜாவாவும், ஜாவா சார்ந்த நிரலிகளும் வரப்பிரசாதமாக இருந்தது. மைக்ரோசாஃப்டுக்கு எதிராக மல்லுக்கட்டுவோர் எவராக இருந்தாலும் ஜாவா பக்கம் சாய்ந்தனர். எவருக்கெல்லாம் விண்டோஸின் கெடுபிடியான உரிமங்களும் ஆப்பிள் மெக்கிண்டாஷ் கேட்கும் அடாவடி விலைகளும் ரசிக்கவில்லையோ, அவர்கள் எல்லோரும் ஜாவா பக்கம் நின்றனர்.

ஜாவா எப்படி எழுதப்பட்டது என்பதும் ஜாவா எப்படி உருவாக்குவது என்பதும் திறந்த ரகசியமாக, எல்லோரும் அணுகும் விதத்தில் இணையத்தில் கட்டுப்பாடற்றுக் கிடந்தது.

அதைப் பயன்படுத்துவோருக்கு இரண்டு நிபந்தனை மட்டும் வைக்கப்பட்டது.

1. ஜாவா-வின் மூலத்தை அப்படியே லபக்கி, இன்னொரு பெயரில் விற்கக்கூடாது.
2. ஜாவா என்று சொல்லி எதையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்து போங்காட்டம் கூடாது. அதன்கூட லாகிரி வஸ்துக்கள் சேர்த்தீர்கள் என்றால் தீட்டு; ஜாவா மூலத்தில் இருந்து சிலதை நீக்கினாலும் அபச்சாரம்.

இந்த இரண்டு நிபந்தனைகளுமே முக்கியமானது.

இலவசியமாக இணையத்தில் கிடைப்பதை, தனி நிறுவன லாபத்திற்காக மறுசுழற்சி செய்யக் கூடாது என்பது முதல் விதி. அதாவாது, ஜாவா உடன் இணைந்து உங்கள் மென்பொருள் இயங்கலாம். தமிழில் தட்டச்ச ஜாவா உதவியுடன் நீங்கள் நிரலி எழுதி விற்கலாம். தப்பே கிடையாது. ஆனால், வெறுமனே ஜாவா நிரலியை எடுத்து “பாவ்லா” எனப் பெயர் மாற்றி விற்கக் கூடாது.

இரண்டாவது தற்காப்புக் கவசம் போல் ஜாவா மொழியைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. அதாவது, ரஜினி பெயரை வைத்து, அவரின் முகமொழியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மட்டுமே “கோச்சடையான்” எடுக்க முடியும். அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும், அந்த உரிமையை ரஜினி மட்டுமே தன்னுடையப் பிரியப்பட்டோருக்குத் தர இயலும். நானோ, அல்லது கமல்ஹாசனோ ரஜினியை வில்லனாக சித்தரித்து காமெடியனாக்க உரிமை கிடையாது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாவா நசுக்கல் சக்திகளிடமிருந்து மொழியைக் காப்பாற்ற இயலும்.

செல்பேசிகளை இயக்க தன்னுடைய ஆண்ட்ராய்ட் நிரலிக்கு ஜாவா போன்ற மொழியை கூகுள் தேர்ந்தெடுத்தது. பார்ப்பதற்கு ஜாவா போலவேத் தோற்றமளிக்கும். இயங்குவதற்கு ஜாவா போலவே இருக்கும். ஜாவா பயன்படுத்தினோருக்கு ஆண்டிராயிடின் டால்விக் (Dalvik) புழங்குவதில் சிரமமே இருக்காது. ஆனால், அதன் பெயர் ஜாவா இல்லை. டால்விக்; ஆண்டிராய்ட் (Android) வழங்கும் டால்விக்.

2006ல் இதை கூகுள் அறிமுகம் செய்கிறது. ஜாவா-வின் அன்றைய எஜமானரான “சன் (Sun) மைக்ரோசிஸ்ட”மும் இதை இரு கை தட்டி கரகோஷம் எழுப்பி வரவேற்கிறது. ‘இத…. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்! ஜாவா மொழி போல் ஆயிரம் மொழிகள் பூக்க வேண்டும். அவற்றில் எது வேகமாக இயங்குகிறதோ, எது பரவலாகக் கிடைக்கிறதோ, எது எளிதாக உபயோகமாகிறதோ… தொழிலுக்கேற்ற மாதிரி வித்தியாசப்படுத்திக்கணும்!’ என்கிறார் ஜாவா முதலாளி ஜொனாதன் ஷ்வார்ஸ்.

இரண்டாண்டுகள் செல்கின்றன. ஜாவா கைமாறுகிறது. இப்பொழுது ஆரக்கிள் நிறுவனம் வசம் ஜாவா இருக்கிறது.

திறமூலம் மெல்ல மெல்ல நிர்மூலமாகிறது. புதிய ஷரத்துகளின்படி ஜாவா மொழியை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மாறுகிறது. சும்மா வேடிக்கை பார்த்தால்… சரி. ஆனால், ஜாவா போல் எதுனாச்சும் இயங்கினால், எங்களின் ஆசி உங்களுக்குத் தேவை என செல்லமாக மிரட்டும் மொழி.

மேலும் வக்கீல் படையே ஆரக்கிள் வைத்திருக்கிறது. எங்கே, எவன் கிடைப்பான் என நாளொரு வழக்கும் பொழுதொரு கேஸுமாக ஜெயிப்பது ஆரக்கிளுக்கு கை வந்த கலை.

இதுவரை ஆண்டிராய்ட் டால்விக்-கிற்கும் ஜாவா-விற்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது என கற்பூரம் அடித்து பொதுவில் சத்தியம் செய்த கூகுள் மேலாளர்களின் தொனியும் மாறுகிறது. ஆரக்கிளுடைய ஜாவா மாதிரி எங்களுடைய டால்விக் இருப்பது ரொம்ப அகஸ்மாத்தானது. ஜாவா-வைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதனால், அதன் தோற்றமும் இன்ன பிறவும் டால்விக் நிரலியில் வெளிப்படலாம் என பூசி மெழுக ஆரம்பிக்கிறது கூகுள்.

இப்பொழுது அமெரிக்க வரலாறையும் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

அது 1946ஆம் வருடம். ஒன்றுக்கிருக்கும் கைக்குழந்தையின் அபிஷேகம் தன் மீது சிந்தாமலிருக்க பிளாஸ்டிக் திரைச்சீலையை எடுத்து அவசரத்திற்கு அரைக்கச்சை ஆக்குகிறார். புத்தாடையும் பாதுகாக்கப்படுகிறது. டயாப்பர் (Diaper) காப்புரிமையும் கிடைத்துவிடுகிறது. ஐந்தே ஆண்டுகளில் நியு யார்க்கின் நவநாகரிக வீதிகளிலும் வலம் வருகிறது. நூறு ரூபாய்க்கு பவுன் விற்ற அந்தக் காலத்து மதிப்பீட்டில் ஒரு மில்லியன் டாலருக்கு அந்த உரிமைக்காப்பை விற்றும் இருக்கிறார். தோய்க்கும் முறையாகட்டும்; உண்ணும் விதமாகட்டும்… அமெரிக்காவில் எதுவாக இருந்தாலும் உங்களுக்கென் ஒரு பாணி இருந்தால் அதை தனியுரிமைச் சான்றிதழ் வாங்கி காப்புரிமை பெற்றுவிட வேண்டும் என்பது மூலமந்திரம்.

”இந்தி – சீனி பாய் பாய்’” ஆக இருந்த மாதிரி ஜாவா-வை ஆரத் தழுவி ஆண்டிராட் டார்விக் உருவானது. ஜாவா மொழியில் எழுதிய எந்த நிரலியும் டார்விக் சூழலில் இயங்குமாறு கூகுள் செய்திருக்கிறது. நியாயப்படி பார்த்தால் இதற்கு ஜாவா உரிமையாளரான சன் மைக்ரோசிஸ்டத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால், அண்ணன் – தம்பியாக இருந்த அந்தக் காலத்தில் ‘பொது எதிரி மைரோசாஃப்ட்டும் விண்டோஸும் ஒழிந்தால் சரி… கூகுள் சின்னப் பயல்’ என விட்டுவிட்டார்கள்.

இப்பொழுது ஆரக்கிள் வழக்குத் தொடுத்துவிட்டது. இதுதான் ஆரக்கிளின் வாதம்: “எங்களின் ஜாவா இடைமுகம் (API) ஓவியம் போன்றது. ஒரே ஒரு பிக்காஸோதான் இருக்க முடியும். அவர் உருவாக்கியதுதான் அசல் குவர்னிகா. மற்றதெல்லாம் டூப்பு.”

கூகுளும் உவமையில் பதிலடி கொடுத்தது: “ஜாவா என்பது நூலகம். அந்த நூலகம் பாரிஸில் இருக்கலாம். லண்டனில் இருக்கலாம். கன்னிமாராவாக இருக்கலாம். எந்தப் புத்தகம் எப்படி எடுக்க வேண்டும் என்பது நூல் நிலையம் சென்ற எவருக்கும் அத்துப்படி. ஒரு துறை சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் ஒருங்கேக் கிடைக்கும். புனைவுகள் இன்னொரு பக்கம் இருக்கும். அகரவரிசைப்படி இருக்கும். இதெல்லாம் எல்லா நூலகத்திலும் ஒரே மாதிரிதான். சில நூலகத்தில் மாடியில் அபுனைவுகளும், தரைத்தளத்தில் கதைப்புத்தகங்களும் வைத்திருப்பார்கள். அப்படித்தான் நாங்கள் கொஞ்சம் மாற்றி அடுக்கி இருக்கிறோம்.”

புத்தகங்களைக் காப்புரிமை ஆக்கலாம். அதை கூகுள் மதிக்கிறது. ஆனால், புத்தகங்களை எப்படி வைத்திருக்கிறோம் என அறிவிப்பதை காப்புரிமை ஆக்க இயலாது என்கிறது கூகிள்.

அதாவது, புத்தகத்தினுள் இருக்கும் விஷயங்கள் தொழில் இரகசியங்கள். நிரலி எப்படி இயங்கும் என்பதை உணர்த்தும் சூட்சுமங்கள். அவற்றை கூகுள் சுடவில்லை. ஆனால், லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் போடும் அட்டவணை என்பது ரகசியமே அல்ல. இன்ன இன்ன களங்கள் இருக்கின்றன என்று பட்டியல் போடுவதை காப்புரிமை ஆக்க முடியாது என்கிறது.

இது இப்போதைக்கு முடியாத பில்லியன் டாலர் கணக்கு வழக்கு. இதே போல் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கும் மைக்ரோசாஃப்டிற்கும் கூட போராட்டம் நெடுங்காலமாக நீடித்து இருந்தது. அதன் முடிவில் சொன்ன தீர்ப்பு, “பிரச்சினையைத் தீர்க்க ஓரிரு பாதைகளே இருக்கும்போது, காப்புரிமையெல்லாம் செல்லுபடி ஆகாது.”

அதைவிட ஆரக்கிள் தோன்றிய கதையோடு இந்த வழக்கை முடிக்கலாம். ஆரக்கிள் என்பது உங்கள் விஷயங்களை கணினியில் நம்பகமான முறையில் சேமிக்க வைக்க உதவும் மென்பொருள். இந்த மாதிரி “தரவுதளங்கள்” இப்படித்தான் இருக்க வேண்டும்… இவ்வாறுதான் இயங்க வேண்டும்… இந்த மாதிரிதான் செயல்பட வேண்டும் என ஒவ்வொரு நுண்விவரங்களையும் பொதுவில் எழுதி வைத்தவர் “ஐ.பி.எம்.” (IBM) நிறுவனமும் அதன் டெட் காட் (Ted Codd) என்பவரும். அவர்கள் சொன்னதையும் வெளியிட்டதையும் வைத்து உருவான ஆரக்கிளே இன்று ’நான் சொன்னதை நீ எப்படி செய்யலாச்சு’ என்பது கூகுளை சாடுவதே நிரலியின் விதி.

In Our Translated World: Contemporary Global Tamil Poetry – புத்தக அறிமுகம்

எதிர் வீட்டில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கடுமையாகவே குரைப்பதாக எனக்குத் தோன்றியது. பின்னிரவில் சுவர்க்கோழிகளையும் சிள்வண்டுகளையும் மட்டுமே கேட்டுப் பழக்கமானவனுக்கு நாயின் குரைப்பு நிம்மதியை குலைத்தது. பின்னிரவில் மட்டுமல்லாமல், வீட்டில் இருந்து வேலை பார்த்த மதியங்களிலும் நாய் குரைத்துக் கொண்டிருப்பது ஓங்கி ஒலித்தது. அஞ்சல் பட்டுவாடா செய்த குட்டி லாரிகளின் சத்தத்திற்கு இடையேயும், நீர்நிலையைத் தேடி அலைந்த வாத்துகளின் சல்ம்பலுக்கு இடையேயும் நாயின் மெல்லிய ஓலம் துல்லியமாகக் கேட்டது.

அப்படி என்னதான் அந்த நாய் சொல்லிக் கொண்டிருக்கும்? வீட்டிற்குள் திருடர் நுழைந்தால் சொல்லிக் காட்ட பாதுகாப்பு அரண் இருக்கிறது. எஜமானனிடம் அன்பு தெரிவிக்க மாலை நேரம் இருக்கிறது. பசி தீர்க்க வீட்டின் பாதாள அறையின் மூலையில் உணவு வைக்கப்பட்டிருக்கிறது. உண்டதும் வெளிக்கிருக்க தினந்தோறும் அந்த நாயை ஒவ்வொரு மரத்தையும் முகர வைக்கிறார்கள். மைல்கல் போல் பாதையெங்கும் நிற்கவைக்கப்பட்டிருக்கும் நெருப்பு அணைப்பதற்கான நீர்க்குழாய்களையும் அந்த நாய் விட்டுவைப்பதில்லை. இருந்தும் அந்த அர்த்தஜாமத்தில் என்ன புலம்புகிறது என்று தெரியாமலே “நாய் வாள்வாளென்கிறது” என்று புகார் செய்ய வைத்தது.

நாய் கத்துவதில் ஒலிநயம் இருப்பதை இசையமைப்பாளர் அறிவாராக இருக்கும். அந்த நாய் எதற்காக ஊளையிடுகிறது என்பதை ஆய்வாளர் அலசுவாராக இருக்கும். அந்த நாயின் உண்ணிகளை குணமாக்க மருத்துவர் பயிற்சி பெற்றிருப்பாராய் இருக்கும். கோம்பைநாய், செந்நாய் என தரம் பிரிக்க விலங்கியலாளரால் இயலுமாக இருக்கும். எப்படி அதட்டினால், அந்த நாய் அடங்கும் என்பதை உரிமையாளர் தெரிந்திருப்பாராய் இருக்கும். ஆனால், அந்த நாயின் உணர்வைப் புரிந்துகொள்ள மிருகபாஷை தெரிய வேண்டும்.

நமக்கு அறியாத மொழியில் இன்னொருவர் கவித்துவமாக உண்மைகளை அறிய வைத்தாலும், அவற்றை மண்டைக்குள் ஏற்ற இயலாத குறைபாடுகளோடு நாம் இயங்குகிறோம். இந்த அவஸ்தையை மொழிபெயர்ப்புகள் ஓரளவு நிவர்த்தி செய்கின்றன. இந்த வகையில்தான் சமீபத்தில் வெளிவந்த In Our Translated World (எமது மொழிபெயர் உலகினுள்) புத்தகத்தைப் பார்க்கிறேன்.

In_Our_Translated_World_Tamil_poems_English_Collection

 

கிட்டத்தட்ட ஆங்கிலம் மட்டுமே புழக்கத்தில் உள்ள நோபல் பரிசு சமூகத்தில் வாழ்கிறேன். அலுவல் விருந்துகளில் சம்பிரதாயமான விசாரிப்புகளில் வைக்கப்படும் கேள்வி: “உங்க ஹாபி என்ன? டென்னிஸ் ஆடுவிங்களா? தோட்டம் பயிரிடுவீங்களா?”. பதிலாக – “அதெல்லாம் உண்டுதான் என்றாலும், என் தாய் மொழியில் மொழிபெயர்ப்பதும், அது சம்பந்தமாக வாசிப்பதும்” எனன கொக்கி போடுவேன். இப்பொழுது அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தையும் அதன் கவிஞர்களின் வீச்சையும் ஒரு அண்டா சோற்றுக்கு ஒரு அன்னம் பதமாக எடுத்துப் பார்ப்பது போல் இந்தப் புத்தகம் உதவும். சமகாலத்தில் உலாவும் 78 கவிஞர்களின் ஆக்கங்களை இந்த நூலில், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இன்றைய பேச்சு மொழியையோ ஃபேஸ்புக் மொழியையோ எடுத்துக் கொண்டால் ஒன்று புலப்படுகிறது. நாம் புழங்கும் இணையத்தில் ஆங்கிலம் இரண்டறக் கலந்திருக்கிறது. இலக்கியத்திற்காக தமிழும் பிழைப்பிற்காக ஆங்கிலமும் என சிலசமயம் வைத்துக் கொள்கிறேன். சிரமமான உள் உணர்வுகளை வெளிக்காட்டத் தடுமாறும்போது திடீரென்று தமிழரோடு பேசும்போது ‘எம்பாரசிங்’ என்றோ, ஆங்கிலம் மட்டுமே அறிந்த நண்பரோடு உரையாடும்போது ’தோக்கா’ என்னும் ஹிந்தி வார்த்தையும் மின்னும். இந்தப் புத்தகத்தில் வெளியான கவிதைகளில் ஆங்கிலம் கலக்கவில்லை. இந்தப் புத்தகத்தின் சிறப்பு இடது பக்கம் தமிழ்க் கவிதையும் வலப்பக்கம் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் பக்கத்து பக்கத்தில் கொடுக்கப்பட்டிருப்பது.

எட்டுத்தொகை நூலில் என்னவெல்லாம் பாடியிருக்கிறார்கள் எதைப் பற்றியெல்லாம் கவி இயற்றியிருக்கிறார்கள் என ஒரு பத்தியில் விளக்குவது எவ்வளவு மேலோட்டமாக அமையுமோ, அவ்வாறே, இந்தப் புத்தகத்தில் அமைந்த கவிதைகளையும் அதன் பரப்புகளையும் சுருக்க முடியாது. ஐநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஆராய்ந்து இதில் உள்ள கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

எம்.எல். தங்கப்பா (இந்தியா) அனுஷ்யா ராமஸ்வாமி (அமெரிக்கா) மைதிலி தயாநிதி (கனடா) ஆகியோர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கவிஞர்கள் வசிக்கும் நாடுகளின் வரிசைப்படி, கவிதைகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடும் இலங்கையும் நடுநாயகமாக நிறைய ஆக்கங்களைக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கிருந்தெல்லாம் ஒரு கவிதை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. எல்லோரைப் பற்றியும் சிறு குறிப்பு கிடைக்கிறது. அனைவரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இதற்கு முன்பு தற்கால கவிஞர்களின் சிறுபத்திரிகை கவிதைத் தொகுப்பாக “சிற்றகல்” வாசித்திருக்கிறேன். பூமா ஈஸ்வரமூர்த்தியும் லதா ராமகிருஷ்ணனும் இணைந்து 107 கவிஞர்களின் 211 கவிதைகளை அந்தப் புத்தகத்தில் தொகுத்திருக்கிறார்கள். அருந்ததி நிலையம் வெளியீட்டிருக்கிறது.

அதைக் குறித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்:

தமிழில் வெளிவரும் சிற்றிதழ்களில் எழுதப்படும் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசித்துப் பார்க்க வசதியான தொகுப்பு. ந. பிச்சமூர்த்தி, மயன் [க.நா.சு] முதலிய முதல் தலைமுறை புதுக்கவிஞர்களும் அசதா, அமிர்தம் சூர்யா போன்ற நான்காம் தலைமுறை இளைய கவிஞர்களும் இடம்பெறும் விரிவான தொகுப்பு. தொகுப்பில் தொகுப்பாளர்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. ஆனால் தமிழ்க் கவிதை இன்று எப்படி ஒரு வெற்றுக் கைப்பழக்கமாக பெரும்பாலானவர்களிடம் உள்ளது என்ற மனப்பதிவையே இது உண்மையில் உருவாக்குகிறது. தேவதேவன் போன்ற தீவிரமான கவிஞர்கள் [அவரது ஒரு கவிதைதான் உள்ளது] எழுதும் சூழலிலேயே கவிதையே அல்லாத வெற்று வரிகளை மடித்துப்போடுபவர்களும் மண்டியிருக்கிறார்கள். இத்தொகுப்பில் உள்ள பெயர்களில் முக்கால்வாசிபேரை கழித்துவிட்டால்தான் நாம் கவிதையைப்பற்றியே பேசமுடியும். என்ன நடக்கிறது இங்கே என்று காட்டும் ஒரு ஆவணம் எனலாம்.

கவிஞனின் எல்லாக் கவிதைகளும் அடங்கிய தொகுப்பு, அவரின் எழுத்தை, வயது மாற மாற… மாறும் சிந்தனைகளை, வார்த்தை தேர்வுகளை, அனுபவங்களை சொல்லும். அதே போல், சற்றேறக்குறைய ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த பற்பல கவிஞர்களின் தொகுப்பு, அந்தச் சமூகத்தின் எண்ணங்களையும் பிரச்சினைகளையும் அபிலாஷைகளையும் முன் வைக்கிறது. அதிலும், இந்தப் பற்பல கவிஞர்களின் தமிழ்மொழியை ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர் வாசிக்க வைக்குமாறு மொழிபெயர்க்க வேண்டும். சீதை என்னும் கலாச்சார அடையாளத்தை விளக்க வேண்டும்; பிரமிள் என்று கவிதையில் வருகிரது… அவர் யார் என சிறுகுறிப்பு வரைய வேண்டும். சங்கப்பாடல்களில் சரளமாக வரும் மருத நிலக்குறிப்பிட வேண்டும்; புங்குடுத்தீவை வரைபடமாக்க வேண்டும்.

இத்தனையும் இந்த ”In Our Translated World” சாதிக்கிறது. சிறு பத்திரிகைகளில் எழுதும் பலரையும் தேர்ந்தெடுத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து இருக்கிறார்கள். பெண்ணியக் கருத்துகள், புலம்பெயர்ந்தோர் கருத்துகள், மார்க்சிய சிந்தனைகள், நடைமுறைவாதிகள், வாழ்வியல் புலம்பல்கள், இயற்கை காட்சிகள் என பல்வகையும் தொகுத்து இருக்கிறா் பேராசிரியர் செல்வ கனகநாயகம். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித் துறைப் பேராசிரியராக இருப்பவரும் தெற்காசியவியல் ஆய்வு மையத்தை இயக்குபவரும் இதன் தொகுப்பாசிரியராக இருந்திருப்பது இலகுவான மொழிபெயர்ப்பிலும் தமிழ்ச்சூழலின் அத்துணை இலக்கிய தொனிகளையும் சித்தாந்தப் போக்குகளையும் கருப்பொருட்களையும் கவிதை பாணிகளையும் தொடுமாறு உருவாகியிருக்கும் புத்தகத்தை வைத்து கணிக்கலாம்.

Tamil_Literary_Garden

இவ்வளவு கவிதைகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு மிகப்பெரிய சிக்கல். தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரிடமும் அனுமதி பெறுவது அடுத்த நடைமுறை சிக்கல். அந்த ஒவ்வொரு கவிதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய மலையேறும் பணி. அந்த மொழிபெயர்ப்பை, நூல் முழுக்க ஒரே ஒடையாகவும் கொணர்ந்திருக்கிறார்கள். மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் இருந்து, ஒரு கவிதையில் இருந்து அடுத்த கவிதைக்குச் செல்லும்போது இடராமல், அதே பாணியே, ஒரே மொழி இலாவகத்தைக் கையாண்டது ஒத்திசைவான வாசிப்பனுவத்தை நல்குகிறது.

சங்கப்பாடல்களில் ஐங்குறுநூற்றில் அகவாழ்வின் ஐந்திணைகளான மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் தொகுத்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் தண்ணீரும் மின்சாரமும் இன்னபிற அத்தியாவசியங்களும் பற்றாக்குறையான தமிழ்நாட்டிலும், தாய்மண் தவிப்பில் வாழும் அயலகத் தமிழரும், சொந்த பந்தங்களைப் பிரிந்து தனியே உழைக்கும் தெற்காசியத் தமிழர்களும், வேற்றுக் கலாச்சாரத்தில் சிக்கி அடையாளமிழந்து வாழும் அமீரகத் தமிழரையும் இந்த நூலில் பார்க்கலாம். இதையே உருத்திரமூர்த்தி சேரன் பனியும் பனி சார்ந்த இடமும் என விளிக்கிறார். அதையே ”தமிழ் இலக்கியத் தோட்டம்” தொகுத்த இந்தத் தற்காலத் தமிழ்க் கவிதைத் தொகுப்பு பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது.

அமேசான் மூலமாக அச்சுப்பிரதியாகவும் கிண்டில் பிரதியாகவும் ibooks மூலமாகவும் கிடைக்கிறது: http://www.amazon.com/Our-Translated-World-Chelva-Kanaganayakam/dp/1927494362

புத்தகத்தில் இருந்து:

Torture

Tongue ripped
words mangled,
on such a day I saw
a three-winged bird in flight
carrying the language;
asserting myself
is not to deny your world;
those words are swallowed
by the unkind tongue of the wind;
This solitude and indifference
always hurting someone,
they stone the bird that
sprinkles this language
across the grey sky;
my bird
shedding one wing in the
lengthening night of autumn
knows
struggling with language
only to lose
is solitude and
torture.

இளங்கோ கவிதையின் மூலம் இங்கே கிடைக்கும்: http://djthamilan.blogspot.com/2008/05/blog-post_22.html
-பாஸ்டன் பாலா

அணிகலன் அணிவகுப்பு

பள்ளியில் படித்த எண்பதுகளில் காதலைத் துவக்குவது எளிதாக இருந்தது. எதிரில் வரும் மாணவியிடம் சென்று, “டைம் என்ன?” என்று வினவுவது கால்கோள். ரவி நடராஜன் போல் நேரம் சரியாக (http://solvanam.com/?series=time_measurement_clocks_estimates) சொன்னால், காதல் தேறாது என்றும், “ச்சீ… போ” என்றால் தனுஷ் போல் ‘பார்க்கப் பார்க்க பிடித்துப் போகலாம்’ என்னும் பிடிப்பும் தோன்றிய காலம்.

இன்றைய யுவதிகள் மணிக்கட்டில் கடியாரம் கட்டுவதில்லை. கைப்பையில் இருந்து பத்து இன்ச் அகலத்திற்குப் பெரிய பெட்டியைத் திறந்து நேரம் அறிந்து கொள்கிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் இராஜேஷ்குமார் கதைகளிலும் மட்டுமே உலவிக் கொண்டிருந்த கையளவு நுட்பங்கள் இன்று சாமனியரின் கைகளிலும் புழங்குகிறது.

சென்ற அக்டோபரில் சாம்சங் தன்னுடைய கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்தது. புதியதாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பன்னிரெண்டு வினாடிக்கொருமுறை செல்பேசியை திறந்து பார்க்க வேண்டாம். எவராவது ஃபேஸ்புக்கில் என்னுடைய பதிவை விரும்பியிருக்க்கிறாரா என சென்று போய் பார்த்து ஏமாற வேண்டாம். நிலைத்தகவல், தட்பவெட்பம், போக்குவரத்து, என எல்லாமே ஸ்டாம்ப் அளவு திரையில் அறிந்து கொள்ள முடிந்தது. கேலக்ஸி கியர் என்ற நாமத்தில் வெளியான சாதனம் முன்னூறு டாலருக்கு விற்கப்படுகிறது.

Samsung_Galaxy_Gear_Watch_Note_Tablet_Wearable

இந்த கடிகாரத்திற்கென பிரத்தியேகமான சாம்சங் உபகரணங்கள் இருக்கும். அவற்றை மட்டும்தான் பயன்படுத்தலாம் என்பது முதல் எரிச்சல். சரியான நேரத்தை காதலி சொல்லமாட்டாள் என்பது போல் வராத மின்னஞ்சலைப் பார்ப்பதற்காகத்தான் செல்பேசி என்பதை அறியாத சாம்சங் நுட்பம் இரண்டாம் எரிச்சல். என்னுடைய ஐஃபோன் போன்ற பெரும்பாலான சாதனங்கள் இதனுடன் இணைந்து ஒத்துழைக்காது என்பதும் மின்னஞ்சலை எவர் அனுப்பித்தார் என்று முன்னோட்டம் கூட காண்பிக்காத நுட்பமும் ’தூக்கி ஓரத்தில் கடாசு’ என்று சொல்ல வைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடிகாரம் எனப்படுவது நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது என்னும் சாஸ்திரத்தைப் புறந்தள்ளி, பத்து மணி நேரத்திற்குள்ளாகவே அதனுடைய பெரிய முள்ளும் சிறிய முள்ளும் உறங்கச் சென்றுவிடுகின்றன.

சாம்சங் கடிகாரத்தை ஒப்பிட்டால் கூகுள் கண்ணாடி எவ்வளவோ தேவலாம்.

கூகுள் கண்ணாடி எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன் உங்களுக்கு கண்ணாடி வேண்டும் என்று பெரிய காதல் கடிதத்தை கூகிளுக்கு எழுத வேண்டும். அதைப் பொதுவில் டிவிட்டர், ஃபோர்ஸ்கொயர் என எல்லா சந்து பொந்துகளிலும் விளம்பரிக்க வேண்டும். அதன் பிறகு ஃபேஸ்புக்கில் உங்களைப் பின்தொடர்வோர் எக்கச்சக்கமாக இருக்க வேண்டும். கூடவே நாள், நட்சத்திரம், முகூர்த்தம் எல்லாம் கூடினால், ஆயிரத்தி ஐநூறு அமெரிக்க டாலர்களையும் அதற்கான சுங்க வரியையும் செலுத்தினால் உங்களுக்கு கூகிள் கண்ணாடி வாய்க்கப் பெறலாம்.

இப்படி கெடுபிடி செய்தே தன்னுடைய பொருள்களை சந்தைப் படுத்துவது கூகுளின் தந்திரம். அதனால், இந்த வருடத்தை அணிகல்ன்களின் ஆண்டாகக் கருதுகிறார்கள். சமீபத்தில் நடந்த “நுகர்வோர்களுக்கான மின்சாதன மாநாடு” (Consumer Electronics Show) சூடும் நுட்பங்களைக் (wearable tech) கொண்டாடியிருக்கிறது.

காலில் போட்டிருக்கும் கொலுசு நம்முடைய பாதம் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறது, எத்தனை தப்படி வைத்திருக்கிறது, என்றெல்லாம் கணக்கு போட்டு உடல்நலத்தைப் பேண உதவும். இடுப்பில் போட்டிருக்கும் ஒட்டியாணம், உங்களுக்குப் பின்னால் எவர் வருகிறார் என்பதைப் புகைப்படம் எடுத்து, உங்கள் கண் முன்னே காட்சியாக்கும். தலையில் அணியும் சூடாமணி உங்களுக்கு விருப்பமான இசையை, காதுகளின் இடையூறின்றி, நேரடியாக கேட்கவைக்கும். நெற்றிச்சுட்டியில் ஒலியடித்தால் செல்பேசியில் யாரோ அழைக்கிறார் என அர்த்தம். கழுத்தை ஒட்டி வரும் ஆரம் உங்களுக்குத் தேவையான புகைப்படங்களையும் விழியங்களையும் சேமிக்கும். கை மோதிரம் கொண்டு அவற்றை நீக்கலாம்… மாற்றலாம்… பகிரலாம்.

இப்படி ஒரு தங்க மாளிகைக்கான காலம் எப்படி சாத்தியம் என்பதை லாஸ் வேகாஸில் சொல்லியிருக்கிறார்கள்.

ஒழுங்காகப் பல் தேய்க்கிறோமா, எத்தனை நிமிஷம் தேய்த்தோம், எவ்வளவு தடவை தேய்த்தோம் என்னும் அனைத்து தகவல்களையும் உங்கள் பல்துலக்கியே பல் வைத்தியருக்கு தகவல் அனுப்பிவிடும். மாத்திரையை தினசரிப் போட்டுக் கொள்கிறீர்களா என்பதை மாத்திரை டப்பாவில் இருக்கும் ஒளிப்படக் கருவியே விழியமாகப் போட்டுக் கொடுக்கும்.

இதெல்லாம் வேவு பார்ப்பதற்காகவே அணிகலன் மென்கலன் கண்டுபிடிக்கப்பட்டது போல் தோன்ற வைக்கலாம். ஆனால், கூகுள் கண்ணாடி அணிந்து கார் ஓட்டும் போது எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை உங்கள் காரின் முகப்புக் கண்ணாடியிலேயே கூகிள் தோன்ற வைக்கிறது. கவனமும் சிதறாது. கையைக் கொண்டு அங்கும் இங்கும் நகர்த்தி நிலப்படத்தையும் பயணத்திற்கான வழிகாட்டியையும் உபயோகிக்கும் சிரமம் இல்லவே இல்லை.

அதே போல், சமைக்கும் போது கூகுள் கண்ணாடி அணிந்தால், “அடுத்து தாளிச்சுக் கொட்டணும்… கடுகு இன்னும் கொஞ்சம் போடலாம்!” என்றெல்லாம் உடனடியாக அவதானிக்கவும் செய்கிறது. சமைத்துப் பார் புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை நுணுக்கி நுணுக்கிப் படிக்க வேண்டாம். உப்பின் அளவும் உளுந்தின் கணக்கு வழக்குகளையும் கூகுள் நிரலியே அளந்து சரி பார்க்கும். கண்ணெதிரே செய்முறை தோன்றி, கீழே நடக்கும் காரியங்களுக்கேற்ப சமையலை சுளுவாக்கி சுவையையும் சரியாக்குகிறது.

தட்ப வெட்பத்திற்கேற்ப மாறும் ஆடையையும் போட்டுக் கொள்ளலாம். காலையில் வீட்டில் இருந்து கிளம்பும் போது மார்கழி மாத குளிர். அடக்கமான கோட் போல் தடித்துக் கொண்டிருக்கும். அதுவே மதியம் சாப்பிட செல்லும்போது வெயில் கொளுத்துகிறது… ஆடை உடனே பருத்தியாக இதமாக இருக்கும். சாயங்காலம் திடீரென்று மழை… ஆடை உடனே தண்ணீர் புகா சட்டையாக மாறும். இந்த நுட்பம் இன்றே அணிவதற்கு கிடைக்கிறது.

என்னுடைய மகள் பிறந்த சமயத்தில் இரவெல்லாம் எனக்கு சரியாகவே உறக்கம் வராது. அவள் நன்றாக குறட்டை விடாமலே உறங்குவாள். நானோ ஒரு மணி நேரத்திற்கொருமுறை அருகே சென்று நாடி பிடித்து, அது கிடைக்காமல், நெஞ்சில் காது வைத்து, அதுவும் கேட்காமல், கிள்ளி எழுப்பி அழ வைத்து நிம்மதி கொள்வேன். இப்பொழுதோ இண்டெல் நிறுவனம், குழந்தைக்கு பீதாம்பரத்தை மாட்டிவிடுகிறார்கள்.

baby_Intel_Edison_Android_Wearble_ces_2014-rest_devices_mimo-Kid_alerts

உங்கள் குழந்தைக்கு ஏதாவது பிரச்சினை என்றாலோ, அல்லது மூத்திர துணியை மாற்ற வேண்டும் என்றாலோ, உங்களுக்கு அழைப்பு மணி வந்து விடும். அதோடு நில்லாமல், அடுப்பை மூட்டி, பாலை வெதுவெதுப்பாக்கி தயாரும் செய்து வைத்துவிடும். மகள் அழ ஆரம்பித்த பிறகு பால் கலக்க செல்ல வேண்டாம். பசித்த மகவிற்கு, தானியங்கியாக புத்தம் புது பால் உடனடியாகக் கிடைக்க வைக்கிறார்கள்.

இதைப் போல் புத்தம் புதியதாக, அதே சமயம் பயனுள்ளதாகவும் உருவாக்கும் நிரலிகளுக்கு ஒன்றேகால் மில்லியன் டாலர்களுக்கு பரிசுகளை இண்டெல் நிறுவனம் வழங்குகிறது.

ஆனால், இந்த மாதிரி வித்தியாசமான கண்டுபிடிப்புகள் அறமாக இயங்குமா? அதை இயக்குபவர்கள் நெறிப்படி நடந்து நியாயமாக பயன்படுத்துவார்களா?

உதாரணத்திற்கு, கூகுள் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கண்ணடித்தால் போதும்… எதிரில் போவோர் வருவோரின் புகைப்படம் எடுக்கப்பட்டுவிடும். தங்களின் விருப்பமில்லாமல் புகைப்படம் எடுப்பதும், உங்களுக்குத் தெரியாமல் பேச்சைப் பதிவைதும் வெகு சுலபமாக செய்யலாம். அதை அணிந்திருப்பவரே தீர்மானிக்கிறார்.

அடுத்ததாக இந்த அணிகலன்களில் வரும் விளம்பரங்களை எவ்வாறு புறக்கணிக்கப் போகிறோம்? தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் கைபேசியில் நோண்டுகிறோம்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து விளம்பரங்களை விலக்குகிறோம். கைபேசியின் உலாவியில் விளம்பரம் வந்தால், அப்படியே அதை x போட்டு நொடியில் மூடுகிறோம். ஆனால், கட்டிக் கொண்டிருக்கும் அணிகலனைக் கொண்டு உங்களின் சரித்திரம் முழுக்க விளம்பரதாரர்கள் அறிய முடிகிறது. நம்முடைய அணிகலனின் மென்கலன்கள், என்னுடைய வங்கி எது, எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் போன்ற விஷயங்கள் முதல் ஃபேஸ்புக் வரை எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறது. இதை வைத்து குறைந்த பட்ச விளம்பரத் தாக்குதலில் ஆரம்பித்து அதிகபட்ச மிரட்டல் வரை எல்லாமே சாத்தியம்.

முந்தாநேற்று திருட்டுப் படம் பார்க்க டெக்சதீஷ்.காம் மாதிரி ஏதோ எசகுபிசகான வலையகம் செல்ல, அந்த வலையகமோ, ஓசிப் படத்துடன் கூடவே நச்சுக்கிருமியையும் என்னுடைய மடிக்கணினிக்கு உள்ளே நுழைத்து விட்டது. எப்பொழுது மடிக்கணினியைத் திறந்தாலும், ஒலிபெருக்கியில் ஏதோ விளம்பரம் அலறிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி உங்களின் கம்மலும் மூக்குத்தியும் கொந்தர்களிடம் பறி போகும் அபாயமும் இந்த அணிகலன் மென்கலன் உலகத்தின் மிகப் பெரிய பிரச்சினை.

அதை விடுங்கள்.

அலுவலில் ஏந்திழைப் பெண்களை எதிர்பார்த்த காலம் போய், ஏந்திழை அணிந்துதான் வேலையே பார்க்க வேண்டும் என்னும் காலம் கூடிய சீக்கிரமே வரலாம். அந்த ஏந்திழையோ, ஐந்தாம்படை வேலையாக, எப்பொழுது அசல் அலுவல் பார்க்கிறீர்கள், எவ்வளவு நேரம் ஊர் மேய்கிறீர்கள் என மேலாளருக்குப் போட்டுக் கொடுக்கும் காலம் வெகு விரைவில் வந்து விடும்.

தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்னும் முதுமொழியை ஒத்து உங்களின் உள்ளாடையைக் கூட உங்கள் உணர்விற்கேற்ப ஆட்டுவிக்கலாம்; வாருங்கள் என்கிறது அணிகலன் காலம்.