வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்


தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது.🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

One response to “வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

  1. வி.இ.வ.கூ.கு. இருந்து:
    https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM
    ’கன்னியாகுமரி’யில் sublimation பற்றிய அற்புதமான பல திறப்புக்களை நான் பெற்றேன்.

    ‘’சுயமும்,அடையாளங்களும்,ஆசைகளும்,அகங்காரமும்,உடலும்,பிரக்ஞையும் வகுக்கும் எல்லைகளைத் தாண்டி முன்னகர்தலே’’ சப்ளிமேஷன் என ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பார்.

    ‘’…Sublimity ஒரு அனுபவம்..உச்சகட்ட அழகனுபவம்,இல்லை..பெரிய தார்மிகமான மன எழுச்சி..இல்லை பிரபஞ்ச ரீதியான ஒரு உண்மையை தரிசிக்கிறது..இல்லை மனசுக்கு சாத்தியமான உச்சகட்ட உணர்ச்சி நிலையை அடையறது…ஏதோ ஒண்ணு இல்ல.இதில எல்லாமும்தான்.கலைன்னா அந்த உச்சத்தை நோக்கிப் போற ஒரு யாத்திரை மட்டும்தான்’’என்று சொல்லிக் கொண்டே போவார்.

    Sublimity யின் தூல வடிவத்தையே அந்த எழுத்துக்களில் என்னால் தரிசிக்க முடிந்திருக்கிறது.
    எம்.ஏ.சுசீலா,(M.A.Susila)
    புது தில்லி
    (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
    D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023
    http://www.masusila.com
    http://www.google.com/profiles/susila27

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s