மாதவன் தயாரித்து நடித்துள்ள எவனோ ஒருவன் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி
நடிகர் மாதவன் தனது நிறுவனம் லியுக்கோஸ் பிலிம்ஸ் சார்பில் ‘எவனோ ஒருவன்’ என்ற தமிழ் படத்தைத் தயாரித்து அதன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் பட வரலாற்றில் ஒரு புதுமையாக, முதன் முறையாக, இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடல் வட அமெரிக்காவில் நடந்துள்ளது. ஹெச் எஸ் பி சி வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் விப்ரோ சந்தூர் சோப் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சினிமா கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு மட்டும், படம் அதிகாரபூர்வமாக வெளியிடப் படும் முன்பாகவே திரையிடப் பட்டது. இந்தத் திரையிடலை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார் மாதவன். அக்டோபர் 26 சனிக்கிழமை அன்று, கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஓசே நகரின் செஞ்சுரி 10 திரையரங்கில் இந்த சிறப்பு திரைப்பட காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஹெச் எஸ் பி சி வங்கியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கலிஃபோர்னியா பே ஏரியாப் பகுதியில் உள்ள தமிழ் ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்றிருந்தனர்.
நிகழ்ச்சிக்காக, ‘எவனோ ஒருவன்’ திரைப் படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் நடிகர் மாதவன், திரைப்படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத், கதாநாயகி நடிகை சங்கீதா ஆகியோர் இந்தியாவில் இருந்து அமரிக்கா வந்திருந்தனர். அமெரிக்காவில் நியுயார்க் மற்றும் சான் ஓசே நகரங்களிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் (special screening) தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியிடப் படும் ‘ எவனோ ஒருவன்’ திரைப்படமே தமிழ் திரையுலகில் முதல் முறையாக வெளிநாடுகளில் சிறப்பு ஒளிபரப்புச் செய்யப் பட்டு வரவேற்பை பெற்று பின் தமிழ் நாட்டில் ரீலீஸ் செய்யப் பட இருக்கிறது. சான் ஓசே திரையரங்கில் அரங்கு நிறைந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை இத் திரைப்படம் பெற்றது. வழக்கமான தமிழ்த் திரைப்பட ஃபார்முலாவை விட்டு முற்றிலும் விலகி எடுக்கப் பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சிறப்பு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து ரசிகர்களை வரவேற்ற மாதவன், இந்த முறை தான் தயாரித்தப் படத்தினை அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கும் ரசனைக்கும் முதலில் காண்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இயக்குனரரயும், நடிகை சங்கீதாவையும் அறிமுகப் படுத்தினார். ஹெச் எஸ் பி சி வங்கி அதிகாரிகளின் வரவேற்பினையும், மாதவனின் சிற்றுரரயையும் தொடர்ந்து ‘ எவனோ ஒருவன்’ தமிழ் திரைப்படம் திரையிடப் பட்டது.
திரையிடல் முடிந்த பின்பாக படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு மாதவனும், நடிகை சங்கீதாவும், இயக்குனர் நிஷிகாந்த் காமத்தும் பதில் அளித்தனர். பின்னர் பல ரசிகர்களின் விமர்சனங்கள் பதிவு செய்யப் பட்டன. கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்த நடிகர் மாதவன் அனைத்து ரசிகர்களுக்கும் புன்னககயுடனும் பொறுமையுடனும் தனது கையொப்பம் இட்டு எவனோ ஒருவன் புகைப் படத்தினை வழங்கினார். ரசிகர்கள் அனைவருடனும் புகைப் படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ரசிகர்களுடன் மவுண்டன் வ்யூ நகரில் உள்ள இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு விருந்தளித்தார். இத்துடன் கலிஃபோர்னியா சிலிக்கான் வேலியில் மாதவனின் எவனோ ஒருவன் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.
எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்
தமிழ் திரையுலகில் ஆடல், பாடல், சண்டைகள், ஹீரோ வழிபாடல் போன்ற யதார்த்தத்துக்கு ஒவ்வாத நிஜமில்லாத வணிக சமாச்சாரங்கள் தவிர்த்த மண்சார்ந்த பிரச்சினைகளை அலசும் நிஜமான சினிமாக்கள் வருவது வெகு அரிது. வணிக சமரசங்களை முற்றிலும் தவிர்த்து கதையம்சத்துக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம் எவனோ ஒருவன். கோடிக்கணக்கான மக்களில் ஒருவன், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அதற்கானத் தீர்வுகளைத் தேடும் ஒருவன் எவனோ ஒருவன். நாலு பாடல்கள், ஐந்து சண்டைகள், இரண்டு நாயகிகள் இல்லாமல் எடுத்தால் தமிழ் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில் தமிழ் மக்களின் ரசனையய மலிவு படுத்தி வைக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குள் இருக்கும் மேலான ரசனையை நம்பி நடிகர் மாதவன் துணிந்து ஒரு நல்ல படத்தை தமிழில் ஒரு புதிய முயற்சியை, தரமான சினிமா அனுபவத்ததக் கொணர்ந்திருக்கிறார்.
ஒரே வகை மசாலா என்னும் மாயச் சுழலில் சிக்கித் தவித்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட உலகுக்கு ஒரு புதிய வரவு இந்த எவனோ ஒருவன் , இது போன்ற படங்களின் வெற்றி உலகத் தரத்திற்கு இணையான தமிழ் படங்களை மேலும் தயாரிக்கவும் இயக்கவும் மாதவன் போன்ற கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். புதிய இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் இது போன்ற தரமான சினிமாக்களை எடுக்கத் தூண்டும் நெம்புகோலாக அமையும். நடிகர்களுக்கும் சண்டைகளையும் டூயட்களையும் தவிர்த்து யதார்த்தப் படங்களில் நடிக்கக் கூடிய துணிவை அளிக்கும். மலையாளத்திலும், வங்காளத்திலும், மராத்தியிலும் இது போன்ற முயற்சிகள் பெருத்த வரவேற்பையும், விருதுகளையும் அள்ளிக் குவிக்கும் பொழுது தமிழிலும் அது போன்ற ஒரு ஆரோக்கியமான திரைப்படச் சூழ்நிலையைக் கொணர முயலும் மாதவனின் முயற்சி ஆதரிக்கப் பட வேண்டியது. பாடலும், நடனமும், அபத்தமான ஹாஸ்யக் காட்சிகளும், காதல் கதைகளும் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை, நகரப் புறங்களில் மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை ஒரு நிஜ சினிமமவாக எவனோ ஒருவன் சொல்லியிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த விறுவிறுப்புடனும் உணர்ச்சி வேகத்திலும் பயணிக்கிறது.
எவனோ ஒருவனின் கதை புதிதல்ல. பல்வேறு திரைப்படங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் சொல்லப் பட்ட கதையின் ஒரு வடிவம் தான். இயக்குனர் நிஷி இது ஃபாலிங் டவுண் என்ற ஹாலிவுட் படத்தினால் உந்தப் பட்ட கருவே என்கிறார். . ஆனால் அந்தக் கதை சொல்லப் பட்ட விதமும், கதையமைப்பும், சூழலுமே இந்தப் படத்தை, இதே போன்ற கதைச் சாயலுடன் கூடிய பிற தமிழ்/ஆங்கிலப் படங்களில் இருந்து வித்தியாசப் படுத்துகிறது. முக்கியமாக போலீஸ் அதிகாரி வெற்றிசெல்வனின் பாத்திரப் படைப்பு இந்தப் படத்திற்கு வித்தியாசமான ஒரு பரிணாமத்தை அளிக்கின்றது. இது வரை இதே போன்ற கதையின் சாயலுடன் வந்த நான் சிகப்பு மனிதன், ஜெண்டில் மேன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகைப் படுத்தப் பட்ட, ஃபாண்டசிகள் நிரம்பிய வகைத் திரைப் படங்கள். யதார்த்தத்துக்கும் நிஜவாழ்வுக்கும் ஒவ்வாத ஹீரோ வொர்ஷிப் நிறைந்த சினிமாக்கள். அது போன்ற மிகைப் படுத்தல்களைத் தவிர்த்து ஒரு சாதாரணனின் இயல்பான யதார்த்தமான பார்வையில் மட்டுமே எவனோ ஒருவன் சொல்லப் படுகிறது. இது போன்ற கதை சொல்லலும் திரை அமைப்பும் தமிழ் படச் சூழலில் அடிக்கடி நிகழ்வதில்லை. இது போன்ற திரைப்படங்களே உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் விருதுகளையும் பெற்றுத் தருகின்றன. தமிழ் படங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரப் போவது உறுதி.
ஸ்ரீதர் வாசுதேவன் கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல அன்றாட வாழ்வின் அலுப்பிலும் சலிப்பிலும் உழல்பவன். நெருக்கமான தூய்மையற்ற சுகாதாரமற்ற சூழலிலும், ஊழலும் அராஜகமும், மனித நேயமின்மையும், சுரண்டலும், ஏமாற்றுதலும் நிறைந்த குழப்பமான நகர வாழ்வின் கொடுமைகளில் சிக்கி மீள முடியாமல் மூச்சுத் திணறுபவன். நாற்றமெடுக்கும் சமூக அமைப்புடன் அதன் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு வாழ முடியாத, வாழப் பிடிக்காத, தன் கையயலாகாததனத்தின் மீது ஏற்படும் சுய கோபத்துடன் வாழும் தார்மீகக் கோபத்தைச் சுமந்து கொண்டு, மனதில் அழுத்திக் கொண்டு வாழும் ஒரு நகர்புற இளளஞன். சட்டத்தை மதிக்க வேண்டும், விதி முறைகளை மீறக் கூடாது, நேர்மையையும் உழைப்பையும் நம்ப வேண்டும் அநீதிக்கும், ஊழலுக்கும் துணை போகக் கூடாது என்ற காலத்துக்கு ஒவ்வாத உயரிய நோக்கங்களுடன் வாழ முயற்சிக்கும் ஸ்ரீதருக்குக் கிடைப்பது என்னவோ ஏளனமும், பரிகாசமும், இகழ்ச்சியும்தான். அன்பு மனனவியே கணவனின் ஊரோடு ஒத்துப் போக முடியாத லட்ச்சியங்களினால் அயர்வுற்று கணவனை நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு மாசு பட்ட அமைப்புடன் அனுசரித்து வாழ நிர்ப்பந்திக்கும் நிலமை. தன் லட்சியங்களுடன் வாழ முடியாத அயர்ச்சி, சீர் கெட்ட சமூகத்தின் அழுத்தம், அன்றாட வாழ்வின் சலிப்பு எல்லாம் சேர்ந்து ஸ்ரீதரின் பொறுமையின் எல்லையைச் சோதிக்கின்றன. கடும் மன அழுத்தமும், விரக்தியும், வேதனையும் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத எரிமலையாகப் பொங்கி வெடிக்கிறது. நெறிகெட்டுப் போன சமுதாயத்திடம் பொறுமை இழக்கும் ஸ்ரீதர் தன்னளவில், தன் பார்வையில் படும் அவலங்களுக்கெல்லாம் சட்டத்துக்கு ஒவ்வாத ஆனால் தன்னால் முடிந்த தீர்வை செயல் படுத்திப் பார்க்கக் கிளம்புகிறான். உயர்ந்த லட்ச்சியம் நேர்மை, ஊழலற்ற மனித நேயமிக்க சுமூகம் என்ற உயரிய கொள்கைகளான தீபத்தினை நோக்கிச் ஈர்க்கப் படும் விட்டில் பூச்சியாக அவன் கதை முடிகிறது.
ஸ்ரீதரின் மனசாட்ச்சி, ஸ்ரீதரின் விடுதலை பெற்ற சுய தீர்வுகள் சென்னை நகரைக் குலுங்க வைக்கிறது. செம்மறியாட்டுக் கூட்டத்திற்கு அவனது தார்மீகக் கோபம் வன்முறையாக்த் தோன்றுகிறது, அலட்ச்சியமும் சமூக நோக்கும் இல்லாத மக்களுக்கு மற்றொரு பரபரப்பு செய்தியாகக் கழிகிறது. வெகு சிலருக்கு மட்டுமே ஸ்ரீதர் மேற்கொண்ட தனி நபர் விஜிலெண்ட்டியிசத்தின் தாக்கம், அதன் அர்த்தம் புரிகிறது. ஸ்ரீதரின் குடும்பம் குழப்பத்தில் தவிக்கிறது. ஸ்ரீதர் போன்றவர்களின் கோபத்தை வளர விட்டால் அது அரசாங்கத்து வினையாக முடியும் என்பதனாலும், படித்த மக்களுக்கு அமைப்புசார் அரசாங்கத்தின் ஊழல் மீதும், மோசடிகள் மீதும் உள்ள கோபம் எந்த நேரத்திலும் உணர்ச்சிப் பிராவகமாக ஒரு சின்ன ஸ்ரீதர் வாசுதேவனால் தூண்டப் பட்டு விட்டால், அது ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைத்த அக்னிக் குஞ்சாக நாட்டையே வெந்து தணித்திடும், அந்த அக்னிக் குஞ்சின் முழு வெப்பத்தைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அரசும், காவல்துறையும் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற ஒரு தனிநபர் புரட்ச்சியை அடக்கக் கிளம்புகிறது. ஒரு சாதாராண, படித்த பாமரன் தன் பொறுமையின் எல்லையைத் தாண்டினால், சாது மிரண்டால் என்ன நடக்கக் கூடும் அதன் விளைவுகள் என்ன அதன் தாக்கம் என்ன என்பது குறித்தான கேள்விகளள எழுப்பி, படத்தைப் பார்க்கும் மக்கள் மனதில் தார்மீகக் கேள்வி அலைகளை எழுப்புகிறது எவனோ ஒருவன், அது எழுப்பும் கேள்விகளே படத்தின் முக்கிய பலம். அஸ்திவாரம்.
ஸ்ரீதரின் தார்மீகக் கோபத்தையும் அதன் பின்னால் உள்ள நியாயத்தையும், நேர்மையின்பால், தூய்மையான லட்ச்சிய சமுதயாத்தின் மேல் அவனுக்குள்ள வேட்க்கையையும் அவனை வேட்டையாடக் கிளம்பும் காவல்துறை அதிகாரி மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்கிறார். ஸ்ரீதரின் மனசாட்ச்சி அந்த அதிகாரியிடம் அதிர்வலைகளையும், குற்ற உணர்வையும் சுய தேடல்களையும் தோற்றுவித்து இறுதியில் அவனது மனசாட்ச்சி அந்த அதிகாரியிடன் இடம் மாறுகிறது. காணும் ரசிகர்களிடமும் அதே கேள்விகளும், ஆரோக்கியமான சமூகத்தின் அவசியம் குறித்த உணர்வும் தீவீரமாக எழுப்புகிறது இந்தப் படம்.
ஸ்ரீதர் வாசுதேவனாக ஒரு சாதாரணக் குடும்பத் தலைவனாக, இரண்டு குழந்தைகளின் தகப்பனாக, தினமும் அதிகாலை அலாரம் வைத்து விழித்து, கார்ப்பரேஷன் லாரிக்குக் காத்துக் கிடந்து, தண்ணீர் பிடித்து, குழந்தைகளை தயார் செய்து, டிபன் பாக்சில் அடைத்த சாப்பாட்டுடன் எலக்ட்ரிக் டிரெயினில் நசுங்கி பீச் ஸ்டேஷன் வரை பயணம் செய்து, வங்கியில் அமர்ந்து மாலை வரை கரன்சி எண்ணிக் கணக்குப் பார்த்து அலுத்துக் களைத்து, மீண்டும் ரயில் பிடித்து கசக்கிப் பிழிந்து வாடி வதங்கி, வாழ்கையை அனுதினமும் ஒரே விதமாகச் சுற்றும் கடிகார முள் போல் அலுப்பும் சலிப்புடன் கழிக்கும் ஸ்ரீமான் பொது ஜனமாக எவ்வித ஹீரோத்தனங்களும் பாசாங்குகளும் இல்லாத வெகு இயற்கையாக நடித்திருக்கிறார் மாதவன். ஸ்ரீதர் வாசுதேவன் என்ற சாதாரணப் பாமரனின் பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் மாதவன். விரக்தியையும் வேதனையும் குமுறலையும், மன அழுத்தத்தையும் பாசத்தையும் எவ்வித மிகை நடிப்பும் இன்றி மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார் மாதவன். தமிழின் மிகத் திறமையான இயல்பான நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மாதவன். எந்த இடத்திலும் தன் ஹீரோ இமேஜை நிரூபிக்க ஒரு இம்மி கூட அவர் முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாயில் ரத்தம் வர அடிப்பது அல்லது அடி வாங்குவது, நிதர்சனத்துக்கு மீறிய செயல்களைச் செய்வது என்பது போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண வங்கி ஊழியனின் பொறுமையின் எல்லை மீறினால் என்ன செய்வானோ அதை மட்டுமே நடித்திருக்கிறார் மாதவன். இந்தப் படம் அவருக்கு மற்றொரு மைல்கல்.
அவரது மனைவியாக இரண்டு குழந்தைகளுடனும், இருண்டு கருத்த மாடிப் போர்ஷனில் கஷ்டப் பட்டு ஜீவனம் நடத்த வேண்டிய குடும்பத் தலைவியாகவும், விரக்தியும் வேதனையையும் கொட்டி தன் கணவனை இயல்பான மனிதனாக மாற்ற முயன்று தோற்கும் குடும்பப் பெண்ணாக தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தை வெகு சிறப்பாகச் செய்திருக்கிறார் நடிகை சங்கீதா.
தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தான் காணும் அநியாயங்களுக்கு உடனடி தீர்வு காண முயலும் ஸ்ரீதர் வாசுதேவன் கை மீறிப் போய் தனி நபரின் கோபம் ஒட்டு மொத்த வெள்ளைக் காலர் சமுதாயத்தின் கோபமாக வெடித்திடும் முன்பாக தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார் இயக்குனர் சீமான். ஸ்ரீதரைத் தேடும் பணி அவரது ஆன்மாவை பரிசோதனைக்கு உள்ளாக்கும் தன்னிடத்தில் சத்தியத்தைத் தேடும் பணியாக மாறி, தாங்க முடியாத மன உளைச்சலிலும், சுய பச்சாதாபத்திலும், விரக்தியிலும், குற்ற உணர்விலும் தத்தளிக்கும் அதிகாரியாக சீமான் மிகச் சிறப்பாகத் தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது மனசாட்ச்சியின் அழுத்தத்தின் கனம் ஒவ்வொரு காட்ச்சியிலும் அதிகரித்து அதிகரித்து, அந்தக் கனம் பார்ப்போர் மனதில் அப்படியே இறங்குகிறது. ஸ்ரீதரின் தனிநபர் போராட்டத்தின் ஒரே சாதனையாக ஒரு கறை படிந்த ஆனால் மனசாட்ச்சியுள்ள போலீஸ் அதிகாரியிடம் ஏற்படுத்தும் பெருத்த ஆன்ம விசாரமும், மன மாறுதலுமே. இது ஒரு ஆரோக்கியமான தொற்று நோயாகா மாறி படத்தைப் பார்ர்கும் ஒவ்வொருவரிடமும் ஸ்ரீதரின் மனசாட்ச்சி கேள்வி அலைகளை எழுப்புமானால் அதுவே இந்தப் படத்தின் மிகச் சிறந்த வெற்றியாக அமையும். சீமானின் நடிப்பும் பாத்திரமும் இந்தப் படத்தின் முக்கிய தூண்கள்.
அளவான பிண்ணனி இசையும், கச்சிதமான எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்குத் துணை சேர்க்கின்றன. ஸ்ரீதரின் அலுப்பும் சலிப்பும் நிறைந்த அன்றாட நங்கநல்லூர் டூ பீச் பயணம், பரபரப்பு நிறைந்த சென்னை நகரத்தின் தொலைந்து போன மனிதத்தை காமெரா மிகச் சிறப்பாக காண்பிக்கிறது. ஸ்ரீதரின் அன்றாட வாழ்க்கையை அதை மீண்டும் மீண்டும் மிக வேகமாகக் காண்பித்து காண்போரை அந்த அலுப்பின் சலிப்பின் உச்சக் கட்டத்துக்குத் தள்ளி உணர வைக்கும் ஆரம்பக் காட்ச்சிகளின் விறு விறுப்பான எடிட்டிங் அபாரம். டி வி பேட்டிகளும், டி வி செய்திகளும் தக்க விதத்தில் பயன்படுத்தப் பட்டுக் காட்ச்சிகளை விறு விறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. அதே காட்ச்சிகள்தான் மக்களின் பொதுப் புத்தியையும் , அலட்ச்சிய மனப்பான்மையும், அக்கறையின்மையையும், அறியாமையையும், அப்பாவித்தனத்தையும், முட்டாள்த்தனத்தையும் காண்பிக்கின்றன. ஒரு ஸ்ரீதர் வாசுதேவனுக்கு எழும் தார்மீகக் கோபம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழாமல் போவதே மக்களைக் காக்க வேண்டிய அமைப்பு அவர்களள ஏமாற்றும் அவல நிலைக்குக் காரணம் என்பதை படத்தின் பல்வேறு காட்ச்சிகள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன,
படத்தில் ஏற்கனவே காட்ச்சி பூர்வமாக விளக்கப் பட்டுள்ள காட்சிகளை மீண்டும் சீமானின் வசனங்கள் மூலமாகச் சொல்ல முயல்வதும், ஸ்ரீதர் வாசுதேவன்
யார் அவன் என்ன செய்ய முயல்கிறான் என்பதை முழுவதும் அறியும் முன்னாலேயே போலீஸ் அதிகாரி அவனைப் பற்றிய ஒரு மிகைப் படுத்தப் பட்ட பிம்பத்தைக் கொள்வதும், போலீஸ் உயர் அதிகாரி ஒரு இன்ஸ்பெக்கடரிடம் நேரடியாகக் கட்டளை இடுவதும், ஒரு சில இடங்களில் வாய் அசைவுகளின் ஒத்திசைவு இன்மையும் படத்தின் சில மெல்லிய குறைபாடுகள்.
இயக்குனர் நிஷிகாந்த் காமத் இந்தப் படத்தை மராத்தியில் ‘டோம்ப்பிவிலி ஃபாஸ்ட்’ என்ற பெயரில் எடுத்து ஏற்கனவே உலகத் திரைப்பட விருதுகள் உட்பட 36 விருதுகளைக் குவித்திருக்கிறார். ‘டோம்ப்விலி ஃபாஸ்ட்’ படத்தை தமிழில் சென்னைச் சூழ்நிலைக்குப் பொருத்தி மீண்டும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த ஒரு புத்துணர்வுள்ள ஆக்சிஜன். இந்த இயக்குனரை தமிழ் பட உலகு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமானால் தமிழ் திரையுலகுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பல காட்சிகளில் இயக்குனரது முத்திரை ஜொலிக்கிறது. இது போன்ற இயக்குனர்களின் வரவு தமிழ் திரையுலகினை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அளவில் தமிழ் படங்களுக்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர இது பொன்ற புது இயக்குனர்களாலும் அவரை ஆதரிக்கக் கூடிய மாதவன் போன்ற நடிகர்களாலுமே முடியும். சென்னை மாநகரின் அவலங்களை புழுத்துப் புரையோடிப் போன, ஈ மொய்க்கும் அழுகிய மிருகம் ஒன்றை ஒரு குறியீடாகக் காண்பிக்கிறார் நிஷிகாந்த். ஊழல்களாலும், சட்ட மீறல்களாலும், மனிதநேயமற்ற மனிதர்களாலும், சுற்றுப் புற மாசு கேடுகளாலும், அராஜகங்களாலும், அதிகார வர்க்கத்தின் திமிராலும், மக்களின் அக்கறையின்மையினாலும், அறிவின்மையினாலும், அரசியல்வாதிகளின் மோசடிகளாலும் மொய்க்கப் படும் ஒரு அழுகிய புழுத்த உடலின் நிலையில்தான் சென்னை அல்லது எந்தவொரு இந்தியப் பெருநகரும் இந்தியாவில் இன்று இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் நிஷிகாந்த். இறுதியில் ஜன்னலோரம் சீட் கிடைக்காதா காற்றுக் கிடைக்காதா என்று ஏங்குவேன் அது இன்று கிடைத்திருக்கிறது என்று மாதவன் சொல்லும் பொழுது அதன் குறியீட்டில் இயக்குனர் நம்மை கலங்க வைக்கிறார்.
வணிக சமரசங்களற்ற மக்களின் அன்றாடப் பிரச்சினை ஒன்றைத் துணிவுடன் கருவாக எடுத்துக் கொண்டு அணுகிய நிஷிகாந்தும் அதைத் திரையில் சாதகமாக்கிய மாதவனும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே. இந்தப் படம் எவ்விதத் தீர்வையும் அளிப்பதில்லல. நல்லது கெட்டது என்று கருப்பு வெள்ளையாக எவ்வித மெசேஜும் கொடுப்பதில்லை. பார்ப்பவர்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும், எண்ண அலைகளை உருவாக்கும், பல நாட்க்களுக்கு தாக்கத்தை உருவாக்கும்,. அதன் விளைவு ஒட்டு மொத்த சமூகத்தில் ஒரு லேசான மாற்றத்தை உருவாக்கினால் அல்லது அதற்கான ஒரு சிறிய முயற்சியை படம் பார்க்கும் மக்களிடம் ஒரு லேசான தீப்பொறியைப் பற்ற வைத்தாலும் கூடப் போதுமானது. சமுதாய அவலங்களுக்குத் தீர்வு தனி மனிதர்களின் எண்ணப் போக்குகளின் மாற்றத்தில்தான் இருக்கிறது. அத்தகைய மாற்றத்தை சிறிதளவேனும் தூண்டும் ஒரு சேஞ்ச் ஏஜெண்டுகளாக இது போன்ற திரைப்படங்கள் அமைகின்றன. தமிழக ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம் எவனோ ஒருவன்.
தொடர்புள்ள பதிவு: கில்லி – Gilli » Blog Archive » evanO oruvan, Movie Review – ‘DhooL’ Balaji