Daily Archives: நவம்பர் 23, 2007

Sun TV – சிதறல்கள்

சன் டிவியில் பல மாற்றங்கள்.

 • சனி, ஞாயிறுகளில் இரவு செய்திகள் சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று மட்டும் அரை மணி நேரம் முன்பே வரும் மாயம் என்ன?
 • மதிய செய்திகள் ஐந்து நிமிடங்களாக சுருங்கி விட்டது. இந்த மாதிரி தலைப்புச் செய்திகளை மட்டும் தருவது நல்ல ஃபார்மாட். முக்கியமான விஷயங்களை மொத்தமாக விளம்பரம் இன்று அறிய முடிகிறது.
 • ‘வணிக செய்திகள்’ என்று இரவு போடுகிறார்கள். பல தகவல்கள் தெரியவருகிறது. ஆனால், எழுதி ஸ்லைடு போட்டுக் காட்டுகிறார்கள். ஏன் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? எழுதிப் போடுவதிலும் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள். (மொத்தம் நான்கு வார்த்தை உள்ள செய்தியில் இரண்டு பிழை வரும் சித்திரவதை).
 • செய்திகளில் முக்கிய தலைவர்கள் அல்லது சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களின் ரிப்போர்ட் இடம்பெறுகிறது. திடீரென்று ஒரு வார்த்தை சைலன்ஸ் செய்யப்படுகிறது. இந்த மாதிரி கழுத்தைத் திருகி கருத்தை அமுக்குவதிற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியுமா?
 • செய்திகள் என்றில்லை. பேட்டி, நேரடி ஒளிபரப்பு போன்றவற்றிலும் இந்த திடீர் மயான அமைதி தென்படுகிறது. சென்சார் செய்யப்பட்ட பத்திரிகையில் f**k, s#@t என்றெல்லாம் குறிப்பால் உணர்த்துவார்கள். அந்த மாதிரி இந்த taboo பெயர்ச்சொல்களை சொன்னால் கிசுகிசு படித்த ஸ்னானப்ராபிதியாவது கிடைக்கும்.
 • முன்னாள் பெப்சி, இன்னாள் ஆச்சி மசாலா ‘உங்கள் சாய்ஸ்’ உமா ஜாகை மாறிப் போன பிறகு அந்த ஸ்லாட் வெறிச்சோடி இருக்கிறது. போன வாரம் பிரகாஷ்ராஜ் வழிந்தார். அதற்கு முந்தின வாரம் அனைத்து தீபாவளித் திரைப்படங்களின் முக்கிய பிட்டுகளையும் போட்டுக் காட்டிவிட்டு சத்யராஜ் போன்ற நக்கலுடன் சுரேஷ்குமார் ‘இந்தப் படத்தையும் திரையரங்கில் சென்று பார்க்கவும்’ என்று பகிடித்திருந்தார்.
 • தொலைபேசியில் மக்களை சமாளிக்க தற்போதைய சன் டிவி தொகுப்பாளர்களில் யார் சிறந்தவர்?
  • சூப்பர் டூப்பரில் வரும் ஹேமா சின்ஹா – ‘கண்ணாமூச்சி ஏனடா’ நிகழ்ச்சியில் ராதிகா, ப்ரியா, சத்யராஜை வைத்துக் கொண்டு தொலைபேசியையும் சமாளித்தார்.
  • வணக்கம் தமிழகத்தில் வருபவர் – நிறைய பேட்டி கண்ட அனுபவம் கைவசம் இருப்பது ப்ளஸ்.
  • நினைவுகள் அம்மு – உமா மாதிரியே வாத்சல்யமான உரையாடல். புடைவையில் லட்சணம். அம்மு நம்ம சாய்ஸ்.
 • மஸ்தானா மஸ்தானா‘வில் ஆட முடியாமல் மாய்மாலம் செய்த கமலேஷ் அமெரிக்கா வந்து ஆடிவிட்டுப் போகிறார்.
 • ‘அசத்தப் போவது யாரில்’ பாடல்களை உல்டா செய்யும் பகுதி நன்றாக இருக்கிறது.

இன்று ஒரு தகவல் – Numbers

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் தமிழர்கள் சதவீதம் = 5 %

2001-ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 5,244

தமிழகத்திலிருந்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 254 பேர்.

ஆண்டுதோறும் சராசரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளில் சேருபவர்கள்: சுமார் 250 பேர்

ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை – தமிழ்நாடு தமிழனின் பார்வை

முதலில் விடை தெரியாத கேள்வி:

 • விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆர்வத்துடன் துவங்கியவர் ரணில் விக்கிரமசிங்கே.
 • ஏ9 சாலையை மீண்டும் திறந்து யாழ்ப்பாணத்தை மீண்டும் அடைய வைக்க ஒப்பந்தமானது.
 • அங்கே மீன் பிடிக்க செல்லக்கூடாது; இங்கே சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து‘ போன்ற கெடுபிடிகள் தளர்ந்தது.

அமைதியைக் குறிவைத்து இப்படி ஏகப்பட்ட ஆக்க பூர்வமான ரணிலுக்கு தமிழர்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? ‘நிச்சயம் ஒடுக்குவேன்‘ என்று அறிவித்த ராஜபக்சவுக்கு 51 சதவீதமும், பேச்சுவார்த்தையில் உறுதுணையாற்றிய விக்கிரமசிங்க்வுக்கு 49 சதவிகிதமும் வாக்கு கிடைக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியாகி ஓய்வெடுக்கும் சந்திரிகா குமாரதுங்கா. தமிழர்கள் வாக்களித்திருந்தால் மீண்டும் ரணில் வந்திருப்பார்.

இலங்கையில் சாதாரண பொதுபுத்தி எடுபடாது. ‘இப்படித்தான் யோசிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால், நேர் எதிர் வியூகம் அமைத்து பாதாள குழியில் விழுவது போன்ற முடிவுகள் சகஜம். இதை பின்னணியாக வைத்துக் கொண்டுதான் ‘அடுத்து என்ன‘ என்று ஆருடம் போடமுடியும்.

இலங்கை அரசுக்கு தமிழர்கள் மேல் பரிவு இருப்பது போல் காண்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். சிலசமயம் இந்த நாடகத் தோற்றத்தில் வெற்றி காண்கிறார்கள். முல்லைத்தீவு சம்பவம் போல பெரிய தாக்குதல்கள் முதல் அன்றாடப் போரில் இறப்புகள் உட்பட, ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு மாற்றான சக்தியாக இல்லாமல், ரேசிஸ்டாக பேரினவாதத்திற்கு ஆதரவான சித்தரிப்புக்குள் அடங்கிப் போகிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் போரின் மகத்துவம் தெரிந்தே இருக்கிறது. சுனாமி வந்தால் பணம் கிடைக்கும். போர் என்றால் பணம் கொட்டும். இதை முன்னிட்டுதான் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது முக்கியமானதாகிறது. இதனால் ஆட்கடத்தல், போதை மருந்து சரக்கு பரிமாற்றம் போன்ற அதிகாரபூர்வமற்ற வழிமுறைகளினால் நிதி திரட்டப்படும். பிரபாகரனுக்கு கையிருப்பு குறைவதை விட கரும்புலிகளின் சேர்க்கைதான் மிகப் பெரிய பிரச்சினை.

சிறார்களை முளைச்சலவை செய்கிறார்கள்; கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்; அப்பாவி சிங்களர்களைக் கொல்கிறார்கள் போன்ற மனித உரிமை நெறிகளை கைவிட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் தோற்றம் காண்பிக்கும்வரை அவர்கள் மீது கரிசனப் பார்வை உலக அரங்கில் கிட்டப்போவதில்லை.

சூடான், ருவாண்டா மாதிரி பிரச்சினை இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்று ஐ.நா. எண்ணுகிறது. ஈராக், இரான் மாதிரி எண்ணெய் வளமும் கிடையாது. அப்புறம் எப்படி கரிசனம் கிடைக்கும்?

சைப்ரஸுக்கே இப்போதுதான் தனி நாடாக முடிகிறது. ஃபாக்லாந்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது போல் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளே முடிவுறாத நிலையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு அறிவுரை சொல்லி, ஈழத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, சுதந்திரம் கிடைக்கும் அதிகாரத்தை தரும் நிர்ப்பந்த நிதர்சனங்களை வலியுறுத்தும் நிலையில் இல்லை. சீனா, ரஷியா, இந்தியா போன்ற இன்ன பிறருக்கும் இப்போதைய குழப்ப சிக்கல்களே சாலச் சிறந்ததாக இருக்கும் வேளையில் தெற்காசிய கூட்டமைப்புகளும் இடித்துரைத்து ராஜபக்ஷவை கண்டிக்க முடியாத அவலம்.

விடுதலைப் புலிகளிடம் இன்னும் போதுமான அளவு நிலப்பரப்பு இல்லை. அதற்கு ஈடாக உயிரின் அருமை தெரியாத, தற்கொலையை விரும்புவதற்கு அடிமையாக்கப்பட்ட, கரும்புலிகள் நிறைய இருக்கிறார்கள்.

பேரம் பேச தேவையான அளவு இராச்சியம் கிடையாது. ஆனால், அதற்கு ஈடாக அமைதி காலத்தில் சேகரித்த படைகலன்கள் குவிந்திருக்கிறது.

செத்து மடிவதற்கு சிறார்களும் அவர்கள் சக தமிழர் மீதோ அல்லது எதிராளி மீதோ வீசுவதற்கு சவாப்தாரியாகாத குண்டுகளும் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை பாவ்லாக்கள் கிடைக்காது.

கடைசியாக இஸ்லாமியர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு புலிகளும் ஆகவில்லை; இலங்கை அரசு மீதும் கரிசனம் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலை பரிதாபகரமானது!

எது நடந்தாலும் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பொறுப்பேற்காமல் ‘அந்தப் பக்கம்தான் இந்த நிலை/அசம்பாவிதத்தீற்கு காரணம்‘ என்று சுட்டுவிரல் விளையாட்டு மட்டுமே முடிவாக சொல்ல முடிகிறது.

முந்தைய பதிவு: ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்