Daily Archives: நவம்பர் 1, 2007

Florida Trip – Bits & Pieces

விமானங்கள் தாமதமாக சென்றடைகின்றன. ஆபீசுக்கு தாமதமாக வந்தால், ‘போக்குவரத்து நெரிசல்’, ‘அலாரம் அடிக்கல’ என்று காரணம் சொல்வது போல், ‘வானிலை சரியில்லை’, ‘பழுது பார்க்கிறோம்’, ‘ஹவுஸ் ஃபுல்’ என்று ஏதாவது சாக்குபோக்கு சொல்கிறார்கள்.

விமான நிலையத்திற்குள் குடிநீரை எடுத்து செல்லமுடிவதில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு செல்லலாம். பத்து அவுன்ஸ் புட்டிக்கு நாலு டாலர் பிடுங்கும் அநியாயத்தை கண்டிக்க, மனிதவெடிகுண்டாக, திரவத்தை உட்கொண்டு விட்டு (மரியா ஃபுல் ஆஃப் கிரேஸ்?) விமானத்துக்கு ஆப்படிக்கப் போகிறார்கள்.

அமெரிக்காவில் குந்துரத்தராக (கன்சல்டன்ட்/கான்டிராக்டர்) கணினி வேலைக்கு பறந்து பறந்து ஊர் சுற்றுவது பழசு; புரோகிதராக மிச்சிகன் முதல் மியாமி வரை நீக்கமற விமானிப்பது புதுசு. கைப்பெட்டிக்குள் உற்சவர் சிலைகள்; முள்ளம்பன்றி முள் தொட்டு அகத்தி மொட்டு மூக்குப்பிழிதல் சமாச்சாரம் வரை சகலத்துடன் ஆஜர். முடித்துவிட்டு, இன்னொரு நகரம்; இன்னொரு வைபவம்.

திரிசங்கு சொர்க்கத்தில் விசுவாமித்திரர் படைத்த அனைத்த ஜந்துக்களும் ஃப்ளோரிடாவில் உலா வருகிறது. வரகரிசி, ஜிலேபி, அப்பம், வடை, முறுக்கு, மனோகரம் பருப்புத் தேங்காய், திரட்டிப்பால், கொழுக்கட்டை என்று சகலத்துக்கும் விருப்பத்துடன் ஓடிவருகிறது.

ஃப்ளோரிடாவில் எங்கு பார்த்தாலும் ஏதாவது கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அடுக்கு மாடி அலுவலகங்கள்; ஜோடிப் பனைமரம் வைக்கப்பட்ட ஈஸ்ட்மேன் வண்ண வீடுகள்; பாதியில் பாக்கி நிற்கும் சாலை மேம்பாலங்கள்; புதிய டிஸ்னி சுற்றுலாத்தலங்கள். பாஸ்டன் போல் பாதி நேரம் பனி பொழியாமல் இருப்பதும் பணிக்கு ஏற்றதுதான்.

ஆமெரிக்காவின் கிழக்கு கடற்கரையின் எல்லையாக ‘கீ வெஸ்ட்’. அங்கிருந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா 70 மைல்கல் என்றார்கள். கண்ணாடி போட்டுக் கொண்டுதான் பார்த்தேன். அட்லாண்டிக் கடல்தான் தெரிகிறது. அப்பால் தெரியவில்லை.

ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவுக்கு அப்புறம் பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடம் இங்குதான் என்று கூட்டி சென்றார்கள். இன்னும் ஐம்பதாண்டுகள் தாக்குப்பிடித்தாலே பெரிய விஷயம் என்பதை பெருமையுடன் மோட்டார் படகை ஓட்டியவர் விவரித்தார். ‘ஆண் பாவம்’ படத்தில் கார் ரிவர்ஸ் எடுக்கும் காட்சியின் பாண்டியராஜன் ஞாபகம் வந்தார்.

அசலாகப் பார்த்ததை விட மீன் காட்சியகத்தில் இன்னும் இயல்பாக, க்ளோசப்பாக பார்க்க முடிந்தது.

நிலத்தை விட கடல் மிகப் பெரிது. பாம்பு புற்று போல் தோண்டி வைத்துக் கொண்டு, புற்றில் இருந்து எப்பொழுதாவது தலைநீட்டிய மீன்; வண்ணங்களால், விதவிதமான கால் அளவுகளால், முக அமைப்பால் என்று பிரமிப்பூட்டும் பவளப் பாறை + மீன் விருந்து. ஒவ்வொரு மீனையும் எப்படி சமைப்பது என்றும் விவரிக்கிறார்கள். மச்சகன்னி எங்கிருப்பாள் என்று குழந்தையைப் போல் மனசு அலைபாய்கிறது.

பாஸ்டனை விட பெரிய ஊர் மியாமி. விலங்குப் பண்ணைகள் நிறைய வைத்திருக்கிறார்கள். ‘ஆடுறா ராமா’ என்று வித்தை காட்ட வைக்கிறார்கள். முதலைகள் சமத்தாக சாலையோரம் போஸ் கொடுக்கிறது. புகழ்பெற்றவர்களின் கடற்கரையோர உல்லாசபுரிகளை ‘ஆ… ஊ…’ போடவைப்பதற்காக அழைத்துப் போய் காமிக்கிறார்கள்.

மச்சாவதாரம், வராகவதாரம் தொடர்ந்து, ‘உனக்கு என்னவாக ஆசை?’ என்று குழந்தையின் வருங்காலத் திருப்பணியை கேட்கும் எண்ணத்துடன் வான்னடூ சிட்டி (Wannado City)க்கு ஈரைப் பேன் ஆக்கிப் பேனைப் பெருமாள் ஆக்கும் விதமாக வருகை தருவிக்கிறேன். மருத்துவராக அரை மணி நேரம் வேலை பார்க்கலாம். அலுத்தவுடன் விமானம் ஓட்டி பார்க்கலாம். அடுத்து திருடன் – போலீஸ்; தொடர்ந்து தீயணைப்புத்துறை; நீதிபதி முன் வக்கீலாக வாதாடலாம். உங்களுக்கு வளர்ந்த பின் எதுவாக வேண்டுமோ, அதுவாக வாழ்ந்து பார்க்கலாம். செய்யும் வேலைக்கேற்ப கூலி கொடுக்கிறார்கள். அதை வங்கியிலும் போட்டு வான்னடூ (டாலர் அல்ல) பணம் சேமிக்கலாம்.

அறுவை சிகிச்சை செல்லச் சென்ற அவளோ, ‘டாக்டராக… உவ்வேக்’ என்று அறுவறுப்பு காட்டிவிட்டு, ‘எனக்கு சமையல்தான் பிடிச்சிருக்கு’ என்று பயமுறுத்தியது தனிக்கதை.

குறு விடுமுறை முடிந்து குடியிருக்கும் நகரத்துக்கு திரும்பும் விமானம். ‘வீட்டுக்கு வந்தவுடன் எதையெல்லாம் எதிர்நோக்குகிறாய்’ என்று நேரங்கடத்த, சுற்றுலாவின் பிரிவை மறக்க கேள்வி வைக்கிறேன்.

‘என்னுடைய கிளிகள், ஹாலோவீனுக்கு பயமுறுத்த சுறா பற்கள், வெப்கின்ஸ் சிவாஹ்வா’ என்று தொடங்கியவள் ‘அழகானவை‘ என்று முடித்துக் கொண்டாள். பதிவுக்கு மேட்டர் கிடைத்த சந்தோஷத்துடன் ‘எது அழகு‘ என்று இலவசகொத்தனாராக மீம் கேள்வி போட, ‘Everything is pretty and ugly அப்பா’ என்று பதிலளித்து ‘ugly things’ என்று தன் பட்டியலில் ‘pretty things’க்கு அடியில் சேர்த்து முடித்துக் கொள்ள சுபமஸ்து.