Daily Archives: செப்ரெம்பர் 13, 2007

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

Kizhakku Book Wrapper - Indira Parthasarathyகல்லூரியின் வளாக நேர்காணலில் எல்லோருக்கும் வேலை கிடைத்துக் கொண்டிருந்த சமயம். பெங்களூர் நிறுவனம் கிடைத்தால் தேவலாம். மென்பொருள் எழுத வைத்தால் சிலாக்கியம். சம்பளம் நிறைய கொடுத்தால் பூரண திருப்தி. நூறு பேர் போட்டியிடும் பந்தயத்தில், முந்தி வந்து வேலை கிடைத்தாலும், கிடைக்கப்பெற்ற அனைவரும் அசுவாரசியமாய் இருப்பார்கள்.

‘ஒப்பந்தம் கேட்கிறான்’, ‘இனிமேல் வரப்போவதுதான் நல்ல நிறுவனம்’, ‘சம்பளம் கம்மி’… காரணங்கள் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

முற்றுகைகளைத் தொடர்பவனுக்கு இந்த அதிருப்தி தீர்மானங்கள், விரக்தி கலந்த வெறுப்பை ஊட்டுபவை. அவனுக்குத் தேடல் எதுவும் இருக்காது. லட்சியம், குறிக்கோள், ஆதர்சம், சுயவிசாரம், வாழ்க்கைப் பயணம், கொள்கைப்பிடிப்பு எல்லாம் பறந்தோடும். தனக்காக இல்லாவிட்டாலும், பிறருக்காக, நிரூபிப்பதற்காக அனுதினமும் கர்மமே என்று படை எடுப்பான்.

இப்பொழுது வேலை தேடாவிட்டாலும், இத்தகைய சூழல் அமைந்தே உள்ளது. பொன் செய்யும் மருந்தாகிய போதுமென்ற மனத்துடன் சிலரும், கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு அனுமனாக விசுவரூபம் எடுத்து சூரியன்களைத் தொடும் உச்சிக்கு விரைபவர்களும் கிடைக்கிறார்கள்.

‘பொம்மரில்லு’ நித்யாவாக கதாநாயகி. ‘விடுகதை’ பிரகாஷ்ராஜாக நாயகன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திலகம். ‘சொப்ரானோஸ்’ முடிவு. இப்படித்தான் டக்கென்று கதைச் சுருக்கம் போடலாம்.

பதில்கள் கிடையாது. வழிகாட்டல்கள் கிடைக்காது. வாழ்க்கைப் புரிதல்கள் சொல்லித்தரப் பட மாட்டாது.

ஆனால், மனிதர்களுக்கு இடையே உள்ள உறவை உணரலாம். எப்படி அது வளர்கிறது, எங்கே தேய்கிறது, எப்பொழுது அறுபடுகிறது என்று பார்க்கலாம். பாசத்தில் மாறுதல்கள் விளைவிக்கும் சக்திகளையும் காலப்போக்கில் எங்கெல்லாம் இறக்கை முளைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தன்னை அர்த்தப்படுத்துவதாக நினைத்து சுய வெளிப்பாடுகளைப் போர்த்தி உலகத்தின் அவசரத்தையும் கலகத்தின் போக்கையும் அனுசரிப்பதை அறியலாம்.Inthira Paarthasarathy

‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’ குறித்த லக்ஷ்மியின் பகிர்வை பார்க்கவும். படித்ததில் பிடித்ததை இங்கு பார்க்கவும்.

1. திருமணம் என்றாலே பரஸ்பர தியாகங்கள் என்றுதான் அர்த்தம்.

2. ‘Now or Never… இதுதான் என் வாழ்க்கைத் தத்துவம்.’

3. ‘நான் கோபப்படப் போறதில்லை. கோபப்படறதுக்குக் கூட, கொஞ்சம் தரமான குற்றச்சாட்டா இருக்கணும். நீங்க சொல்றது அதுக்குக்கூட யோக்கியதை இல்லை.’

4. கதாசிரியரையும் அந்த நெருப்பில் தூக்கிப் போடலாமென்று தோன்றிற்று, அமிர்தத்துக்கு. கதையிலே வரும் ‘வில்லன்‘ படுபாவியல்ல; கதாசிரியர்தான்.

5. ‘வங்காளத்திலே புதுசு புதுசாindira parthasarathi ‘தியேட்டர் குரூப்’ ஏற்படறதுன்னா புதுசு புதுசா ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கிற நமைச்சல்னாலே… ஆனா நம்மவங்க புதுசு புதுசா ‘தியேட்டர் குரூப்’ ஏற்படுத்தறது, பழைய குழுவிலே தனக்கு சான்ஸ் கிடைக்கலேங்கிற காரணந்தான்…’

6. வரிசை வரிசையாக ஆஸ்பத்திரிக் கட்டிடங்கள்… உள்ளே எவ்வளவு முனகல்களோ, வேதனைகளோ, வெளியே நின்று பார்த்தால் யாருக்குத் தெரியும்?

7. நிகழ்ச்சி என்பது நினைவுக்குச் செய்யும் கொடுமை. கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம்! நேரே பார்ப்பதை விட, வண்ணக் கண்ணாடியில் பார்க்கும்போது, பொருட்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

8. ‘ஒரு கொள்கையிலே புகுந்துக்கிறது, ஒரு பந்தத்திலே மாட்டிக்கிட்டு முழிக்கிற மாதிரி…’

9. அவ்வாறு நினைவுறுத்துவதினால் நித்யா என்கிற இனிய கனவு, கடந்து போன இளமைப் பருவத்தின் நினைவுச் சின்னமாய், சிந்தனையில் மொக்கவிழ்ந்து மணம் வீசுகின்றது என்பதினாலா…?indira parthasaradhy

10. ‘கல்யாணம் செய்துண்டா இமேஜ் ஏது? இப்படித் துரத்திண்டு போறதுதான் உங்களுக்குத் திருப்தியைத் தர்றதோ என்னவோ?’

11. பாலுறவு என்பது ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஒருவர் தீர்க்கும் வஞ்சினமோ?

12. ‘இவ்வளவு சீக்கிரம் ஒருத்தராலே சென்டிமெண்ட்டலாக முடியும்னா, அவர்கிட்ட அடிப்படையிலே ஏதோ கோளாறுன்னு அர்த்தம்’

13. ‘உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பொருத்தமில்லாத தன்மையை ஓர் லட்சிய வேகத்தோட புரிஞ்சிண்டு நான் அனுதாபப்பட்டது வாஸ்தவம்தான். ஆனால், உங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு, அதாவது தைரியமில்லாம ஒரு சோகக் காவியத்தின் கதாநாயகன் மாதிரி, ஒடிஞ்சு போன இறக்கைகளை ராக்கெட்னு நினைச்சுண்டு பறக்கப் பார்க்கிற, அரை வேக்காட்டுக் கலைஞர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கிற தெம்பு கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சால் அதை அந்தச் சமயத்திலே பயன்படுத்திக்கணும்னு நினைக்கிற சுயநலந்தான் உங்களுக்கு…’

14. மந்தையிலிருந்து விலகிச் செல்ல முயன்ற புரட்சி ஆடு, பொறியில் அகப்பட்ட எலி, விடுதலையைக் கண்டு பயப்படுகின்றது. சமூகம் என்பது தவிர்க்க முடியாத சிறை! ஒன்று ஞானியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பைத்தியமாக இருக்க வேண்டும். ‘தன்வயமான தர்மம்’ என்பது அப்பொழுதுதான் சாத்தியம்.

காதல், ஊடல், சல்லாபம்…

‘இந்தச் சமாதிகளெல்லாம் யாருக்காக இருக்கும்?’ என்று கேட்டாள் நித்யா.

‘இதென்ன கேள்வி? மொகலாய மன்னன் அந்தப்புரத்திலிருந்த அவனோட அறுநூத்திச் சொச்சம் ராணிகளுக்காக இருக்கும்.’

‘உங்க குரல்லே லேசாப் பொறாமை தெரியறது…’

கடைசியாக… இ.பா வார்த்தையில் நாவலைக் குறித்து சொல்ல வேண்டுமானால்:

‘இது நல்லாயிருக்கு’

‘என்ன இப்படி சாதாரணமாச் சொல்றே’

‘எளிமையா சொன்னாத்தான் நன்னாச் சொல்லறதா அர்த்தம். பாக்கியெல்லாம் வெறும் சொல் விரயம்தான்.’

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:
1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Thinnai: தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’ – பாவண்ணன்

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு :: எதிர்வினை