Daily Archives: ஜூலை 10, 2007

Kosu (Novel) – Pa Raghavan : Bits, Metaphors, Quotes

 • கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு
 • சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.
 • ஆட்சி கையில் வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா
 • வாழ்க்கை சுலபமானதுதான். பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத பட்சத்தில்.
 • பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்ட செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.
 • எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.
 •  துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.
 • எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது. அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது.
 • கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கை கூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்கு தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரெண்டு சென்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும்.
 • எப்போதுமே தொடக்கம்தான் சிக்கல்களும் பிரச்னைகளும் கொண்டது. ஒரு படி ஏறிவிட்டால் போதும். பின்னால் வருபவர்கள் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
 • குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகி விடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.
 • ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.
 • சிறியதொரு குன்று போலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும்.
 • ஒரு கட்டத்துக்கு மேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஒடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம்கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.
 • காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது.
 • தீக்குளிச்சாங்க நிரூபிக்க முடியும்? பேசுனா, அரசியல்வாதி பேச சொல்லித் தரணுமான்னுவிங்க. பேசாம திரும்பிப் போனா திமிரப்பாருன்னுவிங்க. நொந்துபோன மனச, அனுமாரு போட்டோ மாதிரி பொளந்துகாட்டத் தெரியலிங்க எனக்கு.

Kosu (Novel) – Paa Raghavan

கொசுவைக் குறித்த முன்னுரையோடு இந்த நாவல் குறித்த விமர்சனத்தைத் தொடங்கலாம்.

கதைப்படி, தொண்டன் என்பவன் கொசு.

அரசியல் என்னும் ‘நிர்வாண சாமியார்களின் குமுகாயத்தில்’ கொசுவுக்கு சிப்பந்தியாக பணி. சுதந்திரமாக ஆடை களைந்தவர்கள் அனுபவித்து மகிழ்வதை கொசு ஆசையுடன் பார்க்கும். காட்டன் மறைத்த தேகத்தை அணுகுவது எளிது. இடுக்கு போர்ஷன்களில், அவாவுடன் நெருங்கி மறைவாக உறிஞ்சி விட்டு கொசுவாகப் பறந்து விடலாம். மில்லிமீட்டர் மேலாடை கூட மறைக்காத இராசவட்டத்தின் அண்டப் பெருவெளியில், எங்கு தொடங்குவது, எப்படி தொடருவது என்று அடி முடி அறியவொண்ணா கட்சிக்கடலில் தொண்டர்கள் குழம்பும்.

கொசுக்கள் எயிட்ஸை பரப்பாது என்றாலும், சிக்கன் குனியாவில் முடங்க வைக்கும். டெங்குக் காய்ச்சலில் சாவடிக்கும் திறமும் கொண்டது. வாரிசு அரசியலை மீறி புதிய முதல்வர்களை கொடுக்க முடியாவிட்டாலும், கவுன்சிலரின் காலை வாரி விடும் திறன் படைத்தது. சில சமயம் எம்.எல்.ஏ.க்கள் கவிழ்வதால் ஆட்சி மாற்றங்களைக் கூட தந்து விடும் சக்தியும் படைத்தது.

ஓ +வ், ஏ1பி -வ் என்றெல்லாம் சாதி, சமயம் பார்க்காது, கிடைக்கக்கூடியதை வைத்து பிழைப்பு நடத்தும். தொண்டனுக்கு டெமொக்ரட்ஸ், ரிபப்ளிகன் என்னும் பற்றெல்லாம் கிடையாது. ஏதொவொன்றை சிக்கென்று பற்றிக் கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொள்ளும்.

ஒரே அடியில் கொசுவை அடிப்பது விக்ரமனின் ஒரே  பாடலில் லட்சாதிபதியாகும் சுகானுபவம் நிறைந்த மனச்சாந்தியை அளிக்கவல்லது. உங்கள் அலுவல் கோபம், இல்லத்தரசி சமையலில் உள்ள நொள்ளை, மழலைகளின் தெனாவட்டு அலட்சியம் என்று அத்தனையும் நொடி நேரத்தில் கொசு நசுக்கப்படும்போது மோட்சம் பெறும். முறையே, மேலிடத்து அருள்பாலித்தல், உள்கட்சிப் பூசல், தொண்டர் படை சேர்ப்பு, என்று அத்தனையும் நொடி நேரத்தில் தொண்டன் என்னும் கொசுவேட்டையில் சித்திக்கும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சின்னமாக மாகாணத்தின் பறவை, மாகாணத்திற்கான கொடி, எல்லாம் உண்டு. அவ்வாறு சென்னைக்கு என்றாவது என்ன பிராணி தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிப்பார்களேயானால், ‘கொசு’ என்பதுதான் மதராஸின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.

கடைசியாக, கொசு பாட்டுக்கு தானுண்டு, தன் பறத்தல் உண்டு என்று வீட்டில் பறக்கும் செல்லப் பிராணியான போல் இருந்தால், சிறுநீர் முதல் சிற்றுண்டி வரை சமபந்தி போஜனமாக சிசுருஷைகள் நடக்கும். கொசு போல் தன் வேலையை மனிதரிடம் காண்பித்தால்தான், அடிபட்டு கொல்லப்படுகிறார்கள்.

யானையின் காதில் புகுந்த கொசு என்று பெரியவர்களைப் பாடாய்படுத்திய கொசுவின் கதைகளை ‘சிவாஜி’ சினிமாக்கள் சொல்லும். பா. ராகவனின் கொசு, அசல் அனுபவங்களின் ரீங்காரமாக, நிஜத்தை, யதார்த்தத்தை டைலர் முத்துராமன் கொண்டு தைக்கிறது.

(தொடரலாம்)