Daily Archives: ஜூன் 18, 2007

Eight Random Facts Meme

தற்புகழ்ச்சியில் கூட தன்னடக்கத்துடன் பட்டியலிட்ட வெங்கட், என்னையும் அழைத்து இருக்கிறார். தீக்குச்சியைக் காட்டினால் கை பொத்துப்போகும் அளவு பொறாமை எழ இகாரசும் தொடர்ந்திருக்கிறார்.

நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.

1. மைலாப்பூரில் இருக்கும் வீட்டில் இருந்து 5-கே பிடித்தால் தரமணி செல்லும். அங்கேதான் சி.எஸ்.ஐ.ஆர். இருக்கிறது. இரண்டு மாச ப்ராஜெக்ட். ஊழியம் செய்பவர்களே உல்லாசமாக இருப்பதால், விருப்பபட்டதை செய்து முடித்தால் போதும். எனினும், நிறைய சாதிக்க வேண்டும் என்னும் வெறி. பெரிய நூலகம். மேல் அடுக்கில் தேவைப்படும் புத்தகத்தை எடுக்க ஐந்தடி ஐந்தங்குலத்தில் இருந்தாலும், உச்சாணிக் கொம்பில் ஏறும் மன உறுதியுடன் தாவி எடுத்ததில் பாண்ட் ‘டர்’ சத்தம் போட்டது.

பாதுகாப்பான இடத்துக்கு சென்று, ஆராய்ந்ததில் கிழிந்தது தெளிந்தது. காலை பத்து மணிக்குக் கிழிந்த கால்சட்டையுடன் மாலை ஐந்து மணி வரை நாசூக்காக, எவருக்கும் வெளிக்காட்டாமல் பணியகத்தில் காலந்தள்ளியது முதற்கட்ட சாதனை. அதன் தொடர்ச்சியாக பேருந்து நிறுத்தத்தில் கடைசியாக ஏறி, ப்ரொஃபஷனலாக சாய்ந்து அட்ஜஸ்ட் செய்து, மயிலை குளத்தில் ஸ்டைலாக இறங்கி. புத்தகத்தை பின்வாக்காக வைத்து, மறைத்து, சீட்டியடித்து வீட்டுக்கு வந்தது பெருஞ்சாதனை.

2. வீடு வாங்கினால் தோட்ட வேலை, களை பிடுங்கல், தண்ணீர் பாய்ச்சல், மராமத்து பார்த்தல், பனி நீக்கல், இலை திரட்டல் என்று வீட்டு வேலை குவியும். அதைத் தவிர்க்க டிமாண்ட் x சப்ளை, பூம் x பஸ்ட் என்று தேவையான அளவில் மேக்ரோ, மைக்ரோ பொருளாதாரத்தை வாதிட்டு மனைவியை பயமுறுத்தி, வாடகை வீட்டிலேயே அமர்த்தியது முதல் சாதனை.

நாளிதழ் படித்து, நாட்டுநடப்பு ஆராய்ந்து மனைவிக்கு பொருளியல் கொள்கைகளில் எதிர் கருத்துக்களை வைக்கத் தெரிந்தவுடன் ‘ஃப்ளாட்’ வாங்கி, எல்லாவற்றையும் அவுட்சோர்ஸ் செய்துவிட்டு, தொடர்ந்து வலைப்பதிவதற்கு சால்ஜாப்பு கண்டுபிடிப்பது பெருஞ்சாதனை.

3. ‘இந்தியன்’ படம் பார்த்தால் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் எப்படி வழங்கப்படுகிறது என்று தெரியும். இண்டெர்நேஷனல் ட்ரைவிங் லைசன்சும் அப்படித்தான் கைக்கு கிடைத்தது. சைக்கிள் ஓட்டத்தெரியாது. பைக் பின்னாடி உட்கார கூட பயம். சாலை விதிகள் எல்லாம் நடராஜாவாக மட்டும் அறிவேன். ஸ்டியரிங் தெரியும்; ப்ரேக் தெரியும். அதை வைத்து நியுஜெர்சியில் இருந்து, நூறு மைல் தூரம் தள்ளியுள்ள நியு யார்க் மாநகரம் வழியாக லாங் ஐஸ்லண்ட் செல்ல முடிவெடுத்தது முதல் சாதனை.

வண்டியை நெடுஞ்சாலையில் இருந்து வேகத்தைக் குறைத்து வெளியேற்றத் தெரியாமல், விளக்குக் கம்பத்தில் மோதி, டயர் பஞ்சரான பிறகும், வெறும் சக்கரத்தின் துணையோடு, தீப்பொறி பறக்க, சுற்றி ஓட்டுபவர்கள் கதிகலங்க, அஞ்சாநெஞ்சனாக, இலக்கை அடையும் வரை காரையும் உயிரையும் கையில் பிடித்து ஓட்டிசென்றது பெருஞ்சாதனை.

4. பின் லாடன் செப் 11 அரங்கேற்றி வேலை வாய்ப்பைக் குறைத்த காலம். எச்-1பி விசாவில் இருந்தேன். 9-5 என்று செக்காட்டியது போதும் என்று கழற்றி விட்டார்கள். தொலைத்தொடர்புத்துறை படுத்துக் கொண்ட நேரம். அந்தத் துறையில் இயங்கிய என் நிறுவனமும் திவால் ஆகியது. பழைய கம்பெனியில் என்னுடைய புத்தம்புதிய நிரலியின் ஐந்து நிமிட சேமிப்பினால் 9,600,000 டாலர் சேமிப்பு ஏற்பட்டது என்று கணக்கு காட்டியது சாதனை.

அதை நம்பி வேலைக்கு எடுத்துக் கொண்ட இடத்தில் இன்னும் காலந்தள்ளுவது பெ.சா.

5. லண்டனுக்கு இதுவரை சென்றதில்லை. ஹீத்ரோவில் கால் மட்டுமே பதித்திருக்கிறேன். ஹனிமூனுக்கு எங்கு செல்லலாம் என்று தோழி வினவுகிறாள். கிறிஸ்துமஸ் சமய லண்டனை விவரிக்க ஆரம்பிக்கிறேன். அவளுக்கு என்னைத் தெரியும். புதுகணவன் ‘எத்தனை முறை சென்றிருக்கீங்க?’ என்று கேட்டது சா.

இன்றளவும் ஆஸ்திரேலியா, அமேசான் என்று அனைவருக்கும் வாய்ப்பந்தலிலே திட்டம் தீட்டித் தருவது பெ.சா.

6. பேய்கள் என்றால் பயமில்லை (E – T a m i l : ஈ – தமிழ்: ஆவியுலக அனுபவங்கள்) என்று சொல்லிவிட்டு மூன்றடுக்கு வீட்டில் தன்னந்தனியாக ‘பூத்’ பார்க்க விழைகிறேன். இருபது இன்ச் டிவி ரொம்ப பயமுறுத்தவில்லை. நடுநிசி வரை நிம்மதியாகப் பார்த்து முடித்துவிட்டு, வராத ஜி-மெயில்களை மீண்டும் எதிர்நோக்கி சரிபார்த்து, தூங்கப் போவதற்கு முன் பாத்ரூமில் நுழைய கதவைத் திருகினால் ‘ஷாக்’.

கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் எவரும் வந்திருக்க வாய்ப்பே இல்லை. வாசற்கதவிற்கு அருகே தேவுடு காத்து, சோபாவில் இருந்திருக்கிறேன். வெலவெலத்தாலும், பூட்டை வெளியில் இருந்து திறந்து, தெரிந்த எல்லா சுலோகங்களும் முனகிக் கொண்டே, ‘காற்று பலமா அடிச்சிருக்கணும்!’ என்று அறிவியல்பூர்வமாக தெளிந்தது சா.

பாத்ரூமுக்கு வந்த காரியத்தை முடித்துவிட்டு, கண்ணாடியில் இன்னும் சிலர் தெரிவது போல் தெரியும் என்று அனுமாணித்து, மூக்குக்கண்ணாடியைக் கழற்றி வைத்து -5 பவர் கொண்ட் அரைக்கண்ணுடன் முகக்கண்ணாடி தரிசித்து, வீட்டிற்குள் ஏதாவது இருக்குமோ என்று பயத்தில் சிறப்பு சாமிகளை அழற்றிவிட்டு, உறங்கிப் போனது பெ.சா.

7. மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் மதியம் ஒன்றரை வரை நித்திரை பயின்றது கல்லூரி சா.

குளிர்காலத்தில், தண்ணீரை வெந்நீராக்கி, அந்த வெம்மை அரை நிமிடத்தில் காற்றில் கரைவதற்குள் குளிக்கப் பொறுமையின்று பதினேழு நாள் முழுகாமல் இருந்து, ஆஃப்டர் ஷேவ் மட்டும் ப்ரோஷணம் செய்து மணம் பரப்பியது பெ.சா.

8. எண்ணி ஒரு குறிப்பிடத்தக்க செயலை விளையாட்டிலோ, சமூகத்திலோ, படிப்பிலோ, தொழிலிலோ, குடும்பத்திலோ பாடல் பெறுமளவு சாதனை செய்யாமலே எட்டைப் பட்டியலிடுவது சா.

‘இவன் இயல்பாகவே அவையடக்கமும் கூச்சமும் கொண்டவன் போல’ என்னும் இமேஜை பாதுகாப்பது பெ.சா.

இனி ஆட்டத்துக்கு அழைக்கும் எட்டு பேர்.

1. இலவசகொத்தனார்
2. ஜி
3. பொன்ஸ்
4. பத்மா அர்விந்த்
5. சோடா பாட்டில்
6. நிர்மல்
7. கப்பி
8. வெட்டி

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

US Elections – Recap (2004 & 2006)

Boss of Sivaji Spoilers – Fult(h)an Boston

 • தமிழ் கலாச்சாரம் என்கிறார்கள். கோவிலில் தொழுவது, தாவணி போடுவது என்று சொன்னாலும்… தமிழரின் கலாச்சாரம் திரையரங்குதான் என்பது போல் பாஸ்டனில் மட்டும் பதினைந்து காட்சிகள் நிறைவரங்காக திரள்கிறார்கள். ஆன்மிகமாக விவேக் தேட சொல்கிறார். தமிழ்ப் பெண்களைத் தேட வேண்டிய இடம் சினிமா கொட்டகை.
 • ‘யு’ என்று போட்டாலும் ஷிட் என்று எஸ்-வோர்ட் வருவதால் ஆங்கிலத்தில் ஆரே போட்டு விடுவார்கள்.
 • ஓவர் டு சில வசனங்கள்
  • காசு கொடுக்கலேன்னா கக்கூஸ் கூட கட்ட முடியாது.
  • தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கறுப்பை பத்தியும் பேசக் கூடாது
  • பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலியே! டிகாஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு.
  • (மிளகாயாக விழுங்குவதைப் பார்த்து) பில்லி சூனியம் கேள்விப்பட்டிருக்கேன்… இது சில்லி சூனியம்
  • பழக பழக என்று வரவேற்கிறோம்!
  • (பல அர்த்தத்தைக் கொடுக்கவல்ல) ஆரம்பத்தில் எல்லாரும் இப்படித்தான் சொல்வாங்க
  • காட்டிக் கொடுக்க சொல்றீங்களா?
   இல்ல… நட்டைக் காப்பாத்த சொல்றேன்!
 • இடைவேளைக்கு முன் சுமன் சொல்லும் அண்ணாமலை பால், பாட்சா ஆட்டோ, உழைப்பாளி கூலி உதிர்ப்பு… சீரியஸ் காமெடி
 • சென்னையில் ஜே-7 காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி செய்த புகாரின் அடிப்படையில் தலைவர் கைதாகிறார். J-7→ வேளச்சேரி. இது எம்.ஜி.ஆருக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இடம்: அங்கேதான் உள்ளாட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலின் வசிக்கிறார்.
 • படையப்பா‘வில் வாட் எ மேன் சொல்லவைத்த அசம்பாவிதம் போல் எதுவும் இல்லாமல் நெஞ்செல்லாம் நிமிர்த்தி வைத்திருக்கிறார்கள்.
 • ஆதியின் பதுக்கல் பணத்தை கறக்கும் காட்சி, திருவிளையாடல் ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் x தனுஷ் கல்லறைப் பணப்பெட்டி பரிமாற்றத்தை நினைவுறுத்தினாலும், தி.ஆ காட்சியமைப்பு மச் மச் பெட்டர்.
 • ஷங்கருக்கு லாஸ் வேகாஸ் ரொம்பப் பிடிக்கும் என்று தெரிகிறது. டிஸ்னி, யூனிவர்சல் என்று சுற்றுலாவும் சென்றிருக்கிறார் என்று அறியப் பெறுகிறோம்.
  • வேகாசின் மிராஜ் ↔ வாஜி வாஜி;
  • பெலாஜியோ ↔ சஹானா;
  • எம்.ஜி.எம். டிஸ்னி சண்டைக்காட்சிகள் ↔ ட்ரைவ் – இன் கார் துரத்தல்
 • வியன்னா-வின் முகமூடிகளும், முதுமை நீங்கிய முக்காபலாவின் கலைவையுடனும் ‘அதிரடி மச்சான்!’ – ரொம்ப நாளைக்கு பேர் சொல்லும் பாடல்
 • ஜெயா டிவி மைக் கூட சிவாஜி முன் நீட்டப்படுகிறது. படம் தாமதம் ஆன வேகத்தில் ஆட்சி கூட மாறிவிடலாம் என்னும் பாதுகாப்பு கலந்த புரிந்தூனர்வு போல.
 • மேலும் ஒரு முக்கிய தகவல்: நயந்தாராவுக்கு innie; ஷ்ரியாவுக்கு outie.

பள்ளியில் இருந்து வந்த மகள் என்னிடம் ‘அப்பா ஒரு ரகசியம்’ என்றாள்.

மிரட்சியுடன் ‘பத்திரமா வச்சுக்கறேன்… சொல்லு’ என்றேன்.

‘S-இல் ஆரம்பிக்கும் ரெண்டு கெட்ட வார்த்தை கத்துண்டேன். யாரிடமும் சொல்லக்கூடாதவை’ என்கிறாள்.

‘எனக்கு ஒண்ணுதானே தெரியும்!’

“They are very bad words pa.”

“What are they!!?”

“One is ‘Shut-up’ and the other is ‘Stupid'”!

‘ஓ…’! கொஞ்சம் சிரிப்பு & பெருமூச்சு.

செய்தித்தாளில் F***, B*****d என்று போட்டு பலுக்கப் பிழையில்லாமல் புரிந்துகொள்ள வசதிப்படுத்துவது போல் ஆதி… நீ ஒரு *தி… என்று சொல்ல வந்தேன்; ஆனால் கபோதி என்று மூடிக்கிறார்கள்.

பலரும் சொல்வது போல் படம் நெடுக பாடல் காட்சியில் மட்டுமே சங்கர் ‘உள்ளேன் அய்யா’. மற்ற இடங்களில் அந்நாளில் ‘அண்ணாமலை‘ இயக்கப் பணித்தபோது வசந்த் சொன்னது போல் ‘ரஜினி படத்துக்கெல்லாம் இயக்குநர் எதுக்குய்யா! குப்பத்து ராஜாவில் இருந்து ரெண்டு சீன்; இன்னும் அங்கே இங்கே என்று பீராஞ்சாலே போதுமே’ என்று டபாய்த்திருக்கிறார்.

‘அன்னிய’னின் நேரு ஸ்டேடியம், ‘இந்திய’னின் நிழல்கள் ரவி லைவ் ரிலே, ‘ஜென்டில்மேன்’ நீதிமன்றம், ‘முதல்வன்’ இன்டெர்வ்யூ எல்லாம் கேட்கவில்லை. மினிமம் கியாரண்டியாக ‘பாய்ஸ்’ பெற்றோர் மீட் கூட அமையாதது ரஜினியின் பயந்தாங்கொள்ளித்தனமாகக் கூட இருக்கலாம்.

துடிக்கும் கரங்க‘ளில் ஜெய்சங்கர் வில்லனாக பணம் பறக்கவிட்டு ஏழைச் சிறுவனை இடைவேளைக்கு முன் சாவடித்து அகமகிழ்வார். இங்கே வில்லன், பணத்துக்காக மிதிபட்டு மரணமுறுவதை மொட்டை பாஸ் சிரித்து புளகாங்கிதமடைகிறார்.

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் Republican கட்சியின் தாரக மந்திரம்:

 • வரியைக் குறைப்போம்; வருமான வரியே போடாத நிலைக்கு இட்டுச் செல்வோம்!
 • அரசாங்கம் ஒதுங்கி நிற்கும்; சேவைகளை சமுதாயமே தன்னிறைவாக்கிக் கொள்ளும்!
 • மக்களே அனைத்துக்கும் முனைப்பெடுக்க வேன்டும்;
 • முதலாளிகளை முன்னிலைப்படுத்தும் முகமாக பொதுப்பணித்துறை அடக்கி வாசிக்கும்.
 • எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்களை சார்ந்திராத நிலையை உருவாக்கித் தருவோம்!

சிவாஜி சொல்வதும் அதுதான்.