Daily Archives: ஏப்ரல் 4, 2007

குணச்சித்திரம் : 1 – ஐ(இ)காரஸ் பிரகாஷ்

இந்தத் தொடரைப் பதிந்து வைக்கலாம் என்றவுடன் பத்ரி, மூக்கன், மதி, ஆசிப், குசும்பன் போன்ற வலையோர்கள் ஞாபகம் வந்தார்கள். அவர்களைக் குறித்த என் அனுமானங்களையும் சந்தித்த சரித்திரங்களையும் நினைவுக்கு எட்டிய வரை குறிப்பதாக திட்டம்.அமெரிக்க டிவியில் தொடர்கள் ஒளிபரப்பாவதற்கு ஒத்திகையாக வெள்ளோட்டத்தை pilot என்றழைத்து ‘புலி வருது’ கணக்காக மார்க்கெட்டுவார்கள். அந்த மாதிரிதான் பிரகாஷை பிள்ளையார் சுழியிடுவது.

இணையத்தில் வளைய வந்ததை வைத்து, கண் கட்டிய நிலையில் கொம்பைக் கொண்டு உறி அடிப்பது போன்ற விளையாட்டு. சில சமயம் துணியை சரியாகக் கட்டாததல் இலக்கு துல்லியமாகத் தெரியும். சுற்றி விடுபவரே pinata-வுக்கு 180 டிகிரியில் நிற்கவைத்து அனுப்பும் போங்கும் நடக்கும். கன்ணாடியைக் கழற்றினாலே முழுக்குருடான என்னைப் போன்றோருக்கு யானையைத் தடவி அறியும் பயிற்சியாகவும் கொள்ளலாம்.

ஒரே வாரத்தில் வழக்கு விழுந்தால், காலைக் கையைப் பிடித்தால், இளகும் தன்மை உடையவர். அவரை வைத்தே மண்டகப்படியை ஆரம்பிக்கலாம்.

எல்லா நல்ல எழுத்தாளர்களைப் போல் ஆரம்பத்தில் புயலென்று வந்தவர். ராயர் காபி க்ளபில் நுழைந்த போது இருந்த வீரியம் குரல்வலை: பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்! போன்ற பின்னூட்டங்களில் எப்போதாவது இன்னும் எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.

ஆறும் அது ஆழமில்ல‘ என்பது போல் அழுத்தம் ஜாஸ்தி. அந்தளவு போட்டுப் பார்ப்பதில் வல்லவர் என்பதை வெளிக்காட்டாமல் மந்தமாக இருப்பதே கஷ்டமான சாமர்த்தியம். ஆனால், புரை தீர்ந்த நன்மை தரும் லாவகத்துடன் ‘எடுக்கவோ, கோர்க்கவோ‘ என நம்மிடம் கையாள்பவர்.

பிரகாஷை இரு முறை நேரில் சந்தித்திருக்கிறேன். எழுத்தைப் போலவே எளிமையான, முதிர்ச்சியான 😛 தோற்றம். சூப்பர் ஸ்டார் ரசிகன் என்பதற்கேற்ப பேச்சில் வேகம். தள்ளி விலகாமல் நொடியில் அரவணைக்கும் நட்பு பாராட்டுதல். ITC பங்கை வாங்கி வைக்கச் சொல்லும் பழக்கம்.

பிரகாஷின் எழுத்தில் உள்ள நெகிழ்ச்சி, பேச்சில் மிஸ்ஸிங். அது எனக்கு ஏமாற்றமா என்று சொல்லத் தெரியவில்லை என்கிறார் மூக்கு சுந்தர். திண்ணையில் தனது குருவை விவரிக்கும் ஜெயமோகன் ‘அவரே தன் கல்வியை வெளிக்காட்டும் தருணங்கள் குறைவு. நாம் கேள்வி கேட்கையில் அவர் அதற்கான சிறிய ஆனால் கச்சிதமான விளக்கத்தை அளிப்பார்’ என்பார்.

இது இரண்டுக்கும் நடுவாந்தரமான கேந்திரத்தில், விவாதத்தை வளர்க்க, தொய்வு ஏற்படும்போது வெட்டிப் பேசுபவர்.

ராயர் காபி க்ளபில் இரா முருகன், வெங்கடேஷ், பாரா, எல்லே ராம், சொக்கன் என்று பஞ்ச பூதங்கள் ரஷித்தால், பாஞ்சாலியாக எல்லோரையும் மேய்த்தவர். பாஞ்சாலிக்கு கர்ணனையும் பிடிக்கும் என்பதுபோல் மரத்தடி பக்கமும் ஒதுங்கி பங்கெடுத்தவர். திரௌபதியின் வெளிப்படையான துடுக்குடன் Maraththadi : Message# 10053 மிளிர்ந்தவர், வானபிரஸ்தம் மேற்கொண்ட க்ளபிற்குப் பிறகு, விஸ்வரூபம் காட்டாமல், கில்லிக் குடுவையில் அடைந்து கிடக்கிறார்.

Pathbreaking-ஆக தனிப் பதிவில் குடித்தனம். மெத்தனமான தமிழ்ப்பதிவுகளுக்கு சூடான முன்னோடி ஒருங்கிணைப்பாக கில்லி. தமிழரின் தொன்மையான பற்றுக்களமான படத்திற்காக ட்ரிவியாபேட்டை.

இனிமையான மேலாளர்க்குரிய குணங்களாக சிலதைப் பட்டியலிடலாம்

 • ப்ரொஃபஷனல் & பெர்சனல் டச் வேண்டும்.
 • சிஈஓ, சி.எஃப்.ஓ போன்ற மாடி ரூம் சன்னலோரவாசிகளை குஷிப்படுத்த வேண்டும்.
 • ப்ராஜெக்ட் மேனெஜர், பிஸினஸ் அனலிஸ்ட் இடையே போதிய அரசியல் புகை வரவழைக்க வேண்டும்.
 • இதெல்லாம் செய்ய வேண்டும் என்று படித்து அறிந்தவரும், உணர முடியாதவாறு இவற்றை இயல்பாக்க வேண்டும்.

பிரகாஷ் அருமையான ஆதர்ச மேலாளரும் கூட.

பதிவில் எப்படி நகைச்சுவை இழையிட வைப்பது, என்ன வெரைட்டி கொடுக்கலாம் என்று குழம்பினாலோ, அலுத்தாலோ, ஆதி ராயரில் Icarus என்று தேடி மெல்லுங்கள். எழுத விஷயம் கிடைக்கவிட்டாலும், இனிமையான நேரங்கழித்தலுக்கு நான் உத்தரவாதம்.

வழக்கம் போல் சில சுட்டிகள்:

 1. My Nose – விரதம்..?? !!!
 2. ஈ-தமிழ்: Chat Meet – Icarus Prakash
 3. Prakash’s Chronicle 2.0

Tamil Quotes to chew

ஜெயமோகன் (நித்ய சைதன்ய யதி நினைவு)

உண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.

காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலை கூறுபோடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள் வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக்கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்கவேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்.

ஜெயமோகன் (பேராசிரியர் ஜேசுதாசன் நினைவு)

சான்றோர் (திறனாய்வாளர்கள்) நான்கு அம்சங்களைக் கொண்டவராக இருப்பார்.

 1. கல்வி
 2. அழகியல் உணர்வு
 3. அறச்சார்பு
 4. நயத்தக்க நாகரீகம்.

பாவண்ணன் (உயிர்க்கோடுகள் . கே.எம்.ஆதிமூலம், கி.ராஜநாராயணன். தொகுப்பு: புதுவை இளவேனில். அகரம் பதிப்பகம்)

மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத அரசு நிர்வாகம் அந்தச் சோர்வின் பின்னணியில் உள்ளது. மக்களுக்காக உழைப்பதற்காக உருவாகும் (அரசு) நிர்வாகம் தன் வளர்ச்சிப்போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தெரியாத அகங்காரம் நிறைந்த உறுப்பாக மாறிவிடுகிறது. அது வழங்கும் கசப்புகளை விழுங்கும் (விவசாயியின்) முகத்தில் சோர்வைத் தவிர வேறு எதைப் பார்க்கமுடியும்?

Quotes to chew

 • If ever I was sure that someone was coming to help me, I should run like hell.- Thoreau
 • For a moment the lie becomes the truth – Dostoevsky
 • God is a comedian playing to an audience too afraid to laugh. – Voltaire