Art Appreciation & Classics Introduction Series – PA Krishnan


முந்தைய பதிவின் தொடர்ச்சி. தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

மரணத்தின் கலை
1

ஓவியங்களைப் பற்றி, குறிப்பாக மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி, எண்ணற்ற விவரங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த விவரங்கள் வியப்பளிப்பவை. ஆனால் ஓவியங்களைப் பற்றிய ஒரு தெளிவை நோக்கி நம்மை இட்டுச் செல்ல இயலாதவை. தெளிவிற்கு இன்றும் புத்தகங்கள்தான் தேவைப்படுகின்றன.

நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் E.H.கோம்பிரிட்ஜ் (இவரது மகன் இந்திய கலை அறிஞர்களில் ஒருவர்) எழுதிய கலையின் கதை என்ற புத்தகம். என்னிடம் இருப்பது 1992 ம் ஆண்டு வெளிவந்த பன்னீரண்டாம் பதிப்பு. இன்று வரை உலகெங்கும் பதிப்பில் இருக்கும் புத்தங்களில் இதுவும் ஒன்று.

கோம்பிரிட்ஜ் கூறுவது இது:

(கலையைப் பற்றி சிறிது ஞானம் பெற்றவர்களில் சிலர்) ஒரு படைப்பைப் பார்க்கும் போது அதை நிதானமாகப் பார்ப்பதில்லை; மாறாக தங்கள் மூளையைக் குடைந்து அந்தப் படைப்பிற்குத் தகுந்த லேபிளைத் தேடுகிறார்கள். உதாரணமாக, ரெம்பிராண்ட் chiaroscuro (ஒளியும் நிழலும்) என்ற நுட்பத்திற்குப் புகழ் பெற்றவர். இவர்கள் எந்த ரெம்பிராண்டின் ஓவியத்தைப் பார்த்தாலும் தங்களுக்குள் ‘அருமையான chiaroscuro’ என்று முணுமுணுத்துக் கொள்வார்கள், உடனே அடுத்த ஓவியத்திற்கு நகர்ந்து விடுவார்கள்… கலையைப் பற்றி கெட்டிகாரத்தனமாக பேசுவது அவ்வளவு கடினம் அல்ல. ஏனென்றால் கலை விமர்சகர்கள் பல சொற்களை பல வேறு பட்ட தருணங்களில் பயன் படுத்தியிருப்பதால் இச் சொற்கள் அவற்றின் துல்லியத்தை இழந்து விட்டன. ஓர் ஓவியத்தை களங்கமற்ற கண்களால் பார்த்து ஒரு கண்டுபிடிப்புப் பயணத்தைத் தொடங்குவது (கெட்டிக்காரத் தனமாக பேசுவதை விடக்) கடினம் மட்டும் அன்று, பயன் அளிப்பதும் கூட. பயணம் முடிந்து திரும்பி வரும் போது எந்தப் புதையலைக் கொண்டு வருவோம் என்று சொல்ல முடியாது.

இருந்தாலும் ஒரு ஓவியத்தின் நுட்பங்களை உணர்வதற்கு சிறிதளவாவது ஓவியங்களைப் பற்றிய புரிதல் தேவை. நம்மில் பலருக்கு அந்தப் புரிதல் இல்லாததாலேயே, அவர்கள் தங்கள் தேடலை ஒரு மிக குறுகிய வட்டத்திற்குள் அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மற்றொரு சிறந்த விமரிசகர் கூறுகிறார்: ‘எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு நிச்சயம் தெரியும்‘ என்று ஒருவர் சொன்னால் அதன் பொருள் அநேகமாக ‘எனக்கு என்ன தெரிந்ததோ அதுதான் எனக்குப் பிடிக்கும்‘ என்றுதான் இருக்கும்.

நமது பத்திரிகைகளில் வரையப் படும் ஓவியங்கள் (படங்கள்?) நமக்குப் பிடித்திருக்கலாம். தவறே இல்லை. ஆனால் இவற்றைத் தவிர வேறு ஓவியங்கள் பக்கமே போக மாட்டேன் என்று கூறுவது எனக்கு ஆத்திச்சூடி பிடிக்கும் அதனால் மற்ற கவிதைகள் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்பது போல.


2
போன இதழில் நாம் எகிப்திய ஓவியங்களைச் சந்தித்தோம். எகிப்திய ஓவியங்களில் கண்கள் வரையப் பட்டிருக்கும் விதம் பற்றியும் விவாதித்தோம். இயற்கையை அவர்கள் உன்னிப்பாகப் பார்த்து அதை வரைய முற்பட்டது அதிசயம் தருவது. ஆனால் அவர்கள் ஓவியங்களை அணுகிய விதம் வித்தியாசமானது. அவர்கள் தங்கள் நினைவின் துணை கொண்டு வரைந்தார்கள். அவ்வாறு வரைவதற்கு அவர்கள் சில மாற்ற முடியாத விதி முறைகளைக் கடைப் பிடித்தார்கள் என்பதும் தெளிவு. (உட்கார்ந்து கொண்டிருக்கும் கடவுளர்கள் அவர்களது கைகளை முட்டுக்களின் மீது வைத்திருக்க வேண்டும்; ஆண்கள் உருவங்கள் எப்போதும் பெண்களுடையவையை விட நிறம் மட்டாக வரையப் பட வேண்டும்.) இந்த விதிகள் எதை வரைந்தாலும் அது தெளிவாக இருக்க வேண்டியதையும் எதைப் பார்க்கிறோம் என்பதை பார்ப்பவனை உணரச் செய்ய வேண்டும் என்பதையும் கோடிட்டிருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.

தீப்ஸ் நகரத்தில் இருந்த ஒரு கல்லறைச் சுவரில் வரையப் பட்ட ஒரு குளம் மற்றும் அதன் சுற்றுபுறத்தின் ஓவியம். தற்போது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இந்த ஒவியத்தில் பல வகை மரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மரங்கள் ஓவியத்தின் விளிம்புகளில் ஒரு மாலை போல குளத்தைச் சுற்றியிருக்கின்றன. ஒரு மரத்தை அதனை தரையிலிருந்து பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்பதை சித்தரிப்பதே சரியாக இருக்கும் என்பதை இந்தக் கலைஞன் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆனால் குளத்தைத் தரையிலிருந்து பார்ப்பது போல வரைந்தால் குளத்தில் இருக்கும் பறவைகளை சரியாகச் சித்தரிக்க முடியாது என்று அவன் நினைத்திருக்கலாம். ஒரு வேளை குளத்தை அவ்வாறு வரைவது ஒரு விதியாகக் கூட இருந்திருக்கலாம். எது எப்படியோ குளம் ஓவியத்தின் நடுவில் ஒரு செவ்வகம் போல வரையப் பட்டிருக்கிறது. வானத்திலிருந்து ஒரு குளத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனால் குளத்தின் உள்ளிருக்கும் பறவைகளும் பூக்களும் குளக்கரையிருந்து பார்த்தால் எப்படித் தோன்றுமோ அப்படித் தோன்றுகின்றன.

எனக்கு இந்த ஓவியத்தைப் பார்க்கும் போதெல்லாம் பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையில் (ரத்தின நாயக்கர்& சன்ஸ்?) வரையப் பட்ட ஓவியங்களின் நினைவு வருகிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வெளிவந்தது சென்ற நூற்றாண்டின் முந்தைய ஆண்டுகள் என எண்ணுகிறேன். எகிப்திய ஓவியங்கள் வரையப் பட்டது ஏறத்தாழ 3400 வருடங்களுக்கு முன்னால். நமது தஞ்சாவூர் கிருஷ்ணன் போல எகிப்திய ஓவியங்களிலும் ஓவிய நாயகன் (அல்லது நாயகி) கிட்டத்தட்ட ஓவியம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்கிறார். மற்றவர்கள் அனைவர்களும் வாமனர்கள்.

எகிப்திய ஓவியங்களில் என்னைக் கவர்ந்த இன்னும் இரண்டு ஒவியங்களை குறிப்பிட்டாக வேண்டும்.

நீர் யானை வேட்டை என்ற ஒரு ஓவியம். இது 4500 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்டது. ஓவியத்தின் நாயகன் கல்லறையின் துயிலும் மனிதன். அவனுக்கும மேலே பேபிரஸ் மரம் ஒன்று. மரத்தில் வேட்டையாடும் சிறிய பிராணிகள் ஏறிக் கொண்டிருக்கின்றன. பறவைகள் அவற்றைக் கண்டு அங்கும் இங்கும் பறக்கின்றன. நாயகன் காலடியில் படகு. முன்னால் மற்றொரு படகில் வேட்டையாடுபவர்கள். பின்னால் ஒரு படகு. படகுகளுக்குக் கீழே அல்லாடும் பல மீன்கள், நீர் யானைகள். நீர் யானைகளும் மீன்களும் ஒரே அளவு. இந்த ஓவியத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் தாங்கள் உயிர் உள்ளவை என்பதை நமக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன. நாயகன் நடுவில் விரைத்து நிற்கிறான். மற்றவை அனைத்தையும் விட பரிமாணத்தில் பெரியவனாக. ஆனால் அவன் இந்த உலகில் இல்லாதவன் என்பது நமக்கு ஓவியத்தைப் பார்த்த உடனேயே தெரிந்து விடுகிறது. வாழ்க்கையின் பருவ மாற்றங்களை அவன் தொடர்ந்து மரணத்திற்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கிறான். வரைந்தவன் இங்கு உழல்பவன். அவன் தான் பார்த்தவற்றை ஓர் உயிர்ப்போடு வரைந்திருப்பதால் இந்த ஓவியம் இறவாத் தன்மை பெறுகிறது.

ஆற்றைக் கடக்கும் பசுக்கள் என்பது அடுத்த ஓவியம். இந்த ஓவியத்தில் பசுக்கள் முன்னால் மாடு மேய்ப்பவன் செல்கிறான். அவனது தோளில் ஒரு கன்றுக் குட்டி. தோளில் இருக்கும் பாரம் அவனை அழுத்துகிறது. கன்றுக்குட்டி பயத்தில் தலையைத் திருப்பி தனது தாயைப் பார்க்கிறது. பசுக்களின் தலை அசைவுகள் அவை முன் நோக்கிச் செல்கின்றன என்பதை நமக்கு அறிவிக்கின்றன. இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு அசாதாரணத் திறமை படைத்தவன் என்பதில் ஐயம் இல்லை.

எகிப்தைப் பற்றிப் பேசும் போது நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீர் யானை வேட்டைக்கும் தீப்ஸ் நகரக் குளத்திற்கும் உள்ள இடை வேளை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள். நமக்கும் ராஜ ராஜ சோழனுக்கும் உள்ள இடை வேளை.


3

எகிப்திய கல்லறைகள் அவை கட்டப் பட்ட காலத்திலிருந்து திருடப் பட்டு வந்தன. கல்லறைகள் சுவர்களில் எழுதப் பட்டிருந்த சாபங்கள் எல்லாம் திருடர்களைத் தடுத்ததாகத் தெரியவில்லை. எனவே திறக்கப் படாத கல்லறை ஒன்று கிடைப்பது நடக்க முடியாத ஒன்று என்று சென்ற நூற்றாண்டின் முதல் ஆண்டுகள் வரை பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். 1923 ம் ஆண்டு ட்யூடன் காமன் என்ற ஃபாரோவின் கல்லறை கண்டு பிடிக்கப் பட்டது. 18 வயதில் இறந்த இவர் இன்று உலகிலேயே மிகப் புகழ் பெற்ற ஃபாரோ. காரணம் இவரது கல்லறை திருடர்களால் அதிகம் சேதப் படாத கல்லறை. இவரது சவப் பெட்டி தங்கத்தால் செய்யப்பட்டது எடை 100 கிலோவிற்கும் அதிகம். கல்லறையில் உள்ள ஒரு பெட்டியில் ட்யூடன்காமன் வேட்டையாடும் ஒரு காட்சி தீட்டப் பட்டிருக்கிறது. ட்யூடன்காமன் ஓரத்தில் தன்னுடைய ரதத்தில் உறைந்து காணப் படுகிறான். கையில் வில்லை வளைத்துக் கொண்டு நின்றாலும் அவனிடம் துடிப்பு இல்லை. முன்னால் மான்கள், பறவைகள், மானைக் குதறும் நாய் ஒன்று. எல்லா மிருகங்களும் ஒன்றை ஒன்று மிதித்துக் கொண்டு ஓடுகின்றன. உறைந்திருக்கும் ஃபாரோவின் அம்பிற்குப் பயந்து. இந்த ஓவியம் எனக்கும் மொகலாய ஓவியங்களை நினைவு படுத்துகிறது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் இருந்த இந்தத் தொடர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒன்று.

நமக்குக் கிடைத்திருக்கும் எகிப்திய ஓவியங்களில் அநேகமாக எல்லாமே மரணம் சார்ந்து இருப்பதால் எகிப்திய மக்கள் மரணத்தையே நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. கிடைத்ததைக் கொண்டு பழமைக்கு உருவமைக்கும் வேலை, மதனகாமராஜன் கதையில் தலைமயிரைக் கொண்டு இளவரசியின் உருவச் சிலையை அமைக்க முற்படுவது போன்றது.


4

கிரேக்க கட்டிடங்கள் இன்று வரை உலகெங்கும் பல கட்டிடங்களுக்கு முன் மாதிரியாக இருந்து கொண்டு வருகின்றன. டோரிக் மற்றும் ஐயோனியன் தூண்கள் இன்றும் சென்னை நகரில் பல கட்டிடங்களை அலங்கரிக்கின்றன. இதற்கு ஒரு காரணம் இந்தக் கட்டிடங்களின் எளிமையான வடிவமைப்பு. மற்றொன்று எவ்வளவு பெரிதாக இருந்தாலும் விரைத்துக் கொண்டு நிற்காமல், ஒரு அழகிய இயைபோடு தோன்றுகின்றன.

கிரேக்க ஓவியங்களில் நம் வரை வந்தவை மிகச் சிலவே. அவற்றில் பலவற்றிற்கு முன்னோடி எகிப்திய ஓவியங்கள்தான் என்பது தெளிவு. இந்த ஓவியங்கள் ஜாடிகள் (vase) மற்றும் மது அருந்தும் கோப்பைகள் (kylix) மீது வரையப் பட்டவை. இவற்றில் குறிப்பிடத்தக்க ஓவியங்களில் ஒன்று நியூ யார்க் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில் இருக்கும் மூன்றரை அடி ஜாடி ஒன்றின் மீது வரையப் பட்ட ஓவியம் ஒன்று. இதுவும் இறப்பைச் சித்தரிப்பது. ஆனால் இறந்தவன் இறந்தவனாகவே சித்தரிக்கப் படுகிறான். அவன் கிடத்தப் பட்டிருக்கிறான். அவன் இரு மருங்கிலும் பெண்கள் கைகளை தலைக்கும் பின்னால் வைத்துக் கொண்டு துயரம் காக்கிறார்கள். இந்த உலக வாழ்க்கை போலவே மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்க்கையும் இருக்கும் என்று கிரேக்கர்கள் எண்ணவில்லை. அந்த வாழ்க்கை ஒரு வண்ணமில்லாத நிழல் வாழ்க்கை.

ஹோமரின் இறந்த அக்கிலிஸ் ஒடிஸியஸிடம் கூறுவது இது: ஒடிஸியஸ், இறப்பைப் பற்றி உயர்வாகப் பேசாதே. நான் இந்த பாழிடத்தின் அரசனாக இருப்பதை விட பூமியில் ஒரு ஏழையாக வாழ விரும்புகிறேன். எனவே இறப்பு என்பதை ஒரு இழப்பாகவே கிரேக்கர்கள் நினைத்தார்கள். இந்த இழப்பு ஓவியத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.

மனித உடலை எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்க்கலாம், பார்த்ததை வரையலாம் என்பது மெல்ல மெல்ல கிரேக்க ஓவியர்களுக்கும் பிடிபட்டது. இது நடந்ததும் ஓவியக் கலையின் தளை உடைந்து விட்டது. “அஜாக்ஸும் அக்கிலிஸும் பகடை விளையாடுவது” என்ற ஒரு ஓவியம். மனித உடலுக்கும் வளைவுகள் இருக்கின்றன என்பதை ஓவிய வடிவில் காட்ட முயலும் ஓவியம். இந்த ஓவியத்தில் அக்கிலீஸின் இடது கையின் ஒரு சிறு பாகம் மட்டும் தெரிகிறது. ஓவியன் இரண்டு கைகளையும் ஓவியத்தில் வரைய வேண்டும் என்ற விதியை உடைத்து எறிந்து விட்டு இந்த ஓவியத்தை வரைந்ததாகத் தோன்றுகிறது.

ஓவியக் கலையின் திருப்பு முனை என்று சொல்ல வேண்டும் என்றால் மற்றொரு ஜாடி ஓவியத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். பெற்றோரிடம் விடை பெறும் போர் வீரன் என்ற இந்த ஓவியத்தில்தான் ஓவியன் ‘முன் குறுக்கம்’ (Foreshortening) என்ற உத்தியைக் கையாளுகிறான். இடது கால் விரல்கள் ஐந்து வட்டங்களாகத் தெரிகின்றன. ஒரு மனிதனுடைய கால் விரல்களை அவனுக்கு முன்னால் நின்று பார்த்தால் எப்படித் தெரியுமோ அப்படி வரைய இந்தக் கலைஞன் முயன்றிருக்கிறான். அவன் இடதுகால் அருகே சுவரில் ஒரு கேடயம் சாத்தப் பட்டிருக்கிறது. இந்தக் கேடயம் பக்கவாட்டில் வரையப் பட்டிருக்கிறது.

பார்ப்பதைப் படைப்பதற்கு விதிகள் தேவையில்லை என்பது மனிதனுக்கு கிட்டத்தட்ட அவன் ஓவியம் வரையத் தொடங்கி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே புரிந்தது.

பி.ஏ.கிருஷ்ணன்


| |

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s