Author & the Novel


புகழ் பெற்ற நாவல்களின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

1. “தோஸ்த், ஆஜ் நெட் பிராக்டிஸ் ஹை. ஜரூர் ஆஜாநா”, என்று நாஸிர் அலிகான் சொல்லிட்டுப் போனான். அந்த ஆண்டு கல்லூரி கிரிக்கெட் கோஷ்டிக்கு நாஸிர் அலிகானைத் தலைவனாக அறிவித்திருந்தார்கள். நாஸிர் அலிகான் ஒரு மொயினுத்தவுலா கோப்பை ஆட்டத்தில் பழம்பெரும் ஆட்டக்காரர்கள் மத்தியில் இடம்பெற்றுப் பத்தாவது நபராக மட்டையடிக்கச் சென்றாலும் பத்து நிமிஷத்திற்குள் முப்பத்தி மூன்று ஓட்டங்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தான். நானூறு மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரியில் நாற்பது பேர் தைரியமாக கிரிக்கெட் ஆடவருவார்கள். அந்த ஆண்டு என்றில்லை, இன்னும் பல ஆண்டுகளுக்கு நாஸிர் அலிகான் காப்டனாக இருப்பான் என்பதில் ஆருக்கும் சந்தேகம் கிடையாது. மாலையில் ஆட்டம் பழகிக் கொள்ளும் போதுகூட சில்க் ஷர்ட்டும் ஃப்ளானல் பாண்ட்டுமாக வரும் நாஸிர் அலிகான் இதற்கு முன்னர் சந்திரசேகரனுடைய ஆட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியச் சந்தர்ப்பமில்லாதிருந்தும் அன்று அவனைக் கல்லூரி நெட் ப்ராக்டிஸுக்குக் கூப்பிட்டிருக்கிறான். நாஸிர் அலிகான் அவனிடம் சொல்லிவிட்டுப் போனபின் சந்திரசேகரன் சைக்கிளின் சக்கரங்களை அழுத்திப் பார்த்தான். நல்ல வேளையாக இரு சக்கரங்களிலும் காற்று இருந்தது.

2. அது வேறு உலகம். பூமிப் பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக்கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.

கருவேலமரம், பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூராள்கொடி முதலான வானத்துக்குக் கோரிக்கை வைக்காத தாவரங்களும் –

நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் – கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண் மண்டலம்.

கரும்பாறையிலும் – சரளையிலும் – சுக்கான் கல்லிலும் முள் மண்டிய நிலங்களிலும் தொலைந்துபோன வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் பொழப்பு”.

3. வெளிச்சம் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும்.

வாசலைப் பார்த்தார் ஆனந்தரங்கர். இருட்டைப் பிசைந்து நீர் ஊற்றி மெழுகியது போல கருத்திருந்தது வாசல். உள்ளே வலப்பக்கத்து பூஜை அறையிலிருந்து, மெல்லிசாக வெள்ளை மஸ்லின் துணி விரித்தாற் போல, சாம்பிராணிப் புகை பரவிக் கூடத்துக்கு வந்த்து. அத்துடன் முத்துக்கொட்டை, வேம்பு, எண்ணெய், கடலை எண்ணெய், நெய் கலந்து எரித்த விளக்கிலிருந்து எழுந்த நெய் மணம் சுகமாய்ப் பரவியது. பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட ஆளுயரக் கடிகாரத்தில் மணி நாலு ஐம்பது ஆகியிருந்தது. ஆனந்தரங்கர் ஸ்நானம் முடித்து பூஜை புனஸ்கார நியமங்களையும் முடித்து வர்த்தகர்களுக்குரிய நீண்ட வெள்ளை அங்கியும், இடைக் கச்சையில் செருகப்பட்ட வாளும், தலைப்பாகையும் அணிந்து கூடத்து ஊஞ்சலின் மேல் மான் தோல் விரித்து அமர்ந்திருந்தார்.

மங்கைத்தாயம்மாள், பின்கட்டையும் கூடத்தையும் இணைக்கும் கதவை ஒட்டி நின்று தலையை நீட்டிக் கணவரை அவதானித்தாள். அவள் அதற்குள் ஸ்நானம் முடித்திருந்ததைத் தோளில் புரண்டு விழுந்த ஈரக் கூந்தலும், அதன் காரணமாய் நனைந்திருந்த ரவிக்கையும் உணர்த்துமாயிருந்தன. அக்னி நாக்கு மாதிரி நெற்றியில் மெல்லிய சூர்ணம் இட்டிருந்தாள். மாலை ஆகாச நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். தொண்டையைச் செருமிக்கொண்டு அம்மாள் சொன்னாள்.

“புது கவர்னரை வரவேற்கப் போக வேணும் என்று வார்த்தை வந்ததே!”

4. இந்தச் சின்ன ‘டாய்லெட்டில்’ உட்காரும் போதுதான் இந்த வீடு பெரிதாகத் தெரிகிறது.

ஒன்றையொன்றுடன் ஒப்பிடும் வகையில்தான், குளிக்கும் தொட்டியிலிருந்து, விஞ்ஞான உண்மை, நிர்வாணமாக வெளிவந்திருக்கிறது.

மரத்தடியில் இளைப்பாறும்போது, அதுவே ஆப்பிளாக விழுந்து, தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மரத்தடியில், தத்துவ த்ரிசனமும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால்,

இது போன்ற சின்ன டாய்லெட்டிலிருந்தவாறு, யாரேனும் ஒரு புதிய சிந்தனையை உலகத்தோடு பகிர்ந்து கொண்டதாக சரித்திரம் உண்டோ?

‘க்ளாஸ்டர் போஃபியா’ ஏற்படமாலிருந்தால் சரிதான். நான் வார்ஸாவுக்கு வந்த புதிதில், வீட்டைப் பற்றிய ஏமாற்றம் என் முகத்தில் தெரிந்தபோது, ‘சோஷல்பிரோ’ விலிருந்த அந்த அழகான பெண், முகத்தை சற்று சாய்த்து, புன்னகை ஒளிர சொன்னாள் – ‘விசிட்டிங் ப்ரொஃபஸர்’களுக்கு, அவர்கள் கிழக்கோ, மேற்கோ, எங்கிருந்து ‘விசிட்’ செய்தாலும் சரி, வெளி நாட்டினர்களுக்கு கொடுக்கப்படும் வீடுகளில், என் வீடுதான் பெரிது என்று.

மேஜையின் இழுப்பறையிலிருந்து ஓர் ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டு அவள் இன்னுமொன்றும் சொன்னாள். ‘இது உங்களுக்குச் சிறிய வீடாகத் தோன்றினால் வார்ஸா பல்கலைக்கழகப் போலிஷ் ப்ரொஃபஸர்க்ளுடைய வீடுகளைப் போய்ப் பாருங்கள். உங்கள் வீடு, எவ்வளவு பெரிதென்று உங்களுக்குத் தெரியும்!’

5. குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள்.

ராணி சொன்னாள்.

ராஜா பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை நிறைத்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

அழகான ராணி. இளவயசு கடந்து கொண்டிருக்கிறது. முலைகள் இறுக்கம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து விட்டன. அரைக்கட்டு பெருத்துக் கொண்டு வருகிறது.

ஆனாலும் ராணி. ஐம்பதுகளின் அந்தப் பக்கம் இருக்கும் தன்னோடு ஒப்பிட்டால் இன்னும் சின்னஞ் சிறிசு தான்.

அவள் குளிக்கும்போது ஏன் பார்க்க வேண்டும் ?

தான் இதுவரை அவளைக் குளியலறையில் கதவைத் திறந்து போய் ஒரு தடவை கூடப் பார்த்தது இல்லை என்பது நினைவுக்கு வரச் சோழிகளைத் தரையில் பரத்தி வைத்தார் ராஜா.

அதில் ஒன்று உருண்டு வாசலுக்கு ஓட ஆரம்பித்தது.

முன்னோர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோழிக்குள் அவர்களில் யாரோதான்.

ராஜாவுக்கு இந்தக் குறுக்கீடு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தரங்கமாகப் புருஷனும் பெண்சாதியும் கதைத்துக் கொண்டிருக்கும்போது முன்னோர்கள், பின்னோர்கள், அரண்மனை ஜோசியன், மிளகாய்மண்டிக்காரன், சேடிப்பெண் யாரும் வருவது முறையானதில்லை.

பின்னோர்கள் சொன்னால் கேட்பார்கள். உடனே புரிந்து கொண்டு அவர்கள் காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்.

முன்னோர்கள் விஷயத்தில் இது எடுபடாது. அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். எந்த நிமிடமும் எங்கேயும் நுழைந்து அதிகாரமாக ஆலோசனை சொல்லி, பயமுறுத்தி, நம்பிக்கை அளித்து வழி நடத்திப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

ராணி குளிப்பதை யாரோ பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. ஏதோ தலை போகிற விஷயம் இருப்பதாக வெள்ளைச் சோழியில் புகுந்துகொண்டு அறிவிக்கிறார்கள்.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Advertisements

2 responses to “Author & the Novel

  1. வினா என் 2.
    கள்ளிக்காட்டு இதிகாசம்.
    சரியா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.