Daily Archives: ஜூலை 20, 2006

Six Word Stories

ஆறு வரிகளில் கதை சொல்ல அழைக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே. அவர் எழுதியது:

‘For sale: baby shoes, never used.’

சுஜாதா 55 வார்த்தைகளில் சிறுகதை எழுத சொன்னது அந்தக் காலம். ஆறு வரி கதைகள் நிகழ்காலம்.

என்னுடைய முயற்சிகள் சில:

 • வலைப்பதிவுக்குத் தடை. இந்தியாவில் 52.6% உற்பத்தி பெருக்கம்.
 • தெருப்பொறுக்கி என்னையே முறைக்கிறான். நான் அவளை முறைக்கிறேன்.
 • “என்ன வேண்டும்?” ‘புகழ்’ “ஏன்?” ‘அதுதான் தெரியவில்லை.’
 • கடவுள் மறுப்புக் கொள்கையை எழுதியவனை தரிசிக்க தடியடி.
 • சினிமா பார்ப்பதற்கு முன் IMDB.com படிக்கிறான் விமர்சகன்.
 • ரயிலில் குளிரூட்டு சுணங்கல். வாயிற்கதவைத் திறந்தவனுக்கு மோட்சம்.
 • குண்டுவெடிப்பு – 250 இறப்பு: தலைப்புச்செய்தி. பட்டினி சாவு?

  Shamash Says… : “The Hemingway Challenge வலைப்பதிவில் இருந்து சில ஆங்கில ஆறு வரிக் கதைகள்:

 • “Forgive me!” “What for?” “Never mind.” – John Updike
 • Eyeballed me, killed him. Slight exaggeration.– Irvine Welsh
 • Satan- Jehovah- fifteen rounds. A draw. – Norman Mailer
 • I saw. I conquered. Couldn’t come. – David Lodge
 • Oh, that? It’s nothing. Not contagious.- Augusten Burroughs
 • She gave. He took. He forgot – Tobias Wolff.

  வந்தியத்தேவன் முன்னர் எழுதிய 55 வார்த்தை கதைகள்: தொடரும் குளம்பொலி!!! வந்தியத்தேவன் :: வீட்டுக்கு வீடு | நிதர்சனம் | எங்கள் அண்ணா | தனயன்


  | |

 • Blog Imsai Arasan

  இம்சை அரசன் Web 2.0 இந்திய தகவல் தொடர்புத் துறை

  தமிழோவியத்திற்கு நன்றி.

  மத்திய விஜிலன்ஸ் துறை (சி.வி.சி.) வாயிற்காவலன்: “மன்னா, நமது ஒற்றன் வந்திருக்கிறான்.”

  இந்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் சுயாநிதிகாரன்: “உங்களின் ஒற்றன் எப்போதுமே தாமதமாகத்தான் வந்து சேர்கிறார். கூகிளை யானைக் காலில் கட்டி இழுக்க வைத்து மண்டியிட வைத்த சீனாவும், தனக்கென புது இராஜபாட்டையை உருவாக்கிய ஜெர்மானியும், இணையத்தைக் கட்டுப்படுத்திய பிறகு நெட்ஸ்கேப் ஆமை போல் 56 கேபிபிஎஸ் நடை பயின்று வந்து சேர்கிறார் !”

  இம்சை அரசன் Web 2.0 மன்னாதி மன்னர் தன்தலையாட்டி சிங்குச்சா: “அவன் மைக்ரோசா·ப்ட் போன்றவன். ஆப்பிள், சன் என்று பெரும்புள்ளிகள் எதை செய்தாலும் சிறப்பாக சுட்டு, அதை நமக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும் மைரோசா·ப்ட். இவனோ, சீனா, சவூதி அரேபியா, ஜெர்மனி என்று எவர் அரண் போட்டாலும், நமக்கேற்றவாறு spyware செய்பவன்.”

  சுயாநிதி: “சி.வி.சி. காரரே, ஒற்றரை உள்ளே அனுப்பும்.”

  சி.பி.ஐ. ஒற்றன்: “பஞ்சாப் சிங்கம், சீக்கியர்களின் தங்கம், கேம்ப்ரிட்ஜ் கலங்கிய, ஆக்ஸ்·போர்ட் அரவணைத்த, ராஜ்ய சபை நாயகன், இம்சை அரசன், Web 2.0, மன்னாதி மன்னர், தன்தலையாட்டி சிங்குக்கு வணக்கங்கள்.”

  வெப் 2.0 மன்னர்: (மிரட்சியுடன்) “சென்ற முறை நான் நியமித்த சி.பி.ஐ. தலைவர் என்ன ஆனார்?”

  சுயாநிதி: “அவன் ‘ரகு’ வம்ச இணையத் தளத்திற்கு திரைப்படங்களின் உருக்கவர் பெடி அச்சுகளைத் தருவதற்கு தடை விதித்ததால், உங்களைக் கேட்காமல் நிலக்கரி அமைச்சகத்துக்கு அவனை மாற்றி விட்டேன்!”

  வெப் 2.0 மன்னர்: “என்னை மாற்றாத வரைக்கும் சரி சுயாநிதி! மூக்குப் பொடி மாதிரி என்னவோ சொல்கிறீரே? அது என்ன?”

  சி.பி.ஐ. ஒற்றன்: “மத்திய சென்னை மாணிக்கம், ரகு வலையின் இளவல், தொலைத்தொடர்பு காத்தோன், தகவல் மீட்டோன், அமைச்சருள் அதிசயம், அண்ணன் சுயாநிதி அவர்கள் – ‘கேமிரா ப்ரிண்ட்’டைத்தான் தேமதுர திராவிடத் திருநாட்டின், ‘ரகு வெப் 2.0’ மொழியில், அப்படி சொல்கிறார் மன்னவா!”

  மத்திய தகவல்துறை (சி.ஐ.சி.) வாயிற்காவலன்: “மன்னரே, தங்களை உடனடியாக அழைத்து வர அரசியார் கட்டளையிட்டார்.”

  வெப் 2.0 மன்னர்: “அச்சச்சோ! மார்க்கசீயத்து, காம்மனீசியத்து குறுநில மன்னர்களிடம் இருந்து கப்பம் கட்டுவதற்கு புதிதாக என்ன மிரட்டல்கள் வந்திருக்கிறதோ? போய் பார்த்து விட்டு வருகிறேன்”

  (மன்னர் மின்னலென மறைகிறார்.)

  சுயாநிதி: “சொல்லுமய்யா சி.பி.ஐ. என்ன புதிய விஷயம்?”

  சி.பி.ஐ. ஒற்றன்: “பாதுகாப்புத் துறைக்கு வேண்டிய தகவல்களுடன் வந்திருக்கிறேன். நமது நாட்டில் நான்கு மண்டபங்கள் இருக்கிறது.”

  (திரை மரைவில் இருந்து ‘முன்னேற்ற கழக லெனின்’, சுருக்கமாக ‘முக லெனின்’ வெளிப்படுகிறார்.)

  முக லெனின்: “சென்ற ஆட்சியில் நான் நகரத் தந்தையாக இருந்த போது கட்டியதுதான் இந்த நான்கு மண்டபங்களும். சொல்லப் போனால், இன்னொன்று, பாதி முடிந்த தருவாயில் அப்படியே இருக்கிறது. நான் மீண்டும் நகரத்…”

  சி.பி.ஐ. ஒற்றன்: “என்னது இது? ஒற்றனுக்கே ஒற்றனா? இவர் எப்படி தடாலடியாக குதித்தார்?”

  சுயாநிதி: “மண்டபம் என்றால் அவர் வந்து விடுவார். அவர் ஹார்ம்லெஸ்… நீங்க கண்டினியூ பண்ணுங்க.”

  சி.பி.ஐ.: “அந்த மண்டபங்களில், மக்கள் கூடிக் கூடி பேசிக் கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அரசியாரின் ஆதிக்கத்தையும் ‘ரகு வெப்2.0’ செய்யும் சென்ஸார்ஷிப்பையும் பட்டியல் இடுவதைத் தவிர வேறு வேலை இல்லாமல் அலைகிறார்கள்.”

  சுயாநிதி: “யோவ்… நான் தான் தற்காலத் தமிழில் வூடு கட்டுவேன் என்றால், நீயும் ஏன் பன்னித் தமிழுக்கு மாறி விட்டாய்! இந்த மண்டபம் மேட்டரை அர்ஜுன் சிங்கிடம் சொல்லி விடுகிறேன். மண்டபத்தில் இட ஒதுக்கீடு என்று தாக்கீது கொண்டு வந்து விடுவார். அதன் பிறகு மண்டபம் முன்பு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் பார்த்துக் கொள்வார்.”

  சி.பி.ஐ.: “அது அவ்வளவு சுளுவான முறையில் முடிக்க முடியாது. சிலர் சொந்த வீட்டிலேயே சந்திப்புகளைத் தொடரலாம்.”

  சுயாநிதி: “நான் அன்றே சொல்லி இருக்கிறேன் எல்லாமும் ஒன்றாக ஆக்குவதுதான் நம் குறிக்கோள் என்பதால் நான்கு மண்டபத்தையும் இடித்து விட்டு ‘ரகு வெப்’-இன் அரசாணி அரட்டை அரங்கத்திலேயே இனி கூட்டங்களை நடத்த சொல்லலாம்.”

  (திரை)


  (அடுத்த நாள் அரசவை கூடுகிறது.)

  வெப் 2.0 மன்னர்: “நேற்று சி.பி.ஐ. என்ன சொன்னார்?”

  சுயாநிதி: “வழமையான பதிவுதான் மன்னவா. ஆராய்ச்சி மணி இல்லாததால் ஊரில் ஆராய்ச்சியாளர்கள் அதிகரித்து விட்டார்களாம். மீண்டும் குற்றங்குறையை நேரடியாக அறிய, நான்கு மண்டபத்திலும் மணிக்கூண்டு கட்டி, பொறியில் சிக்கும் எலிகளைப் போல் புலம்புபவர்களை அமுக்கிப் பிடிக்க வேண்டும்.”

  வெப் 2.0 மன்னர்: “என்னவோ நடக்கட்டும்.”

  சுயாநிதி: “யாரங்கே… உடனடியாகப் எலிப்பொறிகளைப் போன்ற மணி-மனிதப்பொறிகளைக் கட்ட டெண்டர் விடுக.”

  (திரை)


  (இரண்டு மாதம் கழித்து)

  சுயாநிதி: “மனிதப் பொறிகளை வைப்பதை விட எலிகளை மண்டபத்தில் உலாவ விட்டாலே போதுமானது என்று திட்ட கமிஷன் ஆய்வறிக்கை சொல்கிறது மன்னா!”

  வெப் 2.0 மன்னர்: “அப்படியா? பிறகு ஏன் சென்ற மாதம் நான்கு மண்டபங்களைக் காவல் காக்கவும், மனிதப் பொறி அமைக்கவும், கூட்டங்களை வேவு பார்க்கவும் – மூன்று புதிய துறைகள் அமைக்கப்பட்டது?”

  சுயாநிதி: “அவை இந்த அறிக்கை சமர்ப்பிக்கப் படுவதற்கு முன் நியமிக்கப் பட்டது மன்னா.”

  வெப் 2.0 மன்னர்: “இப்பொழுது அவை என்ன ஆகும்?”

  சுயாநிதி: “திட்டக் குழு அடுத்த ஆய்வறிக்கையை தயார் செய்யும் வரை ‘எப்படி செயல்படும்’ என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது மன்னவா.”

  வெப் 2.0 மன்னர்: “மண்டபங்களின் உள் கட்டமைப்பை சீர்குலைக்க நிதி அமைச்சரிடம் பெற்ற நிதி எவ்விதம் செலவழிக்கப்பட்டது?”

  சுயாநிதி: “ஒற்றறிய ஆட்களை நியமித்தோம். முதல் மாத சம்பளத்துடன் மண்டபத்தில் மூளைச் சலவை செய்யப்பட்டு நம்மை வேவு பார்த்து அவர்களிடம் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களே மன்னா”

  வெப் 2.0 மன்னர் தலை சுற்றி கீழே விழுகிறார். செய்தி எட்டியதும், அரசி கோனிகா சாந்தி பதைபதைத்து ஆசையுடன் சிம்ரன் போல் துள்ளி வருகிறார்

  கோனிகா சாந்தி: “சுயாநிதி… உம் சேவையை யாம் மெச்சினோம். பக்கத்து நாட்டு அரசன் உள்நாட்டு கலகத்தை விளைவிக்க குதிரை லாயங்களிலும் நெல் மணிக் கூடாரங்களிலும் தீ வைத்ததை மண்டபகப்படியாரிடம் இருந்து திசை திருப்ப சொன்னோம். அதன் மேல் சென்று மண்டபத்தையே காலி செய்ய வைத்த உம் தீரத்தையும் மதி நுட்பத்தையும் மெச்சினோம். அதற்கு பிரதி உபகாரமாக புதிதாக உம்மால் அமைக்கப்பட்ட மூன்று இலாகாக்களுக்கும் உம்மையே மந்திரி ஆக்குகிறோம்.”

  சுயாநிதி: “இன்னொரு வரம் வேண்டுமே அரசியாரே?”

  கோனிகா சாந்தி: “மண்டபத்தில் பேசுவதைத்தான் ஒட்டுக் கேட்க லாயக்கில்லை. இங்கு மட்டும் நன்றாகக் கேட்பீரே? கேளுங்கள்!”

  சுயாநிதி வாயசைக்க ‘பலாநிதி காரன்’ பின்னணியில் குரல் கொடுக்கிறார்: “நான்கு மண்டபத்திற்கு செல்லும் வழியில், அகலபாட்டை நிறுவி, காசு வசூலிக்க ‘ரகு வம்ச’த்திற்கு மட்டும் அனுமதி தர வேண்டும்.”

  (திரை)


  | |