Daily Archives: ஜூலை 7, 2006

Othello – Omkara

பீடி ஜலாய் லே ஜிகர் ஸே பியா
ஜிகர் மா படி ஆக் ஹை

ஒத்தெல்லோ – நாடக சுருக்கம் :: என் சொக்கன்

நன்றி: நாடகமல்ல, வாழ்க்கை – நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு

வெனிஸ் நகரின் பணக்காரப் பிரபு ஒருவரின் மகளான டெஸ்டமெனோ, கறுப்பு வீரன் ஓதெல்லோவைக் காதலித்து மணந்துகொண்டாள். டெஸ்டமெனோவின் அப்பா இந்தத் திருமணத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஓதெல்லோ தன் மகளை ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான் என்று வழக்குத் தொடர்ந்தார் அவர். ஆனால், தீவிர விசாரணைக்குப்பின், ஓதெல்லோவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஓதெல்லோவும் டெஸ்டமெனோவும் தங்களின் சந்தோஷ வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவர்களுக்கு இடைஞ்சலாக ஒரு விஷயம் வந்தது – போர் வீரர்களின் பதவி உயர்வு தொடர்பான அரசியல், அவர்களுடைய வாழ்க்கையை பாதித்துவிட்டது.

காசியோ என்பவன், ஓதெல்லோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் நெருங்கிய சிநேகிதன். அவனுக்குதான், ராணுவத்தில் பதவி உயர்வு கொடுத்தான் ஓதெல்லோ. ஆனால், இந்த அறிவிப்பைக் கேட்டதும், காசியோவுக்கு முன்பிருந்தே ராணுவத்தில் பணிபுரிந்துவரும் இயாகோ என்பவனுக்குப் பொறாமையும் எரிச்சலும் உண்டானது. ஏனெனில், இந்தப் பதவிக்குத் தகுதியானவன் தான்தான் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.

ஆகவே, தனக்கு வரவேண்டிய பதவியைப் பிடுங்கிக்கொண்டுவிட்ட காசியோவின்மீதும், தனக்கு உரிய மரியாதையைக் கொடுக்காத ஓதெல்லோவின்மீதும் பயங்கரமான கோபம் கொண்டான் இயகோ. அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் பழிவாங்குவதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.

அதன்படி, ஒருநாள் காசியோவுக்கு ஏகப்பட்ட மதுவை ஊற்றிக்கொடுத்தான் இயாகோ. பின்னர், அவனுக்கு நன்கு போதையேறியபின், வலுக்கட்டாயமாக அவனை ஒரு வம்புச் சண்டைக்குள் நுழைத்துவிட்டான்.

இதனால், போர் வீரர்களிடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. ஆனால், இயாகோ அந்தச் சிறிய விஷயத்தை, ஊதிப் பெரிதாக்கிவிட்டான். அதுபற்றி விசாரிப்பதற்காக வந்த ஓதெல்லோவிடம், காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவதுபோல் பாசாங்கு செய்து, பணி நேரத்தில் அவன் மது அருந்தியதை விளக்கமாக விவரித்தான் இயாகோ. இதனால், ஓதெல்லோவின் கோபம் அதிகரித்தது.

எல்லாம் ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் நடக்கவேண்டும் என்று நினைக்கிற ஓதெல்லோவால், இந்தத் தவறை சகித்துக்கொள்ளமுடியவில்லை. ஆகவே, அவன் உடனடியாக காசியோவின் பதவி உயர்வை ரத்து செய்துவிட்டான்.

இயாகோவின் சதித் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது!

போதை தெளிந்தபின், நடந்ததையெல்லாம் கேள்விப்பட்ட காசியோ, அழுது புலம்பினான். ‘இனிமேல் நான் எப்படி ஓதெல்லோவிடம் நல்ல பெயர் வாங்கமுடியும்?’, என்று அவன் வருந்த, மீண்டும் அவனுக்கு உதவுவதுபோல் குழி பறித்தான் இயாகோ.

‘தன் மனைவி சொன்னால் ஓதெல்லோ கண்டிப்பாகக் கேட்பார், ஆகவே, அவருக்கு உன்மீது உள்ள கோபம் குறையவேண்டுமானால், நீ நேராக டெஸ்டமெனோவிடம் சென்று பேசு’, என்று காசியோவுக்கு யோசனை சொன்னான் இயாகோ. அவன் சொல்வதில் உள்ள சூட்சுமம் புரியாமல், நேரடியாக டெஸ்டமெனோவைச் சந்திக்கச் சென்றான் காசியோ.

நடந்ததையெல்லாம் அறிந்துகொண்ட டெஸ்டமெனோ, கண்டிப்பாக காசியோவுக்கு ஆதரவாகப் பேசுவேன் என்று வாக்களித்தாள். அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு காசியோ புறப்பட்டபோது, அவன் டெஸ்டமெனோவின் அறையிலிருந்து வெளியேறுவதை ஓதெல்லோ பார்த்துவிட்டான்.

அப்போது ஓதெல்லோவுடன் இருந்த இயாகோ, அவன் மனத்தில் தவறான ஒரு சந்தேகத்தை விதைக்க முயன்றான்.

டெஸ்டமெனோவை மிகவும் பிரியமாக நேசித்த ஓதெல்லோவுக்கு, அவள்மீது எந்த சந்தேகமும் இல்லை, என்றாலும், தந்திரமாகவும் புத்திசாலித்தனமான வாதங்களுடனும் தொடர்ந்து பேசி, காசியோவுக்கும் டெஸ்டமெனோவுக்கும் ரகசியத் தொடர்பு இருக்கிறது என்று ஓதெல்லோவை நம்பச் செய்துவிட்டான் அவன்.

போதாக்குறைக்கு, அப்போது ஓதெல்லோவைச் சந்தித்த டெஸ்டமெனோவும் காசியோவை ஆதரித்துப் பேசினாள், அவன் செய்தது அப்படியன்றும் பெரிய தவறு இல்லை. ஆகவே, அவனுக்கு மீண்டும் பதவி உயர்வு தரவேண்டும் என்று வாதிட்டாள் அவள். இதனால் ஓதெல்லோவின் குழப்பம் மேலும் அதிகரித்தது. இவளுக்கு ஏன் காசியோமீது அவ்வளவு அக்கறை? தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாளா, இல்லையா என்றெல்லாம் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியாமல் திணறினான்.

ஓதெல்லோவின் இந்தக் குழப்பத்தைத் தெரிந்துகொண்ட இயாகோ, இன்னொரு தந்திரம் செய்தான். ஓதெல்லோ டெஸ்டமெனோவுக்குப் பரிசாக அளித்த ஒரு கைக்குட்டையைத் திருடி, காசியோ செல்லும் வழியில் போட்டுவிட்டான் அவன். இந்த விஷயம் தெரியாத காசியோ, அந்தக் கைக்குட்டையை எடுத்துத் தன்னோடு வைத்திருக்க, அதைச் சுட்டிக்காட்டி, ‘டெஸ்டமெனோதான் இதை காசியோவுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறாள்’, என்று பொய் மூட்டினான் இயாகோ.

ஏற்கெனவே சந்தேகப் பேயின் வலையில் சிக்கியிருந்த ஓதெல்லோ, இந்தப் பொய்யைச் சுலபமாக நம்பிவிட்டான். தன் மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று நிச்சயமாகத் தீர்மானித்த அவன், இந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளைக் கொன்றுவிடுவதாக முடிவுசெய்தான்.

ஓதெல்லோ டெஸ்டமெனோவின் அறைக்குச் சென்றபோது, அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்படியே அவளை அழுத்திக் கொன்றுவிட்டான் ஓதெல்லொ.

அதேசமயம், அலறியபடி அங்கே ஓடிவந்தான் காசியோ, அவன் உடம்பெல்லாம் காயம். அவனைக் கொல்வதற்கு, இயாகோதான் ஆள் அனுப்பியிருந்தான். எப்படியோ அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிவிட்ட காசியோ, அந்த அடியாளின் சட்டைப் பையில், சில முக்கியமான கடிதங்களைக் கண்டுபிடித்திருந்தான்.

அந்தக் கடிதங்களைப் படித்தபின், காசியோ – டெஸ்டமெனோ இருவருமே நிரபராதிகள், நடந்ததெல்லாம் இயாகோவின் சூழ்ச்சிதான் என்னும் உண்மைகள் ஓதெல்லோவுக்குத் தாமதமாகப் புரிந்தது.

அநியாயமாகத் தன்னுடைய காதல் மனைவியின்மீது சந்தேகப்பட்டு, அவளைக் கொன்றுவிட்டோமே என்று வருந்திய ஓதெல்லோ, தன் தவறுக்கு தண்டனையாக, தன்னுடைய வாளின்மீது விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.
என் சொக்கன்


கொன்கொனா சென் (எமீலியா), நஸ்ரூதீன் ஷா (ஹே ராம் தோற்றத்தில் கட்டைக்குரலில் பேசுகிறார்), பிபாஷா பாசு என்று நட்சத்திரக் கலக்கலாக இருக்கும் ‘ஓம்காரா’ திரைப்படம் ஒத்தெல்லோ அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிறது.

அஜய் தேவ்கன் – ஓதெல்லோ

கரீனா கபூர் – டெஸ்டமெனோ

சாய்ஃப் அலி கான் – இயாகோ

காசியோ – விவேக் ஓபராய் (கம்பெனி-க்குப் பிறகு அடுத்த ஹிட் எப்ப கொடுக்கப் போறீங்க?)

திரை முன்னோட்டங்களைப் பார்க்க | குல்சாரின் வரிகளில் பாடல்களைக் கேட்க

பொடிக் குறிப்பு: பாடல் வரிகளைக் கேட்டவுடன், மத்திய அமைச்சர் மாண்புமிகு அன்புமணி ராமதாஸ் – ‘புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாக’ அறிவித்து, சென்ஸார் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள வேண்டும்!


| |

Affirmative Action & India’s Reservations

திசைகளுக்கு நன்றி.

அமெரிக்காவில் affirmative action என்றழைக்கப்படும் நேர்செய்கைத் திட்டங்கள் (அ·பர்மேடிவ் ஆக்ஷனுக்கு இனி சுருக்கமாக அ.ஆ.) ஒடுக்கப்பட்டோருக்கு சம அந்தஸ்து நிலைநாட்ட செயல்படுகிறது. ‘அ.ஆ.’ குறித்த எனது புரிதலையும் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கொஞ்சம் பார்க்கலாம். அதன் பின் இந்திய சூழலுக்கு இவற்றில் எது பொருத்தமாக இருக்கும், எவை பயன்படும் என்று நான் நினைப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

‘அ.ஆ.’ குறித்த சில் மேலோட்டமான பயனர் பார்வை

 • இனம், மொழி, நிறம், பால், மதம், என்று அடையாளங்கள் பார்த்து, வேற்றுமை கொண்டாடுவதை தவிர்ப்பதற்காக Equal Employment Opportunity (சமத்துவ வேலைவாய்ப்பு) தொடங்கப்பட்டது.
 • வெளிப்படையாக இன ஆதிக்கம் காட்டுவதை சட்டரீதியாகவும், புரையோடிய ஆனால் நேரடியாக காணவியலாத நிறத் துவேஷத்தை நீக்கவும் செயல்படுகிறது.
 • தங்களின் தவறான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளாத நிறுவனங்களை, 1964 சிவில் உரிமை சட்டம் (பகுதி ஏழு) மூலமாக, நீதிமன்றத்தின் உதவியுடன் சரி செய்ய வைக்கலாம்.
 • 1971இல் இயற்றப்பட்ட வழிகாட்டு ஆணையின் படி சிறுபான்மையினரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்குப் போதிய பயிற்சிகளை அளிக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் தரப்படும்.
 • 1960களில் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தாலும், எண்பதுகளில் இருந்து முனைப்புடன் நிறைவேற்றுவதில் சுணங்கல்கள் ஆரம்பித்து இருக்கிறது.
 • ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்காக ஆரம்பிக்கப் பட்டாலும், மகளிர், உடல் ஊனமுற்றோர், மெக்ஸிகோ போன்ற பிற தேசத்து சிறுபான்மையினர் ஆகியோருக்கும் பயன்கள் சென்றடையும்.
 • அயர்லாந்தை சேர்ந்தவனாக இருந்தால் காவல் துறை, இத்தாலி நாட்டுக்காரனாக இருந்தால் பழ வியாபாரி, யூதராக இருந்தால் வர்த்தகத்துறை என்று கொள்முதல் எடுத்துக் கொண்ட வேலைகளை, ‘அ.ஆ.’ மூலம் வெள்ளை நிறமல்லாதவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வைத்தது.
 • சிறு வியாபாரிகளுக்கு வருமான வரி சலுகை, பெண்களை முதலாளியாகக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மிக எளிதில் தாராளமான கடன் கொள்கை + வருமான வரிச் சலுகை, சிறுபான்மையினரின் நிறுவனங்களுக்கு துவக்கத்தில் வருமான வரி சலுகை போன்றவை உண்டு.

  எங்கெல்லாம் ‘அ.ஆ.’ பின்பற்ற வைக்கிறார்கள்?

 • கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திற்குள் சேர்வதற்கு
 • மாகாண மற்றும் மாவட்ட எல்லைகளில் பல இனத்தவரும் கலந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு
 • மனித உரிமை நலன் பாதுகாப்பிற்கு
 • வீடு வாங்க இடம் மற்றும் கடன் போன்றவை சம உரிமையோடு கிடைப்பதற்கு
 • வேலை பார்க்கும் இடத்தில் சுதந்திரமாக செயல்படுவதற்கு
 • சிறுபான்மையினரால் துவங்கப்படும் நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு
 • காவல், தீயணைப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சார்ந்த துறைகளில் இனக்கலவை ஏற்படுவதற்கு

  கல்லூரியில் இட ஒதுக்கீடு:

  பள்ளிக்கூட வகுப்புகளில், கல்லூரிகளில் முடிந்த மட்டும் பரவலாக சிறுபான்மையினரை நிரவி அமைக்கிறார்கள். கல்லூரியில் கூட, இந்தியர்கள் சிறுபான்மையினர் என்பதால் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, எம்.ஐ.டி. போன்ற ஐவி லீக் கல்லூரியில் ஆசியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால் மற்ற நிறத்தவர்களும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் நிறைந்த பள்ளிகளுக்கு சென்று தங்கள் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுப்பதுண்டு.

  இனம், மொழி போன்றவை கல்லூரியில் சேரும் வாசற்படிக்குக் கொண்டு சென்றாலும், என்னுடைய பார்வையில் அவற்றுக்கு நிகராக கீழ்க்கண்டவை மிகுந்த முக்கியத்துவமானது:

 • பள்ளியில் கிடைத்த கிரேட் – ஜி.பி.ஏ.
 • SAT, போன்ற பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண்
 • பெற்றோர் அந்தக் கல்லூரியில் படித்தவர்களா?
 • விளையாட்டுத் தேர்ச்சி, சாதனைகள்
 • அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் இருந்து வருகிறார்?
 • எந்தப் பூர்வகுடியை சேர்ந்தவர் (caucasian ஆகவே இருந்தாலும் இத்தாலியனா, அயர்லாந்தா, என்று பரவலான சேர்க்கைக்கு முயற்சிப்பார்கள்; ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றால் சோமாலியா, சியரா லியோன்…?)
 • தொண்டு நிறுவனங்களில் பங்களிப்பு
 • பொழுதுபோக்காக, வாழ்க்கையை ரசிப்பதற்காக என்ன செய்கிறார்?
 • கல்லூரியின் புரவலர்களுடன் ஆன தொடர்புகள்
 • கல்லூரியில் சேர்வதற்காக எழுதும் நீள் கட்டுரையின் தரம்
 • ரெ·பரன்ஸ் – எந்தப் பெருந்தலைகளிடம் இருந்து தன்னுடைய திறத்தை மதிப்பிட்டு சான்றிதழ் கட்டுரைப் பெற்றிருக்கிறார்? அவர்கள் மதிப்பீட்டில் இவர் எந்த திறமையைக் கொண்டிருக்கிறார்? அது இந்தக் கல்லூரியின் திறங்களுடன் ஒத்துப் போகிறதா?
 • எவ்வளவு சீக்கிரம் அப்ளிகேஷன் போட்டார்?
 • எத்தனை முறை நேரடியாக கல்லூரிக்கு வருகை தந்து, தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளுடன் உரையாடினார்? அவருக்கு இந்தக் கல்லூரியில் சேர்வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எப்படி நேர்மையாக நம்மிடம் வெளிப்படுத்தினார்?

  இவை அனைத்தும் முக்கியம். கல்லூரிக்கு கல்லூரி வித்தியாசப்பட்டாலும், ஹை ஸ்கூல் முடிப்பதற்கு இரண்டாண்டு இருக்கும்போதே வேட்டையைத் துவக்கி, தங்கள் பல்கலை தேடலை ஐந்துக்குள் அடக்கிக் கொண்டு, அவை ஐந்திற்கும் நேரடியாக வருகை புரிந்து, சேர்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

  இட ஒதுக்கீடு என்று இவ்வளவையும் ஒற்றைப் பரிமாணத்தில் அடக்கி விட முடியாது.

  அமெரிக்க குடுமிப்பிடி குழாயடி வாக்குவாதங்கள்:

  அமெரிக்காவில் ‘அ.ஆ.’ என்னும் கொள்கைக்கு இரு கட்சிகளுமே ஆதரவளிக்கிறது. இருக்கும் இரு பெரிய கட்சிகளும் ‘அ.ஆ.’ தொடர வேண்டும் என்பதில் ஓரளவு ஒத்துப் போகிறது. அது எவ்வாறு, எவருக்காக, எப்படி செயல்பட வேண்டும் என்பதில்தான் கடும் கொள்கை வேற்றுமை நிலவுகிறது.

  குடியரசு (ரிபப்ளிகன்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு

 • இன அடிப்படையில் மட்டும் வேலைவாய்ப்பு தருவதை நிறுத்திக் கொள்ளாமல் பொருளாதார அடிப்படையிலும் மாற வேண்டும்.
 • நிறுவனத்திற்குள்ளேயே பதவி உயர்வு பெறுவதற்கெல்லாம் ‘அ.ஆ.’-வை பிரயோகிக்க சட்டம் வகை செய்யக் கூடாது.
 • நிறுவனங்களுக்குள் நுழைதல், தொழில் பயிற்சி – போன்றவற்றில் ‘அ.ஆ.’ பரவலாக பயன்படுத்தினால் போதுமானது.
 • சரித்திரத்தில் செய்த அநீதிகளுக்கான குற்றவுணர்ச்சியாக மட்டுமே தற்போது ‘அ.ஆ.’ உபயோகமாகிறது.

  சுதந்திர (டெமோக்ரடிக்) கட்சியை சேர்ந்தவர்களின் நிலைப்பாடு

 • ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இன்னும் பெருமளவில் வேலையில்லாமலும் வாய்ப்பில்லாமலும் பெருமளவில் திண்டாடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு மட்டுமே ‘அ.ஆ.’ தொடர வேண்டும்.
 • நிறுவனத்தில் எல்லா நிலைகளிலும் சிறுபான்மையினர் இடம் பெற்றால்தான், தங்கள் இனத்தவரும் உயர முடியும் என்னும் எண்ணம் வளரும். அவர்கள் மூலமாக பலரும் தூண்டப்பெறுவார்கள்.
 • பல்லாண்டு கால ஒடுக்குமுறைக்கு இருபதாண்டு கால பிராயசித்தம் சமன் செய்து விடாது.
 • இன்னும் சிறுபான்மையினரில் பலர் அஞ்சி ஒடுங்கிப் போகிறார்கள். இவர்களில் பலருக்கு முதிர்ந்த வயதும் ஆகிய நிலையில், ‘திறந்த நிலைப் போட்டி’யினால் நசுக்கப் பட்டுவிடுவார்கள்.

  அமெரிக்காவில் ஏன் ‘அ.ஆ.’ வெற்றியடைந்தது?

  முழுமையாக இன்னும் கொண்டாட முடியாவிட்டாலும் ‘அ.ஆ.’ மூலம் சிறுபான்மையினருக்கான வேலை வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. புதிதாக நிறுவனம் அமைக்கவும் ஆர்வத்துடன் செயல்படத் தூண்டுகிறது. இதற்கு கென்னடி, க்ளிண்டன், ரேகன் என்று பலரின் திட்டங்களை காரணமாக சொல்லலாம்.

  ஆனால், சட்டங்களை இயற்றுவதை விட அவற்றை சிறப்பாக செயலாக்குவதினால்தான் ‘அ.ஆ.’ மிகப் பெரிய வெற்றியை கண்டிருக்கிறது. தான்தோன்றியாக நடந்து கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களை ஒரிரு முன்னாள் உழைப்பாளிகள் சந்திக்கு இழுத்தாலும், தீர விசாரித்து, தப்பு செய்தவர்களை தண்டித்த நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியது.

  அமெரிக்காவுக்கே தனிப் பெரும் தொலைபேசி தாதாவாக விளம்பிய ‘பெல்’ நிறுவனத்தை கண்டித்த தீர்ப்பு பலருக்கும் பயத்தையும் பொறுப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக ‘ட்யூக்’ மின் விநியோகிப்பாளர், கறுப்பர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதவாறு பார்த்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்க வைத்து சரியான பாதையில் நடக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது.

  இரும்புத் தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் என்று பெண்களையோ, பிற நிறத்தவரையோ தாழ்த்தி நடத்தினால், பொது ஊடகங்களின் மோசமான சித்தரிப்புக்கு உள்ளாக நேரிடும். மேலும், தங்களுக்கு சோறு போடும் பங்குதாரர்களின் கோபத்துக்கு உள்ளாகுமாறு பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக சேவை அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டி வரும். அதன் பின்னும் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் தொடரும் என்னும் அச்சம் – ஆகியவையே அமெரிக்காவில் ‘அ.ஆ.’ துரித கதியில் செயல்படுத்தத் தூண்டியிருக்கிறது.

  சட்டத்தை இயற்றிக் கிடப்பில் போட்டு விடாமல், அதை செல்லாக்காசாக நினைத்து சிறுபான்மையினரை ஒடு(து)க்கிய முதலைகளை நீதிக்கு முன் தலை வணங்க வைத்ததற்கு இரண்டு பேர் முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.

  1. அரசு சாரா அமைப்புகள்: லாப நோக்கில் இயங்காமல், சுயசேவையாக – ஒடுக்கப்பட்டோரை முன்னிலைப்படுத்தி, அவர்களின் வழக்குகளை நீதிமன்றத்துக்கு சுளுவாகக் கொண்டு சென்ற அமைப்புகள். தங்கள் முன்னோர் இயங்கிய விதத்துக்கு உண்மையான பிராயச்சித்தமாக, சிறுபான்மையினரின் நிலையை ஆராய்ந்து அறிந்தவர்கள், அறிக்கை எழுதி சமர்ப்பிப்பதுடன் நில்லாமல், ஊடகம் மூலம் நிறுவனங்களுக்கு நெருக்கடியைத் தர முனைந்தார்கள்.

  2. நீதிமனறம்: கோர்ட்டு, கேசு, வக்கீல், வாய்தா, சர்க்யூட், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று அல்லாட வைக்காமல், சட்டத்தை செயல்படுத்திய அமெரிக்க நீதிமன்றங்கள். விசாரணையை உரியமுறையில் செலுத்தி, தீர்ப்புகளை சரியான முறையில் வழங்கி, சட்டத்தை துரிதகதியில் செயல்படுத்தியவர்கள்.

  இந்தியாவிற்கு இவற்றில் எவை எப்படி பொருந்தும்/செயலாக்கலாம்?

 • அரசுத் துறையோடு நிறுத்தாமல் அனைத்து நிறுவனங்களுக்கும், அந்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடை சட்டமாக்குதல்.
 • நகை, ஜவுளி, கணினி, உணவு, சேவை என்று அனைத்து இடங்களும் சுய பொறுப்புடன், பரவலான இனங்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல், தன் இனம்/மொழி சார்ந்தவர்களையே வேலைக்கு வைக்கும் நிறுவனங்களை ஊடகங்கள் கடுமையாக சாடுதல் அவசியம்.
 • பதவி உயர்வுக்கான எல்லா நிலைகளிலும் இட ஒதுக்கீடை கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில் தொடர்ச்சியான தேர்வுகளின் மூலம் நிர்ணயிப்பது. வாசல் படி வரை ஏணி வைத்து தூக்கி விட வேண்டும்; உள்ளே நுழைந்தபின் லி·ப்ட் போல் செயல்படும் இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறுத்திவிட்டு, படிக்கட்டுகளில் யார் முந்துகிறார்கள் என்பதை அவர்களிடமே விட்டுவிட வேண்டும்.
 • கல்லூரி நுழைவதற்கு சாதி அடிப்படையைப் பெரும்பான்மையாகக் கொண்டாலும், மற்ற இயல்புகளையும் கருத்தில் கொண்டு பலவகையான மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுதல்.
 • சட்டமன்றத்தின் மூலமே சாதிக்காமல், நீதிமன்றங்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டோருக்கான நியாயத்தை நேரத்தே வழங்கினால், ஒடுக்குவோருக்கு நெஞ்சில் பயம் வரும். மனசாட்சிக்கு பயப்படா விட்டாலும், சாட்சிக்கூண்டுக்கு பயந்தாவது தங்கள் செய்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.
 • அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இனக்கலப்பு இயல்பாக தினந்தோறும் நிகழ்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கருக்கும் இத்தால்ய-அமெரிக்கருக்கும் திருமணங்கள், குழந்தை தத்தெடுப்பு என்று ‘அமெரிக்க’ இனம் என்பது நாளடைவில் முன்னிலை வகிக்கும். அதே போல், ஜாதி பார்த்து திருமணம் செய்வதை வரதட்சிணை போன்ற கொடுமையாகக் கருதும் சித்தரிப்பு தேவை.


  | |