Daily Archives: ஜூன் 29, 2006

Pa Chidambaram’s Petrol Medicine – Maalan

Dinamani.com – Editorial Page :: மாலன்

கசப்பது மருந்தா? உண்மையா?

இந்திய அரசியல் கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய அநேக தருணங்களில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பல கட்சிகளின் – அநேகமாக எல்லாக் கட்சிகளின் – பொய் முகத்தை மட்டுமல்ல, அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதையும் ஒருசேரப் பகிரங்கப்படுத்திய நிகழ்வு அது. அந்த நாடகத்தில் இப்போது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு “டாக்டர்’ பாத்திரம்.

“பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்து விடும்… எனவே கசப்பு மருந்தை மக்கள் கனிவோடு ஏற்க வேண்டும்” என்று “டாக்டர்’ சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

அவர் பேச்சைப் படிக்கிற எவருக்கும் ஏதோ நம் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே நொடித்துப் போய் நஷ்டத்தில் நடந்து கொண்டிருப்பதைப் போலவும், அவற்றின் மீது இந்தச் சுமையும் ஏறினால் அவை நொறுங்கிப் போய்விடும் என்பது போலவும் தோன்றும். ஆனால் உண்மை என்ன?

இந்த ஆண்டு (மார்ச் 31 அன்று முடிவடைந்த 2005-06 நிதி ஆண்டு) இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ள

 • ஈவுத் தொகை (டிவிடெண்ட்) 125 சதவீதம்.
 • ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
 • விற்பனை மதிப்பு ரூ. 1,83,204 கோடி
 • கடந்த ஆண்டை விட 21.6 சதவீதம் அதிகம்.

  லாபம், மத்திய அரசு கடனாக வழங்கிய 6,571 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்திய பிறகு, லாபத்தின் மீதான வரிகளைக் கழித்துக் கொண்டதற்குப் பிறகு கையில் மிஞ்சும் நிகர லாபம்.

  இந்தத் தகவல்கள் எல்லாம் இந்தியன் ஆயில் நிறுவனமே, பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்குப் பத்து நாள்களுக்கு முன் (மே 26ம் தேதி) அறிவித்தவை. இவற்றை இப்போதும் அதன் இணைய தளத்தில் காணலாம்.

  ஏதோ இந்த ஆண்டு மட்டும் அது லாபம் ஈட்டிவிடவில்லை. கடந்த ஐந்தாண்டுக் கணக்கை எடுத்துக் கொண்டால் ஒவ்வோர் ஆண்டும் அது லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபம் அளவில் அதிகரித்தும் வருகிறது.

 • 2000 – 01ல் அது ஈட்டிய லாபம் ரூ. 2,720 கோடி.
 • கடந்த ஆண்டு அது ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
 • 2000 – 01ல் அதன் வசம் இருந்த அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 17,510 கோடி.
 • கடந்த நான்காண்டுகளில் ரூ. 6,000 கோடி அதிகரித்திருக்கிறது.
 • கடன் சுமார் ரூ. 3,000 கோடி குறைந்திருக்கிறது.

  கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய ஆற்றல் அதிகரித்து இருக்கிறது (Debt Service ratio குறைந்திருக்கிறது). இப்போது அதன் வசம் உள்ள “ரிசர்வ்’ ரூ. 28,134 கோடி.

  உலகின் பெரிய 500 நிறுவனங்களில் (Fortune 500) 170-ம் இடத்தில் உள்ள நிறுவனம் இந்தியன் ஆயில். உலகில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் 18-வது பெரிய நிறுவனம். ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனம்.

  இவ்வளவு ஆரோக்கியமான நிறுவனத்தால், ரூ. 28 ஆயிரம் கோடிக்கு மேல் கையிருப்பு (ரிசர்வ்) உள்ள, 125 சதவீதம் டிவிடெண்ட் அறிவிக்கிற, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிற நிறுவனத்தால் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாது! இந்த உயர்வு இல்லாவிட்டால் அது நசிந்துவிடும்! எனவே இந்த நிறுவனத்தை விடப் பலமடங்கு நிதி ஆதாரம் குன்றிய மக்கள், மாதச் சம்பளம் வாங்குகிற மக்கள், ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளர்கள், இந்த விலை உயர்வையும், இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான விலை உயர்வுகளையும் ஏற்க வேண்டும் என்கிறார் அமைச்சர்!

  அமைச்சர் தனது பேச்சில் தெரிவித்திருக்கும் இன்னொரு விஷயம், இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பேரல் 23 டாலராக இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது 69 டாலராக, உயர்ந்து விட்டது என்பதாகும்.

  மத்திய அரசு அதன் தீர்வைகளை இறக்குமதி செய்யப்படும் விலையின் அடிப்படையில்தான், இத்தனை சதவீதம் எனக் கணக்கிட்டு வசூலிக்கிறது. ஒரு பொருள் இந்தியாவில் வந்திறங்கும் போது அதன் விலை 100 ரூபாய்; தீர்வை 30 சதவீதம் என்று வைத்துக் கொண்டால் அப்போது அரசுக்குக் கிடைப்பது 30 ரூபாய். அதே பொருள் விலை உயர்ந்து 300 ரூபாய் ஆகும் போது, அரசுக்குக் கிடைக்கும் தீர்வை 90 ரூபாய். கூடுதலாகக் கிடைக்கும் இந்தத் தொகையைப் பெற அரசுக்குக் கூடுதல் செலவு ஏதும் இல்லை. அதே அதிகாரிகள், அதே அமைப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம். கூடுதல் செலவு இல்லாத நிலையில் கிடைக்கும் இந்த வருவாய் உபரி வருவாய். இன்னும் சொல்லப்போனால் எதிர்பாராமல் கிடைக்கும் வருவாய்.

  இதைக் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் நலிவைச் சமாளிக்க முடியும். வேறு சில விதங்களிலும் அரசு இந்த “நலிவை’ எதிர்கொள்ள முடியும்.

  மத்திய அரசு தனது இறக்குமதித் தீர்வைகளைக் குறைத்துக் கொண்டும், நான்கு சக்கர வாகனங்கள் மீதான தீர்வையை அதிகரித்தும், அவற்றின் விலையில் ஒரு சதவீதத்தை “செஸ்’ ஆக (இப்போது கல்வி செஸ் வசூலிக்கப்படுவது போல) வசூலித்தும், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், கையிருப்பு (ரிசர்வ்) இவற்றின் மூலமும் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நலிவு ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்தும் அரசும் அமைச்சர்களும், விலை உயர்வு இல்லை என்ற நிலையில் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற கணக்கை வெளியிட முன் வருவார்களா?

  கசப்பது மருந்தா? உண்மையா?
  கசக்கும் மருந்துகள் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சில காய்ச்சல்கள் ஏற்படும்போது, இனிப்புக்கூடக் கசக்கும் என்பதும்! நமது அரசு இப்போது தாராளமயமாக்கல் பொருளாதாரம் என்ற ஒரு விஷக் காய்ச்சலில் விழுந்து கிடக்கிறது. அதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே கசக்க ஆரம்பித்திருக்கிறது.

  பொதுத்துறை நிறுவனங்களின் நலன்களைக் காக்க மக்கள் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கோருகிறார். அவை நம் (மக்களின்) நிறுவனங்கள். எனவே அவற்றைக் காக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுமானால் மக்கள் நிச்சயம் “தியாகம்’ செய்ய முன் வருவார்கள். மக்களின் தேசப்பற்று இன்றுள்ள எந்த அமைச்சரின் நாட்டுப்பற்றுக்கும் குறைவானதல்ல.

  ஆனால் இன்று மக்களுக்கு மருந்து கொடுக்கும் அமைச்சர்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பேண முற்படுகிறார்களா? அல்லது அவற்றை காவு கொடுக்க முற்படுகிறார்களா? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை நம் நவரத்தின நிறுவனங்களுக்கு ஒருபோதும் ஏற்படாது என்று அமைச்சர்களால் உறுதி அளிக்க முடியுமா?

 • Vijaykanth party launches team to catch bad officers!

  Vijaykanth party launches team to catch bad officers!:

  கேப்டனின் ‘ரமணா ஸ்டைல்’ ஊழல் தடுப்பு படை

  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

  அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் குறித்து இங்கு புகார் கொடுக்கலாம் எனவும், அப்படிப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அறிவித்துள்ளார்.

  இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இந்தப் பிரச்சினையில் நான் மிகவும் தீவிரமாக உள்ளேன். பிரச்சினைக்கு தீர்வு வரும் அன்றுதான் எனது பிறந்த நாளை கொண்டாடுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.

  என்றார் விஜயகாந்த்.

  கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது வழக்கம்போல் சினிமா பாணியில் கோபமடைந்த விஜயகாந்த்,

  திட்டம் இல்லாமலா கட்சியை ஆரம்பித்திருப்பேன்? அதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி எல்லாம் உங்களிடம் விவாதிக்க முடியாது என்றார்.”

  Journeys

  இரயில் பயணங்களில்

  நான் ஸ்டேஷனை அடையும்போது இரயில் கிளம்ப நாலு நிமிடங்கள் தான் இருக்கும். அன்றோ, பதினான்கு மணித்துளிகள் பாக்கி வைத்திருந்தேன். மேகமூட்டம் உள்ள இரவில் ஓரிரு நட்சத்திரங்கள் மட்டும் மேகங்களுக்கு நடுவில் மின்னுவது போல், காத்திருப்போர் அமர்ந்திருக்கும் இருக்கைகளில், எனக்கொரு இடம் கண்டுபிடித்தேன். கையில் அன்றைய செய்தித்தாள். பராக்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

  பிச்சைக்காரத் தோற்றம். தலையில் சடை முடிச்சுகள். முதுகில் துர்நாற்றம் வீசும் பொதிமூட்டை. கிட்ட நெருங்கியவுடனே பலரும், தான் அமர்ந்திருந்த இருக்கையை காலி செய்து தூரப் போயினர்.

  ‘I wanna make a call. Can you spare me some change?’

  கேட்ட தொனிக்கு பயந்தே கையில் கிடைத்ததை இட்டேன். இடாதவர்களை வாய்க்கு வந்தவாறு ஏசினான். சில்லறை தேறியவுடன், முக்கில் இருக்கும் தொலைபேசியை அழுத்தி, பைசாக்களை தானியங்கியில் இட்டு ‘ஹலோ’ ஆரம்பித்தான்.

  எதிர்முனையில் கூட அந்த வீச்சமும், மட்ட சரக்கு கமழும் பேச்சும் எட்டியிருக்கலாம். துண்டித்து விட்டார்கள். இரண்டு, மூன்று முறை ரிசீவரை அழுத்தியும், மற்ற சாகசங்கள் செய்தும், பேசாத பேச்சுக்கு, காசைக் கறந்து விட்டிருந்தனர். வஞ்சிக்கப்பட்ட கோபம் முகத்தில் தெரிந்தது.

  தொலைபேசி நிறுவனத்தின் ‘சேவை மைய’த்திற்கான இலவச எண் 800-ஐ அடுத்து அழைத்தான். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்டு, பைசாவைத் திரும்பத் தருமாறு வேண்டினான். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் முறையீடு மையம் எங்கிருக்கிறதோ?

  இந்தியாவிலா? அல்லது அமெரிக்காவின் ஒதுக்குப்புறமான கிராமத்திலா? அல்லது நிஜமுகங்களைத் தவிர்த்து கணினி மட்டுமே பேசும் மையமோ… தெரியவில்லை. கொடுத்த காசைத் திருப்பித் தரும் பழக்கம் தமக்கு இல்லாததை சொல்லியிருப்பார்கள். அவர்களின் பிறப்பு குறித்து ஐயமுற்று, அம்மா, அப்பாவையும் சேர்த்து வைது கொண்டிருந்தான்.

  கேட்கக் கூசும் சொற்களைத் தவிர்க்க நினைத்த பலரும் இடத்தை காலி செய்து, வேறு இடங்களுக்கு நகர்ந்தனர்.

  அப்பொழுதுதான் அந்த வாலிபன் அவனை நெருங்கினான். முதுகில் பெரிய பை. அமெரிக்கா முழுக்க பேக்-பாக் கட்டிக் கொண்டே சுற்றுப் பயணம் செய்பவன் போல் இருந்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபது வயதுதான் இருக்கும். திடகாத்திரமான தேகம்.

  “மிஸ்டர்… நீங்கள் பேசும் மொழி பொது இடங்களில் பேசத் தகாதது!”

  கண்டிப்பான தொனி இருந்தாலும் கனிவான நம்பிக்கை தரும் முகத்துடன் கண் பார்த்து பேசினான். கோட் அணிந்தவர்களும், திரண்ட புஜபலம் உடையவர்களும் கூட ‘உனக்கேன் தேவையற்ற வேலை? விருது பட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா?’ என்று புருவம் உயர்த்தி ஏளன முறுவலித்தார்கள்.

  இரத்த நாளங்கள் வெடித்து விட்டது போன்ற கண்களுடன், “டேய்… (அர்ச்சனைகள்) உனக்கு என்ன தெரியும் (மேலும் அர்ச்சனைகள்) எனக்கு என்ன நடந்தது என்று…” குழற்கிறார் நிலைதடுமாறுகிறவர்.

  ‘எது நடந்தாலும், இப்படி துர்வார்த்தைகளை பயன்படுத்தாமல், பண்போடு நடக்கலாமே?’

  ‘எனக்கு இருக்கும் கோபத்துக்கு, உன்னை நொறுக்கிடுவேன்!’

  பாதிக்கப்பட்ட வயோதிகனுக்கு மிக அருகில் நெருங்கி, ‘வாங்க… வெளியில் போய் நமது சண்டையை வைத்துக் கொள்ளலாம்’

  நேரடியாக சண்டைக் காட்சியைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு மிகுந்தது. நிச்சயம் இளைஞன் தான் ஜெயிப்பான். உடற்பயிற்சியில் கட்டுமஸ்தான் வளைவுகள். ‘மென்ஸ் ஹெல்த்’ போன்ற புத்தகங்களில் அட்டைப்படங்களில் வருவது போன்ற நாயக பாவம். வீடற்ற முதியவரோ, போதை உட்கொண்ட களைப்புடன் பசி மயக்கத்தில் பூஞ்சையாய் இருந்தார்.

  ரயிலுக்கு இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. ட்ரெயின் கிளம்புவதற்கு ஒரு நிமிடம் வரை இவர்கள் இருவரின் குஸ்தியை வேடிக்கை பார்க்கலாம். நிலைமை எல்லை மீறினால், 911 மூலம் காவல் துறையைக் கூப்பிட்டு, எனக்கு ட்ரெயின் பிடிக்கும் அவசரத்தை சொல்லி, சாட்சி கூட சொல்லாமல் சமூக சேவகனாகி தப்பித்தும் விடலாம்.

  ஆசையுடன் பின் தொடர்ந்தேன்.

  ஸ்டேசன் வாயிலில், அந்த back-pack இளைஞன், சடாரென்று முதியவன் தோளில் கை போட்டான்.

  ‘உனக்கு யாரைக் கூப்பிடணும்? இந்தா என் செல் ·போன்’

  ‘அவங்க ·போனை எடுக்க மாட்டேங்கிறாங்க! எனக்கு காசு வேணும்’

  ‘எதுக்கு உனக்கு காசு வேணும்? டிக்கெட்டுக்கு பணம் வேண்டுமா? எங்கே போகணும்? நானே எடுத்துத் தரேன்.’

  ‘பசிக்குது… சாப்பிடணும்’

  அங்கே இருந்த உணவகத்தில் சாண்ட்விச் வாங்கித் தருகிறான். மழை பெய்யாத கோடை நாளில் எறும்பு வெளிவந்து தன் துணுக்கான உணவைக் கண்டது போல் அவனும் கண்கள் மிளிர சாப்பிட ஆரம்பித்தான்.

  எனக்கு ட்ரெயினுக்கு நேரமாவது உரைத்தது. அவசரமாக மீதத்தைப் பார்க்க முடியாமல் கிளம்பி விட்டேன்.

  என்னுடைய வண்டிக்கு சிக்னல் போட்டு கிளப்பும்போது, ஓடிவந்து ஏறிக் கொள்கிறான் அதே இளைஞன். நிஜ நாயகர்களிடம் கையெழுத்து வாங்க மனம் ஏனோ அலைமோதுவதில்லை.

  நன்றி: தமிழோவியம்


  | |