Chat Meet – Icarus Prakash


இகாரஸ் அல்லது ஐகாரஸ் பிரகாசு என்னும் ஜெயப்பிரகாஷ் குறித்து நிறைய எழுதலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சலக்கு சலக்கு நடையில் மண்டையின் ஓரத்தில் விடாப்பிடியாக ஒட்டிக் கொள்ளும் எழுத்தின் கர்த்தா.

சாம்பிளுக்கு பழைய ராயர் காபி கிளப்பில் இருந்து ஆவி பறந்த மெனுவில் சில:

 • Entrance with a Bang – சுய அறிமுகம்
 • முதல் கதை (1) | (2)
 • அறிவுஜீவிகளும் அற்பாயுளுக்கும் …் (ஆதவன்)
 • ஓ…. கல்கத்தா இன்ன பிற
 • ஜெ.ஜெ. சில குறிப்புகள்

  முழுவதையும் சாப்பிட வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும், ருசி பார்க்கத் தவறவிடக் கூடாத…

 • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் செயப்பிரகாசா
 • 1. கில்லியின் இலக்கு/வெற்றி என்று எதைக் கருதுகிறீர்கள்?

  கில்லியை, ஒரு personal project ஆக நினைத்துத்தான் துவக்கினேன், community service ஆக அல்ல. இப்போதும் அப்படியே தான் நினைக்கிறேன். ஆகவே, இலட்சியம், இலக்கு என்றெல்லாம் பெரிதாக எதையும் வைத்துக் கொள்ளவில்லை. எனக்கு எழுதுவதை விட, படிப்பதிலும், அதை பகிர்ந்து கொள்ளுவதிலும் ஆர்வம் அதிகம். சுவாரசியமான விஷயம் ஏதேனும் தென்பட்டால், அதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுவது வழக்கம். அதை பொதுவான இடத்தில் வைத்துச் செய்தால், தொலைபேசிக்கு ஆகும் பணத்தையும், தனி மடல் பரிமாற்றங்களுக்குச் ஆகும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று நினைத்துத்தான் கில்லியைத் துவக்கினேன்.

  2. ஆங்கிலப் பயன்பாடை கில்லி அதிகரிக்கிறது; கில்லியில் சிலரை பரிந்துரைப்பதே இல்லை; இவரை சுட்டினால்,அந்தப் பக்கத்தில் இருந்து ஒருவரை சுட்டி சமநிலை பாதுகாக்கிறார்கள்; என்றெல்லாம் குற்றச்சாட்டு எழவில்லை:-) வந்தால் எப்படி பதில் கொடுப்பதாக உத்தேசம்? பரிந்துரைகளினால்,பதிவுகளினால் வரும் எதிர்பார்ப்புகளை எப்படி சமாளிக்கிறீர்?

  இப்படிப் பட்ட குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்கிறது.

  ஆங்கிலப் பயன்பாடு : கில்லியின் நோக்கம் மொழி வளர்ச்சி அல்ல, அதே சமயம் மொழியைக் கொலை செய்வதுமல்ல. தமிழ் மொழி பேசுபவர்களுக்கு அப்பீல் ஆகும் என்று நினைக்கிற விஷயம், ஆங்கிலமோ, தமிழோ, இந்த இரண்டில், எந்த மொழியில் இருந்தாலும், அது கில்லியிலே இடம் பெறும். உருப்படியான சங்கதிகள் எந்த மொழியில் இருந்தால் என்ன? தேவைப்படும் போது மொழிபெயர்த்துக் கொண்டால் போயிற்று.

  சிலரைப் பரிந்துரைப்பதே இல்லை : கில்லி, ஒரு exhaustive aggregator அல்ல. சிறந்ததையே கொடுப்போம் என்றோ, எல்லாப் பதிவுகளையும் கண்காணிக்கிறோம் என்றோ, சொல்வதில்லை. அப்படிச் செய்யவும் இயலாது. நிமிடத்துக்கு எத்தனை பதிவுகள் ஆரம்பிக்கப்படுகின்றன என்கிற புள்ளிவிவரம், கூகிளில் தேடினால் கிடைக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், எல்லாப் பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பது மனித யத்தனத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். மேய்கிற போது, கண்ணில் படுகிற, சுவாரசியமான விஷயத்தை இணைக்கிறோம். இணைக்கப்படுகிற அனைத்து விஷயங்களும், கில்லியின் தொகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பு, ரசனையைச் சார்ந்தே அமைகிறது.கில்லி தொகுப்பாளர்கள் அனைவரும், கிட்டதட்ட ஒத்த அலைவரிசையில் இயங்குவதால், இப்படிப் பட்ட கேள்விகள் எழுகின்றன. புதிதாக வேறு யாராவது உறுப்பினர் வந்தால் கில்லியின் நிறம் மாறலாம்.

  பரிந்துரைகள் : பரிந்துரைகள் அதிகம் வருவதில்லை. அப்படி வந்தாலும், அதை வாசித்து விட்டு, பிடித்திருந்தால் தான் இணைக்கிறேன். இது வரை யாரும், ” நான் பரிந்துரை செய்தேன், ஏன் போடலை? ” என்று கேட்டதில்லை. இனி யாராவது அப்படி கேட்டால், அது பாலாஜியின் டிபார்ட்மெண்ட் , அவரைக் கேட்டுங்க” என்று சொல்லலாம் என்று உத்தேசம்.

  3. மற்ற இடங்களில் கிடைப்பதுதானே கில்லியிலும் இருக்கிறது என்று வலைப்பார்வையாளர் விலகிச் செல்லும் அபாயம் இருக்கும் தற்போதைய கில்லிப் பதிவுகளை, மாற்றும் எண்ணம்
  இருக்கிறதா? எக்ஸ்க்ளூசிவ்கள் வரவாய்ப்புண்டா? வருங்காலத்தில் எவ்வாறு வளர்ச்சி அடையும்?

  சீரியஸாகச் சொல்கிறேன். வாசகர் வட்டம், ப்ராண்ட் லாயல்ட்டி என்று எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. ஒரு நாளைக்கு இத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்று கிடைக்கிற புள்ளிவிவரம், கொஞ்சம் திருப்தியைத் தருகிறது. அவ்வளவே. வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும், வீச்சை அதிகப்படுத்த வேண்டும் ஏன்பதற்கான திட்டம் ஏதும் இல்லை. உதாரணமாக, இது போன்ற முயற்சி ஒன்றை இணையத்தில் துவங்கினால், அதை பிரபலப்படுத்த என்று சில வழிகள் வழிகள் இருக்கின்றன. அதிலே மிக மிக எளிமையானது, என்னுடைய அட்ரஸ் புஸ்தகத்தில், இருக்கிற நண்பர்களின் முகவரிக்கு ஒரு மெயில் தட்டிவிடுவதுதான். அதைக் கூட நான் செய்ய வில்லை. ஏனெனில், இதை நானாகச் சென்று பிறருக்கு அறிவிக்கும் போது, அதிகமான பொறுப்புணர்ச்சியுடன் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதை நான் விரும்பவில்லை. அலுவலகப் பணி, விற்பனை இலக்கு, டெட்லைன், என்கிற அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் முகமாக, தளைகளில்லாத, ஜாலியான ஒரு பணியாகவே கில்லியை நான் கருதுகிறேன். ‘வெத்தான பதிவுகள் இடம் பெறுகின்றன, தரம் கூடிவிட்டது அல்லது குறைந்துவிட்டது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வருவதற்கு காரணம், இதுதான்.

  ” இதப்பாருங்க சார்/மேடம், நான் எனக்குப் புடிச்சதை இங்கே லிங்க் கொடுக்கிறேன். அது எதைப் பத்தினதுங்கறது ஒரு சின்ன லீடும் கொடுக்கிறேன். புடிச்சிருந்தா கிளிக் செஞ்சு படிங்க, இல்லாட்டி விடுங்க..டைம் கிடைச்சா நாளைக்கு நைட் வந்து பாருங்க, ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு புடிக்கும். படிச்சுட்டு, ஏதாச்ச்சும் சொல்லணும்னு தோணினா, இங்கே பின்னூட்டம், கொடுக்கணும்னு கட்டாயமே இல்லை, அந்தப் பதிவிலேயே போய் சொல்லுங்க”

  இதைத்தான், நான் அடிக்கடி, நேரிலே பார்க்கிற நண்பர்களிடம் சொல்வது. no-obligation-from-either side. இதுதான் கில்லியின் மாடல்.

  புதுசு புதுசாக ஏதாச்சும் ஐடியா வர வர, செஞ்சு பார்த்துக்கிட்டே இருப்போம். ஆகவே வருங்காலத்தில் கில்லியில் மாற்றமும் வளர்ச்சியும் இருக்கும். ஆனால், அது வாசிக்கிற அனுபவத்தை மேம்படுத்துகிற மாதிரியும், கில்லியின் தெரிவுகளில் நம்பிக்கை வைத்து, ஆசையாக வந்து படிப்பவர்களுக்கு, இன்னும் அதிகம் தீனி போடுகிற மாதிரியும் தான் இருக்கும்.

  4. கில்லியினால் தங்களின் சொந்தப் பதிவில் இடுகைகள் குறைந்து, கிட்டத்தட்ட நிறுத்தவேப் பட்டுவிட்டது? உங்களின் எழுத்தார்வம் எப்படி இருக்கிறது? புத்தகம் எல்லாம் போடும் எண்ணம்
  உண்டா…

  எனக்கு எழுதுவதைவிடவும் படிப்பதிலே தான் ஆர்வம் அதிகம். எதையாவது எழுதினேன் என்றாலும் கூட, அதும் அந்த நேரத்தில் படித்தது, பார்த்தது , கேட்டது ஆகியவற்றின் எதிர்வினையாகத்தான் அமையும். சுயமாக ஒரு விஷயத்தை என்னால் உருவாக்கவே முடியாது என்பது, எனக்கு தாமதமாகத்தான் புரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக, அவ்வப்போது எழுதி, பின்னூட்டங்கள் மூலமாக பிடரியில் அடியும், பூங்கொத்தும் பெறுவது வேறு. எழுதுவதற்கு என்று நேரம் ஒதுக்கி, consistent ஆக செயல்படுவது என்பது வேறு. பின்னது எனக்கு வராது.

  சொந்தப்பதிவு இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது, சொந்தப் பதிவில் நீளமாக எழுத வேண்டும் என்று நினைப்பதைத்தான், கில்லியிலே சுருக்கமாக எழுதிவிடுகிறேன். கில்லிக்குள் அடங்காது என்று நினைப்பதை சொந்தப் பதிவில் எழுதுவேன்.

  எழுத்தார்வம்? இருக்கிறது. ஆனால், அது, எதிர் வீட்டு அம்மாவின் ஆஸ்துமா போல அடிக்கடி வந்து வந்து போகும். முன்பெல்லாம், ஆர்வக்கோளாறில் சிலதை எழுதிக் கொண்டிருப்பேன், இப்போது அதை எல்லாம் குறைத்து விட்டேன். அப்படியும், வெட்ட வெட்ட, சில சம, பை பை அடலசன்ஸ் ‘ என்று முளைத்துவிடுகிறது 🙂

  புத்தகம் போடும் எண்ணம் ? இருக்கிறது. ஆனால், இது வரை எழுதியதில், புத்தகம் போடுகிற அளவுக்கு ஒன்றுமே தேறவில்லை. பிசினஸ் புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்னுடைய அனுபவங்களை அடிப்படையாக வைத்து, கொஞ்சம் கற்பனை கலந்து, சென்னை போன்ற வளரும் மாநகரத்திலே ஒரு மீடியம் லெவல் பிசினஸ் செய்வதிலுள்ள கஷ்ட நஷ்டங்களை, உபதேசங்கள், புள்ளிவிவரங்கள், பின்னிணைப்புகள் ஏதுமில்லாமல், entertainment value அதிகம் உள்ள மாதிரி ஒரு ஜாலியான புஸ்தகம் எழுத வேண்டும் என்று எண்ணம் உள்ளது. அதிலே இடம் பெற இருக்கும் ஒரு அத்தியாயத்தை [ recruitment process இல், ரிசப்ஷனிஸ்ட்டைத் தேர்வு செய்யும் போது நடக்கும் கூத்துக்கள் ( உண்மை +கற்பனை) ], ஏழாவது முறையாக அடித்துத் திருத்தி சீராக்கி, நண்பர்களிடம் ( வலைப்பதிவு பக்கமே வராதவர்கள்) காண்பித்த போது, கிடைத்த reaction நம்பிக்கை தருவதாக இருந்தது. என்னுடைய வேகத்துக்கு, எப்படியும் முடிக்க இன்னும் ஆறுமாசமாவது ஆகும். பதிப்பகத்துக்கு பேர் கூட தேர்வு செய்துவிட்டேன். oneBookWonder. புஸ்தகம் போட முப்பதாயிரத்து சொச்சம் செலவாகும் என்கிறார்கள்.அதான் கொஞ்சம் யோசனையாக இருக்கிறது 🙂

  5. கிரிக்கெட் போல் பதினொன்று ஆட்டக்காரர்களாக மாறும் வரை பங்களிப்போர் எண்ணிக்கை உயருமா? விகிதாசாரப் பிரதிநித்துவம் உண்டா? யார், யார் அடுத்து சேர்கிறார்கள்.

  எந்த திட்டமும் கிடையாது. கில்லி என்கிற ஐடியா முந்திய நாள் இரவு தோன்றியதும், அடுத்த நாள் இரவு பாலாஜியிடம் கேட்டேன். ‘சரி வரேன்’ என்றார். பத்ரியிடம் கேட்டேன். ‘சரி, ஆவட்டும் பாக்கலாம்’ என்றார் காமராஜர் மாதிரி. பிறகு வந்தார். திடீர்னு ஒரு நாள் வெங்கட் கிட்டே கேட்டேன். சரின்னார். wa வும் அப்படியே. சில பேர் இயலாமையைச் சொல்லி மறுக்கவும் செய்தார்கள். இனிமே யார் வருவாங்கன்னு எனக்கே தெரியாது. ப்ளான், ஸ்ட்ராடஜின்னு எதுவும் கிடையாது. கோட்டு சூட்டு போட்டு, கண்ணாடி அறைக்குள்ளே நடக்கிற conference ஐ விட, barCamp மாதிரியான un-conference க்குத்தான் இப்ப மவுசு ஜாஸ்தி. மூளை ஒழுங்கா வேலை செய்யற வரைக்கும், தோணின படியெல்லாம் செஞ்சுகிட்டே போவோம். நல்லா இருந்தா நாலு பேர் வந்து படிப்பாங்க. இல்லைன்னா, வேற நாலுபேர் சேர்ந்து, கில்லிக்கு பதிலா, கபடின்னு ஒண்ணு ஆரம்பிப்பாங்க. இதானே யதார்த்தம்?


  | |

  14 responses to “Chat Meet – Icarus Prakash

  1. I demand next interview be mine.

   you are alreay late.

  2. உங்களுடனான உரையாடல்தான் முடிந்து விட்டதே!

   மீனா, ப்ரீத்தி, ரீத்து, அனுஷ்கா என்று ஒன்றுக்கு நாலா பதில் கொடுத்தீங்களே… மறந்துட்டீங்களா 😛

  3. முகமூடி

   ப்ரகாஷின் முயற்சியை பாராட்டி ஒரு பின்னூட்டம் விட வேண்டும்… ஆனால் இந்த பதிவு கில்லியில் வந்தபிறகு அங்கு விட்டால் ஒரே கல்லில ரெண்டு மாங்காய்… எப்பங்க இது கில்லில வரும்? (எதுக்கு வம்பு… ஏற்கனவே நேரம் சரியில்ல… சில ஸ்மைலிக்கள தூவிக்கிறேன்)

  4. —ஒரே கல்லில ரெண்டு மாங்காய்… —

   கனியிருப்ப காய் கவர்ந்தற்று முகமூடி!

   மாம்பழம் இருக்கும்போது மாங்காய் என்று சொல்வதின் உட்பொருள் எல்லோருக்கும் விளங்குகிறதா?

   கில்லி, கல்லி(ல்), என்று சொல்லில் விளையாடிய வார்த்தை வில்லி முகமூடிக்கு நன்றி.

   (‘அங்கே ஸ்மைலிகள் சிரிக்கட்டும…
   அது ஆணவச் சிரிப்பான்கள்!’ என்று யாரும் சில்லியா கிளம்பாம இருக்கணுமே 🙂

  5. Gilli rocks. இதுவரைக்கும் இருக்கற பார்ம் எனக்கு பிடிச்சிருக்கு. இப்படியே லூஸ்லயே விடுங்க. ‘நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் லிங்க் போட்டுக்கிட்டேதான் இருப்பேன்’ அப்படீங்கறாரு பிரகாஷ். எதிர்ப்பார்ப்புகள் குறைவானால் ஏமாற்றங்களும் குறையும்கிறதை நல்லா புரிஞ்சுட்டிருக்காரு. Please keep the BP meter always low in Gilli.

  6. பிரகாஷின் பதில்களில் எதுவுமே ஆச்சரியமளிக்கவில்லை…இந்த கேள்விக்கு இந்த மனிதர் இப்படித்தான் பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பின்படியே பதில்கள் இருந்ததாகத் தோன்றியது. இதை ஒரு compliment ஆகவே சொல்கிறேன்.

   கில்லியை ஒரு அன்றாட must-read ஆக்கியது ஒரு சாதனைதான். வாழ்த்துக்கள் (உங்களுக்கும்தான்).

  7. நன்றி ஸ்ரீகாந்த்.

  8. ஏமண்டி பிரகாஸ்காரு,

   30000 ரூவா உம்ம புஸ்தகத்து கம்மின்னு விட்டுட்டீரா? நான் பைனான்சின் பார்ட்னரா வரட்டுமா? எத்தன பெர்செண்டேசு?

   கபடிக்கு ஏற்கனவே திட்டம் தீட்டி சேஸ்துன்னாரு நானு.

  9. சுரேஷ் கண்ணன்

   கில்லி ஆரம்பிக்கப்பட்ட போது ‘இன்னாடங்கடா இது ஓவரா பிலிம் காட்றானுவோ” என்றுதான் முதலில் பட்டது. ஆனால் நாளடைவில் அதை உபயோகிக்கப் பழகின போது மிகவும் உபயோகமானதாக தோன்றியது. இணையத்தில் அதிகம் செலவிட இயலாத, எல்லா வலைப்பதிவுகளையும் பார்வையிட இயலாத என்னைப் போன்றோர்க்கு அதனளவில் சுவாரசியமான பதிவுகளை இனங்காட்டும் வகையில் கில்லியின் பணி அமைந்திருந்தது சிறப்பான வசதியாக இருந்து வருகிறது. வௌ;வேறு வகையான ரசனை உள்ளவர்கள் கில்லியின் குழுவில் இடம்பெற்றால் இது இன்னும் சிறப்பானதாக மிளிரக்கூடும். வலைப்பதிவுகள் என்று மட்டுமில்லாத இணையத்தில் கண்ணில்படும் அனைத்து சுவாரசியங்களையும் இனங்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். வருங்காலத்தில் கில்லி போன்று பல இணையத்தளங்கள் வரவேண்டும் என்பதே என் அவா.

  10. பாலாஜி,

   பிரகாஷின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

   இந்த ‘நான் கமிட்டெட்’ மேட்டரெல்லாம் க்ரெக்டுதான். எழுத்து சமாசாரத்துல ‘டெட் லைன்’ வெச்சுக்கினு அது பின்னாடி ஓடறதுல சில கஷ்டங்கள் இருக்குதான்.

   யஹ் ஸைட் கா நாம் ஹை கில்லி -பர் வஹீ ஹை குச் லோகோன் கி கல்லி

   இந்தத் தளத்தின் பெயர் கில்லி
   அதுவே சிலருக்கு கல்லி

   கல்லி – தெரு

   அன்புடன்
   ஆசாத்

  11. அண்ணாத்தே, கல்லி என்றால் தெரு என்பதைவிட சந்து என்பதுதானே சரி?

  12. —யஹ் ஸைட் கா நாம் ஹை கில்லி -பர் வஹீ ஹை குச் லோகோன் கி கல்லி—

   வாஹ்… வா… (வராங்கட்டிப் போ :D)

   —வருங்காலத்தில் கில்லி போன்று பல இணையத்தளங்கள் வரவேண்டும்—

   ததாஸ்து!

   —கபடிக்கு ஏற்கனவே திட்டம் தீட்டி —

   ‘பர்தேஸ்’ ஷாருக் கானையும் சேர்த்துக்குங்க. நிச்சயம் சுபாஷ் கய் தயாரிச்சுருவார் 😛

   —கல்லி என்றால் தெரு என்பதைவிட சந்து —

   இந்த மிட்-ஆன், சில்லி பாயிண்ட், கல்லி, என்று ஆடுகளத்தை விழுந்து நமஸ்கரிப்பாங்களே? அந்த கல்லியை ஆசாத் சொல்லலியா?

  13. உங்கள் பதிவுகளை என் வேகத்தில் படித்து வருகிறேன். பிரகாஷின் கில்லி மிக பயனுள்ள தளம். என்னைப் போன்ற இணையத்தை வலம் வர முடியாதவர்களுக்கும், மெதுவாக கிரகிப்பவர்களுக்கும் ஒரு தனிச் செயலராக உதவி புரிகிறது கில்லி. என் நன்றிகளை இங்கு பதிக்கிறேன்.

  14. தங்களின் கனிவான பார்வைக்கு நன்றி மணியன்

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.