Daily Archives: மே 9, 2006

My Allergy to Rising Sun & Two Leaves

யாக்கை நிலையாமை

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால் அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே.
– திருமூலர்


நான் வலைப்பதிவு ஆரம்பித்ததே இப்பொழுது எழுதும் இந்த மாதிரி டைரி குறிப்புகளுக்காகத்தான். கொஞ்ச மாதம் போன பின் வலைப்பதிவிற்காக வாசகர்களா, படித்து பாராட்டுபவர்களுக்காக பதிவா என்னும் தெளிவு பிறந்ததில் பின்னவரைத் தேர்ந்தெடுத்தேன். வேலையில் ஒரு கால், பதிவெழுதுவதில் ஒரு கால் என்று இரண்டும் குழம்பி குட்டையாகிப் போனது வேறு விஷயம்.

தொடக்கத்தில் சொல்ல நினைத்த மேட்டருக்கே மீண்டும் செல்கிறேன்.

எனக்கு உதயசூரியனையும் பிடிக்கவில்லை. இரட்டை இலைகளையும் பிடிக்கவில்லை. நான் கட்சி சின்னங்களை சொல்லவில்லை. வசந்தகால வருகையை சொல்கிறேன். இரண்டு வருடம் முன்பு வரை நானும் பெரும்பாலானவர்களைப் போல்தான் இயற்கையை ரசித்திருந்தேன்.

இலையுதிர் காலத்தில் ஷூ கால் சரசரக்க மிதிப்பதும், பனிக்காலத்தில் கார் சறுக்கலில் இடிபட்டும், வெயில் காலத்தில் பீச் தோறும் பிகினி தரிசித்தும், பூப்பூக்கும் காலத்தில் நிழற்படம் எடுத்துக் கொண்டும் துள்ளித் திரிந்த காலம் அது.

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவன் தான் மண்ணுக்குள்ள போன கதை உனக்குத் தெரியுமா‘ என்று மற்றவர் பொறாமையுடன் என்னைப் பார்த்து பாடினாலும் ‘இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்‘ என்று முப்பதுகளிலும் சதிராட்டம் போட்டுக் கொண்டிருந்த நேரங்கள் அது.

எரிமலைக் கண்களுடன் எவராவது தென்பட்டால் ‘Why are your eyes bloodshot?’ என்று தெனாவட்டாகக் கேள்விக்கணை விடுத்து, நக்கலாக ‘காலங்கார்த்தால தண்ணிய ஆரம்பிச்சாச்சா?’ என்று எகத்தாளமாக வினாத் தொடுப்பேன்.

அவர்களும் சின்சியராக ‘இதற்குப் பெயர் ஒவ்வாமை. மகரந்தச் சேர்க்கையை என் உடம்பு எதிர்ப்பதால் இது நிகழ்கிறது. இதைத் தவிர்க்க தினசரி மாத்திரைகள் உண்கிறேன். இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் மூன்று தும்மல், பல் தேய்த்தவுடன் நாலரை தும்மல், ஆடைகளுக்குள் புகுந்தவுடன் இரண்டு தும்மல் விழும். நாள் நெடுக மூக்கொழுகும். கண் சிவந்திருந்தால் பூப்பூக்கும் காலம் என்று அர்த்தம்’ என்று விளக்கிக் கொண்டு செல்வார்கள்.

‘உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. பச்சை பசேல் புல்லில் குப்புறத் தாச்சிக் கொண்டு புத்தகம் படிப்பதும், மரத்தில் மேல் ஏறி குரங்குகளுடன் ஓடிப் பிடித்து விளையாடவும், காடுகள் மலைகள் தேவன் கலைகளில் புரண்டு உருளவும் கொடுத்து வைக்காத வாழ்வும் வாழ வேண்டுமா?’ என்று சிவந்த கண்களை மேலும் கொதிக்க விட்டு இருக்கைக்குத் திரும்பி, வாரயிறுதிக்கு எங்கு சுற்றுலா கிளம்பலாம் என்று நான் திட்டமிட்டிருப்பதை அவனுக்கு CC மின் மடலிட்டு மகிழ்வேன்.

All good things were previously wicked things; every original sin has become an original virtue.‘ என்று நீட்சே சொன்னது பூமராங்காகத் திரும்பி, சென்ற வருடம் எனக்கும் மலர்சிதர் (pollen) ஒவ்வாமை (allergy) வந்து சேர்ந்தது. ‘பூங்காற்றுப் புதிரானது… புது வாழ்வு சதிராடுது‘ என்று வாழ்க்கையேத் திருப்பிப் போடப்பட்டது.

இரவினில் ஆட்டம்; பகலிலே நாற்சுவருக்குள் அடக்கம். இதுவே என் வாழ்வின் முறையாகிப் போனது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வசிப்பதால் எந்த கடற்கரைக்கு சென்று சூரியோதயத்தை ரசிக்கலாம் என்பது போய், சூரிய டிவி மட்டுமே வாடிக்கையாகப் போகியிருக்கிறது.

எந்த சினிமாப் பாட்டை கேட்டாலும் கண்ணெரிச்சல் நிழலாடுகிறது.

கண்ணுக்குள் நூறு நிலவா? கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா?‘ என்றவுடன் ‘கண்ணுக்குள் நூறு சூரியனா? கைகுட்டை கிளர் கண்ணீர் எழுப்பிய கதிரா?’ என்று வைரமுத்துவாக்கிறது.

ஏப்ரல், மேயிலே பசுமையே இல்ல‘ என்னும் பாடலின் முழு அர்த்தமும் இப்பொழுதுதான் புத்திக்கு உறைக்கிறது. ‘ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயது; மாலை நேரம் வந்தால் பாட்டும் பாடும்…‘ என்னும் வரிகளில் உள்பொதிந்த கருத்துக்கள் வெண்குழல் விளக்காக ஒளிர்கிறது.

கொடி சுருட்டுப்பொதியை முதுகில் மாட்டிக் கொள்ளாத குறையாக இருந்த எனக்கு இன்று புல், பூண்டு, புன்னை மரம், புன்னாகவராளியால் ஒவ்வாமை குடியேறி பால் காய்ச்சி காலையில் இரு மாத்திரையும் இரவில் இரு மாத்திரையும் வசூலிக்கிறது. தமிழ்ப்பட வில்லனின் கே பாலச்சந்தர் ஸ்டைல் வசனம் போல் ‘மலர் விட்டு மலர் தாவும் வண்டு நான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தது போயே போயாச்சு.

ஆனால், எல்லாம் நன்மைக்கே என்பது போல், இதிலும் சில நன்மைகள் இல்லாமல் இல்லை. புல் வெட்டும்போது மீந்து போன மற்றும் தவறி விழுந்த வெடிகுண்டுகள், கொல்லைப்புறத்தில் கிடைப்பதில்லை.

க்ளோபல் வார்மிங், சுற்றுச்சூழல் மாசு எல்லாம் கப்ஸா என்று நினைத்த மனம் விநோத நிகழ்வுகளை முடிச்சுப் போட்டுப் பார்க்க துள்ளுகிறது.

உருப்படாத விஷயத்துக்கெல்லாம் கண்டுபிடிப்புகள் வெளியாகின்றதே… இந்த ஒவ்வா-மாயை நான் சுவாசிக்கும் காற்றின் அருகாமையில் இருந்து சமச்சீர் செய்ய கருவி வரும் காலம் எக்காலமோ!?

அக்காலம் வரை நான்கு சுவருக்குள் அடைந்து கிடக்க பணிக்கப்பட்ட, பின்தூங்கி முன் எழும், கண்களைக் கசக்கிக் கொண்டு நிற்கும்,
இவண்

சில செய்திகளுக்கு சுட்டி காட்டியவர்: டேவ் பாரி.


| |

கொஞ்சம் கொஞ்சமாய்…

இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒரு காமெடி படங்களே. கடந்த முறை இந்த கூத்துத்தான் நடந்தது.ஆகவே எனதருமை ரத்தத்தின் ரத்தங்களே. கவலை வேண்டாம்.யார் யார் எந்த கட்சி ஆதரவாளர்களின் என்பது அனைவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆகவே இப்போது வந்திருக்கும் இந்த எக்ஸி்ட் போல் எனப்படுவதை பார்த்து பம்மி கருத்தே லேசாக மாற்றி நான் அன்னைக்கே நினைத்தேன்,இருந்தாலும் பரவாயில்லை, எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, அராஜகம் பண்ணி ஜெயிச்சானுங்க போன்ற கருத்துக்களை கழக கண்மணிக்ள அள்ளிவிட வேண்டாம்.சில ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை இழப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதிமுக அவ்வளவு சுலபமாக தோற்கும் அணி அல்ல. கிராமப்புறங்களில் கணிசமாக ஆதரவு கொண்ட அந்த இயக்கம் எக்ஸிட் போல்கள், கருத்து கணிப்புகள் ஆகியவற்றை ஏற்கனவே சிலமுறை தவிடு பொடியாக்கி உள்ளது.

தேர்தல் நேரங்களில் சின்ன சின்ன வெட்டுகுத்துக்கள் நடந்ததை எல்லாம் வைத்து முழு தீர்ப்பை யாரும் எழுதமுடியாது.அது நியாயமும் அல்ல.ரவுடிகள் இரு கட்சிகளிலும் இருப்பது உலக உண்மை.

விஜயகாந்த் என்பவருக்கும் இது முதல் சோதனை. கருத்து கணிப்புகளில் பத்து சதவீதம்வரை ஓட்டு வாங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இது காமெடியன் வைகோவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இது அதிகம் ஆகலாம்.ஆனால் எதிர்காலத்தில் யாருடனாவது கூட்டணி சேர்ந்தால் இது நீர்த்து போகலாம்.

ஒருவேளை திமுக ஜெயித்தாலும் தயாநிதி மாறன் டாடா விஷயத்தில் தவறு செய்திருந்தால் இந்த வெற்றியை காண்பித்து அவர் செய்ததை நியாயம் என்று சொல்ல மக்கள் அனுமதிக்கக்கூடாது.

தேர்தல் தில்லுமுல்லுகள்

இது பல செய்தித்தாள்களிலும் அய்யா, அம்மா டிவியில் (கை நிறைய உப்போடு) பார்த்து அதிலிருந்து கொஞ்சம் சலித்ததும், கொஞ்சம் சொந்தமாக, நேரடியாக சிலரிடம் விசாரித்ததிலிருந்தும்…

1. கையில் இட்ட மையை அழித்து, பின் கள்ள வாக்கு போடுவது: நேற்று என் கையில் இட்ட மையை லேசாக அழித்துப் பார்த்தேன். மை காய்வதற்கு முன் இழுத்தால் கையோடு வந்துவிடுகிறது. நக்கலாமா என்று யோசித்துப் பார்த்தேன். அதில் என்ன ரசாயனம் இருக்கிறது என்று தெரியாததால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். தினமணி செய்தியில் இதற்கெனத் தனியாக ஓர் அமிலம் கிடைக்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதே செய்தியில் தினமணி நிருபர் அவ்வாறு நான்கைந்து முறை வாக்களித்த சிலரிடம் பேசியதும் தெரிய வந்தது. உண்மையாக இருக்கலாம்.

2. வாக்குச்சாவடியில் குளறுபடிகள்:
(அ) ஒரு வாக்குச்சாவடியில் வேலை செய்யும் அரசு அலுவலர், நாளின் இறுதியில் தானாகவே சில வாக்குகளை (ஏதோ ஒரு கட்சிக்குப்) பதிவு செய்ய முயன்றுள்ளார். அதைக் கண்ட தேர்தல் முகவர்கள் புகார் செய்ய, அவர்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
(ஆ) சில வாக்குச்சாவடிகளில் வேட்பாளரோ, அவரது ஆதரவாளர்களோ அடிதடியில் இறங்கியதாக திமுக, அஇஅதிமுக வட்டாரங்கள் இரண்டுமே குறை கூறின. ஆண்டிப்பட்டி தொகுதியில்தான் வாக்குப்பதிவு இயந்திரத்தையே அதிரடியாக செயலிழக்கச் செய்ய சீமான் முயன்றதாகப் புகார்கள் வந்துள்ளன.
(இ) வாக்குச்சாவடிக்கு அருகில் கையில் செல்பேசியுடன் சில அரசியல்வாதிகள் ஆள்களைச் சேகரித்துக்கொண்டிருந்தனர். இது அனுமதிக்கப்படாத செயல். நான் வாக்களிக்கச் சென்றபோதே இதை கவனித்தேன்.
(ஈ) வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தல். பல செய்தித்தாள்களில் இது வந்திருந்தாலும் நான் நேரடியாகவே இதனை உறுதி செய்தேன். என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பகுதிகளில் (கோபாலபுரம்) திமுக, அஇஅதிமுக இருவருமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இரண்டு கட்சிகளிடமிருந்தும் மக்கள் பணம் வாங்கியுள்ளனர். அஇஅதிமுக தலைக்கு ரூ. 250-ம், திமுக அதற்குமேலும் தந்ததாக நான் பேசியவர்கள் சொன்னார்கள். இரண்டு பேரிடமும் பணம் வாங்கிக்கொண்டு யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு சிரிப்புதான் பதில். ஒருவேளை விஜயகாந்த் கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கலாம்:-)
(உ) வாக்களிப்போருக்கு நாள் முழுதும் உணவு. என் வீடு வாக்குச்சாவடிக்கு (National Public School, Lloyds Road) நேர் எதிரே. பலர் கூட்டம் கூட்டமாக எதிரே இருந்த காதி அலுவலகத்தின் வாயிலில் உட்கார்ந்து காலை உணவு, மதிய உணவு (பிரிஞ்சியாம்…) சாப்பிட்டுவிட்டு பின்னர்தான் வீட்டுக்குப் போனார்கள். கட்சி அலுவலர்கள் (பார்க்க திமுக போல் இருந்தது) தம் ஆதரவாளர்களுக்கு – அல்லது தம் கட்சிக்கு வாக்களிப்பவர்களைப் போல இருந்தவர்களுக்கு – நாள் முழுதும் சாப்பாடு வாங்கிக்கொடுத்தனர். வாக்களித்து வந்தபின்னும் அவர்கள் உட்கார்ந்து மாலை வரை வாங்கி சாப்பிட்டுவிட்டு, பின்னர்தான் நகர்ந்தனர். இன்று காலை செய்தித்தாளில் பிரியாணி கிண்டும் திமுக ஆதரவாளர்கள் படமும் இருந்தது.
(ஊ) 49 O? அப்பிடின்னா என்ன? பல வாக்க்குச்சாவடிகளில் 49 ஓ பிரிவு பற்றித் துளியும் புரிதல் இல்லை என்றும், மீறி 49 ஓ போடுவோம் என்றவர்களை “அது உங்களுக்கு நல்லதில்லை” என்ற மாதிரியான மிரட்டலும் வந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(எ) வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. ஓரிடத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை ஒளிர்ந்ததாகச் செய்தி. சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை – கருணாநிதி வாக்களிக்கும் சாவடியிலும் (இதுவும் எங்கள் தெருவில்தான் உள்ளது) இதுதான் நிகழ்ந்தது; பின்னர் சரி செய்யப்பட்டது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் 1%க்கும் குறைவான வாக்குச்சாவடிகளிலேதான் நிகழ்ந்தது.

3. அடையாள அட்டை உண்டு; பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது ஒவ்வொரு தேர்தலிலும் வரும் குற்றச்சாட்டு. உண்மையில் இதில் தேர்தல் ஆணையத்தின் மீது எந்தக் குற்றமும் இல்லை. வாக்காளர் பட்டியலைத் திருத்தும் நேரத்தில் பெயர்கள் விடுபட்டால் நாம்தான் கவனமாக மீண்டும் நமது பெயரைச் சேர்க்கவேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் அதுவே வாக்களிக்கும் உரிமையாகிவிடாது என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறியுள்ளது.

திமுக கூட்டணி வெற்றி

வாக்களித்தோர் வெளியேறும்போது எடுக்கப்பட்ட கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. இதில் மாற்றம் ஏதும் இருக்கப்போவதாக எனக்குத் தோன்றவில்லை. திமுக+ 140-150 தொகுதிகளாவது பெறும். அதற்கு மேலும் போகலாம்.

ஆனால் 200ஐத் தொடும் என்று நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் கூட்டணி ஆட்சி அவசியம். மூன்று கூட்டணி வாய்ப்புகள் உள்ளன:

1. திமுக + காங்கிரஸ்
2. திமுக + காங்கிரஸ் + பாமக
3. திமுக + காங்கிரஸ் + பாமக + இடதுசாரிகள்

இதில் முதலிரண்டுக்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகச் சொல்வார்கள்.

CNN-IBN-Hindu கணிப்பில் ஒரேயோர் ஆச்சரியம் மட்டும் இருந்தது – அது அஇஅதிமுக வட மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெறும்; ஆனால் தென் மாவட்டங்களில் நிறையத் தோற்கும் என்பது. அப்படி நடந்தால் அதற்கான காரணங்களாக இவைதான் இருக்கும்.

1. விஜயகாந்த் பாமக வாக்குகள் பலவற்றைப் பிடித்துள்ளார்.
2. விடுதலைச் சிறுத்தைகளின் பலமும் விஜயகாந்த் பிளவும் சேர்ந்து பாமக+திமுக பலத்தைக் குறைத்து அஇஅதிமுகவுக்கு நிறைய வாக்குகளைக் கொடுத்து இடங்களையும் கொடுக்கப் போகிறது.
3. பார்வர்ட் பிளாக் (தேவர்) வாக்குகள் சிதறியதால் அஇதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் வாக்குகள் குறைந்துள்ளன.
4. மதிமுகவால் தென் மாவட்டங்களில் அதிகப் பிரயோசனம் இல்லை.
5. மேல் இரண்டு காரணங்களுடன் இடதுசாரி+காங்கிரஸ் பலத்தால் திமுக கூட்டணி தென் மாவட்டங்களில் அதிக இடங்களைப் பெற்று அஇஅதிமுகவை ஒழித்துள்ளது.

சென்னையில் என்ன நடந்துள்ளது என்று வியாழன் அன்றுதான் சரியாகத் தெரியவரும்.

திமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க கருணாநிதிக்கு வாழ்த்துகள். அதே சமயம் ஜனநாயக முறை குலையாமல் இருக்க எதிர்க்கட்சிகளுக்கு 70 இடங்களாவது கிடைக்கும் என்று நம்புவோம். அதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 5 இடங்களும் மதிமுகவுக்கு 10 இடங்களுமாவது இருக்கட்டும் என்றும் நம்புவோம்.