Daily Archives: மார்ச் 16, 2006

புவியிலோரிடம்

வாசக அனுபவம்

கிட்டத்தட்ட ஷங்கர் படம் பார்ப்பது போல் இருக்கிறது. பெரிய குடும்பம். நிறைய கதாபாத்திரங்கள். பா. ராகவன் அநாயசமாக அனைவரையும் மனதில் நிலைநிறுத்துகிறார்.

நாம் நாமாகவே இருப்பதில்லை. இன்னொருவராகவே இருக்கிறோம் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லும் கதை.

பல வருடம் முன்பு படித்தாலும் அதன் தாக்கங்களை இன்றளவிலும் தக்க வைத்திருக்கிறது. நாவல் படித்து முடித்தபின்பு உடனடியாக instant gratification-ஆக ‘புத்தக விமர்சனம்’ எழுதும் எனக்கு இது ஒரு புது அனுபவம். இரண்டு மூன்றாண்டுகள் கழித்து என்றோ படித்த நாவலைப் புரட்டுவ்து, அந்தக் குடும்பத்துடன் சில நிமிடங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்வது போல் இருக்கிறது. என்றோ வாழ்ந்த வீட்டுக்கு மறுவிஜயம் செய்வது; எப்பொழுதோ கூடப் படித்த பள்ளித் தோழனை அங்காடியில் சந்திப்பது; தொலைந்து போன கணினி கோப்பை வேறெதோ தேடும்போது வந்து விழுவது போன்ற உணர்வுகளை மீட்டும் நாவல். உடனடியாக ‘வாசக அனுபவம்’ எழுதாமால் விட்டுப் போனதால் கதையின் கோர்வை கிட்டாமல் போகலாம்.

வாசுதேவன் ஹீரோ. வாசுவின் அப்பா சௌரிராஜன். அம்மா செண்பகா. ஒன்பது பிள்ளைகள். கல்வியார்வம் அற்றவர்கள்; ஆனால் தறுதலைகள் அல்ல; பொறுப்புமிக்கவர்கள். ஏழு வருமானம். பன்னிரெண்டு பேர் சாப்பாட்டுக்கு பின் மீதம் எதுவும் வைக்காத பட்ஜெட். கல்யாண வேலைகளுக்கு செல்லும் பெரியண்ணா. அவன் வழியில் தொடரப்போகும் சுந்தரா.

எதிர்மறை சிந்தனைகளில் லயிக்கும் மத்தியவர்க்கப் பிரதிநிதியாக வாசு. தப்பித் தவறி கூடத் தவறான நம்பிக்கைகளைத் தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். +2வைத் தேறிவிட்டாலும் ‘ஜஸ்ட் பாஸ்’ என்று இந்தப் பக்கம் விழுந்தவன். அந்த மோசமான மதிப்பெண்களை வைத்துக் கொண்டு ·பார்வார்ட் கேஸ்ட்டுக்கு எந்தக் கல்லூரியும் இடம் ஒதுக்காது.

நான் +2 முடித்தவுடன் கல்லூரிகளைப் படையெடுத்தது கழிவிறக்கத்துடன் எட்டிப் பார்க்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்தாலும் காலை எட்டு மணி முதல் காத்திருக்க வேண்டும். சந்திக்கும் சில விநாடிகளில் மார்க் அதிகம் எடுக்காத கணிதமும் ஆங்கிலமும் மட்டுமே கேள்விகளாக ‘ஏன்? எப்படி? எதற்கு?’ என்று வினாவாகும். ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று திருப்பியனுப்பப்படுவேன். வாசுவிற்கோ எல்லா சப்ஜெக்டுமே கால் வாறியிருக்கிறது. பச்சையப்பன் கல்லூரி அனுபவங்கள் என்னுடைய லயோலா, விவேகானந்தா காத்திருப்புகளை மருக வைக்கிறது. கரெஸ்பாண்டன்ஸ் படிக்குமாறு ஆலோசனையுடன் சிபாரிசுகள் எல்லாம் பயனற்று செல்லாக்காசாகின்றன.

மைதிலி அண்ணி பொறுமைசாலி. சடகோபன் அண்ணனின் மனைவி. இளமைக் காதலுக்காக, கல்யாணம் செய்த பிறகும் கிராமத்துக் காதலியை கண்டினியூ செய்பவன்.

சின்ன அண்ணி வத்ஸலா. இன்னொரு அண்ணன் வரதனுக்குத் ‘நாடார் கல்லூரி’யில் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நாடாராக சான்றிதழ் பெற்றால் கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்.

வரதன் பெண் பார்க்க செல்லும் படலம். தாசில்தார் ஆபீஸ் படலம். ரங்கன் ஷேத்ராடனம் சுற்ற அழைத்துப் போகும் படலம். தவறாமல் கிராமத்திற்கு செல்லும் சடகோபனை மைதிலி புரிந்துகொள்ளும் படலம். சமாஸ்ரயணப் படலம். என்று ஆங்காங்கே தேவையான உபகிளைகள் உண்டு.

குற்றவுணர்ச்சியில் தள்ளாடுகிறான் வாசு. போலியாக சர்டி·பிகேட் வாங்கி பி.காம். சேர்ந்தாகி விட்டது. வெளியாளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் சிக்கன் உண்டு பார்க்கிறான். கல்லூரி அரசியலில் பூந்து விளையாடுகிறான். சுடுசொற்களை வீசுகிறான். புகை, மது சகலமும் பயிலுகிறான். அவனைக் கண்டு கல்லூரி மாணவர்களே அஞ்சும்படி நடந்து கொள்கிறான்.

நாளை நடக்கப் போவது தெரிந்தால் நல்லதை விட நடக்காதவற்றையே எண்ணிப் புலம்புகிறோம். என்றாவது ‘அய்யங்கார் ஆத்துப் பையன்’ குட்டு வெளிப்படுமோ என்னும் அச்சம். சுய அடையாளங்களை மூடி மறைத்து பொய் வேஷம் கட்டுகிறோமே என்னும் கோபம். வெறுப்பும் படபடப்பும் இனப்பற்றா அல்லது அல்லாத வார்த்தைகளைக் கேட்டு உண்டாகும் அருவருப்பு மட்டுமா என்னும் உணர்ச்சிக்குழப்பம்.

அளவற்ற ஹாஸ்டல் சுதந்திரம். தன்னிலை மறந்த தேடல். விரக்தியில் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு டெல்லிக்கு இரயிலேறுகிறான். சுதந்திரமாக உணர்கிறான். இப்படித்தான் உன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும்; இதை சொன்னால்தான் உன்னால் ‘அவர்களுள்’ ஒருவராக ஆக்க முடியும்; இப்படி நடந்து கொண்டால்தான் நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய் என்னும் கட்டுப்பாடுகள், அதிகாரபூர்வமற்ற விதிமுறைகள் இல்லை. முன்முடிவுகள் கிடையாத உலகத்தில் பரிகசிக்க ஆரம்பிக்கிறான்.

‘நான் யார்’ என்னு தேடல் கொண்டவர்கள்; சாதீயக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளிவேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; சுதந்திரத்தை எத்தனிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை.

“மனித வாழ்வின் அர்த்தமே, புரிந்து கொள்வது என்கிற ஒற்றைச் சொல்லில் முடிந்து விடுவதாகத்தான் நான் நினைக்கிறேன்.”


முன்னுரையில் இருந்து:
சாதிபேதமற்ற சமூகம் என்னும் பொய்க்கனவை சலியாமல் விதைத்து வருகிறார்கள் அரசியல்வாதிகள். பொய்யை உண்டு வாழ்வதைக் காட்டிலும் பட்டினியில் இறந்துவிடுதல் உன்னதமானதென்று நினைக்கிறேன். தன்னளவில் இது முழுநாவலேயானாலும் என்னளவில் முதல் அத்தியாயமே ஆகும். முன் மதிப்பீடுகளற்று இதனை அணுகும் ஒவ்வொரு வாசகருமே இதன் அடுத்தடுத்த அத்தியாயங்களை நிர்ணயிப்பவர்களாவார்கள்.
பா. ராகவன்
ஜூலை 13, 2000

1. நாவலில் இருந்து சில பகுதிகள்

2. ச.திருமலை – RKK


| |

Dinamalar Poster Captures

தினமலரில் இருந்து சுவரொட்டி/மின் விளம்பரங்கள்:

எல்லா காங்கிரஸ் தலைவர்களையும் இப்படித்தான் சேர்க்க முடிகிறது.
(அல்லது)
விட்டுப் போன முகங்கள் தனிக் கட்சியை கூடிய சீக்கிரம் துவங்குமா?
செல்வி. ஜெயாவுடன் கூட்டு அமைத்தாலும் சீட்டு கிடைக்குமா?

Dinamalar - Click for bigger Image

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்கவேண்டும் என்றும் ஒரே சின்னக்கொடி!

Dinamalar - Click for bigger Image