Daily Archives: மார்ச் 4, 2006

தலித் அடையாளமா? தமிழ் அடையாளமா?

பிபிசி தமிழ்: எதிர்வரும் தமிழக சட்டமன்றத்தேர்தலில், புதிய தமிழகம் கட்சி 150 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக, அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமி செவ்வி (அலர்ட் விட்டவர்: Sambhar Mafia)

அதேசமயம், தம்மோடு கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் தொடர்புகொண்டு பேசியதாகவும், ஆனால், தமிழக சட்டமன்றத்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் இருப்பதாக தமக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

தமது கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆளும் அஇஅதிமுக தரப்பிலிருந்தும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய கிருஷ்ணசாமி, அஇஅதிமுக தலைமை, தமது கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து, தமது தலித் சமூகத்திற்கு சம அந்தஸ்தும் அதிகாரப்பகிர்வில் உரிய இடத்தையும் உறுதி செய்தால் அஇஅதிமுகவுடன் தமது கட்சி கூட்டணி அமைத்துக்கொள்ள தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.

அஇஅதிமுகவுடன் தமது கட்சிக்கு ஏற்கெனவே ரகசிய ஒப்பந்தம் உருவானதாக வெளியாகும் தகவல்களை உறுதியாக மறுத்த கிருஷ்ணசாமி, எந்த தேர்தல் உடன்பாடானாலும், அது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

தமக்கும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனுக்கும் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்த கிருஷ்ணசாமி, கடந்த காலத்தில் தலித் என்கிற பொதுவான தளத்தில் தாங்கள் ஒருவரும் இணைந்து செயல்பட்டதாகவும், ஆனால் திருமாவளவன் தலித் என்கிற தனி அடையாளத்தை விட்டு விலகி, தமிழ் அடையாளத்தில் தன்னை சுருக்கிக்கொண்டதால் தான் தலித் ஒற்றுமையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தலித் அடையாளத்திற்கு தமிழ் அடையாளம் ஒரு பின்னடைவை உருவாக்ககூடிய விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி கணக்குகள்

தி.மு.க கூட்டணி

தி.மு.க – 143
காங்கிரஸ் – 45
பா.ம.க – 30
கம்யுனிஸ்டுகள் – 14
முஸ்லீம் லீக்/இதர கட்சிகள் – 2

Update: ஜெயலலிதா இந்திய தேசிய லீக்கிற்கு இரண்டு தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் கொடுத்து கூட்டணியில் இழுத்துள்ளார்.

ஆர்.எம்.வீ
கண்ணப்பன்
பிற சாதி சங்கங்கள் – இதயத்தில் இடம்

அ.தி.மு.க கூட்டணி

அ.தி.மு.க – 172
ம.தி.மு.க – 35
விடுதலை சிறுத்தைகள் – 9
இந்திய தேசிய லீக் -2
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1
பா.ஜ.க – 15 [கடைசி நிமிட பல்டி நடக்கலாம்]

வெளியில் இருப்பவை / எந்நேரமும் அ.தி.மு.கவில் சேரலாம் என்றிருப்பவை

புதிய தமிழகம்
பார்வார்டு ப்ளாக்
விஜயகாந்தின் தே.தி.மு.க
உதிரி கட்சிகள்

அப்படி வந்து பா.ஜ.க உள்ளே வரமால் போனால், பத்ரி சொல்வது போல நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பார்வார்ட் ப்ளாகில் கார்த்திக் 35 இடங்கள் கேட்கிறார் – காமெடி படங்களில் நடித்து, நன்றாக நகைச்சுவை உணர்வு பொங்க பேசுகிறார். விஜயகாந்த் சடாலென ரிவர்ஸ் கியரில் இப்போது எல்லா இடங்களில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் போட்டு என்னத்த கண்டீர்கள் என்று அறைகூவல் விடுகிறார், கடைசி நிமிடம் சூட்கேஸ் மாறலாம்.
புதிய தமிழகமும், வி.சி.களும் ஒரே அணியில் இருந்தால் அது எந்தளவிற்கு உபயோகப்படும் என்று தெரியாது.

இப்போதைக்கு மேலுள்ள கணக்கில் மாறுதல் வரவேண்டுமானால், பா.ம.க.விற்கும், கம்யுனிஸ்டுகளுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. வை.கோ இல்லாததால், 20 தொகுதிகள் மிச்சம் என்று எண்ணியவாறே கூட்டணி கட்சிகள் பங்கீட்டினை அதிகரிக்கச் சொல்லுவார்கள்.

ஆனால், கலைஞரின் சாமர்த்தியமே, எவையெல்லாம் அ.தி.மு.க வின் கோட்டை என்று நினைக்கிறாரோ, அவற்றினை காங்கிரஸ், கம்யுனிஸ்டுகளின் தலையில் கட்டிவிடுவார். டிட்டோ ஜெயலலிதாவும். 135 தொகுதிகளுக்கு குறைவாக தி.மு.க போட்டியிட்டால், கூட்டணி ஆட்சி கோஷம் தொடங்க ஏதுவாக இருக்கும்.

இப்போதைக்கு சுவாரசியமான நிகழ்வு இனி வரும் மாதங்களில், வை.கோ கருணாநிதியினை எதிர்த்து என்ன பேசுவார்? மருத்துவர் தான் “அன்பு சகோதரர்”, “அன்பு சகோதரி” என்று மாறுவாரா என்ன? “சமத்துவ நல்லாட்சி அமைய” வை.கோ “அன்பு சகோதரிக்கு” ஒட்டுப் போட சொல்லுவாரா? அல்லது கருணாநிதி அன்பு தம்பி துரோகியாகிவிட்டான் என்று புறநானூறு கதைகள் சொல்வாரா?

ஆக மொத்தம், அடுத்த இரண்டு மாதங்கள், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை.

வைகோ – அதிமுக கூட்டணி

முன்னாள் எதிரிகளான வைகோவும் ஜெயலலிதாவும் இன்று கூட்டு சேர்ந்துள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 22 சீட்டுகளுக்குமேல் கிடையாது என்று நேற்று கருணாநிதி அறிவித்தபிறகு இந்த நகர்வு எதிர்பார்க்கப்பட்டதே.

வைகோவுக்கு அதிமுக கூட்டணியில் 35 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்போதைக்கு அதிமுக கூட்டணி நிலவரம்:
விடுதலைச் சிறுத்தைகள் – 9
மதிமுக – 35

இன்னமும் விஜயகாந்த், பாஜக, புதிய தமிழகம் ஆகியவை அதிமுகவுடன் சேர வாய்ப்புகள் உள்ளன. பலரும் சொல்வதுபோல கம்யூனிஸ்டுகள் அணி மாறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

வைகோ அதிமுக கூட்டணிக்குச் செல்வது பாமக, காங்கிரஸ் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் அதிக இடங்கள் கிடைக்க உதவும். இப்பொழுது மேலும் பிரித்துக்கொடுக்க திமுகவிடம் 22 இடங்கள் உள்ளன. அதில் 10 நிச்சயம் பாமகவுக்குப் போய்ச்சேரும். இதனால் பாமக 35 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள் வரையிலும் போட்டியிடுவார்கள் என்று நினைக்கிறேன். கம்யூனிஸ்டுகளுக்கு 15 இடங்கள். 4-5 இடங்கள் இதர உதிரிகளுக்கு. திமுக 135 இடங்களிலாவது போட்டியிடும்.

அதிமுக கூட்டணியில் இன்னமும் 20 இடங்கள்வரை வெளியாருக்குக் கொடுக்க ஜெயலலிதா முன்வரலாம். ஆளுக்கு ஐந்து வீதம் விஜயகாந்த், பாஜக, புதிய தமிழகம் ஆகியவை பெறலாம். இதனால் அதிமுக கிட்டத்தட்ட 170 இடங்களில் போட்டியிடும்.