Monthly Archives: பிப்ரவரி 2006

அரசியலில் நேர்மை

இமேஜா, அதிக இடங்களா என்று யோசித்து விட்டு இமேஜ் தான் முக்கியம் என்று வைகோ முடிவு செய்து விட்டார் என தெரிகிறது. திமுக கூட்டணியில் முன்பு கூறியதை விட சற்று அதிக இடங்களை வைகோ பெறக் கூடும். அந்த வகையில் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

வைகோவின் முடிவு திமுக கூட்டணியை வலுவாக்கும். திமுகவை கோட்டையின் அருகே இந்த முடிவு அழைத்து சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.

திமுகவின் தலைமையை (கலைஞர், ஸ்டாலின்) பலப்படுத்துவதாக உள்ள இந்த முடிவு வைகோவின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் உதவி செய்யும் என்பதும் விவாதத்திற்குரியது. திமுக ஆளும்கட்சியாக இருக்கும் பட்சத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் திமுகவில் விரிசல் ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.

அதே சமயத்தில் வைகோவின் இந்த முடிவு திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவின் மரியாதையை உயர்த்தும்.

வைகோவின் அறிக்கை

அரசியல் நாணயத்தையும் நாகரிகத்தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி.மு.க., இந்த அரசியல் பண்பாட்டைப் பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்ற விலை அதிகமாகும்.

இதற்காக ஏற்றுக்கொண்ட துன்ப துயரங்கள் ஏராளம். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களைக் கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும் திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.

கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும்கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.

அரசியல் நாணயத்தையும் அரசியல் நாகரிகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம்தான் ம.தி.மு.க. என்பதைக் கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்டவட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.

பொது வாழ்வைப் பாழ்படுத்தும் அரசியல் வர்த்தகச் சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக்கம். ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத்தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் ம.தி.மு.க., அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ ஜ.மு.கூ-வில் தொடர்கிறார்?

தி ஹிந்து

மதில்மேல் பூனையாகத் தொடரும் இந்த விவகாரத்தில் இன்று வைகோ தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தொடர்வதாகச் சொல்லியிருக்கிறார். கருணாநிதி இதை வரவேற்றிருக்கிறார்.

ராமதாஸ் இன்று கருணாநிதியைச் சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்துள்ளதாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் பிரச்னை இத்துடன் முடிந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் சஸ்பென்ஸ் தொடரும் என்றே நினைக்கிறேன்.

சொல்றாங்க சொல்றாங்க

1. திமுக கூட்டணியில்தான் வைகோ இருக்கிறார். – அன்புமணி

2. எதிர் அணியில் பேரம் பேசும் தந்திரத்தை மதிமுக கடைப்பிடிக்கிறது. – ஆர்க்காடு வீராசாமி

3. இயற்கையைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். எறும்புகள் வரிசையாகச் செல்கின்றன. தூக்கனாங்குருவி கஷ்டப்பட்டு கூடு கட்டுகிறது. இப்படி, பல பழமொழிகள், அடுக்கு மொழிகள், உணர்ச்சிப் பிழம்புச் சித்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ‘இனிப்பு தரும் கனியிருக்க கசப்பான காயைத் தேர்ந்தெடுப்பது’ பற்றியும் வைகோ ஏதோ சொல்லியிருக்கிறார். இதற்கு பதில் மவுனமாக இருந்திருப்பதே சாலச் சிறந்தது!

4. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் பரஸ்பரம் மரியாதையையும் நீக்குப்போக்கையும் கடைப்பிடித்தால் சட்டப் பேரவைத் தொகுதிப் பங்கீட்டுப் பணி எளிதாக முடியும். – வீரப்ப மொய்லி. அதே சூட்டோடு, “2004-க்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீட்டின்போது அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்!

புதிய வாரிசு

டாக்டர் ராமதாஸ் மற்றொரு புதிய வாரிசை அறிமுகப்படுத்துகிறார். அவரது மகள் கவிதா இந்தத் தேர்தலில் பாமக சார்பாக போட்டியிடப்போவதாக விகடன் தெரிவிக்கிறது.

தமிழக அரசியலில் “மகளை” வாரிசாக களமிறக்கும் முதல் அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ் தான்.

மகன் டெல்லிக்கு, மகள் சென்னை கோட்டைக்கு

வைகோ விலகினால்…

செய்திகள் சொல்வது போல் ஒரு வேளை வைகோ அதிமுக கூட்டணிக்கு மாறிவிட்டால், திமுக கூட்டணிக்கு லாபம்தான்.

1. கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் நிரூபிக்கப்படாத கட்சி ம.தி.மு.க ஒன்று தான். இதுவரை தனித்தே போட்டியிட்டு தனது சட்டமன்ற அரசியல் பலத்தை சற்றும் காட்டியிருக்காத கட்சி அது ஒன்று தான். பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில் பலம் குறைந்ததும் அது தான்.

2. பா.ம.க, காங்கிரஸ் இரண்டையும் இன்னமும் தொகுதி ஒதுக்கி திருப்தி செய்ய முடியும். அக்கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உற்சாகத்துடன் உழைக்க வழி வகுக்கும்.

3. தி.மு.கவிற்கும் அதிகம் இடங்கள் கிடைக்கும்; தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

4. பா.ம.க, காங்கிரஸ், ம.தி.மு.க ஆகியவற்றில், அ.தி.மு.கவுடன் மிகக் குறைந்த அளவு பொருந்துவது ம.தி.மு.க தான். அக்கட்சியின் இந்த கடைசி நிமிட முடிவு மக்களிடையே அதன் செல்வாக்கைக் குறைக்கும். ஆதலால், ம.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் அதன் வெற்றி வாய்ப்புகள் குறையும்.

5. அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ தான் சிறை சென்று வந்ததைப் பற்றி ரொம்பப் பேசி பிரசாரம் செய்ய முடியாது. அவரது ஒரு முக்கிய பலம் இதனால் குறையும்.

இவை தவிர, இது வைகோவின் எதிர்கால தி.மு.க சார்ந்த திட்டங்களை பாதிக்கும். தி.மு.கவின் எதிர்காலத் தலைமை பற்றிய கொஞ்ச நஞ்ச சந்தேகங்களும் இதனால் கலையும் என்ற அளவில் கலைஞருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். மேலும், கடந்த சில நாட்களாக கருணாநிதி ‘தம்பி தன்னைக் கை விடமாட்டான்’ என்ற அளவில் பேசி வருவது, இந்த கூட்டணித் தாவலால் தான் வஞ்சிக்கப்பட்டதாகக் கூறிப் பிரசாரம் செய்யவும் உதவும்.

வைகோ திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறார்?

இன்று அவசரமாகக் கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கருணாநிதி “திமுக கூட்டணியில் இருப்பதா என்பது வைகோ கையில் உள்ளது” என்று அறிவித்தார்.

பிப்ரவரி 15க்குள் ஒவ்வொரு கூட்டணிக் கட்சியையும் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரையில் மதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லையாம். பாமகவும் முஸ்லிம் லீகும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விட்டனர். கம்யூனிஸ்டுகள் ஞாயிறு (நாளை) அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். காங்கிரஸ் பிப்ரவரி 25 அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் வைகோவிடமிருந்து இதுவரையில் பதில் எதுவும் இல்லை.

திமுகவிலிருந்து துரைமுருகன் வைகோவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் வைகோ எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி வாயைத் திறக்கவில்லையாம். எனவே கருணாநிதி “அவர்கள் ஏதோ முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அப்படியானால் எங்கள் முடிவுப்படி நாங்கள் நடந்துகொள்வோம்” என்று கூறுகிறார்.

தினமணி
தி பிசினஸ் லைன்

இடம் பெயர்தல்

அழைப்பு வந்தால் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க பரிசீலனை – திருமாவளவன். இதில் முக்கியமாய் சொல்லியிருப்பது விஜயகாந்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்பது பற்றி. ஆக, இங்கும் இடம் பெயர் படலம் ஆரம்பிக்கலாம். [தினந்தந்தி]

திண்டிவனம் ராமமூர்த்தி தன் ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கி, அ.தி.மு.கவோடு இணையலாம். அவர் வருவதால் பெரியதாக அ.தி.மு.க. விற்கு பயனில்லை. ஆனால், தி.மு.க வோடு இருக்கும் காங்கிரஸில் உள்ளடி வேலைகள் நடக்கலாம்.

வை.கோ தன் பேச்சிலிருந்து எதையும் கண்டறிய முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே உறவினராய் இருந்தாலும், முறையான அழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆக, வை.கோவின் இடம் பெயர்தலுக்கான சூழலை அவரே உருவாக்கிவிடுவார்.

மிகத் தெளிவாக, இந்த மாத ‘உண்மை’ இதழில், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி வந்த ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொண்டு அதில் எப்படி எம்.ஜி.ஆரின் துப்பாக்கி சூடு, பெரியார் திடலில் நடக்க திட்டமிடப்பட்டதாக சொல்லியிருப்பதை இழுத்து, ஆர்.எம்.வீ க்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஒரு பிளவினை உண்டாக்க முயன்றிருக்கிறார். ஆர்.எம்.வீ இப்போது தி.மு.க பாசறையில் இருப்பதும், கீ.விரமணி அ.தி.மு.க அனுதாபியாக இருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களிடத்தில் ஆர்.எம்.வியினைப் பற்றிய ஒரு கசப்புணர்ச்சியினை தூண்ட இது வழிவகுக்கும்.

இந்த வார காமெடி, நடிகர் செந்தில் விகடனில் சொல்லியிருப்பது [ஏ கருணாநிதி!]