Daily Archives: பிப்ரவரி 18, 2006

வைகோ திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறார்?

இன்று அவசரமாகக் கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் கருணாநிதி “திமுக கூட்டணியில் இருப்பதா என்பது வைகோ கையில் உள்ளது” என்று அறிவித்தார்.

பிப்ரவரி 15க்குள் ஒவ்வொரு கூட்டணிக் கட்சியையும் எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்று பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரையில் மதிமுக தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லையாம். பாமகவும் முஸ்லிம் லீகும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விட்டனர். கம்யூனிஸ்டுகள் ஞாயிறு (நாளை) அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். காங்கிரஸ் பிப்ரவரி 25 அன்று தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம். ஆனால் வைகோவிடமிருந்து இதுவரையில் பதில் எதுவும் இல்லை.

திமுகவிலிருந்து துரைமுருகன் வைகோவைச் சந்தித்திருக்கிறார். ஆனால் வைகோ எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பது பற்றி வாயைத் திறக்கவில்லையாம். எனவே கருணாநிதி “அவர்கள் ஏதோ முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. அப்படியானால் எங்கள் முடிவுப்படி நாங்கள் நடந்துகொள்வோம்” என்று கூறுகிறார்.

தினமணி
தி பிசினஸ் லைன்

இடம் பெயர்தல்

அழைப்பு வந்தால் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைக்க பரிசீலனை – திருமாவளவன். இதில் முக்கியமாய் சொல்லியிருப்பது விஜயகாந்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்பது பற்றி. ஆக, இங்கும் இடம் பெயர் படலம் ஆரம்பிக்கலாம். [தினந்தந்தி]

திண்டிவனம் ராமமூர்த்தி தன் ஆதரவாளர்களுடன் தனி கட்சி தொடங்கி, அ.தி.மு.கவோடு இணையலாம். அவர் வருவதால் பெரியதாக அ.தி.மு.க. விற்கு பயனில்லை. ஆனால், தி.மு.க வோடு இருக்கும் காங்கிரஸில் உள்ளடி வேலைகள் நடக்கலாம்.

வை.கோ தன் பேச்சிலிருந்து எதையும் கண்டறிய முடியாது என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே உறவினராய் இருந்தாலும், முறையான அழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் கூறியிருந்தார். ஆக, வை.கோவின் இடம் பெயர்தலுக்கான சூழலை அவரே உருவாக்கிவிடுவார்.

மிகத் தெளிவாக, இந்த மாத ‘உண்மை’ இதழில், கி.வீரமணி, ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி வந்த ஒரு புத்தகத்தினை எடுத்துக் கொண்டு அதில் எப்படி எம்.ஜி.ஆரின் துப்பாக்கி சூடு, பெரியார் திடலில் நடக்க திட்டமிடப்பட்டதாக சொல்லியிருப்பதை இழுத்து, ஆர்.எம்.வீ க்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் ஒரு பிளவினை உண்டாக்க முயன்றிருக்கிறார். ஆர்.எம்.வீ இப்போது தி.மு.க பாசறையில் இருப்பதும், கீ.விரமணி அ.தி.மு.க அனுதாபியாக இருப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், உண்மையான எம்.ஜி.ஆர் தொண்டர்களிடத்தில் ஆர்.எம்.வியினைப் பற்றிய ஒரு கசப்புணர்ச்சியினை தூண்ட இது வழிவகுக்கும்.

இந்த வார காமெடி, நடிகர் செந்தில் விகடனில் சொல்லியிருப்பது [ஏ கருணாநிதி!]

சொல்றாங்க சொல்றாங்க

1. திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதே அதிமுகவின் பலம். – காளிமுத்து

2. தேர்தல் வெற்றிக்காக ராஜாஜியுடன் அண்ணா கூட்டணி வைத்துக்கொண்டது போல, வரும் பேரவைத் தேர்தலில் மதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளும். – மதிமுக கொபசெ நாஞ்சில் சம்பத்

3. காளிமுத்து உங்களுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கிறாரே, நீங்கள் ஏன் மவுனமாக இருக்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலாக: “இப்போது மவுனமாக இருப்பதே நல்லது” – வைகோ

4. தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 200 இடங்களில் போட்டியிடும். குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வெற்றிபெறுவோம். – மாநிலத் தலைவர் இரா. ஆழ்வார்சாமி

5. பேயும் பூசாரியும்: கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை உணர்ந்து மக்கள் முடிவெடுத்தால்தான் பேய் பிடித்த நிலை மாறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். பேயை ஓட்ட வரும் பூசாரி வெற்றிபெற வேண்டுமானால் பேயின் பிடியில் சிக்கியுள்ளவர்கள், அந்தக் குணத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவேண்டும். இப்போது தமிழ்நாட்டு மக்கள் பேய் குணத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பேய் பிடியில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளக் கூடிய துணிச்சலும் அறிவுத் திறனும் மக்களுக்கு இருந்தாக வேண்டும். அந்தத் தெளிவும் திறனும் இல்லாவிட்டால் என்னதான் அசகாய பூசாரி வந்தாலும் அவர்களால் அந்தப் பேயை விரட்ட முடியாது, பேய் நீங்காது என்றார் கருணாநிதி.