Daily Archives: பிப்ரவரி 8, 2006

முதல்வர் யார்? – Kalki

கல்கி தலையங்கம் :: 12.Feb.2006:

மார்ச் மாதம் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடைபெறும் முன், தொகுதிப் பங்கீடு விவரங்கள் முடிவு செய்யப்பட்டுவிடும் என்கிறார் கருணாநிதி.

மிகவும் சரி. அதற்குள் முடிவானால் தான் மே மாதம் வரவிருக்கும் தேர்தலுக்குக் கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து, திட்டமிட்டு உழைக்க முடியும். ஆனால், இவ்வளவு திட்டமிடலுக்கிடையே மிக முக்கியமான கேள்விக்கு தி.மு.க தலைவர் இன்னும் பதில் கூறவில்லை: தி.மு.க கூட்டணி முன்னிறுத்தும் முதல்வர் யார் ?

கடந்த தேர்தலின் போதே கருணாநிதி தாம் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துவிட்டார். ‘இதுவே நான் போட்டியிடும் கடைசித் தேர்தல்’ என்று உறுதிபடவே சொல்லிவிட்டார்.

இன்றும் அந்நிலையில் அவர் உறுதியாய் இருக்கிறாரா என்று கேட்டால், அதை தி.மு.க பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார்!

பொதுக் குழு என்ன முடிவெடுக்கும்? எப்போது அம்முடிவு எடுக்கப்படும்? முதல்வர் யார் ?

கருணாநிதியா ? ஸ்டாலினா ? அல்லது தி.மு.கவின் வேறு மூத்த தலைவரா ? – இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல்

அ) கூட்டணி கட்சிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ள முடியும் ?

ஆ) மக்கள் எவ்வாறு வோட்டுப் போட முன்வருவார்கள் ?

கூட்டணி கட்சியினர் யாருமே ஆட்சிப் பகிர்வில் ஆர்வம்
காட்டவில்லை என்று கருணாநிதி திட்டவட்டமாகச் சொல்கிறார். இந்தக் கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை. ‘ஆட்சியில் பங்களிக்கிறேன்’ என்று தி.மு.க தலைவர் கூறினால் மற்ற கட்சியினர் ‘வேண்டாம்’ என்றா சொல்லுவார்கள் ? ஒரு நாளும் கிடையாது!

ஆனால் அவர்கள் ஆர்வம் காட்டாதது ஏன் ?

அறுதிப் பெரும்பான்மை பெறும் அளவில் தி.மு.கவுக்கே தொகுதிகளை ஒதுக்கிக் கொண்டு, மிச்சத் தொகுதிகளைப் பகிர்ந்தளிப்பதால்தான் ஆர்வம் காட்டவில்லை. கூட்டணி ஆட்சி தமிழகத்தில் கிடையாது என்று தி.மு.க தரப்பில் அடித்துப் பேசப்படுவதால் ஆர்வம் காட்டவில்லை – அவ்வளவே!

கூட்டணி கட்சிகள் மாநிலத் தேர்தலில் வோட்டுகளைக் குவிக்க உழைக்க வேண்டும்; ஆனால் ஆட்சியில் மட்டும் பங்கு கிடையாது என்பது ஏற்கக் கூடிய நியாயம் அல்ல.

மத்திய அரசில் தனக்கு இருக்கும் எண்ணிக்கை பலத்தையும் செல்வாக்கையும் மாநில அரசியலில் தி.மு.க தலைமை பயன்படுத்திக் கொள்ள முயல்வதும் ஆரோக்கியமானதல்ல.

போகிற போக்கைப் பார்த்தால், இடது சாரிகளின் அதிருப்தியை ஒன்றன்பின் ஒன்றாகப் பல விஷயங்களில் சம்பாதித்து வரும் மத்திய அரசே இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை தான் மேலோங்குகிறது.

தி.மு.க தனித்துப் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா ? இன்றையச் சூழலில் அது சாத்தியமில்லை. கூட்டணியின் இதர கட்சிகள் தி.மு.கவுடன் இணைவதால் எந்த அளவுக்குப் பயனடையுமோ அதே அளவுக்குத் தி.மு.கவும் இதர கூட்டணி கட்சிகளால் பயனடையும். இந்த பரஸ்பர சார்பு நிலைதான் நிதர்சனம், யதார்த்தம்.

ஜெயலலிதா எதிர்ப்பு என்கிற பொதுநோக்கு தி.மு.க அணியின் அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது. ஆனால் இது போதாது. ஆக்கபூர்வமான பொதுநோக்கும் குறைந்தபட்ச செயல் திட்டமும் வகுக்கப்பட வேண்டும். அந்தச் செயல்திட்டத்தைப் பிரதானமாக்கி தி.மு.க கூட்டணி தேர்தல் களத்தில் இறங்கினால்தான் மக்களின்
நம்பிக்கையைப் பெற முடியும். இப்படி ஒரு செயல்திட்டம் வகுக்கப்படுவதுடன் அடுத்த முதல்வர் யார் என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

‘முதல்வர் யார்’ என்பதை இப்போதே அறிவிப்பதன் மூலம் எதிர்ப்பும்
பிளவும் ஏற்படும் என்றும் தி.மு.க தலைமை கருதலாம். ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்துவது வைகோவுக்கு மட்டுமென்ன, வேறு சில கட்சியினருக்கும்கூட ஏற்புடையதாக இல்லாமல் போகலாம். ஆனால், இந்தப் பிரச்னையைத் தேர்தலுக்குப் பிறகு சந்திப்பதற்குப் பதில் தேர்தலுக்கு முன்பு சந்திப்பதே நல்லது.

மேலும், முதல்வர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க கூட்டணி தேர்தல் களத்தில் இறங்குமேயானால், தி.மு.க உட்பட எந்த கட்சித் தொண்டரும் உற்சாகத்துடன் உழைக்க மாட்டார்!

‘யார் முதல்வர் என்பதையே அறியாத ஒரு கூட்டணிக்கா வோட்டுப் போடப் போகிறீர்கள் ?’ என்று அ.தி.மு.கவினர் பிரசாரம் செய்ய ஏதுவாகிப் போகும்.

வாக்காளர்களும் முகமறியாத ஒரு முதல்வருக்கு வோட்டுப் போடுவதைக் காட்டிலும் ஜெயலலிதாவுக்கு வோட்டுப் போடலாம் என்று முடிவெடுக்கக் கூடும்.

கருணாநிதி முதல்வராகவும் ஸ்டாலின் துணை முதல்வராகவும் இருப்பார்கள் என்று ஒரு ‘சமாளிப்பு’ முடிவைக் கூட தி.மு.க அறிவிக்கலாம். எந்த முடிவும் இல்லாத அந்த கார நிலையைக் காட்டிலும் இது ஏற்புடையதாக இருக்கும்.


| |

இது நம்ம தேடல்

கடந்த நாட்களில் கூகிளில் தேடியதில் – சொல்லக்கூடிய சில கேள்விகளும்… கிடைத்ததும்


|

நாடார்களுக்கு பட்டை நாமமா?

தேர்தல் நேரத்தில் பல்வேறு சுவரொட்டிகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. அதுவும் நான் வசிக்கும் இடம் மிகவும் பலமான இடம். சரியாக 250 மீட்டர் நடந்தால் கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடு. மற்றொரு பக்கம் 500 மீட்டர் நடந்தால் ராயப்பேட்டை அஇதிமுக தலைமை அலுவலகம். அதனால் தினமும் அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க போஸ்டர்களுக்கு சிறிதும் குறைவில்லை.

இந்த போஸ்டர்களை கேமராவால் படம் பிடித்து தேர்தல்2006 வலைப்பதிவில் போட ஆசைதான். ஆனால் இதற்கென கையில் கேமராவை எடுத்துக்கொண்டு செல்வது அபத்தமாக உள்ளது. என் செல்பேசியில் கேமரா வசதி கிடையாது.

எனவே அவ்வப்போது படம்; மற்ற நேரங்களில் போஸ்டர்களில் கண்ட வாசகங்கள் மட்டும்.

இன்று பார்த்த போஸ்டர்:

“தலைவர் கலைஞர் அவர்களே
சோனியா காந்தி அவர்களே
தமிழகத்திற்கு 13 மந்திரிகள்
ஆனால் நாடார்களுக்கு பட்டை நாமமா?
பதில் சொல்வீர்!

நாடார் பேரவை”

இந்த போஸ்டரில் காமராஜர் படம் இடது மேற்புறம் உள்ளது.

புலி வருது..புலி வருது…

தமிழக தேர்தல் அலசலில் ம.தி.மு.க வை எடுத்து அலசலாம் என்று உள்ளேன். ஏற்கனவே குழலி ஒரு அலசலை வெளியிட்டுள்ளார்.இது என் பார்வையில் சுருக்கமாக.

இது சிறிய கட்சிதான் எனினும் கடந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் சுமார் ஐம்பது தொகுதிகளில் தி.மு.க.விற்கு ஆப்பு வைத்தது என்பதிலிருந்து இவர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த கட்சியில் வைகோ மட்டும்தான் பெரிய தலைவர்.ஆனால் கருணாநிதிக்கு பிறகான தமிழக அரசியலில் வைகோவின் பங்கு மிகப்பெரிது.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

வைகோ தலைமையில் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க மீண்டும் விசுவரூபம் எடுக்கும். தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது வைகோ நடத்திய போட்டி பொதுக்குழுவிற்கும் கணிசமான கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். சேலம் வீரபாண்டி ஆறுமுகம்கூட ஊசலாடி கொணடிருந்தார்.கருணாநிதி ஒருவருக்காகத்தான் அனைவரும் ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்வது போல் நாடகம் ஆடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.ஸ்டாலின் கோஷ்டி என்று ஒன்று உண்டு.அதைத்தவிர மற்ற அனைவரும் வைகோ பின்னால் அணிசேருவார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்டாலினா, வைகோவா என்ற கேள்வி ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் வரும்போது தொண்டன் கண்டிப்பாக வைகோவை தான் தேர்தெடுப்பான் என்பது திண்ணம்.அந்த நம்பிக்கையில்தான் வைகோவும் கட்சி நடத்திக்கொண்டு வருகிறார்.நம்பிக்கை வீண்போகாது என்பது என் கணிப்பு.

தி.மு.க வில் இருந்து தூக்கி எறியப்பட்ட வைகோ அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, மீண்டும் தி.மு.க வுடன் கூட்டு வைத்தது, பி.ஜே.பி, காங்கிரஸ் என்று அனைவருடன் ஒரு ரவுண்ட் கூட்டணி அனுபவம் உள்ளதால் அரசியல் நடத்துவதிலும் தேறுவார் என எதிர்ப்பார்க்கலாம்.

அதிகம் உணர்ச்சி வசப்படும் தலைவரான வைகோ ஆட்சி நடத்திய அனுபவம் எதுவும் பெற்றிருக்கவில்லை. குறைந்தது ஒரு மந்திரி பதவியில் கூட ரொம்ப நாள் இருந்ததில்லை.இவருடைய நிர்வாகத்திறன் பற்றி யாருக்கும் தெரியாது.ஆனால் நேர்மையானவர் என்ற பெயர் உள்ளது.கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர் என்ற பெயர் உள்ளது.அதுவே போதும்.

தேர்தலை பொறுத்தவரை தனியாக இந்த தேர்தலில் எந்த சீட்டையும் இவர்கள் வெல்ல முடியாது.கூட்டணி விஷயத்திலும் ம.தி.மு.க ஊசலாட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் அதிக சீட் கேட்கும் நோக்கத்தில்தான் இந்த நாடகத்தை வைகோ ஆடுவதாக தோன்றுகிறது.பொடாவில் உள்ளே இருந்ததை மறப்பது வைகோவிற்கு கடினம்.

ம.தி.மு.க.விற்கு தென்மாவட்டங்களில் இருக்கும் செல்வாக்கு நாயுடு இனத்தை சேர்ந்த விஜயகாந்த கட்சி ஆரம்பித்து உள்ளதால் குறைந்திருக்கும் என்று ஒரு எண்ணம் உள்ளது.அது உண்மையா என்று இந்த தேர்தல் பதில் சொல்லும்.