செய்தி ::
‘பஹேலி’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரை கிடைக்கவில்லை. சிறந்த அயல்நாட்டுத் திரைப்படத்துக்கான போட்டியில் இத்தாலி, ஃப்ரென்சு, பலாஸ்தீன, ஜெர்மன், தென்னாப்பிரிக்க மொழிப் படங்களே உள்ளன.
இதைக் கேள்விப்பட்ட முன்னாள் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் உமாபாரதி பொங்கியெழுந்தார்.
“கடந்த பல வருடங்களாக ஆஸ்கரின் கடைக்கண் கூட இந்தியப் படங்களின் மேல் விழுவதில்லை. பரங்கியனை அவமானப்படுத்தும் ‘லகான்’ அல்லது நம்மை உரித்துக்காட்டும் ‘பார்ன் இன்டு ப்ராத்தல்ஸ்’ போன்ற படங்களையே ஆஸ்கார் மீண்டும் மீண்டும் ஆதரிக்கிறது. நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.
பா.ஜ.க.வின் முன்னணி சிந்தனையாளர்களுள் ஒருவரான கோவிந்தாச்சாரியாவும், வலைப்பதிவாளர்களை சந்திப்பதில்லை என்று உறுதியை உடைத்துவிட்டு, உமாபாரதியுடன் காணப்பட்டார்.
சந்திப்பில் பேசிய கோவிந்தாச்சாரியா, “இந்தப் படத்தைக் குறித்து அமோல் பலேகருடன் பேசும்போதே நான் சொன்னதுதான். உமா பாரதியார் வைஷ்னோ தேவி பயணிப்பதை திரைக்கதையாக்கும்படி உபதேசித்திருந்தேன். ஆனால் அவரோ ஷாரூக் கான் கால்ஷீட் இருக்கிறதே என்று பஹேலி எடுத்துவிட்டார். நான் சொன்ன கதைக்கு மட்டும் காஷ்மீர் போராளியாக ஷாரூக் நடித்திருந்தால், இந்நேரம் ஆஸ்கர் பரிந்துரை என்ன… விருதே நமக்குத்தான் கிடைத்திருக்கும். குறைந்த பட்சம் ‘தேச நல்லிணக்கத்திற்காக நர்கீஸ் தத்’ விருதாவது கொடுத்திருப்பார்கள்” என்று கருத்து தெரிவித்தார்.
சென்னையில் இந்த வலைப்பதிவை படித்த ரிச்சி ஸ்ட்ரீட் வணிகையாளர் ஆஸ்கார் விருதுகளைத் தான் பெரிதும் வரவேற்பதாக சொன்னார். மேலும், “பொங்கல் படங்கள் எதுவுமே மக்களுக்குப் பிடிக்கலை. விசிடி பிஸினஸ் படுத்துடுமோ என்று நாங்க பயந்தபோதுதான் இப்படி ஒரு அறிக்கைய அகாதெமி வெளியிட்டிருக்காங்க. கிங் காங், ஹாரி பாட்டர் என்று ஜல்லியடிச்ச நாங்க இனிமே ‘அகாடெமி புகழ் பெற்ற… திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’ என்று சொல்லி நிறைய வெரைட்டி காட்டலாம் சார்” என்று மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.
போபாலில் இருந்து பொப்பிலி ராஜாவும் மவுண்ட் ரோடில் இருந்து மதியழகனும் இந்த செய்தியறிக்கையில் பங்களித்தார்கள்.
குறிப்பு: இந்தப் பதிவை நிஜம் என்று நம்பவைக்கும் அளவு ரியாலிடி இருப்பதற்கு இதை எழுதியவர் பொறுப்பாக மாட்டார்.