Daily Archives: ஜனவரி 21, 2006

MLK Day

“அப்பா… மார்டின் லூதர் கிங் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? ‘எனக்கு ப்ரௌவுன் ஸ்கின்; உனக்கு வைட் ஸ்கின் என்று இருந்தால், நாம் இருவரும் தொட்டுக் கொள்ளக் கூடாது’ என்று ஆரம்பித்திருக்கிறார். உனக்குத் தெரியுமா?”

பள்ளியில் என்ன நடந்தது என்று நான் கேட்டவுடன், அன்று வரைந்த ஓவியத்தையோ, உருவாக்கிய கலைப் பொருளையோ கொண்டு வ்ந்து காட்டுவாள். ஐந்து வயது மகளிடம் அதிகம் கவலை கொள்ள வேண்டாம். இன்று என்ன ஆல்ஃபபெட் படித்தாய், கூட்டல் போடலாமா என்று வீட்டுப் பாடம் திறக்க வேண்டாம். வரைந்ததைக் காட்டியவுடன் மகிழ்வுடன் தலையாட்டி, தாளில் என்ன வெளிவந்திருக்கிறது என்பதை சொன்னால் போதும்.

மார்ட்டின் லூதர் கிங் தினம் முடிந்த அடுத்த நாள், டாக்டர் கிங்கை குறித்து புத்தகம் படித்திருக்கிறார்கள். அதில்தான் அந்தக் குறிப்பிட்ட சொற்றொடர் இடம் பெற்றிருக்கிறது.

“அப்படியா… அவர் அந்த மாதிரி சொலியிருக்க மாட்டாரே!”

காந்தியைக் குறித்தே நான் முழுவதாக அறிந்ததில்லை. Martin Luther King, Jr. குறித்து பிபிஎஸ்ஸில் சில விவரணப் படங்களும், ஆங்காங்கே படித்தும்தான் கேள்வியறிவு.

“ஃபர்ஸ்ட் அவர் அப்படித்தான் ஆரம்பித்தாராம். அதன் பிறகு தன் கருத்தை மாற்றிக் கொண்டாராம். அப்படித்தான் மிஸஸ் ரைஸ் சொன்னார்கள். நான் சஃபியாவைத் தவிர வேறு யாரையும் தொடக் கூடாதா அப்பா?”

கொண்டிருந்த கருத்துக்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்புடையதாக இருந்தாலும், எண்ணங்களை ஒருவர் மாற்றிக் கொண்டாலும், குழந்தைகள் மனதில் பதிவது என்னவோ ‘காந்தி அந்த மாதிரி தப்பு எல்லாம் செஞ்சாரா?’ என்பது போல் எதிர்மறைகள் ஆர்வமாக ஆழமாக உள் அமர்கிறது.

அமெரிக்காவில் ஒளிவு மறைவில்லாமல் ஒருவரின் வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் முன் வைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

கார்ட்டூன் படங்கள் : Cartoonist Keith Knight | Links


| |

அள்ளிக் கொடுக்கும் ஜெ

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல “Populist” நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் – Hindu, That’s Tamil)

ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

தமிழகம் ஒரு “fiscal bankruptcy”யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

திமுக அரசு எடுத்த பல “Populist” அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் “H” முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.

ஆண் பாவம்

ஆண்களைக் குறித்த வரிகளில் பாடாலாசிரியர்கள் மோசமாக சித்தரிப்பதை ‘ஆடவர் நலன் பாதுகாப்பு கூட்டமைப்பு’ சார்பாக கண்டிக்கிறேன். சில உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்.

 • சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய் – வசூல்ராஜா எம்பிபிஎஸ்

  ‘லன்ச்சுக்கொரு மஞ்சுளாவும்
  டின்னருக்கு வெண்ணிலாவும்
  இருந்தா இளமைக்கு யோகம்

  மன்க்கியில இருந்து ஒரு
  மனுசப்பயல் வந்தாலும்
  இன்னும் போகலியே வாலு’

 • குயிலே குயிலே பூங்குயிலே – ஆண் பாவம்

  ‘நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
  உனையே நெனச்சு உயிர் வளர்த்தேன்’

  ‘இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
  என்னாளும் உள்ள கதை’

 • செப்டம்பர் மாதம் – அலைபாயுதே

  ‘பெண்கள் இல்லாமல்
  ஆண்களுக்கு ஆறுதல் கிடைக்காது’

 • ஏத்தமைய்யா ஏற்றம் – நினைவே ஒரு சங்கீதம்

  ‘சேலையப் பார்த்தாலே
  சொக்கிப் போகிற என் மாமா
  வேலையப் பார் மாமா
  அந்த வெட்டிப்பேச்சு ஏன் மாமா’

 • டேக் இட் ஈஸி ஊர்வசி – காதலன்

  ‘பூனையில் சைவம் கிடையாது
  ஆண்களில் இராமன் கிடையாது’

  ‘ஃபிகருகள் யாரும் இல்லாமல்
  வகுப்புகள் இருந்தும் என்ன பயன்’

 • கை வலிக்குது கை வலிக்குது மாமா – குங்குமச் சிமிழ்

  ‘அம்மியரைப்பது பொம்பளை வேலைதாண்டி
  அடீ அதுக்குப் போயி என்னை அழைப்பது ஏனடி’

 • பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி – பாலைவனச் சோலை

  ‘இராமன் வேடம் போட்டாலும்
  ரெண்டு சீதைக் கேட்பானே
  ரெண்டு சீதை வந்தாலும்
  சூர்ப்பநகைப் பார்ப்பானே’

 • சின்னஞ்சிறு கிளியே – முந்தானை முடிச்சு

  ‘மயிலே உனை நான்
  மயக்கவும் இல்லை
  மனதால் என்றும்
  வெறுக்கவும் இல்லை

  எனை நீ தேடி
  இணைந்தது பாவம்
  எல்லாம் நீயே
  எழுதிய கோலம்

  அதே சமயம் பாராட்டுக்களைக் கோரும் சில பாடல்களும் நினைவுக்கு வரும்:

 • ஆரிய உதடுகள் உன்னுது – செல்லமே

  ‘என் நாயகா
  என்னைப் பிரிகையில்
  என் ஞாபகம் தலைக்காட்டுமா
  உன் ஆண்மையும் தடுமாறுமா
  பிற பெண்கள் மேல்
  மனம் போகுமா

  ‘கண்களே நீயாய்ப் போனால்
  வேறு பார்வை வருமா’

 • கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை

  ‘நேத்து கூட தூக்கத்தில
  பார்த்தேன் அந்த பூங்குயில
  ஊத்துக்குளி முத்தெடுத்து
  கோர்த்து வச்ச மாலை போல
  வேர்த்துக் கொட்டி கண் முழிச்சுப் பார்த்தா
  அவ ஓடிப் போனா உச்சி மலை காற்றா…’

  ‘வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா?’

 • கை வலிக்குது கை வலிக்குது மாமா – குங்குமச் சிமிழ்

  ‘கண்ணே நீ கஷ்டப்பட்டா
  என் மனசு தாங்காது’

  கானங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது சித்ராவின் சின்னச் சின்ன கனவுகளே கண்ணா என்னும் துறைமுகம் படப்பாடலில் தடுக்கி விழுந்தேன். பிபி-யிடம் சொல்லி தினம் ஒரு திரைப்பாடலில் இடச் சொல்ல வேண்டும்.


  | |