Daily Archives: திசெம்பர் 17, 2005

அசோகமித்திரன்

டிசம்பர் 14, இந்தியா டுடே இதழில் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்‘ குறித்து பிஏ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதில் இருந்து:

விக்ரம் சேத்தின் எழுத்தைப் பற்றி அசோகமித்திரன் குறிப்பிடும்போது அவரது எழுத்து, வாசகரின் கண்ணைக் கூசச் செய்வதில்லை என்று சொல்கிறார். அ.மி.யின் எழுத்துக்கும் இந்தக் கூற்று நிச்சயம் பொருந்தும்.

தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி அ.மி. சொல்கிறார்: தமிழ்த் திரைப்படங்களைக் கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

கலைஞரின் பராசக்தி குறித்து அ.மி.: புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு, முட்டையிடலுக்குப் பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல பராசக்தி, சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிரும் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

என்னுடைய கொசுறு: (இ.பா.வின் குருதிப்புனல் குறித்த கட்டுரையில் – பக்கம் 457) பொதுவாகவே இலக்கியப் பத்திரிகைகளுக்கு ஓர் எழுத்தாளர் இரண்டாவது படைப்பை வெளிக்கொண்டு வரும்போதே அந்த எழுத்தாளர் மீது அசிரத்தை வந்துவிடுகிறது.


| |

தேவதேவன் – நகுலன்

தேவதச்சனைக் குறித்து புத்தக அலமாரியில் மேயப் போனால் ‘குளத்துக்கரையேறாத கோபியர்கள்’ தேவதேவன் வந்து நின்றார். அவரைக் குறித்த நகுலனின் கட்டுரை:

நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்‘ தேவதேவனின் ஐந்தாவது கவிதைத் தொகுதி. பொருத்தமாக ‘பிரமிளுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 15 கவிதைகள். மீண்டும் தேவதேவன் குறிப்பிட்டிருக்கிறபடி கவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும். இந்த வகையில் இத்தொகுதி ஒரு சாதனை.

கவிதைகள் முழுவதும் ஓடும் சரடு பல்வேறு வகைகளில் இயந்திர நாகரீகம் இயற்கையை – சூழ்நிலையை எவ்வாறு எவ்வெவ்வகைகளில் சூறையாடுகிறது என்பதைத் திறமையாகக் காட்டுகிறது.

சரளமான மென்மையான நடை, பகட்டு ஜ்வலிப்பு இல்லாத வார்த்தைத் தேர்வு. படிமங்கள் அவை செல்லும் பாதைகளுக்கேற்ப பொருள் வேறுபாடுகள் கொள்ளும் நேர்த்தி. தேவதேவன் சில வார்த்தைகளை மிகத் திறமையுடன் படைத்திருக்கிறார். அவற்றுள் ஒரு சில:

 • நரபோஜிகள்
 • காட்டுக் கவிஞன்

  இத்தொகுதியில் என்னை மிகக் கவர்ந்த அம்சம் அதனூடு மிளிரும் கிண்டல் த்வனி. இது சூழ்நிலையில் பலருக்கும் ஏற்படும் அனுபவச் சூழ்நிலைகள் ஒரு மையத்தினால் ஏற்படுபவை. மேலும் இங்கு சொல்லப்படாமலேயே எழுதப்படாமலேயே சில அனுபவங்கள் பெறப்படுகின்றன.

  சில எடுத்துக்காட்டுகள்:

  1. வெற்றியும் தோல்வியும்
  ‘வீரர்க்கழகானாலும்
  வெற்றிதானே குறி’
  (பக்கம் 16)

  2. ஒரு குழுவினுக்குள்ளேயும் உள்ள உறவு
  அது கூட்டுழைப்பு
  அன்பு இல்லை

  3. காகங்களுக்கு காடு எதற்கு?
  (பக்கம் 12)

  4. சரி, முதலில் குளித்துவிட்டுப் பேசுவோம் என்கிறேன்
  (பக்கம் 36)

  தலைப்பிலேயே ஒரு கிண்டல் த்வனி இருக்கிறது. இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.

  வெளியான இதழ்: விருட்சம், செப்டம்பர் 1993

  நன்றி: நகுலன் கட்டுரைகள் – காவ்யா :: ரூ. 150/-


  | | |

 • அவரவர்

  சுகுமாரன் எழுதிய ‘இந்தியா டுடே’ விமர்சனத்தில் இருந்து:

  தேவதச்சனின் ‘அவரவர் கைமணல்’ (கவிதை தொகுப்பின் தலைப்பு) பிரயோகம் மிக வசீகரமானது. பலரையும் தூண்டிய சொற்சேர்க்கை அது.

  ‘அவரவர் வானம்’ (மெய்ப்பொருள் – வண்ணநிலவன்)
  ‘அவரவர் வீடு’ (பயணியின் சங்கீதங்கள் – சுகுமாரன்)
  ‘அவரவர் உலகம்’ (கணையாழி ஏப்ரல் 1994 – பொன்னாண்டான்)
  ‘அவரவர் ஏமாற்றம்’ (கவனம் இதழ் 4 1981 – ஷங்கரராமன்)

  எனப் பலரும் தேவதச்சனை அடியொற்றி அவரவர் வரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

  கடைசி டினோசார்
  தேவதச்சன்
  உயிர்மை பதிப்பகம்
  பக்கங்கள்: 166
  விலை: ரூ. 85/-