Daily Archives: நவம்பர் 12, 2004

நுழைவுத் தேர்வுகளைத் தவிர்ப்போம்

நான் படித்த கல்லூரிக்கு நுழைவுத் தேர்வுகள் கிடையாது. அதனாலோ என்னவோ நான் நுழைவுத் தேர்வுகளை ‘குங்குமம்’ வாசகர்கள் ‘காலச்சுவடு’ பத்திரிகையைப் பார்ப்பது போன்ற பயங்கலந்த ஒதுக்கலோடு பார்த்து வருகிறேன். +2 வில் தேர்வு எழுதுகிறோம். விதம் விதமாக, பிடித்த சப்ஜெக்ட்களை எல்லாம் ஏற்கனவே தீர்மானித்து, ஒரு வருடம் படித்து, சிறப்பு வகுப்புகளுக்கு சென்று, கோனார் நோட்ஸ் முதல் தினமணி மாதிரித்தாள் வரை நோட்டம் விட்டு, இரண்டு மூன்று ரிவிஷன் எழுதி, கடைசியாக அரசுத் தேர்வும் எழுதுகிறோம்.

அதன் பிறகு கொசுறாக, அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, எஸ்ஐயீடி, என — ஏ முதல் ஜெட் வரை வரும் அனைத்து எழுத்தையும் எவ்வளவு முறை எவ்விதமாக மூன்று முதல் ஐந்து தடவை வருமாறு கணக்கிடுக என்று கேட்கும் கணிதக் கேள்வியில் ஆரம்பித்து இந்தியாவின் பிரதம மந்திரி யார் போன்ற அசையும் பொருட்கள் சார்பான வினாக்கள் வரை தொடுக்கும் அனைத்திந்தியா, தமிழ்நாடு, தெலுங்கானா, கூடுவாஞ்சேரி, திருமணஞ்சேரி நுழைவுத் தேர்வுகள் தேவையா?

பத்தாவது முடிந்தவுடனேயே மாணவர்களுக்கு நுழைவு ஜுரம் வந்துவிடும். கெமிஸ்ட்ரியில் கார்பனையும் ஹைட்ரஜனையும் வைத்து அடுக்கு மாடிகள் கட்டுவார்கள். ஆறு பாயிண்ட் எழுத்துருவில் ரெண்டு பக்கம் நீளும் ஃபிஸிக்ஸ் கேள்விக்கு ஒரு பின்னத்தைப் போட்டு அதன் தலைப் பகுதியில் நியு யார்க் நகர திங்கட்கிழமை காலை ட்ராஃபிக் போல நீளும் கார் போன்ற சின்னங்களையும் வால் பகுதியில் குசேலரின் பிள்ளைகள் போல வதவதவென்று சில குறிகளையும் கொண்டு விடை கொண்டு வருவார்கள்.

பார்த்தால் வயிற்றில் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் சுரக்கும். நாமும் ப்ரில்லியண்ட், ஐஎமெஸ், ஐஏஎஸ் என்று ஏதாவது ஒன்றில் சேர்ந்து தபால்முறையிலோ, தரிசனமுறையிலோ யாஸர் அராஃபத் இறக்கும் வயது வரை உபயோகப்படாதப் பாடங்களை வந்திருக்கும் ஒன்றிரண்டு பெண்பாலாரை அரஹரா போட்டுக் கொண்டே படித்து வருவோம்.

ஆனால், இந்த வகுப்புகளினால் ஒரு நிஜ வாழ்க்கைக்கான பாடம் பொதிந்திருந்தது. நான்தான் தவறவிட்டுவிட்டேன். அன்றே எளிதில் உணர்ந்து கொண்டு பி.ஏ. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் சென்றிருக்க வேண்டிய குறிப்பால் உணர்த்தும் பாடம். இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு வந்த ஒருவர் கூட ‘நாடோ டித் தென்றல்’ கார்த்திக் போன்ற விஷமிகளிடம் பாஸ் மார்க் எடுத்திருக்க மாட்டார்கள். இந்தப் பெண்கள்தானே படித்து தேறி பொறியியலிலும் சேரப் போகிறார்கள் என்பது உரைக்கவில்லை.

இதுவரை நான் ஜோக் எதுவும் அடிக்கவில்லை என்றாலும்…. கொஞ்சம் சீரியஸாக பேசுவோம்.

காலையில் எட்டு மணிக்கு பள்ளிக் கூடம் சென்றால் மாலை நான்கரை வரை பிஸியாக இருப்போம். பிறகு பஸ் பிடித்து டுடோ ரியல் வகுப்புக்குச் செல்ல வேண்டும். முடிந்து வரும்போது இரவு ஒன்பதரையாகி விடும். அப்புறம் கொஞ்சம் அன்றாட பள்ளிப் படிப்பு; தொடர்ந்து நுழைவுத் தேர்வு படிப்பு. இதில் எப்பொழுது ‘மை டியர் பூதமும்’ ‘சலனமும்’ பார்ப்பது?

நானாவது சென்னை மாநகரில் இருக்கிறேன். நேர்முக வகுப்புகளும் உண்டு. நுழைவுத் தேர்வுகளுக்கான தபால் முறைப் பயிற்சிகளும் கிடைக்கும். கூடப் படிக்கும் மாணாக்கர்களின் எண்ணிக்கையும் அதிகம். ‘அழகி’ போன்ற கிராமங்களில் இவ்வளவு வசதி இருக்காது என்றே தோன்றுகிறது. அதுவும் நகர காக்கைகளைப் போல் இல்லாமல் கிராமக் கிளிகளை ‘ஒளியிலே தெரிவது…’ தேவதையா என்று பாதி நேரம் சந்தேகப் படுவதில் ஐஐடிக்கள் எட்டக்கனியாகும் வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்காகவாவது +2 மதிப்பெண்களே, பொறியியல், மருத்துவம் போன்றவைக்கும் ஒரே தகுதியாக வைக்க வேண்டும்.

அப்படியே பெருங்களத்தூர், காட்டாங்கொளத்தூர் போன்ற சிற்றூர்களில் இருந்து அருகே இருக்கும் பெரிய ஊர்களுக்கு வந்து சென்று படிக்க வாய்ப்பிருக்கலாம். முதலாவதாக சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி கட்டணங்கள். சாதாரண வருமானத்தில் வாழ்பவருக்கு, கல்விச்செல்வமே பெரிய செலவாகத் தோன்றும். இதிலே நுழைவுத் தேர்வுக்காக காசு கட்டி பொய்யனையோ பொண்ணையோ படிக்க அனுப்புவார்களா?

இரண்டாவது கிராமப்புற மக்களின் டவுன் பஸ் வசதி. ‘நினைவிருக்கும் வரை’ பிரபுதேவா பஸ் ரொம்பும் வரை ரோஜாவையும் சுவலட்சுமியையும் டாவடித்துக் கொண்டிருப்பார். அதற்குள் முதல் ஒரு மணி நேரம் காலி. திரும்பி வருவதும் அகாலம் ஆகிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. உள்ளூர் தியாகராய நகரில் வகுப்புக்குச் சென்றுவிட்டு நான் வீடு திரும்பும்போது விவிதபாரதியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி கூட முடிந்து போன ஒன்பதரை ஆகியிருக்கும். கிராமப்புறங்களில்…?

இதைப் பெண்களுக்கு எதிரான நடவடிக்கையாக கூட சொல்லுவேன். (அப்பாடா… பெண்ணியம் வந்துடுச்சு!)

நான் பார்த்தவரை வருடா வருடம் பெண்கள்தான் ஆண்களை விட அதிக அளவில் தேர்வுறுகிறார்கள். சிபிஎஸ்ஈ, மெட்ரிக், தமிழ்நாடு, என +2, பத்தாம் வகுப்பு என எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் பெரும்பாலும் அனைத்துப் பாடங்களிலும் பெற்று, தினத்தந்தி, தினமலர், மாலை மலர், மாலை முரசு, மக்கள் குரல் என பேட்டியும் கொடுக்கிறார்கள். இப்பொழுது சன் டிவியிலும் வருவதால் பார்க்கிறேன்.

ஆனால், பிலானி, ஐஐடி, எம்எம்சி, அண்ணா, எம்.ஜி.ஆர்., எஸ்.ஆர்.எம்., க்ரெஸ்செண்ட் என சகாக்கள் படித்த/படிக்கும் ப்ரொஃபஷனல் கல்லூரிகளில் குறைந்தே காணப்படுகிறார்கள். நிச்சயம் தேர்ச்சி பெற்ற 55:45 போன்ற +2 சதவீதத்துக்கும் இந்த நுழைவுத் தேர்வுகளில் சமாளித்து புத்தகம் பிடிப்போருக்கும் விகிதாசாரங்களில் சம்பந்தமே இல்லை. அட்லீஸ்ட், 50:50 கூட இல்லாமல், ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும் நுழைவுத்தேர்வுகள் ஒழிக! (ஜிந்தாபத்துக்கு எதிர்ப்பதமாக அந்தக்கால பேங்க் வாசல்களில் நின்று கத்திக் கொண்டிருப்பார்கள்… அது என்ன ஹிந்தாபாத்தா? பகாளாபத்தா?)

சரி… இப்போ தீர்வுக்கு வருவோம். ஒன்று ஒழிக என்று சொல்லும்போதே, எது வாழ்க என்றும் சொல்லிவிட்டும் போய் விடுகிறேன்.

பிட்ஸ் (BITS, Pilani) எவ்வாறு மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது? நுழைவுத் தேர்வுகள் கிடையாது. +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே செல்லுபடியாகும். எங்கம்மாவுக்கு நினைவு தெரிஞ்ச காலத்தில் இருந்தே ‘ஹிப்பாங் குப்பாங் ஜுப்பாங்’ ஹார்லிக்ஸ் சாப்பிடுவது போல், பிட்ஸும் பல்லாண்டு காலமாக இந்த முறையை வெற்றிகரமாக அனுசரித்து வருகிறது. என்னைப் போன்ற சிலர் வெளிவந்தாலும், பெரும்பாலும் நன்முத்துக்களே கிடைத்திருக்கிறது என்பதை நான் பீற்றிக் கொள்ள விரும்பவில்லை.

இதே முறையை அனைத்துக் கல்லூரிக்கும் முன் மாதிரியாக வைக்க வேண்டும். சிபிஎஸ்ஈ பரீட்சைகள் வெகு கடினம்; தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அள்ளி அள்ளிக் கொடுத்து விடுவார்கள்; தமிழில் மதிப்பெண் எடுப்பது கஷ்டம்… (இப்போ நீ எழுதியிருப்பது போல் செகண்ட் பேப்பர் கட்டுரை எழுதினால் ஒற்றுப் பிழைகளுக்கு பத்து மைனஸ் செஞ்சிடுவாங்க என்று நீங்க சொல்வது காதில் விழுகிறது) என்பது போன்ற கேள்விகளுக்கும் பிட்ஸ் நுழைவு முன்மாதிரியாக விளங்குகிறது.

ஸ்டேட் ஃபர்ஸ்ட் (அல்லது தேசிய அளவில் முதல் மதிப்பெண்) எடுத்தவரை எடுத்துக் கொள்வார்கள். காட்டாக தமிழ்நாட்டு +2 தேர்வில் 1200-க்கு 1150 முதல் மதிப்பெண் என வைத்துக் கொள்வோம். என்னைப் போல் ஒருவன் 1100 எடுத்திருந்தால், 1100/1150 எவ்வளவு கிடைக்கும்?

என்னைப் போல் ஒருவன் விண்டோ ஸ் கால்குலேட்டர் பொத்தானை அமுத்தி ‘95.652173913043478260869565217391’ என்று பதில் சொல்வான்.

இதில் தமிழ் எடுத்தவனும், ஃப்ரென்ச் இலக்கியம் படித்தவனும், எஸ்பரேண்டோ ஓதியவனும் ஒரே மாதிரி கருதப்படுகிறார்கள். இதுவே இந்த முறையின் ஒரே குறைபாடு. இதைத் தவிர்க்க +2 தேர்வின் போதே இன்னுமொரு நுழைவுப் பாடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். வேதியியல், உயிரியல், ஆகியவை தவிர உலகவியல், பொது அறிவு இயல், மிச்ச இயல், முத்தமிழ் ஆகியவற்றை இதில் வல்லுநர்களைக் கொண்டு பாடத்திட்டமாக அமைக்க வேண்டும். இது மட்டுமே நுழைவுத் தேர்வுகளுக்குத் தகுதி பெற காரணியாக விளங்க வேண்டும்.

இந்தப் பாடம் அனைத்து பள்ளிகளிலும், கிராமம் முதல் நகரம் வரை ஒரு வருடம் முழுக்க வழக்கம் போல் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும். அதுவே நுழைவுத் தேர்வுக்கும் பயன்படும். எழுபத்தியெட்டு நுழைவுத் தேர்வுகள், முப்பத்திநான்குப் பாட வகைகள், நூற்றி சொச்ச கவுன்சலிங் எல்லாம் ஒழிக்கப் பட்டு கொஞ்சம் சிம்பிளாக்க சொல்லுங்க சார்.

— பாஸ்டன் பாலாஜி

No Aurora Borealis 

No Aurora Borealis Posted by Hello

Looking endlessly 

Looking endlessly Posted by Hello

Horizon of the Moon 

Horizon of the Moon Posted by Hello

Leader Chicken (& not chickening out like others) …

Leader Chicken (& not chickening out like others) Posted by Hello

Can I take a picture? 

Can I take a picture? Posted by Hello

Don’t belittel small people 

Don’t belittel small people Posted by Hello