சன் டிவி: ஏ.ஆர்.ரெஹ்மான் நேர்காணல்


திண்ணையில் சன் டிவியில் நடந்த கலைஞர் கலந்துரையாடல் விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஒரு ஆதரவு கருத்து, ஒரு மாற்று கருத்து, ஒரு கிண்டல் கருத்து என்று எல்லாவற்றையும் தொட்டிருக்கிறார்கள். எனக்கு தமிழ்ப் புத்தாண்டு அன்று கொடுக்கப்பட்ட ஏ.ஆர்.ரெஹ்மானின் செவ்வியை குறித்து எழுத ஆவலாக இருக்கிறது. ஒரு நல்ல நேர்முகத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை அர்ச்சனாவின் மூலமாக அறிந்து கொண்டேன். ஒரு நேர்மையான பேட்டியை அளிப்பது எவ்வாறு என்பதை இசைப்புயல் சொன்னார்.

பேட்டி எடுப்பவரை குறித்த அறிவு, அவரைப் பேச விடுவதற்காக எடுத்துக் கொண்ட மௌனங்கள், opne-ended கேள்விகள், பேட்டியாளர் ரொம்ப எடுத்துக் கொடுக்காமல் எதிராளியை ஆடவிட்டு, கண்களில் ஆர்வம் காட்டுவது என்று அழகாகத் தொகுத்தார். என்னுடைய வாழ்த்துக்கள்.

சாதாரணமாக ரெஹ்மான் கொஞ்சம் மூடி டைப்; ரொம்ப கலகலப்பாக பேச மாட்டார் என்று எல்லாம் குற்றம் சாட்டுவார்கள். அன்று மனம் திறந்துதான் உரையாடினார். இதற்கு முன் அவரை நேரில் சந்தித்து அளவளாவியதையும் சொல்ல வேண்டும். லண்டனில் விமானத்தின் உள்ளே செல்வதற்காகக் காத்திருக்கும்போதுதான் அவரை கவனித்தேன். ரொம்ப குள்ளமாக, தலைமுடி கூந்தலாக விரிய, கையில் ஒரு சிறிய பெட்டியுடன், கண்ணாடி போட்ட ஆஜானுபாகுவான ஒருவர் ஏ.ஆர். ரெஹ்மான் போல் இருப்பதை பார்த்தேன். குழந்தைகளோடு விமானம் ஏறுபவர்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமையால், என்னை சீக்கிரமே ஏறிக் கொள்ள அழைக்க அவரை அவர்தானா என்று உறுதிபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இழந்து சென்னை செல்லும் என் விமானத்திற்குள் சென்று விட்டேன்.

சென்னையில் இறங்கி பெட்டிகளின் வருகைக்காகக் காத்திருக்கும்போது மீண்டும் அதே முகம். கையெழுத்து வாங்குவதற்காக ஒரு பேப்பர், பேனா (விற்றால் நல்ல காசு வருங்க!) எடுத்துக் கொண்டு “நீங்க பார்ப்பதற்கு ரெஹ்மான் மாதிரியே இருக்கீங்க” என்று அழகான பெண்ணிடம் வழியும் ஆண் போல் அறிமுகம் செய்வித்துக் கொண்டேன். ரொம்ப எளிமையாக என்னைப் பற்றி விசாரித்து, நான் எதற்காக வந்திருக்கிறேன், என்ன வேலை பார்க்கிறேன் என்று நான் சாதாரணமாக ஒரு இந்தியரைப் பார்த்தவுடன் கேட்கும் எல்லாக் கேள்விகளையும் கேட்டு ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“சார் உங்களை ரொம்பத் தொல்லைபடுத்த விரும்பவில்லை; அப்புறம் பார்ப்போமா”?

“அது எல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்கு என்ன கஷ்டம்? லக்கேஜ் எடுக்க மானேஜர் இருக்கார். எனக்கு ஒரு வேலையும் இல்ல. உங்களுக்காவது அந்த டென்ஷன்” என்று இயல்பான சிரிப்போடு தான் லண்டனில் வந்த வேலையை குறித்தும் பகிர்ந்து கொண்டார். நான் பிய்த்துக் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது என்று கூட செல்லமாய் அலுத்துக் கொள்ளலாம்.

சன் டிவி நேர்காணலில் அவர் ஹஜ் பயணம் சென்று வந்ததை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் இருக்கும்போது திடீரென்று ஒரு குரல் மெக்காவுக்கு வருமாறு அழைக்கிறது. முதல் முறை அங்கு செல்பவர்கள் முடிதுறக்க வேண்டும். எனவேதான் புதிய குள்ள முடி உருவம். பலர், இந்த மாதிரி ஆழ்குரல் தன்னை ஐயப்பன் அழைத்ததாகவும், பாபா பேசியதாவும், வைஷ்ணோ தேவி கூப்பிடுவதாகவும் சொல்கிறார்கள். என்றாவது, என்னை யாராவது அழைக்க வேண்டும்.

இந்திய இசையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் தூதுவனாக அசைப்படுகிறார். ஒரு கணிப்பொறியாளன் அடுத்த பதவிக்கு செல்வதை எப்போதுமே நினைத்திருப்பான். குறைந்தபட்சம் அடுத்த டெக்னாலஜி என்ன வருகிறது என்று கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டேயிருப்பான். அதேபோல் அவரும் தமிழில் சாதித்தாகி விட்டது. ஹங்கேரி, லண்டன் என்று சிம்பொனி கட்டியாயிற்று. பாம்பே ட்ரீம்ஸ் போன்ற தியேட்டரில் கால் பதித்தாயிற்று. அடுத்து என்ன செய்யலாம், எவ்வாறு அடுத்த படிக்கு செல்லலாம் என்று விருப்பப்படுகிறார். அனேகமாக வெளிநாட்டிலேயேத் தங்கிவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அங்கேயே செட்டில் ஆனாலும், இந்திய இசையை மறக்க மாட்டார் என்பது உறுதி.

வெளிநாடு சென்று தனியே இருப்பதால் மனம் தனிமையால் வெதும்புவதாகவும் ஒத்துக் கொண்டார். ஒரு சிம்பொனி கொடுக்க மூன்று நான்கு மாதம் ஆகின்றது. அமெரிக்கர்கள், லண்டன் ஆர்க்கெஸ்ட்ரா, டட்ச், ஹங்கேரி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் நோட்ஸ் கொடுக்க வேண்டும். அவர்கள் மேலை நாட்டு (western classical) இசையைப் பயில்பவர்கள். அவர்களுக்கு ‘தகிடத்தகிடத்தகிட’ என்று கொடுத்தால் மிரண்டு விடுவார்கள். கஷ்டப்பட்டு அவர்களின் ‘தகி டகி தகி டகி’ போன்ற இடைவெளி விடும் பழக்கத்தைத் தடுத்து நம்ம ஊர் இசைப்படி கொண்டு வருவார். பிறகு, மீண்டும் இன்னொரு பாடலுக்கு அவர்கள் பாணியில் வாசிக்க சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும் என்பதை அலட்டல் இல்லாமல், விவரித்தார்.

நியு படத்தில் சூர்யாவுடன் வேலை செய்ததை விவரித்தார். சூர்யா ஒரு hyperactive பேர்வழி. பாடல் தளத்திற்கு தன்னுடைய சொந்த இசையோடவே வந்து விடுகிறார். எப்பொழுதும் செய்வத விட இன்னும் நன்றாக இசை வருவதற்காக மிகவும் ஆர்வத்துடன் செயல்படுகிறார். தன்னுடைய படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் அதீத அக்கறை காட்டுகிறார் என சம்பவங்களைக் கொண்டு அடுக்கினார்.

தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ‘வந்தே மாதரம்’ சொன்னார். எல்லா படைப்பாளியையும் போல் இசையமைத்த பிறகு நகததைக் கடித்துக் கொண்டு ரசிகர்களின் முடிவுக்காக காத்திருந்திருக்கிறார். இசையமைக்கும் போது அவர் மிகவும் ரசித்ததாகவும், ஆனால், பின்பு ஒலிநாடாவில் கேட்கும்போது பயம் வந்திருக்கிறது. மோசமான இணைய க்னெக்ஷனில் வைரஸ் புகுந்து லொள்ளு செய்வது போல், ராம் கோபால் வர்மாவும் ‘என்னடா, ரொம்ப கத்தி விட்டாய்’ என்று வேல் பாய்ச்சியிருக்கிறார். இப்போது அந்தப் பாடல் எவ்வளவு புகழ் பெற்றது என்பது நாம் அறிந்ததே. ஆதலினால், அனைவரும் இப்பொழுதே தங்கள் உதறல்களை ஒதுக்கிவிட்டு உளறல்களை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நிகழ்ச்சி முடிவில் ஆய்த எழுத்தின் ‘ஜனகனமன’வை வாசித்து காட்டினார். கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்துப் பாடினார். என்னவாக இருந்தாலும் ஆயிரம் ஆர்க்கெஸ்ட்ராவுடன், வாய்ஸ் வித்தைகள் செய்து வரும் டிஜிட்டல் சவுண்ட் ட்ராக் போல் வரவில்லை. எனினும், இப்படி சாதாரணமாகப் பாடுவதை, எப்படி அவ்வளவு வித்தியாசமான பாடலாக மாற்றியிருக்கிறார் என்று ஆச்சரியப்படுவதை நிறுத்தவும் முடியவில்லை.

தமிழில் தற்போது இவருக்குப் படமே இல்லையாம். ஜக்குபாய் மட்டும்தான் இப்போது என்று விஷயமறியா வட்டாரங்கள் சொல்கிறது. ரஜினி படத்துக்கு ரெஹ்மான் தேவையில்லை. ஏன் சார், ‘அன்னியனு’க்கு இசையமைக்கவில்லை என்று அர்ச்சனா கேட்கவில்லை; ரெஹ்மானும் பதிலளிக்கவில்லை.

நன்றி: தமிழோவியம்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.