ஆவியுலக அனுபவங்கள்


எனக்கு ஆவிகளுடனான பழக்கம் மிகவும் குறைச்சல். ஆனால், நிறைவானது. முதன் முதலாக எனக்குப் பேய்களை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளையும் விவிதபாரதி கேட்கும் நல்ல வழக்கம் இருந்தது. ‘வேப்பமர உச்சியில் நின்னு… பேயண்ணு ஆடுதுன்னு சொல்லிவைப்பாங்க! உன் வீரத்தைக் கொழும்பிலேயே கிள்ளி வைப்பாங்க!’ என்று அவ்வப்போது பாடுவார். அவரின் மற்ற பாட்டுக்களான ‘தூங்காதே… தம்பி தூங்காதே…’ மாதிரி இந்தப் பாடலிலும் மெட்டை ரசித்துவிட்டு எதிர்ப்பதத்தை எடுத்துக் கொண்டோம்.

எப்பொழுது ஒன்று இல்லை என்று நிரூபிக்கவில்லையோ, அப்பொழுதே அது இருக்கிறது என்று கொள்ளப்படும் என நண்பர்கள் வேதம் ஓதப் பாடலை ஓரங்கட்டிவிட்டு பிரம்மராக்கதரையும், ஜெகன்மோகினியையும் தேட ஆரம்பித்தோம். அழகான ராட்சசிகளாகப் பாரகனில் ஜெயமாலினி ஆடினார். விட்டலாசார்யா மட்டும் ஆங்கிலப் படம் எடுத்திருந்தால் பில்லியனார் ஆகி இருப்பார். கற்பனை வளத்தில் ‘லார்ட் ஆ·ப் திரிங்ஸை’யும், கதை வளத்தில் ‘ஹாரி பாட்டரை’யும், கவர்ச்சி வளத்தில் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’டையும் மிஞ்சும் படங்கள் மூலம் நட்புகரமான பேய்களின் அறிமுகம்.

அப்படியே ‘பட்டணத்தில் பூதம்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்று பெரிய எழுத்தாளரை சந்திக்கும் சராசரி வாசகன் போன்ற ஆவலுடன் என்றாவது ஒரு நாள் அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று அவா கொண்டிருந்தேன். பேந்தப் பேந்த விழிக்கும் மோகனின் ‘பிள்ளை நிலா’ அப்பொழுது வெளிவந்தது. கல்யாணமானால் வீட்டில் ‘பேய்’ இருக்கும் என்று சிலர் சொல்லித் தெரியுமானதால், அந்தப் படம் ரொம்ப பயமுறுத்தவில்லை.

நான் வசித்த மந்தவெளி-மயிலாப்பூர் மார்க்கத்தில் புகழ்பெற்ற வதந்தி உலாவி வந்தது. ‘அட்மிரால்டி ஹோட்டல்’ என்னும் விடுதியின் வாயிலில் உள்ள மரத்தில் குட்டிப் பிசாசு இருப்பதாகவும், மரத்தை உற்றுப் பார்த்தால் விநோதமாக சிரிக்கும் என்று சக நான்காம் வகுப்பு மாணவர்கள் கிலியுடன் விவரித்தார்கள். டி. ராஜேந்தரின் கவர்ச்சிக் கன்னிகள் நடித்த திரைப்படங்கள் பார்க்கும் கபாலி தியேட்டர், பி.டி.சாமி முதல் ஜாவர் சீதாராமன் வரை உள்ள லெண்டிங் லைப்ரரி என பல அன்றாடத் தேவைகளுக்கு ட்ரஸ்ட் தெருக்களை நம்பியும், குறுக்குத் தெருவில் போதி மர வானத்தை அளந்து கொண்டும் கவலையற்றுத் திரிந்த எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

மிகவும் ஜாக்கிரதையாக அட்மிரால்டி ஹோட்டலை தவிர்த்து வேறு வழிகளில் சென்று வந்தேன். விதி வலிது என்பதால் நண்பர்கள் சவால் விடுத்தார்கள். மூவரும் அட்மிரால்டி ஹோட்டலுக்கு செல்வது; எதிர்ப்புறம் நின்று கொண்டு மரத்தை உற்று நோக்குவது; எவர் ஜெயிக்கிறாரோ, அவர் கோடி வீட்டு உமாவுக்கு போட்டியின்றி ஹிந்தி கற்றுக் கொடுக்கலாம் என்று முடிவாயிற்று. அட்மிரால்டிக்கு அரை கிலோமீட்டர் இருக்கும்போதே ஒருவன் ஓடிப்போனான். நானும் ராஜுவும் மட்டும் சைட்டடிக்க சென்றோம். என் கண்களுகு வாட்ச்மேன் எங்களை உற்று பார்ப்பதும் ‘என்ன வேணும்டா’ என்று குச்சியைத் தூக்கிக் கொண்டு வருவதும் தெரிய, ராஜுவைத் தேடினால் தூரத்தில் புள்ளியாக ஓடிக் கொண்டிருந்தான்.

ராஜுவுக்கும் எனக்கும் ஒரு வாரம் காய்ச்சல். அவன் எனக்கு பேய் பார்த்த வைபவத்தையும் அது கண்ணை மலங்க மலங்க விழித்ததையும், பின் அவனைப் பார்த்து அழ ஆரம்பித்ததையும் விவரித்தே எனக்குக் காய்ச்சல்; கொஞ்சம் வாட்ச்மேனின் கைங்கர்யமும் இருக்கலாம். அந்தப் பேய் சின்னக் குழந்தையாம்; ராஜுவிடம் சாக்லேட்டும் வீடுவீடாக வந்து விற்கப்படும் பிஸ்கட்டுகளும் கேட்டதாம். இடுப்புக்குக் கீழ் ஒன்றும் தெரியவில்லையாம். He is either a great story-teller or a master decptionist.

வீட்டில் ஒரு நாள் இறந்த பாட்டியைக் கூப்பிட்டுப் பேசலாம் என்றார்கள். முதலிரவுக்குத் தயாராகும் போன-தலைமுறை தமிழ் கணவன் போல் ஒரு வித ஆர்வம் நிறைந்த தேடல் தோன்றியது. ஆசையாக தரையில் சாக்பீஸால் சதுரம் போட்டோம். சதுரத்துக்குள் A டு Z எழுதி எண்களும் எழுதி, கற்பூரம் ஏற்றி, தம்ளர் கவிழ்த்து, ·பேன் அணைத்து, மூவர் சத்தமாகக் கூப்பிட, ஒரு விரல் மட்டுமே தொட்ட லோட்டா அதுவாக விடுவிடுவென நகர்ந்தது. இதுதான் ஹிப்னோடிசமா, கடவுள் சக்தியா, சூட்சும உணர்வா, மனோபலமா என்று குழப்பமும் மிகுந்தது. பத்தாவது வகுப்பின் அறிவு கொண்ட அறிவியலின் கூறுகளைக் கொண்டு விதிகளையும் விடைகளையும் நிர்ணயிக்க முயன்றேன்.

என் மனதின் உட்கூறுகளில் ஒளிந்திருப்பதை எழுதிக் காட்டியது. உட்கார்ந்திருந்த அனைவரின் மனத்திரைகளையும், அவர்கள் உள்ளத்தில் உதித்தக் கேள்விகளுக்கு விடையும் தந்தது. ஆனால், சொர்க்கம், நரகம், மறுபிறவி, பாவம், புண்ணியம், அவர்கள் உலகத்தின் விவரிப்புகள், நெறிமுறைகள், வாழ்க்கை வகைகள் ஒன்றை குறித்தும் பதிலளிக்கவில்லை. மகாத்மாவும் ம.கோ.ரா.வும் அடுத்த லோகத்துக்கான கட்டத்தில் இருக்கிறார்களாம். தூரத்தில் இருந்துதான் பார்க்க முடியும். தினமும் பிரதோஷ காலத்தில் அனைவருக்கும் அட்டெண்டன்ஸ் என்று வாய் தவறியோ தவறாமலோ தொடர்ந்த பேச்சுவார்த்தைகளில் மூலம் கொஞ்சம் கறக்க முடிந்தது. கிட்டத்தட்ட இதே கருத்துகளைத் தாங்கி வந்த ‘Defending Your Life’ படத்தைப் பார்த்த பிறகு இயக்குநர் ஆல் ப்ரூக்ஸ் ஆவிகளைக் கலந்தாலோசித்து இருப்பார் என்றேத் தோன்றியது.

அன்று கற்றுக் கொண்ட வித்தை கல்லூரியிலும் இன்று அன்றாட நிஜ வாழ்விலும் விதவிதமான பலன்களைக் கொடுத்திருக்கிறது. கல்லூரியில் நடிகர் முத்துராமனையும், கவிஞர் கண்ணதாசனையும், கூப்பிட்டு வித்தைகாரனாய பணிபுரிந்தேன். தோழிகளின் மறைந்த உறவினர்களை வரவழைத்து உரையாட வாய்ப்பு கொடுத்து புது ஸ்னேஹிதம் பிடித்துக் கொண்டேன். திருத்தப்பட்ட தாள்களின் மதிப்பெண்களை உடனுக்குடன் அறிவிப்பு கொடுத்து ஹாஸ்டல்வாசிகளின் நிம்மதியை இரண்டொரு நாள் முன்பே குறைத்து வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டேன். (சோகத்தைத் தீர்க்க ‘ஜான்’ டேனியலும், ஜானி வாக்கரும் அப்ஸொல்யூட்டாகக் கை கொடுக்க வந்தது தனி கதை).

சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது, கல்லூரி கால லூட்டிகளுக்கு நல்ல பிராயசித்தம். மகனும் மகளும் மனைவியும் தன் தந்தையுடன் கிட்டத்தட்ட இருப்பதை போலவே உணர்ந்தார்கள். அவருக்கு மட்டுமே தெரிந்த எ·ப்.டி., பங்குச் சந்தை போன்ற நிதி விவகாரங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கணினியிலும், நோட்டுப் புத்தகங்களுமாக சிதறியிருந்த தகவல்களைத் எளிதில் திரட்ட முடிந்தது.

ஒவ்வொரு முறையும் எண்ணையும் எழுத்தையும் சாக்பீஸால் எழுதுவது, அவை பாதி பேச்சில் பாதி காணாமல் போவது என்று சில தொல்லைகள் உண்டு. இன்னும் கொஞ்சம் அவர்களுடன் நெருங்கி விட்டால் இரவு தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு கதைப்பார்கள் என்று சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறேன். இணையத்தில் நான் மேய்வது போல் இதற்கு அடிமையாகும் அபாயமும் உண்டு. போர்டுக்கு அடுத்தபடியான தனக்குள்ளே அழைத்துக் கொள்ளல், பேப்பரில் எழுத வைத்தல் போன்றவற்றின் தாக்கம் இன்னும் அதிகம் என்றும் பயமுறுத்துகிறார்கள்.

நல்ல பொழுதுபோக்காக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே போர்டு வாங்கிக் கொள்ளலாம் என்று கூகிளில் தேடியபோது, ‘ஆவிகளுடன் பேசுவதற்கான போர்டு’ என்று டாய்ஸ் ஆர் அஸ் விற்றது கண்ணில் பட்டது. ஆறு வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உகந்ததல்ல என்னும் எச்சரிக்கையுடன் இது குழந்தைகளுக்காக விற்கப்படுகிறது. ‘Please grow up’ என்று மனைவி சொல்ல தற்போது ஆவியுலகத் தொடர்புகள் அறுந்து போயின.

– பாஸ்டன் பாலாஜி

நன்றி: தமிழோவியம்

2 responses to “ஆவியுலக அனுபவங்கள்

  1. >>>>சமீபத்தில் விபத்தில் காலமான கணவரை, மனைவியுடன் பேச வைத்தது,

    இது நிஜமா?

  2. Yes. He passed away in an accident. Wife was not aware of some of the financial details, locker key location, his passwords etc.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.